போதை பொருட்களின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றது. இதற்கு பல்வேறு காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அதிலும் விஷேடமாக இந்த புகைத்தல் பழக்கத்திற்கு ஆளாகுவோரின் தொகை மிகவும் விரைவாக பெருகிக்கொண்டு செல்கின்றது.
உங்களுக்கு தெரியுமா?
நீங்கள் புகைக்கும் ஒரு சிகரெட்டில் சுமார் 4000 இற்கு மேற்பட்ட நச்சுத் தன்மையுள்ள இரசாயனப் பதார்த்தங்கள் கலந்திருக்கின்றன. இதில் 80 சதவீதமான இரசாயனப் பதார்த்தங்கள் புற்று நோயை ஏற்படுத்தி, உங்கள் உடலுக்கு படு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
யோசித்துப் பாருங்கள்!
ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை சிகரட்டை புகைக்கின்றீர்கள். அப்படியென்றால் புகைத்தலால் எந்தளவுக்கு உங்கள் உடல் நச்சுத் தன்மைக்குள்ளாகி இருக்கும். ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள்.
புகைப்பதினால் வரும் பேராபத்தை, நீங்கள் புகைக்கின்ற அந்நேரத்தில் ஒரு கணமேனும் உணர்ந்திருக்கின்றீர்களா?
இல்லை,
அப்படி உணர்கின்ற ஒரு மனிதராக நீங்கள் இருப்பீர்களேயானால், நிச்சயம் உங்களால் புகைக்கும் அந்த பேராபத்தான தீய பழக்கத்தை இலகுவாக கைவிட முடியும்.
தயவு செய்து புகைக்காதீர்கள்.
நீங்கள் புகைப்பதினால்!
உங்கள் உடலுக்குள் செல்லும் நிக்கோடின் பல கடுமையான உடற்பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. உங்களை மென்மேலும் அதற்கு அடிமையாக்கி பிரகாசமான உங்களின் எதிர்காலத்தை இல்லாமலாக்கி விடுகிறது.
ஆமாம்!
நீங்கள் ஓர் ஆணாக இருப்பின், புகைத்தல் உங்களின் ஆண்மையை அழித்து மன நிறைவான உங்களது பாலியல் உறவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது. இதனால் உங்களது துணையை உடலுறவில் பூரணமாக திருப்திப்படுத்த முடியாமல் போகின்றது.
நீங்கள் ஒரு பெண்ணாக இருப்பின் புகைத்தலானது உங்களது கருத்தரிக்கும் வாய்ப்பைக் குறைக்கின்றது.
இவ்வாறான சில விடயங்கள் உங்களிருவருக்கும் இடையில் இருக்கும் நெருக்கத்தில் விரிசலை ஏற்படுத்தி உங்களை உளவியல் ரீதியான பாதிப்புக்கும் ஆளாகின்றது.
இவ்வாறு உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாவோரும் பரம்பரை வழியாக புகைத்தலுக்கு அடிமையானவர்களும் தான் மிகவும் அதிகமாக புகைக்கின்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கவொரு அம்சமாகும்.
எது எப்படியானாலும் எமது உடலில் சுமார் 99 வீதம் புற்றுநோயை உருவாக்குவதில் பிரதான காரணியாக இருப்பது இந்த புகைத்தல் தான்.
அது மட்டுமன்றி சுவாசத் தொகுதி தொடர்பான பல்வேறு நோய்களுக்கும் மூலகாரணமாக விளங்குகின்றது. மேலும் சமிபாட்டுத் தொகுதியையும் பாதிப்புக்குள்ளாக்கி நீரிழிவு நோய்க்கும் உங்களை ஆளாக்கி விடுகின்றது.
இவ்வாறு கடுமையான பாதிப்புக்களை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் உங்களுக்கு ஏற்படுத்தும் இந்த புகைத்தல் பழக்கம் உங்களுக்கு தேவை தானா என்பதை நீங்கள் தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்.
நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள ஒருவராயின், நான் புகைத்தலுக்கு அடிமையாகி விட்டேனே என்றோ, என்னால் இத்தீய பழக்கத்தை கைவிட முடியுமா? அல்லது முடியவில்லை என்றோ வீணாக மனதை போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
மாற்றம் குறித்த சிந்தனையையும், அச்சிந்தனையின் வழியாக உலகில் மாற்றத்தையும் கொண்டு வரக் கூடிய ஆற்றல் மனிதர்களிடம் மாத்திரமே இருக்கின்றது.
எனவே நீங்கள் நினைத்தாள் இத்தீய புகைப்பழக்கத்தை கைவிட முடியும். ஒவ்வொரு முறையும் சிகரெட்டுக்கு வைக்கும் நெருப்பு உங்கள் வாழ்க்கைக்கும் சேர்த்தே வைத்துக் கொள்ளப்படுகின்றது என்பதை ஒரு நாளும் மறந்து விடாதீர்கள்.
மன திடகாத்திரத்துடன் ஒரு முடிவுக்கு வாருங்கள். இன்றே, இப்பொழுதே, இந்நொடியிலேயே என்னால் புகைக்காமல் இருக்க முடியும் என உறுதிக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்களால் முடியும்.
நன்றி - லங்கா முஸ்லிம்
Post a Comment