இரவுத் தொழுகையின் நேரம் குறித்துத் தவறான கருத்து சிலரிடம் உள்ளதால் தராவீஹ், தஹஜ்ஜுத் என்று இரண்டு தொழுகைகள் உள்ளதாக நினைக்கின்றனர்.
தூங்கி எழுந்து பாதி இரவுக்குப் பின்னர் தொழுவது தஹஜ்ஜுத் தொழுகை
தூங்குவதற்கு முன் தொழுவது தராவீஹ் தொழுகை
என்று எவ்வித ஆதாரமும் இன்றி நம்புவது தான் குழப்பத்திற்கு முக்கியக் காரணம்.
பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்
ரமளான் மாதத்தின் இருபத்தி மூன்றாம் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை நாங்கள் தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் இரவில் பாதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறி விடும் என்று நினைக்கும் அளவுக்குத் தொழுதோம்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: நஸயீ 1588
ரமளான் மாதத்தில் இஷா முதல் சுப்ஹ் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தான் தொழுதுள்ளனர் என்று மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ் விளக்குகின்றது. இது ஒன்றே தராவீஹ் தொழுகை வேறு தஹஜ்ஜத் தொழுகை வேறு அல்ல என்பதற்குப் போதுமான சான்றாகும்.
இரவுத் தொழுகையை இஷா தொழுகைக்குப் பிறகு இரவு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் தொழலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷா தொழுதது முதல் பஜ்ரு வரை பதினோரு ரக்அத் தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 1216
இரவுத் தொழுகையை இஷாவிலிருந்து சுபுஹ் வரை தொழலாம் என்பதற்கு இது சான்றாக அமைந்துள்ளது.
எனது சிறிய தாயாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா (ரலி) அவர்கள் வீட்டில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருக்கும் என்பதைக் காண்பதற்காக அவர்களுடன் ஓர் இரவு தங்கினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டுப் பின்னர் உறங்கினார்கள். இரவின் கடைசி மூன்றாம் பகுதி ஆனதும் எழுந்து அமர்ந்தார்கள். வானத்தைப் பார்த்து வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன (3:190) என்ற வசனத்தை ஓதினார்கள். பின்னர் எழுந்து உளூச் செய்தார்கள். பல் துலக்கினார்கள். பின்னர் பதினொரு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் பிலால் (சுப்ஹ்) தொழுகைக்கு பாங்கு சொன்னார். இரண்டு ரக்அத் தொழுதுவிட்டுப் புறப்பட்டு மக்களுக்கு சுபுஹ் தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 7452
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து தொழுதார்கள்.
(ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 376
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுது முடிப்பதற்கும் சுபுஹ் தொழுகைக்கு பாங்கு சொல்வதற்கும் சரியாக இருந்தது என்பதையும் இரவின் கடைசி நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுதுள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறிகிறோம்.
பாதி இரவில் எழுந்து நபியவர்கள் தொழுதுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதி இரவான போது எழுந்து தொழுதார்கள்.
(ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 183
எனவே இரவு முழுவதும் இரவுத் தொழுகை தொழுவதற்கான நேரங்களாகும். நாம் விரும்பிய நேரத்தில் தொழுது கொள்ளலாம்.
Article Copied From: www.onlinepj.com ,
Article Copied From: www.onlinepj.com ,
Post a Comment