ஆதம் (அலை) நபியா?

 (ஆதம் (அலை) அவர்கள் நபியல்ல என்ற கருத்தில் ஒரு பிரசுரம் கிடைத்தது. அதில் அபத்தமான வாதங்களை எடுத்து வைத்து அறைகுறையாக ஆய்வு செய்து ஆதம் நபியல்ல என்று வாதிட்டு இருந்தனர். 

ஆதம் நபி என்று சொல்பவர்கள் என்னென்ன ஆதாரங்களை வைக்கிறார்கள் என்பதைக் கூட அறியாமல் இவர்களாகவே வாதத்தையும் அதற்கான பதிலையும் வெளியிட்டு இருந்தனர். 

மேலும் ஆதம் நபி எனக் கூறும் பலவீனமான ஹதீஸையும் எடுத்துச் சொல்லி அதற்குப் பதில் சொல்லி இருந்தனர். அது நாம் எடுத்து வைக்காத வாதம். 

எனவே நாசர் அவர்களுக்கு அப்பிரசுரத்தை அனுப்பி ஆதம் நபி என்பதற்கான ஆதாரங்களையும் அர்த்தமற்ற வாதங்களுக்கான பதிலையும் தயார் செய்து அனுப்புமாறு கேட்டிருந்தோம். அவர் ஆய்வு செய்து அனுப்பியதை இங்கே வெளியிடுகிறோம்.) 

முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்கள் நபியா? இல்லையா? என்பதில் சிலர் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதர்தான் என்பதே நம்முடைய உறுதியான நிலைப்பாடாகும். இதற்கு திருமறைக்குர்ஆன், மற்றும் நபிமொழிகள் சான்றாகத் திகழ்கின்றன. 

முதலாவது ஆதாரம்

 ஒருவர் நபி என்பதற்கு முதன்மையான ஆதாரம் அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டிய மார்க்க ரீதியிலான சட்டதிட்டங்கள் அவருக்கு மட்டுமே  வஹியாக அறிவிக்கப்படும். மார்க்கச் சட்டங்கள் நபிமார்கள் தவிர வேறு யாருக்கும் அறிவிக்கப்படாது. 

அல்லாஹ்வின் விருப்பப்படி மக்கள் கட்டுப்பட வேண்டுமென்பதற்காகவே தவிர எந்தத் தூதரையும் நாம் அனுப்புவதில்லை. (அல்குர்ஆன் 4  : 64) 

மேற்கண்ட வசனம் அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டிய மார்க்க ரீதியிலான வழிகாட்டுதல்களை அல்லாஹ் நபிமார்கள் மூலமாக மட்டுமே தருவான் என்பதற்கு தெளிவான சான்றாகும். 
இதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன. 

அல்லாஹ் நபி அல்லாதவர்களுக்கு மார்க்க ரீதியிலான சட்டதிட்டங்களை வஹியாக அறிவிக்க மாட்டான். 

மக்களுக்குத் தேவையான மார்க்க ரீதியிலான சட்டதிட்டங்களை அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு வஹியாக அறிவித்துள்ளான். இதிலிருந்து ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதர்தான் என்பது நிரூபணமாகிறது

 قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ [البقرة/38] "

இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்'' என்று கூறினோம். (அல்குர்ஆன் 2 : 38)

 ثُمَّ اجْتَبَاهُ رَبُّهُ فَتَابَ عَلَيْهِ وَهَدَى (122) قَالَ اهْبِطَا مِنْهَا جَمِيعًا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَى  [طه/122، 123] 

பின்னர் அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். அவரை மன்னித்து நேர் வழி காட்டினான்.  இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அப்போது எனது நேர்வழியைப் பின்பற்றுபவர் வழிதவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார். 
(அல்குர்ஆன் 20 : 122, 123) 

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு தன்னிடமிருந்து நேர்வழி வரும் என்று குறிப்பிடுகின்றான். அல்லாஹ் ஒட்டு மொத்த சமுதாயத்தை நோக்கி பேசுவதாக மேற்கண்ட வசனத்தில் குறிப்பிட்டாலும் அதில் முதலில் வருபவர் ஆதம் (அலை) அவர்கள்தான். மற்றொரு வசனத்திலிருந்தும் ஆதம் (அலை) அவர்களுக்கு மார்க்கச் சட்டங்கள் அருளப்பட்டடிருந்தன என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

 وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ [المائدة/27] 

ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. "நான் உன்னைக் கொல்வேன்'' என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். "(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார். 
(அல்குர்ஆன் 5 : 27) 

நூஹ் (அலை) அவர்கள்தான் முதல் நபி என்றால் ஆதம் (அலை) அவர்களின் மகன்களுக்கு இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கும் ஒரு வணக்கத்தை கற்றுக் கொடுத்தது யார்? என்ற கேள்வி ஏற்படும். ஏனெனில் ஆதம் (அலை) அவர்களின் இருமகன்களும் நூஹ் (அலை) அவர்களுக்கு முந்தியவர்கள் ஆவர். 

எனவே அவர்களுக்குரிய ஷரியத்தை ஆதம் (அலை) அவர்கள் மூலமே அவர்கள் பெற்றிருக்க முடியும் என்பது தெளிவாகிறது 

எனவே ஆதம் (அலை) அவர்கள் நபியாக இருந்த காரணத்தினால் அவருடைய மகன்கள் இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை ஆதம் (அலை) அவர்கள் மூலம் பெற்றுக் கொண்டனர் என்பதே சரியானதாகும். 

இதன் மூலமும் ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதர்தான் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். 

சந்தேகமும் விளக்கமும் 

மர்யம் (அலை), துல்கர்னைன் (அலை), தாலூத்,  மூஸா நபியின் தாயார் , போன்ற நல்லடியார்களுக்கும் வஹி அறிவித்ததாக திருமறைக் குர்ஆன் குறிப்பிடுகிறது. எனவே அவர்களையும் நபி என்று குறிப்பிடுவீர்களா? என சிலர் இவ்விடத்தில் வினா எழுப்புகின்றனர். 

இவர்களுக்கு வஹியாக அறிவிக்கப்பட்ட செய்திகள் அவரவருக்குத் தேவையான, அல்லது ஒரு குழுவிற்குத் தேவையான சொந்த விஷயங்கள் ஆகும். இவர்களுக்கு அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டிய மார்க்க ரீதியிலான சட்டங்கள் வஹியாக அறிவிக்கப்படவில்லை. 

நபிமார்களுக்கம், நபி அல்லாத நல்லடியார்களுக்கு அறிவிக்கப்படும் வஹிக்கு மத்தியில் உள்ள வித்தியாசம் மிகத் தெளிவானதாகும் 

அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டிய மார்க்க அடிப்படையிலான வழிகாட்டுதல்களை அல்லாஹ் நபிமார்கள் மூலமாக மட்டுமே தருவான். ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் மார்க்க அடிப்படையிலான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளான். எனவே அவர்கள் இறைத்தூதர் ஆவார்கள். திருமறைக்குர்ஆனில் வஹி அறிவித்ததாகக் கூறப்படும் ஏனைய நல்லடியார்களுக்கு அறிவிக்கப்பட்ட விஷயங்கள் அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டிய மார்க்க அடிப்படையிலான செய்திகள் அல்ல.  

 இரண்டாவது ஆதாரம் 

صحيح ابن حبان (25/ 421، بترقيم الشاملة آليا( 6296 - أخبرنا محمد بن عمر بن يوسف ، حدثنا محمد بن عبد الملك بن زنجويه ، حدثنا أبو توبة ، حدثنا معاوية بن سلام ، عن أخيه زيد بن سلام ، قال : سمعت أبا سلام ، قال : سمعت أبا أمامة ، أن رجلا ، قال : يا رسول الله أنبي كان آدم ؟ قال : « نعم ، مكلم » ، قال : فكم كان بينه وبين نوح ؟ قال : « عشرة قرون » . أبو توبة اسمه : الربيع بن نافع 

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ” அல்லாஹ்வின் தூதரே ! ஆதம் (அலை) அவர்கள் நபியாக இருந்தார்களா? எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் ”ஆம்! அவர் (இறைவனுடன்) உரையாடியவர்” என்று குறிப்பிட்டார்கள். அந்த மனிதர் “ ஆதம் (அலை) அவர்களுக்கும், நூஹ் (அலை) அவர்களுக்கும் எத்தனை ஆண்டுகள் இடைவெளி?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் ”பத்து தலைமுறைகள் (இடைவெளியாகும்)” என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி) நூல் : இப்னு ஹிப்பான் (6296) 

மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமான செய்தியாகும். இதனுடைய அறிவிப்பாளர்களான அபுஸ்ஸல்லாம், ஸைத் பின் அபீ ஸல்லாம், அபூ தவ்பா அர்ரஃபீ பின் நாஃபிவு, ஆகியோர் முஸ்லிமுடைய அறிவிப்பாளர்கள் ஆவர்.இன்னும் நம்பகமானவர்களும் ஆவார். 

முஆவியா பின் அபீ ஸல்லாம் என்பவர் புகாரி, மற்றும் முஸ்லிம் ஆகிய இரண்டின் அறிவிப்பாளராவார். 

முஹம்மத் பின் அப்துல் மலிக் பின் ஸன்ஜவைஹி, மற்றும் முஹம்மத் பின் உமர் பின் யூசுஃப் ஆகிய இருவரும் உறுதியான அறிவிப்பாளர்கள் ஆவார்கள். 

மேற்கண்ட ஆதாரப்பூர்வமான செய்தியின் அடிப்படையில் ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதர் என்பதை நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். 

சில பலவீனமான அறிவிப்பாளர்கள் தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை நாம் ஆதாரமாகக் கொண்டுவரவில்லை. சரியான அறிவிப்பாளர் தொடர் கொண்டுள்ள செய்தியை மட்டுமே நாம் ஆதாரமாகக் காட்டியுள்ளோம். 

இந்தன் ஹதீஸ் ஆதம் அலை அவர்கள் நபி என்று மட்டும் சொல்லவில்லை. அவர் நபிமார்களில் தனிச்சிறப்பு வழங்கப்பட்ட நபி என்பதும் உறுதியாகிறது. மூஸா நபியுடன் அல்லாஹ் நேரடியாகப் பேசியது போல் ஆதம் (அலை) அவர்களிடமும் பேசியுள்ளான். 

இத்தூதர்களில் சிலரை, மற்றும் சிலரை விடச் சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான். அவர்களில் சிலருக்கு, பல தகுதிகளை அவன் உயர்த்தியிருக்கிறான். திருக்குர்ஆன் 2:253 

மூன்றாவது ஆதாரம் 

மறுமை நாளில் மக்கள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வதற்காக ஒருவரைத் தேடுவார்கள். ஆதம் (அலை), நூஹ் (அலை), இப்ராஹிம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை), என்று ஒவ்வொருவராகச் சென்று இறுதியாக நபி (ஸல்) அவர்களிடம் வருவார்கள். இறுதியாக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வாரகள் என்ற செய்தி புகாரி, முஸ்லிம், இன்னும் பல கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது. 

மேலும் மிஃராஜ் பயணத்தின் போது முஹம்மது  நபியவர்கள், மூஸா (அலை), இபுறாஹிம் (அலை), இத்ரீஸ் (அலை), யூசுப் (அலை), ஈஸா (அலை), யஹ்யா (அலை), ஹாரூன் (அலை), போன்ற நபிமார்களையும் இவர்களுடன் ஆதம் (அலை) அவர்களைச்  சந்தித்ததாகவும் புகாரி, முஸ்லிம் போன்ற பல நூற்களில் இடம் பெற்றுள்ளது. 

மேற்கண்ட இரண்டு சம்பவங்களிலும் கூறப்பட்டுள்ள அனைத்து நபிமார்களின் பெயர்களுடன் ஆதம் (அலை) அவர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது. 

நாம் ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதர் தான் என்பதற்கு முதல் ஆதாரமாக திருமறைக் குர்ஆன் வசனத்தையும், இரண்டாவதாக ஆதாரப்பூர்வமான நபிமொழியையும் கண்டோம். 

எனவே மக்கள் பரிந்துரைக்காக ஆதம் (அலை) அவர்களைச் தேடிச் செல்வது அவருக்கு முதல் மனிதர், அவரை அல்லாஹ் கையால் படைத்திருப்பது, மற்றும் மலக்குமார்களை அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு கூறியது போன்ற தனிச்சிறப்புகள் இருப்பதுடன் அவர் நபியாகவும் இருக்கின்ற காரணத்தினால்தான் என்பது தெளிவாகிறது. 

ஏனெனில் மக்கள் ஒவ்வொரு நபியிடமும் சென்று அவருக்கு அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்புகளைக் கூறி அல்லாஹ்விடம் தங்களுக்காக பரிந்துரை செய்யுமாறு வேண்டுகிறார்கள். அது போன்ற ஆதம் (அலை) அவர்கள் நபியாக இருக்கின்ற காரணத்தினால்தான் அவருடைய தனிச் சிறப்புகளைக் கூறி தங்களுக்காக பரிந்துரை செய்யுமாறு ஆதம் (அலை) அவர்களிடம் கோரிக்கை வைக்கிறார்கள். 

மேலும் மிஃராஜ் பயணத்தில் நபியவர்கள் ஒவ்வொரு வானத்திலும் ஒரு நபியைப் பார்க்கின்றாரகள்.  ஆதம் (அலை) அவர்கள் நபியாக இருக்கின்ற காரணத்தினால்தான் அவர்களையும் முதல் வானத்திலே நபியவர்கள் பார்க்கின்றார்கள். இதிலிருந்தும் ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதர்தான் என்பது தெளிவாகிறது. 

ஆதம் (அலை) அவர்கள் முதல் நபி இல்லை என்று கூறுபவர்கள் சிலவாதங்களை எடுத்து வைக்கின்றனர். அவற்றில் சிலவற்றிற்கு நாம் முன்னர் பதில் கூறிவிட்டோம். மற்ற சில வாதங்களுக்குரிய பதிலை இப்போது காண்போம்.

கேள்வி  1

 إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ 

நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச் செய்தி அறிவித்தது போல் (முஹம்மதே!) உமக்கும் நாம் தூதுச்செய்தி அறிவித்தோம். (4:163) 

இந்த வசனத்தில் நபி நூஹ் (அலை) அவர்களுக்கும் அவர்களுக்கு பின் வந்த நபிமார்களுக்கும் எவ்வாறு நாம் வஹீ அறிவித்தோமோ அதே போன்று உமக்கும் அறிவிக்கிறோம் என்று அல்லாஹ் நபி(ஸல்) அவர்களைப் பார்த்து கூறுகிறான். 

ஆதம் (அலை) அவர்கள் நபியாக இருந்திருந்தால் ஆதமுக்கு நாம் எவ்வாறு வஹீ அறிவித்தோமோ அவ்வாறே உமக்கு அறிவித்தோம் என்று அல்லாஹ் கூறியிருப்பான். ஆனால் இறைவன் நபி நூஹ் (அலை) அவர்களுக்கு அறிவித்ததைப் போன்று உமக்கு அறிவிக்கிறோம் என்று அல்லாஹ் கூறுவதின் மூலம் ஆதம் (அலை) அவர்களுக்கு இறைவன் தூதுத்துவத்தை வழங்கவில்லை என்பதை  இந்த வசனத்தின் மூலம் நமக்கு கூறுகிறான். 

என்று கூறுகின்றனர். 

தெளிவான பதில் 

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு வஹி அறிவித்தான் என்பதைப் பற்றிக் கூறுகிறான். 

நூஹூக்கும் அவருக்குப் பின்வந்த நபிமார்களுக்கும் அல்லாஹ் எவ்வாறு வஹி அறிவித்தானோ அது போன்றுதான் நபியவர்களுக்கும் அல்லாஹ் வஹி அறிவித்துள்ளான் என்பதே மேற்கண்ட வசனத்தின் கருத்தாகும். 

ஆதம் (அலை) அவர்களின் பெயரை அல்லாஹ் குறிப்பிடாத காரணத்தினால் அவர் நபி இல்லை என்று கருத்து வராது. மாறாக ஆதம் (அலை) அவர்களுக்கு வஹி அறிவித்ததைப் போன்று நபியவர்களுக்கும், ஏனைய நபிமார்களுக்கும் அல்லாஹ் வஹி அறிவிக்கவில்லை என்பதே மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்கக் கூடிய கருத்தாகும். 

ஏனெனில் ஆதம் (அலை) அவர்கள் முதல் மனிதராக இருந்த காரணத்தினால் அவருக்கு அல்லாஹ் அனைத்துப் பெயர்களையும் கற்றுக் கொடுத்தது போன்று நேரடியாகப் பேசி அறிவித்துக் கொடுத்தான். இதை முன்னர் நாம் எடுத்துக்காட்டிய நபிமொழியில் இருந்து அறிந்து கொள்ளலாம். அதில் ஆதம் நபி மட்டுமல்ல முகல்லம் இறவனுடன் நேரடியாகப் பேசுபவர் என்று நபியவர்கள் கூறியுள்ளனர். ஆதமுக்கு அறிவித்தது போல் நபியவர்களுக்கு வஹீ அறிவிக்காமல் நூஹ் நபிக்கு அறிவித்தது போல் தான் அறிவித்துள்ளான்.. 

ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் வஹி அறிவித்ததைப் போன்று மற்ற எந்த நபிக்கும் அல்லாஹ் வஹி அறிவிக்கவில்லை என்பதே சரியான கருத்தாகும். 

கேள்வி : 2 

ஷஃபாஅத் பற்றிய ஹதீஸில் மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று ”நீங்கள்தான் பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பி வைத்த தூதர்களில் முதலாமவர்” என்று கூறுவார்கள் என வந்துள்ளது. ( பார்க்க புகாரி 4476, 4712, 6565) 

மேற்கண்ட ஹதீஸில் நூஹ் (அலை) அவர்கள்தான் பூமியிலுள்ளவர்களுக்கு அனுப்பப்பட்ட முதல் தூதர் என்று வருகிறது. எனவே நூஹ் (அலை) அவர்கள்தான் முதல் தூதர். ஆதம் நபி கிடையாது. 

தெளிவான பதில்  

மேற்கண்ட செய்தியில் பொத்தாம் பொதுவாக நூஹ் (அலை) அவர்கள் முதல் தூதர் என்று குறிப்பிடப்படவில்லை. மாறாக. 

يَا نُوحُ أَنْتَ أَوَّلُ الرُّسُلِ إِلَى أَهْلِ الْأَرْضِ 

நூஹே ! நீர் பூமியில் உள்ளவர்களுக்கு முதல் தூதர் ஆவீர். (புகாரி 3340) 

يَا نُوحُ أَنْتَ أَوَّلُ الرُّسُلِ إِلَى الأَرْضِ 

மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம், "நூஹே! நீங்கள் பூமிக்கு முதல் ரசூல் ஆவீர்கள்'' என்றும் கூறுவார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் - 327)

 أَوَّلُ رَسُولٍ بَعَثَهُ اللَّهُ إِلَى أَهْلِ الْأَرْضِ 

நூஹே ! நீர் பூமியில் உள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிய முதல் தூதர் ஆவீர். (புகாரி 4476)  

  أَوَّلَ نَبِيٍّ بَعَثَهُ اللَّهُ إِلَى أَهْلِ الْأَرْضِ 

பூமியில் உள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிய முதல் நபி (நூஹ்) ஆவார். (7440) 

உலகத் தூதராக அனுப்பப்பட்ட முதல் தூதர் நூஹ் அவர்கள் தான். அதனால் தான் அவரது காலத்தில் முழு உலகுக்கும் பிரளயத்தை ஏற்படுத்தில் அழித்தான். அதற்கு முன்னர் அனுப்பப்பட்ட நபிமார்கள் ஒரு குடும்பத்துக்கோ ஒரு பகுதிக்கோ ஒரு கோத்திரத்துக்கோ தான் அனுப்பப்பட்டனர். பூமியில் உள்ளவர்களுக்கு அனுப்பப்பட்ட முதல் தூதர் என்பதில் இருந்து இதனை அறியலாம். 

அதுமட்டுமின்றி நூஹ் நபி தான் முதல் நபி என்றால் அவருக்கு முன்னர் வாழ்ந்த மக்களுக்கு இறைவன் எந்த வழிகாட்டலையும் வழங்கவில்லை என்று ஆகும். அதுவரை யார் வேண்டுமானாலும்ம் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அல்லாஹ் விட்டுவிட்டான் என்று ஆகும். இறைத்தூதர் வராவிட்டால் தொழுகை நோன்பு உள்ளிட்ட எந்த வணக்கத்தையும் அவர்கள் செய்திருக்க முடியாது.

onlinepj 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger