எனது தகப்பனார் தற்கொலை செய்தல் நிரந்தர நரகத்திற்குரியது என தெரியாமல் தற்கொலை செய்து கொண்டார். தெரியாமல் செய்த தற்கொலைக்கு நரகம் உண்டா? அவருக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டா? அவருக்கு பாவமன்னிப்பு கேட்கலாமா?
5778 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سُلَيْمَانَ قَالَ سَمِعْتُ ذَكْوَانَ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا رواه البخاري
1624حَدَّثَنَا عَوْنُ بْنُ سَلَّامٍ الْكُوفِيُّ أَخْبَرَنَا زُهَيْرٌ عَنْ سِمَاكٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ أُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ قَتَلَ نَفْسَهُ بِمَشَاقِصَ فَلَمْ يُصَلِّ عَلَيْهِ رواه مسلم
நிரந்தர நரகம் என்பதன் பொருள் என்ன?
பதில் :
ஒரு இறை நம்பிக்கையாளர் தற்கொலை செய்தால் அவருக்கு நிரந்தர நரகமா?
தெரியாமல் செய்த தற்கொலைக்கு மன்னிப்பு உண்டா?
நாம் அவருக்காக பாவமன்னிப்பு கேட்கலாமா?
ஆகிய மூன்று கேள்விகளைக் கேட்டுள்ளீர்கள்.
இவை ஒவ்வொன்றையும் நாம் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
முதலாவதாக, தற்கொலை செய்து கொண்டவருக்கு பவமன்னிப்பு கேட்கலாமா? என்ற கேள்வியை எடுத்துக் கொள்வோம்.
நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்
அல்குர்-ஆன் 4 : 93.
ஒரு உயிரை வரம்பு மீறி கொலை செய்வது எப்படி குற்றமோ, அதைப் போல ஒருவர் தனது உயிரை தானே மாய்த்துக் கொள்வதும் கொலை செய்வதில் அடங்கும். முஃமினான உயிரை வேண்டுமென்றே கொலை செய்பவருக்கு கூலி நரகம். அதில் அவர் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார் என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே தற்கொலை செய்தவருக்கு நிரந்தர நரகம் என்று இந்தத் திருக்குர்ஆன் வசனத்தின் வாயிலாக விளங்கிக் கொள்ளலாம். மேலும், இதே எச்சரிக்கையை நபி (ஸல்) அவர்களும் சொல்லிக் காட்டுகின்றார்கள்.
5778 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سُلَيْمَانَ قَالَ سَمِعْتُ ذَكْوَانَ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا رواه البخاري
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (5778)
மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தற்கொலை செய்தவரைப் பற்றி கூறும் போது,
خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا
என்ற வாசகத்தை பயன் படுத்துகின்றார்கள். ”காலிதன்” என்றாலும் நிரந்தரமாக இருப்பார் என்றே அர்த்தம், ”முகல்லதன்” என்றாலும் அதே பொருளைத் தான் குறிக்கும். ”அபதா” என்ற வாசகமும் அதே பொருளைத் தான் குறிக்கும். ”காலிதன், முகல்லதன், அபதா” என்ற இந்தச் சொற்கள், தற்கொலை செய்து கொண்டவர் “என்றென்றும், என்றைக்குமே, நிரந்தரமாக அதில் இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதன் மூலம் “நிரந்தரமாக நரகில் கிடப்பார்” என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகவும் அழுத்தமாகப் பதிய வைக்கின்றார்கள்.
ஒருவர் என்றைக்குமே நிரந்தரமாக நரகத்தில் இருப்பார் என்று அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் கூறுகிறார்கள் என்றால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படாது என்பது தான் அதன் பொருள்.
ஒருவருக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என்று இறைவன் கூறிய பிறகு அவருக்கு பாவமன்னிப்பு கோரக்கூடிய “ஜனாஸா தொழுகையை அவருக்கு தொழ வைக்க முடியாது, அவருக்கு தொழவைக்கக் கூடாது” என்பதனால் தான் நபி (ஸல்) அவர்களும் தற்கொலை செய்து கொண்டவருக்கு “ஜனாஸா தொழுகை” தொழ வைக்கவில்லை.
தற்கொலை செய்தவர்களுக்கு ஜனாஸா தொழ வைக்க நபி (ஸல்) அவர்கள் மறுத்துள்ளார்கள். தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு பாவமன்னிப்பு கோரக் கூடாது என்பது தான் இதற்குக் காரணம்.
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது, அவருக்காக நபி (ஸல்) அவர்கள் தொழ வைக்கவில்லை.
முஸ்லிம் (1779)
மேலும், நிரந்தர நரகத்தை அல்லாஹ் கூலியாக வழங்குவான் என்று அறிந்த நிலையில் ஒருவர் துணிந்து தற்கொலை செய்வாரேயானால் அவர் நம்பிக்கையாளராக இருக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட செய்தியின் வாயிலாகத் தெளிவுபடுத்துகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் கைபர் போரில் கலந்து கொண்டோம். அப்போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களில், தம்மை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்ட ஒருவரைப் பற்றி இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்த போது அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டு அவரை உட்கார வைத்து விட்டன. அப்போது நபித்தோழர்களில் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எவரைக் குறித்து அவர் நரகவாசி' என்று சொன்னீர்களோ அவர் இறை வழியில் கடுமையாகப் போரிட்டு அதிகமான காயங்கள் அடைந்துள்ளார் என்று கூறினார். அப்போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர் நரகவாசிகளில் ஒருவர் தாம் என்றே கூறினார்கள். அப்போது முஸ்லிம்களில் சிலர் நபி (ஸல்) அவர்களின் இச்சொல் குறித்து சந்தேகப்படும் அளவுக்குப் போய் விட்டார்கள். நிலைமை இவ்வாறு இருக்கும் போது, அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணரலானார். உடனே அவர் தமது கையை அம்புக் கூட்டுக்குள் நுழைத்து அதிலிருந்து ஓர் அம்பை உருவி அதன் மூலம் தற்கொலை செய்து கொண்டார். உடனே முஸ்லிம்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து அல்லாஹ்வின் தூதரே! தங்களின் அறிவிப்பை அல்லாஹ் உண்மையாக்கி விட்டான். இன்ன மனிதர் தற்கொலை செய்து தம்மை மாய்த்துக் கொண்டார் (அதனால் அவர் நரகவாசிகளில் ஒருவராகி விட்டார்) என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலாலே! எழுந்து சென்று இறை நம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமாகவும் வலுவூட்டுகின்றான்' என்று (மக்களிடையே) அறிவிப்புச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
நூல் புஹாரி 6606
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இறை நம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது” என்றும், இவர் நரகவாசி என்றும் அறிவித்ததன் மூலம் “தற்கொலை செய்து கொண்டவர் இறை நம்பிக்கையாளரே அல்ல என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
”நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் தொழ வைக்கவில்லை; நாம் தொழவைத்தால் தவறில்லை” என்று சிலர் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கீழ்க்கண்ட செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கடன் உள்ள நிலையில் இறந்து விட்ட ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுவார். அப்போது "தம் மீதுள்ள கடனை அடைக்க ஏதேனும் அவர் ஏற்பாடு செய்துள்ளாரா?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்பார்கள். அவர் அத்தகைய ஏற்பாடுகளைச் செய்து விட்டுச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டால், அவருக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவிப்பார்கள். அவ்வாறில்லை எனில், (முஸ்லிம்களிடம்) "உங்கள் தோழருக்கு நீங்களே தொழுதுகொள்ளுங்கள்'' என்று கூறி விடுவார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளை அளித்(து மதீனா அரசில் நிதி குவிந்)த போது, "இறை நம்பிக்கையாளர்களுக்கு, அவர்களின் உயிர்களை விட நானே நெருக்கமான (உரிமையுடைய)வன் ஆவேன். ஆகவே, யார் தம் மீது கடன் இருக்கும் நிலையில் (அதை அடைப்பதற்காக ஒன்றையும் விட்டுச் செல்லாமல்) இறந்து விடுகிறாரோ, அந்தக் கடனை அடைப்பது எனது பொறுப்பாகும். யார் இறக்கும் போது செல்வத்தை விட்டுச் சென்றுள்ளாரோ, அது அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும்'' என்று கூறுவார்கள்.
(ஆதாரம் : முஸ்லிம் 3309)
கடனாளியாக மரணித்த ஒருவருக்கு எப்படி நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தாமல், "உங்கள் தோழருக்கு நீங்களே தொழுது கொள்ளுங்கள்'' என்று சொன்னார்களோ அதைப் போல, தற்கொலை செய்து கொண்டவருக்கும் நபியவர்கள் தொழுகை நடத்த மறுத்தார்களே தவிர, நாம் தொழவைப்பதற்கு நபியவர்கள் தடை போடவில்லை என்பது தான் அவர்களின் வாதம். ஆனால் இந்த வாதம் பல வகையில் தவறான வாதமாகும்.
நபிதான் முன் மாதிரி:
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது
அல்குர்ஆன் 33: 21
நாம் ஒரு வணக்க வழிபாட்டைச் செய்வதாக இருந்தால் அதற்கு அல்லாஹ்வுடைய தூதர் தான் அழகிய முன்மாதிரி.
என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆதாரம் : புகாரி : 6608
கடன் வைத்த நிலையில் மரணித்த ஒருவருக்கு, "உங்கள் தோழருக்கு நீங்களே தொழுது கொள்ளுங்கள்'' கூறி பிறர் தொழுகை நடத்திய முன்மாதிரியைப் போல, தற்கொலை செய்தவருக்கும், "உங்கள் தோழருக்கு நீங்களே தொழுது கொள்ளுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிக் காட்டிய முன்மாதிரி இருக்க வேண்டும். அவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்காவிட்டால், அவர்கள் தொழ வைக்க மறுத்தவருக்கு, நாம் தொழுகை நடத்துவது என்பது அதிகப்பிரசங்கித் தனமாக ஆகிவிடும்.
“என்னை பொறுத்த வரை நான் தொழுகை நடத்த மாட்டேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி “நஸாயீ” என்ற கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
أخبرنا إسحق بن منصور قال أنبأنا أبو الوليد قال حدثنا أبو خيثمة زهير قال حدثنا سماك عن ابن سمرة أن رجلا قتل نفسه بمشاقص فقال رسول الله صلى الله عليه وسلم أما أنا فلا أصلي عليه
என்னைப் பொருத்தவரை தொழுவிக்க மாட்டேன் என்ற சொல்லமைப்பு மற்றவர்களுக்கு இல்லை என்ற கருத்தைத் தரும் என்று சிலர் இதை ஆதாரமாகக் கொண்டு வாதிடுகின்றனர்.
பொதுவாக மனிதர்களின் பேச்சுக்களுக்கு இவர்கள் கூறுவது போன்ற பொருள் உண்டு என்பது உண்மை தான். ஆனால் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வணக்க வழிபாடுகள் குறித்து இவ்வாறு கூறும் போது இப்படி பொருள் கொள்ள முடியாது. அல்லாஹ்வின் தூதரைப் பொருத்து ஒன்றைச் செய்யக் கூடாது என்றால் மற்றவர்களும் செய்யக் கூடாது என்று தான் பொருள்.
என்னைப் பொருத்தவரை நான் பொய் சொல்ல மாட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் கூறினால் அவர்களை முன்மதிரியாகக் கொண்ட அனைவரும் பொய் சொல்லக் கூடாது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இதே வாசக அமைப்போடு, மற்றொரு செய்தியினை நபிகளார் கூறிக்காட்டியுள்ளார்கள்.
முஸ்லிம்களின் அனைத்துக் காரியங்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தொழுகைக்கு குறிப்பாக முன்மாதிரியாக உள்ளனர்.
என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு நீங்களும் தொழுங்கள் என்பது அவர்களின் கட்டளை.
இதில் இருந்து விதிவிலக்கு அளிப்பது என்றால் உங்கள் தோழருக்கு நீங்கள் தொழுவித்துக் கொள்ளுங்கள் என்று கூறியது போல் தெளிவாக அறிவித்திருப்பார்கள்.
மேலும் போரில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட ஹதீஸை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். நரகவாசி என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் முன் அறிவிப்புச் செய்த போது அவர் தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அவர் நரகவாசி என்று நபித்தோழர்கள் புரிந்து கொண்டார்கள் என்பது தெரிகிறது. அதாவது தற்கொலை செய்தவர் நரகவாசி என்பது நபித்தோழர்கள் அனைவரும் அறிந்து வைத்திருந்த ஒரு சட்டமாக இருந்தது என்பதை இதில் இருந்து அறியலாம். அப்படி இருக்கும் போது நபித்தோழர்கள் தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை தொழ வைத்திருப்பார்கள் என்று கூற முடியாது.
மேலும் நிரந்தர நரகம் என்று தீர்ப்பளிக்கப்பட்டவருக்கு ஜனாஸா தொழுகை தொழாமல் இருந்திருப்பார்கள் என்பது பொருத்தமாக உள்ளது. எனவே மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் “இறந்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது தடை செய்யப்பட்ட காரியங்களில் ஒன்று என்பதை தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்
தற்கொலை செய்து கொண்டு மரணித்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது மார்க்க அடிப்படையில் தடுக்கப்பட்ட ஒரு காரியம் என்பதனை மேற்கண்ட குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்கள் அடிப்படையில் அறிந்து கொண்டோம்.
தற்கொலை செய்தவருக்கு நிரந்தர நரகம் என்று கடுமையாக வலியுறுத்தப்பட்டைருப்பதும், நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஜனாஸா தொழுவிக்க மறுத்திருப்பதும் அவருக்காக நாம்இறைவனிடத்தில் பாவமன்னிப்பு கோரக் கூடாது என்பதை உள்ளடக்கியுள்ளது. ஒருவர் இறைவனால் மன்னிக்கப்படுவார் என்றால் அவர் நிரந்தரமாக நரகில் கிடக்க மாட்டார். நிரந்தரமாக நரகில் கிடப்பார் என்று அவருக்கு மன்னிப்பு இல்லை என்பது தான் அதன் கருத்தாகும்.
அல்லாஹ் யாருக்கு மன்னிப்பு இல்லை என்று தீர்மானம் செய்து விட்டானோ அவருக்காக மன்னிப்புக் கேட்பது அல்லாஹ்வுக்கு எதிரான நடவடிக்கையாகி விடும்.
நிரந்தர நரகத்திற்குரிய பாவங்கள்:
திருமறையில் இறைவன் சில குறிப்பிட்ட பாவங்களுக்கு நிரந்தர நரகம் என்று கூறியுள்ளான். அந்தப் பாவங்களைச் செய்த நிலையில் மரணித்தவருக்காக நாம் பாவமன்னிப்பு கோரக் கூடாது என்பதனையும் நாம் கூடுதலாக இந்த இடத்தில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நிரந்தர நரகத்திற்குரிய பாவங்களாக குர்ஆன் குறிப்பிடுபவை:
என்றென்றும் நரகில் கிடப்போர் பட்டியல்:
இறைனை நம்ப மறுத்தவர்கள் - 2:39, 2:161,162, 2:217, 2:257, 3:116, 4:169, 9:68, 33:65, 39:72, 40:76, 41:28, 59:16, 64:10, 98:6
ஒரு நன்மையும் செய்யாது தீமைகளை மட்டுமே செய்தவர்கள் - 2:81, 10:27, 16:29, 43:74
ஏக இறைவனை ஏற்று பிறகு மறுத்தவர்கள் - 3:88
அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகள் அனைத்தையும் மீறியவர்கள் -4:14, 5:80, 72:23
சத்தியம் செய்வதைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர் - 58:16
இறை வசனங்களை நம்ப மறுத்துப் புறக்கணித்தவர்கள் - 7:36, 20:100, 23:103
இறைவனுக்கு இணை கற்பித்தவர்கள் - 6:128, 9:17, 25:68, 40:76, 98:6
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிடுவோர் - 9:63
இரட்டை வேடம் போடும் நயவஞ்சகர்கள் - 9:68
மறுமையை நம்பாதவர்கள் - 10:52, 13:5, 22:14
வட்டி வாங்கியவர்கள் - 2:275
கொலை செய்தவர்கள் - 4:9
மேற்கண்ட பட்டியலை நாம் ஆய்வு செய்தால் ஏக இறைவனை நம்ப மறுத்த இறை நிராகரிப்பாளர்கள் மற்றும் இறைவனுக்கு இணை கற்பித்த இணை வைப்பாளர்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், வட்டி வாங்கியோர் மற்றும் முஃமினான உயிரை வேண்டுமென்றே கொலை செய்தவர் ஆகிய இருசாரார் முஸ்லிம்களாக தங்களைச் சொல்லிக் கொண்டாலும் அவர்கள் இறை நம்பிக்கையாளர் அல்ல. அவருக்கு நிரந்தர நரகம் என்று கூறப்படுவதை அறியலாம்.
நிரந்தர நரகம் என்பதன் பொருள் என்ன?
யாருக்கு மன்னிப்பு வழங்கப்படமாட்டாது என்று இறைவன் தனது முடிவை அறிவித்துவிட்டானோ அவருக்கு நீ மன்னிப்பு வழங்கு என்று நாம் இறைவனை நிர்பந்தப்படுத்துவது என்பது அதிகப்பிரசங்கித்தனமாக ஆகிவிடும். எனவே இந்த பாவத்திலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வுடைய தண்டணைகளில் ஒன்றைக் குறைக்குமாறு இறைவன் முடிவெடுத்த ஒருவருடைய விஷயத்தில் அவருக்காகப் பரிந்து பேசுவதை நபி (ஸல்) அவர்கள் வனமையாகக் கண்டித்துள்ளார்கள். இதற்கு முன்பிருந்த சமுதாயங்கள் அழிக்கப்பட்டதற்கு ஒரு காரணமாக இதையும் நபி (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்
(மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தார். அவர் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். அவர் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்? என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்? என்று கூறினர். (உஸாமா (ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அவர் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய் என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு,பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்) விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன் என்று சொன்னார்கள்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி
ஆதாரம் : புகாரி: 3475
அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய் என்று நபிகள் நாயகம் அவர்கள் கேட்டதிலிருந்து, உலகவிஷயத்தில் தரப்படும் தண்டணைகளில் தளர்த்துமாறு கோருவதே கூடாது என்றால் மறுமையில் குற்றவாளிகளுக்காக நாம் கேட்பது என்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு விஷயம் என்பதையும் கூடுதலாக நாம் அறியலாம்.
தற்கொலை செய்தால் நிரந்தர நரகம் என்பதை விளங்காமல் தற்கொலை செய்தவருக்கு பாவமன்னிப்பு கோரலாமா? என்ற கேள்வியை அடுத்ததாக எழுப்பியுள்ளீர்கள்.
எங்களுக்கு இதைப் பற்றி முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தால் நாங்கள் நல்லவர்களாக இருந்திருப்போம் என்ற வாதத்தைத் தான் குற்றவாளிகள் மறுமையில் வைப்பார்கள் என்று இறைவன் சுட்டிக் காட்டுகின்றான். எனவே தான் நாம் வேதங்களையும், தூதர்களையும் அனுப்பி வைத்ததாக இறைவன் கூறுகின்றான்.
எனவே அல்லாஹ்வுடைய வழிகாட்டுதலையும், தூதருடைய வழிகாட்டுதல்களையும் அரிந்து கொள்வது ஒவ்வொருவர் மீது கடமையாக உள்ளது.
மறுமையில், நரகவாசிகளை வேதனை செய்யும் போது அவர்களை நோக்கி பின்வருமாறு கேட்கப்படும்,
கோபத்தால் அது (நரகம்) வெடித்து விட முற்படும். ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் ''எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?'' என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள்.
அல்குர்ஆன் 67:8
மேற்கண்ட கேள்விக்கு நரகவாசிகள் என்ன பதில் சொல்லுவார்கள் என்பதையும் வல்ல இறைவன் அதைத் தொடர்ந்து சொல்லிக் காட்டுகின்றான்.
நாங்கள் செவிமடுத்திருந்தாலோ, விளங்கியிருந்தாலோ நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் எனவும் கூறுவார்கள்.
அல்குர்ஆன் 67: 10
நாங்கள் தூதர்கள் கூறுவதைச் செவிமடுத்திருந்தாலோ, அல்லது விளங்கியிருந்தாலோ இதிலிருந்து தப்பித்திருப்போம் என்பது தான் அவர்களுடைய பதிலாக இருக்கும். அந்த இடத்தில் எனக்குத் தெரியாது, நான் தெரியாமல் செய்து விட்டேன் என்ற எந்த சாக்குப் போக்கையும் இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
அத்தோடு மட்டுமல்லாமல், விதியை நம்புவது என்பது ஈமானின் அம்சங்களில் ஒன்றாக இருக்கும் நிலையில், விதியை மறுத்தவராக இந்த தற்கொலை முடிவை ஒருவர் எடுப்பதும் இறைவனுடைய தீர்ப்பை மறுக்கக் கூடிய, இறைவனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கக்கூடிய ஒரு நிலையாகும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்கொலை செய்து கொண்டவர் “முஃமின்களுடைய பட்டியலில் வர மாட்டார்” என்பதை இந்த கேள்விக்குரிய ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்டியுள்ளோம்.
தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்படாவிட்டால் தான் தற்கொலை செய்ய மாட்டார்கள் என்பதை மக்களுக்கு எச்சரிப்பதற்காக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தொழுவிக்காமல் இருந்திருப்பார்கள் என்று சிலர் காரணம் கூறி தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாம் எனக் கூறுகின்றனர்.
அது வெறும் ஊகம் தான். உண்மை என்று வைத்துக் கொண்டாலும் நாம் ஜனாஸா தொழுகை நடத்தாமல் இருந்தால் தான் நபிகள் நாயகத்தின் நோக்கம் நிறைவேறும். தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாம் என்று முடிவு செய்தால் தற்கொலை செய்ய அஞ்சும் நிலை ஏற்படாது. எனவே இவர்கள் கூறும் நோக்கத்துக்காக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஜனாஸா தொழுகையை தவிர்த்திருந்தாலும் அதே காரணத்துக்காக நாமும் அவ்வாறு நடந்து கொள்வதே முறையாகும்.
தற்கொலை செய்தவருக்கு பாவமன்னிப்பு தேடலாம் என்பதற்கு கீழ்க்காணும் ஹதீசை சிலர் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
167 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ جَمِيعًا عَنْ سُلَيْمَانَ قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ حَجَّاجٍ الصَّوَّافِ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ أَنَّ الطُّفَيْلَ بْنَ عَمْرٍو الدَّوْسِيَّ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلْ لَكَ فِي حِصْنٍ حَصِينٍ وَمَنْعَةٍ قَالَ حِصْنٌ كَانَ لِدَوْسٍ فِي الْجَاهِلِيَّةِ فَأَبَى ذَلِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلَّذِي ذَخَرَ اللَّهُ لِلْأَنْصَارِ فَلَمَّا هَاجَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمَدِينَةِ هَاجَرَ إِلَيْهِ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو وَهَاجَرَ مَعَهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ فَاجْتَوَوْا الْمَدِينَةَ فَمَرِضَ فَجَزِعَ فَأَخَذَ مَشَاقِصَ لَهُ فَقَطَعَ بِهَا بَرَاجِمَهُ فَشَخَبَتْ يَدَاهُ حَتَّى مَاتَ فَرَآهُ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو فِي مَنَامِهِ فَرَآهُ وَهَيْئَتُهُ حَسَنَةٌ وَرَآهُ مُغَطِّيًا يَدَيْهِ فَقَالَ لَهُ مَا صَنَعَ بِكَ رَبُّكَ فَقَالَ غَفَرَ لِي بِهِجْرَتِي إِلَى نَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا لِي أَرَاكَ مُغَطِّيًا يَدَيْكَ قَالَ قِيلَ لِي لَنْ نُصْلِحَ مِنْكَ مَا أَفْسَدْتَ فَقَصَّهَا الطُّفَيْلُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِرْ رواه مسلم
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தாருக்குக் கோட்டை ஒன்றிருந்தது. தவ்ஸ் குலத்தைச் சேர்ந்த துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் ஹிஜ்ரத் செய்யும் போது எதிரிகளிடமிருந்து உங்களைத்) தற்காத்துக் கொள்ள உறுதியான கோட்டை கொத்தளம் தங்களுக்கு வேண்டுமா? (அத்தகைய கோட்டை தவ்ஸ் குலத்தாரின் வசிப்பிடத்தில் உள்ளது)'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதற்கு இணங்கவில்லை. (அந்த வாய்ப்பை மதீனாவாசிகளான) அன்சாரிகளுக்கென அல்லாஹ் வழங்கியிருந்ததே அதற்குக் காரணமாகும். நபி (ஸல்) அவர்கள் நாடு துறந்து மதீனாவுக்கு (ஹிஜ்ரத்) சென்ற போது நபி (ஸல்) அவர்களிடம் துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்களும் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். துஃபைல் (ரலி) அவர்களுடன் அவர்களுடைய சமூகத்தைச் சேர்ந்த ஒரு மனிதரும் நாடு துறந்து சென்றார். (அவர்கள் மதீனாவிற்குச் சென்ற போது) மதீனாவின் தட்ப வெப்ப நிலை அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அந்த மனிதர் நோய்வாய்ப்பட்டு விட்டார். (நோயின் வேதனை பொறுக்க முடியாமல்) பதறிப் போன அந்த மனிதர் தம்முடைய பெரிய அம்புகளை எடுத்துத் தமது கை நாடியை அறுத்துக் கொண்டார். கைகளிலிருந்து இரத்தம் கொட்டியது. இறுதியில் அவர் இறந்து விட்டார். அவரைத் துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் கனவில் கண்டார்கள். அவர் நல்ல நிலையில் தான் இருந்தார். ஆனால், அவருடைய இரு கைகளும் போர்த்தி மூடப்பட்டு இருப்பதைக் கண்டார்கள். அவரிடம், "உம்மிடம் உம்முடைய இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான்?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "நான் நபி (ஸல்) அவர்களிடம் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்ததால் அல்லாஹ் எனக்கு மன்னிப்பு அளித்தான்'' என்று பதிலளித்தார். துஃபைல் (ரலி) அவர்கள், "ஏன் உம்மிரு கைகளும் போர்த்தி மூடப்பட்டிருக்கின்றன?'' என்று கேட்டார்கள். "நீ வீணாக்கிய உனது கையை நாம் சீராக்க மாட்டோம்'' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) என்னிடம் கூறப்பட்டது'' என்று அவர் சொன்னார்.
துஃபைல் (ரலி) அவர்கள் இக்கனவு பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! அவருடைய இரு கைகளுக்கும் மன்னிப்பு அளிப்பாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள்.
முஸ்லிம் (184)
இந்த ஹதீஸை நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுக்கு முரண்படாத வகையில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஹதீஸில் நோய்வாய்ப்பட்ட அந்த மனிதர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. வேதனை பொறுக்க முடியாமல் அவர் தனது கையைத் தான் வெட்டிக் கொண்டார். அதனால் பொதுவாக ஒருவர் சாக மாட்டார். ஆனால் அவரே எதிர்பார்க்காத வகையில் அவர் இறந்து விட்டார். இதனால் தான் அவருக்கு நிரந்தர நரகத்தை அல்லாஹ் கொடுக்காமல் கையை வெட்டிக் கொண்டதற்காகவே "நீ வீணாக்கிய உனது கையை நாம் சீராக்க மாட்டோம்'' என்று பதிலளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
வேதனை பொறுக்க முடியாமல் ஒருவர் தன் தலையை சுவற்றில் முட்டுகிறார். இதனால் இவர் இற்ந்து விட்டால் இது தற்கொலையில் சேராது. ஏனெனில் தற்கொலை செய்வதற்குத் தகுந்த காரியத்தை அவர் செய்யவில்லை, தற்கொலை செய்வதும் அவரது எண்ணம் இல்லை. இது போல் தான் அந்த நபித்தோழர் நடந்திருக்க வேண்டும். கை மட்டும் சீராக்கப்படவில்லை என்ற செய்தியிலிருந்து இதை அறியலாம்.
தன்னை வேதனைப் படுத்திக் கொள்ளும் வகையில் உயிரை மாய்க்காத ஒரு காரியத்தை ஒருவர் செய்து அதனால் அவர் மரணித்து விட்டால் அது தற்கொலையாகாது என்பது தால் இதில் இருந்து தெரிய வரும் உண்மையாகும்.
நன்றி - onlinepj
Post a Comment