புது டெல்லி: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய சாமியார் அஸிமானந்தா உள்ளிட்ட இந்துத்துவ பயங்கரவாதிகள்மீது மீது தேசிய புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது.
37 பேர் கொல்லப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக முதலில் 9 முஸ்லிம் இளைஞர்களை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப்படையினர் கைது செய்திருந்தனர். ஷபீர் அஹமத் என்ற இளைஞரின் கோடவுலிருந்து வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் வழக்கு போலியாக தயாரிக்கப்பட்டிருந்தது.
2010 ஆம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான சாமியார் அஸிமானந்தா, மனம் திருந்தி அளித்திருந்த வாக்குமூலத்திலேயே அதற்கு முந்தைய மாலேகான் குண்டுவெடிப்பிலிருந்து சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வரை நாட்டில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் இந்துத்துவ பயங்கரவாதிகள் செயல்பட்டிருந்ததும் குண்டுவெடிப்புகளை நடத்திவிட்டு, அதனை முஸ்லிம்கள் நடத்தியதுபோன்று ஜோடனை செய்திருந்ததும் வெளியானது.
இதன் பிறகு பயங்கரவாதியான ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியின் தலைமையில் பல்வேறு குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்ட விவரம் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இந்துத்துவ பயங்கரவாதிகள் லோகேஷ் சர்மா, ராஜேந்தர் சவுத்ரி, டான்சிங், அமித் சவுகான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்சங்கரா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
மாலேகான் வழக்கில் முதலில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ள 9 முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள் என்ற விவரத்தையும் உட்படுத்தி மேற்கண்ட இந்துத்துவ பயங்கரவாதிகள் மீது குற்றம்சுமத்தி தேசிய புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளது. இக்குற்றவாளிகளுக்கு சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் முதலான குண்டு வெடிப்புகளிலுள்ள தொடர்புகள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இக்குண்டுவெடிப்புகளில் பெரும்பாலும் ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை குற்றவாளிகளுக்கு எங்கிருந்து கிடைத்தன என்ற விவரம் இதுவரை தேசிய புலனாய்வு குழுவால் கண்டறிய இயலவில்லை. ஆர்.டி.எக்ஸ் வகை குண்டுகள் இராணுவத்தில் பயன்படுத்தப்படுபவையாதலால், ஆரம்பத்தில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உதவியுடன் முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகள் இத்தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஆனால், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கர்னல் புரோகித் இந்திய இராணுவத்திலிருந்து ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்களைத் திருடி இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு சப்ளை செய்திருந்ததாக மும்பை தாக்குதலில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட தீரர் கார்கரே கண்டறிந்திருந்தார். ஆனால், அவர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருக்கும் தருணத்திலேயே மும்பை தாக்குதலில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவ்வழக்கின் திசை முழுமையாக மாற்றப்பட்டு, கர்னல் புரோகித் விடுவிக்கப்பட்டார்.
இவ்வழக்கில் கர்னல் புரோகிதை விசாரிக்க நீதிமன்ற அனுமதியினைத் தேசிய புலனாய்வு குழு பெறும் முன்னரே, கர்னல் புரோகித் தன்னை விசாரிக்கக்கூடாது என முன் அனுமதியினைப் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று, பல குண்டுவெடிப்புகளும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியின் தலைமையில் நடந்த விசயம் வெளியானதும் சுனில் ஜோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டால், மேலும் பல உண்மைகள் வெளியாகும் என்று பயந்து லோகேஷ் சர்மா மற்றும் ராஜேந்தர் சவுத்ரி ஆகியோர் இணைந்து சுனில் ஜோஷியினைக் கொலை செய்ததையும் தேசிய புலனாய்வு குழு கண்டறிந்துள்ளது. ஆனால், சுனில் ஜோஷியைக் கொலை செய்ய இவர்களுக்கு உத்தரவிட்டது யார் என்ற விவரத்தையும் தேசிய புலனாய்வு குழுவால் இதுவரை கண்டறிய இயலவில்லை!
இந்நேரம்
Post a Comment