அஸாத் சாலி - நிஜமும் நிழலும்!

யார் இவர்?

  • ஆன்மீக ரீதியில் இவர் ஓர் தரீகாவாதி. கொழும்பு உஸ்மான் வலியுல்லாஹ் தர்காவின் அபிமானிகளில் ஒருவர். எந்தக் கப்ருகளை உயர்த்தக் கூடாது! புசக் கூடாது! அதன் மீது  எழுதக் கூடாது! அதனை நோக்கி தொழக் கூடாது! என்றெல்லாம்  நபிகளார்  தடை விதித்தார்களோ, அந்தத் தடையை அப்பட்டமாய் அத்து மீறி இணைவைப்பை நாடு முழுவதும் பரப்பி வரும் பிரமுகர்களில் ஒருவர். முத்தாய்ப்பாய் சொல்வதானால் முஸ்லிம் என்ற நாமம் தரித்து உலா வரும் முஷ்ரிக்!
  • அரசியல் ரீதியில் இவரின் புர்வீகம் பச்சை! பதவிக்கும் பட்டத்திற்கும் ஏற்றாற் போல் கட்சியை மாற்றுவது இவரது வாடிக்கை! அதிரடி அறிக்கைகள் மூலம் தனக்கான இமேஜை தக்க வைக்க முடியும் என்பதில் அதீத நம்பிக்கையுள்ளவர். ஆளும் அரசினால் பயன்படுத்தப்படும் கைப்பொம்மை!
அஸாத் சாலியின் அதிரடிகள் -  பின்புலம் யாது?

  • கிழக்கு மாகாண தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வேட்பாளராய் நின்றமை.
காரணம் - அரசின் ஊது குழலாய் தொழிற்பட்ட அஸாத் சாலி திடீரென முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கிழக்கு மாகாண தேர்தலில் குதிக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? இது ஆளும் அரசின்  அரசியல் காய் நகர்த்தல்களில் ஒன்றே! பள்ளிவாசல்கள் தொடராக தாக்கப்பட்டு முஸ்லிம்களின் உணர்வுகள் அரசுக்கு எதிராய் திரும்பியிருந்த சந்தர்ப்பத்தில் கிழக்கில் அரசு தேர்தலில் நின்றால் தோல்வியை தழுவும் நிலை இருந்தது. சரிந்து வரும் அரச செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்கும், அதே சமயம் தேசிய தமிழ் கூட்டமைப்பின் வாக்கு வங்கிகளை கபளீகரம் செய்வதற்கும் அரசுக்கு ஓர் மறை திட்டம் அவசியப்பட்டது. இதன் வெளிப்பாடே முஸ்லிம் காங்கிரஸை அரசிலிருந்து விலகி தனித்து கேட்குமாறு ஏவியமை! அரசோடு கேட்டால் காங்கிரசும் மண் கவ்வ வேண்டி வரும் என்பதால் இப்படியொரு வியுகம் அரசால் வகுக்கப்பட்டது. இதன் அடுத்த திட்டம் தான் அஸாத் சாலியை கிழக்கில் நிறுத்தியமையும்!  

தம்புள்ளை பள்ளி குறித்து வாய் திறக்காத ரவுப் ஹகீம் கிழக்குத் தேர்தலை வைத்து இனவாத அரசியலை ஆரம்பித்தமையும், இதன் மூலம் முஸ்லிம் ஓட்டுக்களை சூரையிட்டமையும், இறுதியில் வெற்றி பெற்றதன் பின்னர் பழைய குருடி கதவை திறடி என்பது போல் அரசோடு ஒட்டிக் கொண்டமையும் இவை அனைத்துக்கும் பின்னணியில் அரசே தொழிற்பட்டிருக்கிறது என்பதை ஊர்ஜிதப் படுத்தி நிற்கிறது. இந்தக் கோணத்தில் தான் அஸாத் சாலியின் விடயமும் அனுகப்பட வேண்டும்.

  • பொது பல சேனாவும் போர்க்கொடி ஏந்திய அஸாத் சாலியும்
சுமார் 17 பள்ளிவாசல் தாக்குதல்கள் இடம் பெற்றும்  அனைத்தையும் ஜனாதிபதி தீர்த்து வைப்பார் என்று பொறுமை காத்த அஸாத் சாலி, கிழக்கு மாகாண தேர்தலின் தோல்வியைத் தொடர்ந்து பொது பல சேனா உள்ளிட்ட இனவாதிகளை கடுமையாய் சாடுவதற்கும், அரசை எதிர்ப்பதற்கும் ஆரம்பித்தமை சிந்திக்க வேண்டிய அம்சம்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகி்க்கும் 18 அமைச்சர்களும் அமைதி காக்கும் போது, ஜம்இய்யதுல் உலமா அடங்கிப் போன பொழுது, இஸ்லாமிய அமைப்புகள் சரணா கதி அடைந்ததற்குப் பிறகு , அரசுக்கு எதிராய் எதுவும் பேச முடியாது என்ற நிலை உருவானதன் பிறகு, பாதுகாப்புச் செயலாளரின் மறை கரம் முஸ்லிம்கள் விடயத்தில் அழுத்தமாய் பதிந்துள்ளது என்று வெட்ட வெளிச்சமானதற்குப் பிறகும் இது வரை அரசை எதிர்க்காத அஸாத் சாலி திடீர் என்று எப்படி எதிர்க்க ஆரம்பித்தார்? இதன் பின்னணி என்ன?

ஆம்! அரசோடு ஒட்டுண்ணியாய் ஒட்டிக் கொண்டு வயிறு வளர்த்த எம் மூத்த முஸ்லிம் அரசியல் வாதிகளின் வாய்க்கு அரசே பேச முடியாத வாறு தாழ்ப்பால் இட்டது.  அரசின் நரித்தன காய் நகர்த்தலின் விளைவால் முஸ்லிம் அரசியலின் பேரம் பேசும் தன்மை படிப்படியாய் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் பிறகு சிங்கள பெரும்பான்மை மக்களின் ஓட்டுக்களே எமக்கு போதும் என்ற பிரமை அரசால் ஏற்படுத்தப்பட்டது. இதன் தாக்கமே முஸ்லிம் அரசியல் வாதிகளின் மயான அமைதி! எதிர்த்து பேசி விட்டால் எங்கு எமது பதவிகள் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்ச நிலை அரசால் உருவாக்கப்பட்டு விட்டது. இது அரசின் அரச சாணக்கிய வெற்றி.

இதன் மூலம் இரு விதமான பயன்களை அரசு பெற்றுக் கொண்டது.

  1. முஸ்லிம் அரசியல் வாதிகள் மீதான நம்பிக்கையை முஸ்லிம் மக்களின் உள்ளங்களில் இருந்து களைந்து விடுவது.
  2. முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரம் பேசும் சக்தியை இல்லாதொழித்து சிறுபான்மையினரின் ஆதரவு அரசுக்கு அவசியமற்றது என்ற நிலையை தோற்றுவித்தமை.
அஸாத் சாலியி்ன புது பரிணாமம்?

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஏனைய அரசியல் பிறமுகர்கள் மீது முஸ்லிம்களுக்கு இருந்த நம்பிக்கையை அரசு திட்டமிட்டு அழித்தது மட்டுமில்லாது, மீண்டும் முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சிகளின் பால் சென்று அரசுக்கு எதிரியாய் மாறிவிடக் கூடாது என்றும் அரசு கவணத்துடன் இருந்தது. அதே போன்று, முஸ்லிம் காங்கிரசின் சிதைவைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் தலையிடியாக அரசுக்கு மாறியது. த.தே.கூட்டமைப்பின் மீது தமிழர்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் தகர்க்க வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டது. அப்படியாயின், தமிழ் மக்களினதும் முஸ்லிம்களினதும் ஏக நம்பிக்கையைப் பெற்ற, அதே சமயம் அரசுக்கு விசுவாசமாக தொழிற்படக் கூடிய ஒரு தலைவன் உருவாக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு அரசு இயல்பாக வந்தது. அந்த காய் நகர்த்தலின் விளைவாய் கண்டெடுக்கப்பட்டு ஹீரோவாக்கப்பட்டவரே இன்றைய அஸாத் சாலி.

ஏன் இப்படிச் சொல்கிறோம்?

அஸாத் சாலி  முதலாவது விட்ட அறிக்கை “இன ரீதியான அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்” என்பது தான். முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பெயர்களில் யாரும் அரசியல் நடாத்தக் கூடாது. இதுவே இன முரண்பாட்டுக்கு காரணம் என்பதுவே அஸாத் சாலியின் கூற்றின் கருத்து. 

அடுத்த கட்டமாய் முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் மத்தியில் தன் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய தேவை இவருக்கு(அரசுக்கு) ஏற்பட்டது. எனவே, சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெரும் அசம்பாவிதங்களை தாராளமாக பேசுவதற்கு அரசு இவருக்கு மட்டும் அனுமதி வழங்கியது. மீடியாக்களில் பேசினார்! ஜெனீவாவுக்கு தகவல் அனுப்புவதாக மிரட்டினார்! பொது பல சேனாவுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார்! இதன் மூலம் முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் உரிமைக்காய் குரல் கொடுக்கும் நம்பிக்கை நட்சத்திரம் என்ற நாமத்தை பெற்றுக் கொண்டார். இவரின் இமேஜை அதிகரிக்கும் வேலைத்திட்டங்களை திரைப்பட ஸ்டைலில் அரசு அழகாக செய்து கொடுத்தது. ஜெனீவா தோல்வியோடு அஸாத் சாலியின் வீடு முற்றுகையிடப்பட்டமை, உளவுத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் உள்ளமை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் அஸாத் சாலியை ஹீரோவாக்குவதற்காக அரசு நடாத்தும் நாடகமே தவிர வேறில்லை!

இதன் மூலம்,  கனிசமான முஸ்லிம்களினதும், தமிழர்களினதும், பிற அரசியல் கட்சிகளினதும் , சர்வதேசத்தினதும் அபிமானத்தை பெற்ற அரசியல் போராட்ட வீரராக அஸாத் சாலி மாற்றப்பட்டுள்ளார்.  முஸ்லிம் காங்கிரஸ், ரவுப் ஹகீம் போன்றவர்களின் பெயர்களை மக்கள் மறக்கும் நிலை அழகாக உருவாக்கப்பட்டுவிட்டது.

இதற்குப்பிறகு ஒரு தேர்தல் வருமாயின்  அஸாத் சாலி நிச்சயம் போட்டியில் நிறுத்தப்படுவார். அஸாத் சாலியினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் - தமிழ் ஐக்கிய முன்னணி என்ற கட்சி களத்தில் இறங்கும்! கணிசமான முஸ்லிம் - தமிழ் மக்களின் ஓட்டுக்கள் இதற்கு உள்வாங்கப்படும். இதன் மூலம் காங்கிரஸூம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் மக்கள் மனங்களில் இருந்து செல்வாக்கை இழக்க ஆரம்பிக்கும். முஸ்லிம்கள் சார்பாய் குரல் கொடுக்கும் ஏக கட்சியாக அஸாத் சாலியின் கட்சி மாறும். இது அரசின் பங்காளியாக நாளை இணைத்துக் கொள்ளப்படும். இது தான் அரசின் இரகசியத் திட்டம்.

அரசியல் ஊடாக குளிர் காய முனையும் தர்காவாதிகள்!

இலங்கையில் முஸ்லிம்களை கூறுபோடும் விதமாய் பாரம்பரிய முஸ்லிம் - அடிப்படைவாத முஸ்லிம் என்று  பிரிவினையை ஏற்படுத்தி, இலங்கையில் இன்று பொது பல சேனா என்ற இனவாத அமைப்பு எமக்கு எதிராய் என்ன விமர்சனங்களை முன்வைக்கின்றனரோ அந்த எல்லா விமர்சனங்களையும் இந்நாட்டில் முதன் முதலில் முன்வைத்த பெருமை அஸாத் சாலியின் சகோதரரும் தெவட்டகஹ உஸ்மான் வலியுல்லாஹ் தர்காவின் தர்ம கர்த்தாவுமாகிய றியாஸ் சாலி என்பது நாடறிந்த உண்மை.

2010 - 09 - 19 அன்று லக்பிம மற்றும் The Island போன்ற பத்திரிகைகளில் “இலங்கையில் வஹ்ஹாபிய பயங்கரவாத பயிற்சி”  எனும் தலைப்பில் ஓர் ஆக்கத்தை றியாஸ் சாலி வெளியிட்டார். இலங்கையில் வஹ்ஹாபிஸம் வளர்க்கப்படுவதாகவும், பள்ளி வாசல்கள் இதற்கான களமாக இருப்பதாகவும், மத்ரஸாக்கள் வஹ்ஹாபிசத்தை போதிப்பதாகவும், சவுதி இதற்கு நிதி உதவி செய்வதாகவும், கிழக்கில் ஜிஹாதிய குழுக்கள் இருப்பதாகவும் இக்கட்டுரையில் றியாஸ் சாலி குறிப்பிட்டிருந்தார். இன்று பொது பல சேனா எந்த அமைப்புகளையெல்லாம் தீவிரவாதத்துடன் முடிச்சுப் போடுகிறதோ அந்த பணியை ஆரம்பித்து வைத்ததே றியாஸ் சாலி போன்ற கப்ரு வணங்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஒத்தூதும் வேலையை அமைச்சர் அலவி மௌலானா அன்றே மேற்கொண்டார். அஸ்வர், காதர் உள்ளிட்ட தெவடகஹ பக்த கோடிகளும் அரசுக்கு வக்காலத்து வாங்கும் விதமாய் இலங்கையில் பள்ளிகள் தாக்கப்பட வில்லை. தர்காக்களே தாக்கப்பட்டுள்ளன.இதை செய்தது கூட முஸ்லிம்களில் உள்ள ஒரு சாராரே என்று கதையளந்து வருவதனையும் வாசகர்கள் மறந்திருக்க மாட்டீர்கள்!

இலங்கையின் மூலை முடுக்குகளில் எல்லாம் தளைத்து வளரும் ஏகத்துவ எழுச்சியை கண்டு உள்ளம் புழுகும் கப்ரு வணங்கிகள்  அரசுடன் இணைந்து தவ்ஹீது வாதிளை அழிப்பதற்கு களமிரங்கியுள்ளமை வெள்ளிடை மலை!

அத்தோடு, உலமா சபையின் இடத்தில் கப்ரு வணங்கிகளின் மார்க்க அமைப்பாகிய “ஷரீஆ கவுன்ஸிலை”  கொண்டு வந்து அமர்த்துவதற்குண்டான ஏற்பாடுகளும் திரைமறைவில் அஸாத் சாலி ஊடாக நடை பெற்று வருகின்றமையும் கண்கூடு. ஜம்இய்யதுல் உலமாவை எதிர்த்து அஸாத் சாலி கருத்து சொன்னதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.(நாமும் ஜம்இய்யதுல் உலமாவை அங்கீகரிக்க வில்லை என்பதற்கு மார்க்க ரீதியான காரணங்கள் உண்டு.)

குறிப்பாக ஹலால் விடயம், மற்றும் இடர் கால குனூத்தை நிறுத்திய விடயம் போன்றவற்றை குறிப்பிட முடியும். இதில் அஸாத் சாலி உலமா சபையை விமர்சித்து அதன் நம்பகத்தன்மைக்கு கேள்வியை எழுப்பிய கையோடு, ஷரீஆ கவுன்ஸிலின் தலைவர் குனூத் தொடர்ந்தும் ஓதத் தான் வேண்டும் என்று அறிக்கை விட்டதையும் நினைவு படுத்தக் கடமைப்பட்டுள்ளோம்!

இதன் மூலம், இலங்கை முஸ்லிம்களுக்கான மார்க்க பத்வா வழங்கும் ஏக சபையாக ஷரீஆ கவுன்சலை மீள் உருவாக்கம் செய்வதற்கு தர்கா வாதிகள் முன்வந்துள்ளனர் என்பது தெளிவு! அரசியல் நாடகத்தின் ஊடாக ஏகத்துவத்தை நசுக்கி, கப்ரு வணக்கம் என்ற இணைவைப்பை நிறுவுவதற்கு இவர்கள் பம்பரமாய் சுழன்று வருகின்றனர்.

அஸாத் சாலியின் கைதை கண்டித்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி கூட இந்த தெவட்டகஹ தர்காவிலிருந்து தான் ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் நினைவுபடுத்துகின்றோம்! 

எனவே, இந்த கப்ரு வணங்கிகளை வளர்ப்பதனால் தூய இஸ்லாமிய சமூக அமைப்பு உருவாகுவதை இந்த நாட்டில் தடுக்க முடியும் என்பதில் அரசும் நம்பிக்கை வைத்துள்ளது. எனவே தான், கப்ரு வணக்கத்தை எதிர்க்கும் வகுப்பினரை வஹ்ஹாபிய தீவிரவாதிகளாகவுவும், கப்ரு வணங்கிகளை பாரம்பரிய முஸ்லிம்களாகவும் சித்தரித்து எமக்குள் வெட்டுக் குத்துகளை ஏற்படுத்தி, அதனையே சாட்டாக வைத்து எம்மை இலங்கை மண்ணிலிருந்து துடைத்து எறியும் இனச்சுத்திகரிப்புக்கான ஏற்பாடுகளை பவ்வியமாய் செய்து வருவதனை காண முடிகிறது.

தன்சலும், பெரஹராவும், பொசனும் கொண்டாடிக் கொண்டு, புத்த போதனைகளுக்கு இசைவாக வாழும் வாழ்க்கையை ஒட்டு மொத்த முஸ்லிம்களும் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையை உருவாக்குவதற்கான முன்னாயத்தங்களை இந்த கப்ரு வணங்கிகளை வைத்து அரசு ஆரம்பித்துள்ளது. 

நாம் குறிப்பிட்ட அம்சங்கள் பலரது உள்ளத்தை முள்ளென தைத்தாளும் இதுவே யதார்த்தம் என்பதை காலம் பதில் சொல்லும். இன்ஷா அல்லாஹ்!

நன்றி - ilangaimuslim
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger