கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...
அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத்தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். ஸுரா ஆல இம்ரான் (3:135)
யாரேனும் தீமையைச்செய்து அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடினால், அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார். ஸுரா அன்னிஸா (4:110)
அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா?அல்லாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். ஸுரா அல் மாயிதா (5:74)
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உலக காரியங்களுக்காகவே அதிக நேரத்தை செலவிடுகின்றோம். அதில் படைத்த இறைவனை நினைப்பது என்பது மிகக் குறுகிய நேரமே. ஐவேளை தொழுகையில் மட்டுமே இறைவனுடைய நினைப்பு வருகிறது. பள்ளியை விட்டு வெளியே வந்தால் உலக நினைப்புகளில் மூழ்கி விடுகின்றோம். இந்த அளவுக்கு ஷைத்தானின் சூழ்ச்சி நம்மை இறை நினைப்பை விட்டும் பாராமுகமாக்கி விடுகிறது. இதனால் வாழ்வில் பல தவறுகளை இழைக்கின்றோம். நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பவனாக இருக்கின்றான். எனவேதான் அவனிடமே பாவமன்னிப்பு தேடவேண்டும் என்றும் நாளை மறுமையில் அவனிடமே மீளுதல் உண்டு என்பதை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடவேண்டும். மேற்கண்ட வசனங்களும் இதையே உணர்த்துகிறது.
மேலும் செய்த தவறை மறுபடியும் செய்யாமல் அல்லாஹ்விற்கு பயந்து அதிலிருந்து முழுமையாக விடுபட்டு நன்மையான காரியங்களின் பக்கம் திரும்ப வேண்டும் என்றும் இவ்வசனங்கள் உணர்த்துகிறது.
நபி(ஸல்) அவர்களின் இஸ்திஃக்ஃபார்
(முஹம்மதே!) உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்கு செய்வதற்காகவும், தெளிவான ஒரு வெற்றியை உமக்கு நாம் அளித்தோம். ஸுரா அல் ஃபத்ஹ் (48:1,2,3)
இந்த வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் அல்லாஹ் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றாடம் பாவம் செய்து கொண்டிருக்கவில்லை. அதே சமயம் தினமும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தார்கள்.
'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் 'அஸ்தஃபிருல்லாஹ் வ அதூபு இலைஹி ' (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6307
'எனது உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்படுகின்றது. நிச்சயமாக நான் அல்லாஹ்விடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி) நூல் : முஸ்லிம் 4870
'மக்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள். நான் அவனிடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி) நூல் : முஸ்லிம் 4871
எப்போதும் இறைச் சிந்தனையில் இருக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உள்ளம் கொஞ்சம் அந்தச் சிந்தனையை விட்டு விலகினால் கூட அதற்காக பாவமன்னிப்பு தேடுகின்றார்கள். ஆனால் நாம் சிறு சிறு பாவங்களால் முற்றுகையிடப்பட்டுள்ளோம். அன்றாடம் ஆயிரக்கணக்கான பாவங்களைச் செய்து விட்டு கல்லாக உட்கார்ந்திருக்கின்றோம். அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது கிடையாது. ஒரு மாதிரியான மிதப்பில் இருக்கின்றோம். இது போன்ற பாவங்களை விட்டு விலகுவதுடன் அன்றாடம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி அதற்குரிய பலன்களை அடைய வேண்டும்.
வேதனையை விட்டும் பாதுகாவல்
(முஹம்மதே!) நீர் அவர்களுடன் இருக்கும் போது அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. அவர்கள் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும் போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை. ஸுரா அல் அன்ஃபால் (8:33)
பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தண்டனை இறங்காது என்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது.
மக்கள் செல்வமும், மழை நீர் வளமும்
உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான். செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான். உங்களுக்காகச் சோலைகளை ஏற்படுத்துவான். உங்களுக்காக நதிகளையும் ஏற்படுத்துவான். ஸுரா நூஹ் (71:10,11,12)
அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடினால் அவன் மழை, செல்வங்கள், மக்கள் ஆகியவற்றைக் கொண்டு நமக்கு உதவுவான் என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
சுவனத்தைப் பெற்றுத் தரும் இஸ்திஹ்ஃபார்
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
'அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க. வ வஃதிக்க மஸ்ததஃத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஃத்து. அபூஉ லக்க பி நிஃமத்திக்க அலைய்ய வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஹ்ஃபிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த.
(பொருள்: அல்லாஹ்வே! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னை படைத்தாய். நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதிமொழியையும், வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோருகின்றேன். நீ (எனக்கு) அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கின்றேன். நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் ஒப்புக் கொள்கின்றேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக. ஏனெனில் பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை.)
என்று ஒருவர் கூறுவதே தலை சிறந்த பாவமன்னிப்பு கோரல் (ஸய்யிதுல் இஸ்திஃக்ஃபார்) ஆகும். மேற்கண்ட பிரார்த்தனையை நம்பிக்கையோடும், தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டு, காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகின்றாரோ அவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) நூல்: புகாரி 6306
ஸஹர் நேரத்தில்...
அவர்கள் இரவின் கடைசி நேரங்களில் பாவ மன்னிப்புத் தேடுவார்கள். ஸுரா அத்தாரியாத் (51:18)
(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல் வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவ மன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.) ஸுரா ஆல இம்ரான் (3:17)
இந்த வசனங்களில் இறை நம்பிக்கையாளர்களின் பண்புகளைப் பற்றி சொல்லும் போது, ஸஹர் நேரத்தில் அவர்கள் பாவமன்னிப்பு தேடுவார்கள் என்று வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனங்களுக்கு விளக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவின் பிற்பகுதியில் பாவமன்னிப்பு தேடுவதை வலியுறுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன் என்று கூறுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1145
தொழுகையில் ஸலாம் கொடுத்ததும்...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பும் போது மூன்று தடவை (அஸ்தஹ்ஃபிருல்லாஹ் என்று) பாவமன்னிப்பு தேடுவார்கள். அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) நூல்: முஸ்லிம் 931
எனவே படைத்த இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுவோம்.அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பானாக
துபாய் tntj
Post a Comment