புதுடெல்லி : ஐ.பி.எல் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் பற்றிய விபரங்களை விட தற்போது அதிகமதிகம் விவாதிக்கப்படும் விடயமாக ராஜஸ்தான் அணியின் வீரர்கள் நடத்திய மேட்ச் பிக்சிங் தான் உள்ளது.
மே 9 ம் தேதி சண்டிகரில் நடைபெற்ற பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையான போட்டியில் எப்படி ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்பதை பற்றி டெல்லி காவல்துறை இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பின்வருமாறு விவரித்தது.
அதன் படி மே 9 போட்டியில் ஒரு ஓவரை வீச ஆரம்பிக்கும் போது ஸ்ரீசாந்த் தன் பேண்டில் துண்டை சொருகி கொண்டு பந்து வீசினார். சாதாரணமாக துண்டை அங்கிருக்கும் நடுவரிடம் கொடுத்து விட்டு பந்து வீசுவது வழக்கம். அப்படி துண்டை சொருகி கொண்டு வீசுவது சூதாட்ட தரகர்களுக்கும் கொடுக்கப்பட்ட சமிக்சை என்று டெல்லி காவல்துறை கூறுகிறது.
தரகர்கள் பெட்டிங் கட்டுவதற்கு வசதியாக அந்த ஓவரில் வார்ம் அப் செய்த பிறகு சிறிது நேரம் கழித்தே முதல் பந்தை வீசினார். ஆனால் அதற்கு முந்தைய ஓவரில் துண்டு சொருகாமலேயே பந்து வீசினார். பேசி வைத்ததற்கு ஏற்ப அந்த ஓவரில் 14 ரன்களை கொடுத்துள்ளார்.
மே 5 ந்தேதி நடந்த ராஜஸ்தான் புனே அணிகளுக்கிடையான போட்டியில் குறிப்பிட்ட ஓவரில் சண்டிலா 14 ரன்களை கொடுக்க வேண்டும் என்றும் ஓவரின் ஆரம்பத்தில் தன் இரு டி ஷர்டுகளையும் உதற வேண்டும் என்றும் பேசப்பட்டது. சொன்ன படியே 14 ரன்களை அந்த ஓவரில் கொடுத்த சண்டிலா டி ஷர்டுகளை உதற மறந்து விட்டார். அதை தொடர்ந்து சூதாட்ட தரகருக்கும் சண்டிலாவுக்கும் இடையே தொலைபேசியில் தகராறு மூண்டுள்ளது. இச்சூதாட்டத்திற்காக முன்பணமாக ஸ்ரீசாந்த் துக்கு 40 லட்சமும் சண்டிலாவுக்கு 20 இலட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இன்னொரு ராஜஸ்தான் அணி வீரரான அங்கீத் சவானுக்கும் 60 இலட்சம் கொடுக்கப்பட்டதாக காவல்துறை கமிஷனர் கூறினார். மேலும் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக அந்த ஆட்டங்களின் வீடியோவை பத்திரிகையாளர் சந்திப்பிலும் தில்லி காவல்துறை ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்நேரம்
Post a Comment