அன்பளிப்பு செய்வோம்



        நபிகளாரின் உதாரணங்கள்


அன்பளிப்பு செய்வோம்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

தன் அன்பளிப்பை திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.

அறிவிப்பவர்     : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்                        : புகாரி (2622,6975)

புகாரியின் (2623) ஆவது அறிவிப்பில் தம் தர்மத்தை திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.... என்று இடம்பெற்றுள்ளது.

உலகத்தில் வாழும் மனிதர்கள் ஒருவர் மற்றவருக்கு உதவும் மனப்பான்மையுடன் இருக்குவேண்டும். இவ்வாறு உதவி செய்யும் மனிதர்கள் சில நேரங்களில் தன் உதவியை பெற்றவர்கள், இவர்களை மதிக்காத போது அல்லது இவர்களின் கட்டளையை, ஆலோசனையை ஏற்காத போது தான் செய்த உதவியை சொல்லிக்காட்டுகிறார்கள். இவ்வாறு செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டதாகும். இதனால் நாம் செய்த உதவிக்கு இறைவனிடம் கிடைக்கும் நன்மைகள் முற்றிலும் இல்லாமல் போய்விடும்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:264)

செய்த தர்மங்களை சொல்லிக்காட்டுவது போல் தான் தந்த அன்பளிப்புகளையும், தர்மத்தையும் திரும்ப கேட்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கிடையில் ஏற்பாடு சண்டைகள் இதற்கு காரணமாக அமைகின்றது. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தாம் செய்த தர்மங்கள், அன்பளிப்புகள் இவற்றை திரும்பத் தருமாறு கேட்பது மிகப்பெரிய இழிசெயலாகும். மேலும் தாம் செய்த தர்மங்களையும் அன்பளிப்புகளையும் அன்றே மறந்துவிடவேண்டும். இதன் கூலியை மறுமைநாளில்தான் எதிர்பார்க்கவேண்டும். இதற்கு மாறாக செய்த தர்மங்களையும் அன்பளிப்புகளையும் திரும்ப கேட்டால் அவர் எவ்வளவு இழிவானவர் என்பதைத்தான் நாம் முதலில் எடுத்துக்காட்டிய உதாரணத்தில் கூறியுள்ளார்கள்.

தான் தின்ற பொருளை வாந்தி எடுத்து அதையே உட்கொள்ளும் நாயையை எப்படி நாம் அறுவருப்பாக காண்போமோ அதைப் போன்றே கொடுத்த அன்பளிப்பை திரும்பப் பெறுபவனை இஸ்லாம் பார்க்கிறது. எனவே செய்கின்ற எந்த காரியமாக இருந்தாலும் இறைதிருப்பதிக்காக மட்டுமே செய்யவேண்டும். இதுவே மறுமை வெற்றிக்கு பயனளிக்கும்.

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப் பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும்  நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்'' (எனக் கூறுவார்கள்.) எனவே அந்த நாளின் தீங்கிலிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அவர்களுக்கு முகமலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கினான். (அல்குர்ஆன் 76:8 #11)

அன்பளிப்பை திரும்ப பெறக்கூடாது என்றாலும் தந்தை மட்டும் தன் மகனுக்கு செய்த அன்பளிப்பை பெற்றுக் கொள்ள இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

அன்பளிப்பை கொடுத்து அதனை திரும்பப்பெறுவது ஒரு தந்தை தன்மகனுக்கு கொடுக்கின்ற விஷயத்தில் தவிர எந்த ஒரு முஸ்லிமுக்கு அது  ஹலால் (அனுமதி)இல்லை

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்                      : திர்மதி (1220),நஸயீ (3630),

அன்பளிப்புத் தொடர்பாக இன்னும் சில விவரங்களை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் அவற்றையும் காண்போம்.

    அன்பளிப்பின் சிறப்பு:

நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு செய்து நேசத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

அறிவிப்பவர்  : அபூஹ‎ýரைரா (ரலி)

நூல்                     :அல்அதபுல்முஃப்ரத்(594)

நாம் பிறருக்கு ஒரு பொருளையோ பணத்தையோ கொடுத்து அன்பளிப்பு செய்வதால், நம்மின் மீது தவறான எண்ணமும் கோபமும் கொண்டவர் ஒருவர், இவர் நம் நலனில் அக்கரை கொண்டிருக்கிறார் என்று இதன் மூலம் எண்ணுவார். இதனால் இருவருக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கள் வழி ஏற்படும்.

முதலில் யாருக்கு அன்பளிப்புச் செய்வது

அன்பளிப்புச் செய்வதற்கு ஆளைத் தேடிப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கு மிக அருகாமையில் இருப்பவருக்கு பொருளைக் கொடுத்து மிக இலகுவான முறையில் நன்மைகளை பெறுவதற்கு நபியவர்கள் வழிமுறையை காட்டியுள்ளார்கள் .

நான் நபியவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டுக்காரர்கள் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் (முதலில்) அன்பளிப்பு செய்வது என்று கேட்டேன் அதற்கு நபியவர்கள் அவ்விருவரில்  யாருடைய வாசல் உன்வீட்டுக்கு அருகில் உள்ளதோ அவருக்கு அன்பளிப்பு செய் என்றார்கள்

அறிவிப்பவர்      : ஆயிஷா(ரலி)

நூல்                         : புகாரி  (2595)

    பிள்ளைகளுக்கு நீதமாக அன்பளிப்புச் செய்தல் 

பத்து மாதம் எல்லா பிள்ளைகளை சுமந்திருந்தாலும் தாய், தந்தை, சில குழந்தைகள் மீது மட்டும் அதிக பாசம் வைத்திருப்பார்கள். இந்த பாசம் மற்ற குழந்தைகளை விட இந்த குழந்தைகளுக்கு அதிக அக்கரையும் கவனிப்பும் செலுத்த காரணமாக அமைந்து விடுகிறது. அத்துடன் விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுப்பதிலும் ஊக்கத்தை தருகிறது. இவ்வாறு சில குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து சில குழந்தைகளை மட்டும் கவனிப்பதும் கூடாது. அன்பளிப்பு செய்வதில் அனைத்து குழந்தைகளிடம் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்ளவேண்டும்.

நுஃமான் பின் பஷீர்(ரலி) அவர்களை அவர்களுடைய தந்தை நபியவர்களிடம் அழைத்துச்சென்று எனக்கு செந்தமான அடிமையை எனது இந்த மகனுக்கு அன்பளிப்புச்செய்கின்றேன் என்று சொன்னார்கள். அதற்கு நபியவர்கள் உன்பிள்ளைகள் அனைவருக்கும் இதைப்போன்று அன்பளிப்‎பு செய்துள்ளீரா?  என்று கேட்க, அதற்கு அவர் இல்லை என்றார். நபியவர்கள் அன்பளிப்பை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர்(ரலி)

நூல்                    : புகாரி (2586)

    பிரதிஉபகாரம்

அன்பளிப்பு வாங்குவது சுயமரியாதையை இழக்கும் நிலை என்று சிலர்  கருதி அன்பளிபபை மறுப்பார்கள். ஆனால் நபியவர்களோ அன்பளிப்புப் பொருளை வாங்குவதோடு மட்டும் இல்லாமல் அதற்கு பிரதி உபகாரம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள்.

நபியவர்கள் அன்பளிப்பை வாங்குபவர்களாகவும் அதற்கு பதில் உபகாரம் செய்பவர்களாகவும் இருந்தார்கள்.

அறிவிப்பவர்     : ஆயிஷா(ரலி)

நூல்                        : புகாரி (2585)



ஏழைகள் தரும் சிறிய அன்பளிப்பு சிறிதாக இருந்தாலும் அந்த அன்பளிப்பையும் முகமலர்ந்து ஏற்க வேண்டும்.

நபியவர்கள் கூறினார்கள் :

முஸ்லிமான பெண்களே! ஒரு அண்டைவீட்டுக்காரி மற்ற அண்டை வீட்டுக்காரிக்கு ஒரு ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) கொடுத்தாலும்  அவள் அலட்சியம் செய்யவேண்டாம்

அறிவிப்பவர்     : அபூஹ‎ரைரா(ரலி)

நூல்                        : புகாரி (2566)

    மறுக்கக் கூடாத அன்பளிப்பு

நபியவர்கள் வாசனை திரவியத்தை நிராகரிப்பதில்லை.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்                    : புகாரி (2582)

    லஞ்சம்

உங்களுக்கிடையே (ஒருவருக் கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்! (அல்குர்ஆன் 2:188)

நபியவர்கள் லஞ்சம் வாங்குபவரையும் கொடுப்பவரையும் சபித்துள்ளார்கள்.

  அறிவிப்பவர்     : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)  
   நூல்                       :  திர்மிதி (1257)

மார்கத்தில் தடைசெய்யப்பட்ட லஞ்சமாக தரும் பொருட்களை அன்பளிப்பாக வாங்கவோ கொடுக்கவோ கூடாது.
      
நன்றி - frtj 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger