மீஸான் (தராசு)


 இப்னு தாஹிரா

இவ்வுலகத்தில் நன்மை செய்தவர்களும் தீமை செய்தவர்களும் மறுமை நாளில் அவரவர்களின் நன்மை, தீமைகளை தெளிவாகக் காண்பார்கள். இவ்வுலகில் மிக மிகச் சிறியதாக நினைத்தவை கூட அவர்களின் பதிவுப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். 

அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (அல்குர்ஆன் 99:7,8)

பதிவேடு வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே! எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன்எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான். (அல்குர்ஆன் 18:49)


பதிவேட்டைப் பார்த்து அதிர்ந்து போகும் மனிதன், இந்தப் புத்தகம் தனக்குக் கொடுக்கப்படாமல் இருக்க வேண்டுமே என்று கதறுவான். புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பதுதெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே! எனக் கூறுவான். (அல்குர்ஆன் 69:25-29)


இவ்வாறு மறுமை நாளில் மனிதன் செய்த செயல்களை அளவிட்டு, அதற்கு ஏற்றவாறு கூலியும் தண்டனையும் வழங்கப்படும்.
கியாமத் நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (அல்குர்ஆன் 21:47)


மீஸான் (தராசு) மூலம் அளவிடப்படும் என்பதற்கு, இவ்வுலகில் நாம் பார்க்கும் தராசுகளை வைத்து அளவிடப்படும் என்று கருதத் தேவையில்லை. இப்போது உள்ள நவீன காலத்தில் மிக எளிதாக அளவிடும் மின்னணு இயந்திரங்கள் மிகத் துள்ளிமாகக் கணக்கிடுகின்றன. ஆனால் இவை நாம் செய்யும் அமல்களைக் கணக்கிடாது. வல்ல அல்லாஹ் மறுமை நாளில் நிறுவும் தராசு நமது நல்லமல்களையும் தீய அமல்களையும் மிக விரைவாகக் கணக்கிட்டுச் சொல்லி விடும் திறமை வாய்ந்தவையாக இருக்கும். இன்றைய தினம் ஒவ்வொருவரும் செய்ததற்குக் கூலி கொடுக்கப்படும்.
 
இன்று எந்த அநியாயமும் இல்லை. அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன். (அல்குர்ஆன் 40:17)

இவ்வாறு கணக்கிடப்படும் தராசில், நாம் சாதாரணமானது என்று எண்ணும் விஷயங்கள் மிகவும் கனமுள்ளதாக இருந்து, அதனால் தீமையின் தட்டு கனத்து நாம் நரகத்திற்குச் செல்லும் அவல நிலையும் ஏற்பட்டு விடும். எனவே இவ்வுலகில் நாம் பேசும் பேச்சிலும் செயல்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.

ஓர் அடியார் பின் விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6477)


விலங்குகளுக்குத் துன்பம் தருவது கூட பாவத் தட்டில் கனமாகி நரகத்திற்குக் கொண்டு சேர்த்து விடும். பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை, அது பசியால் துடித்துச் சாகும் வரைஅவள்அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது லி அல்லாஹ்வே மிக அறிந்தவன் - நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை என்று அல்லாஹ் கூறினான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி (2365)


அதே நேரத்தில் உயிரினத்திடம் நல்ல முறையில் நடந்து கொண்டால் அதுகூட நன்மைத் தட்டைக் கனக்கச் செய்து, சொர்க்கத்திற்குச் செல்லக் காரணமாக அமைந்து விடும்.

ஒரு நாய் தாகத்தால் (தவித்து) ஈர மண்ணை (நக்கி) உண்டு கொண்டிருப்பதை ஒரு மனிதர் பார்த்தார். உடனே அவர் காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ், அவருடைய நற்செயலைப் பாராட்டி அங்கீகரித்து அவரைச் சுவர்க்கத்தில் நுழைத்தான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (173) 
 
நாம் அற்பமாக நினைக்கும் பல காரியங்கள் உண்மையில் பெரும் நன்மையை ஈட்டித் தரும் செயலாக இருக்கும். எனவே எந்த நற்காரியத்தையும் அற்பமாக நினைத்து, செய்யாமல் விட்டுவிடக் கூடாது.

என்னிடம் நபி (ஸல்) அவர்கள், நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம் (5122)


முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக் காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பப்பாகக்) கொடுத்தாலும் அதை இழிவாகக் கருத வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (2566), முஸ்லிம் (1868)


இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை; நாவுக்கு எதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும். (அவை:) 1. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்). 2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (7563), முஸ்லிம் (5224)


மிகச் சிறிய திக்ருகள் கூட மறுமை நாளில் நன்மைத் தட்டில் கனமானதாக இருக்கும் என்பதால் எதையும் சாதாரணமாக எண்ணி இருந்து விடாமல் சிறியது முதல் பெரியது வரை நல்லறங்களைத் தொடர்ந்து செய்து வருவோம்.

இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்) செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். (அப்போது) காலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (186)
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger