திரிபுரா: மூளையில் நீர் கட்டி, பெரிதான தலையுடன் உயிருக்குப் போராடிய 18 மாதக் குழந்தை ரூனா பேகத்தின் அறுவை சிகிச்சை வெற்றி அடைந்தது.
திரிபுரா மாநிலம், அகர்தலா அருகே உள்ள ஜிராணியா கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். கூலி வேலை செய்யும் இவருடைய மனைவிக்கு 18 மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது.
ரூனா பேகம் என்ற இந்த குழந்தைக்குப் பிறக்கும் போதே மண்டை ஓட்டின் உள்புறம் மூளை அமைந்துள்ள பகுதியில் திரவம் கோர்த்துக் கொண்டதால் தலையின் அளவு சராசரி அளவை விட இருமடங்கு பெரிதாக இருந்தது. இதை மருத்துவர்கள் hydrocephalus என்ற தலையில் நீர் கட்டும் வியாதி என்றும் இது உயிருக்கு மிகவும் ஆபத்து என்றும் கூறினர்..
நாளடைவில் இந்த அளவு இன்னும் அதிகரித்துவிடும். உடனடியாக ஆபரேஷன் செய்யாவிட்டால் குழந்தையை காப்பாற்ற முடியாது என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனையடுத்து, குர்கானில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்ட ரூனா பேகத்தின் தலையில் இருந்து ஊசி மூலம் திரவத்தை டாக்டர்கள் தற்காலிகமாக வெளியேற்றினர்.
குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு நிதி கோரப் பட்டது. இதன் விளைவாக வெளி நாட்டு மாணவர்கள் சிலர், ரூனா பேகத்தின் அறுவை சிகிச்சை செலவுக்கு 52 ஆயிரம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக திரட்டினர்.
இந் நிலையில், நேற்று அந்த குழந்தைக்கு முதல்கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதன் மூலம் தலையின் விட்டம் சுமார் 30 செ.மீட்டர் குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு கட்ட ஆபரேஷன்களும், தொடர்ந்து தீவிர சிகிச்சையும் அளித்தால், சராசரி குழந்தையை போல் ரூனா பேகமும் ஆகி விடுவாள் என மருத்துவர்கள் கூறினர்.
இந்நேரம்
Post a Comment