வங்கதேச வரலாற்றில் நடந்துள்ள மிக மோசமான தொழிற்சாலை விபத்தாக கருதப்படுகின்ற டாக்கா கட்டிட விபத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்துவிட்டது.
இன்னும் கிடைக்காதுள்ள ஏராளமான சடலங்களை மீட்பதற்காக தேடுதல் பணிகள் தொடர்ந்தும் நடந்துவருகின்றன.
இந்த விபத்தில் 2,500 பேர் வரை காயப்பட்டுள்ளார்கள். 2,437 பேர் வரை மீட்கப்பட்டுள்ளார்கள்.கடந்த மாதம் 24-ம் திகதி டாக்கா அருகே உள்ள ராணா பிளாஸா என்ற இந்த எட்டுமாடிக் கட்டிடம் இடிந்துவிழுந்த போது, இடிபாடுகளுக்குள்ளே எத்தனைபேர் சிக்கியுள்ளார்கள் என்பது தெரியாமலே இருந்தது.
இதுவரை மொத்தமாக 1,021 பேரின் சடலங்கள் இடிபாடுகளுக்குளிருந்து மீட்கப்பட்டுள்ளன.
பலரின் சடலங்கள் அழுகி, உருக்குலைந்து போய்விட்டன. தொழில் அடையாள அட்டைகளைக் கொண்டும் சட்டைப் பைகளுக்குள் இருந்த கைத் தொலைபேசிகளைக் கொண்டுமே பல சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் இழப்பீடு கோரும் தேவைக்காக, உயிரிழந்தவர்களின் உறவினர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகளை அதிகாரிகள் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ராணா பிளாஸா கட்டிடத்தில் பல ஆடைத் தொழிற்சாலைகள் இயங்கிவந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் கட்டிடத்தில் உரிமையாளர் முதல் பலர் கைதுசெய்துசெய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment