2012 ஆம் ஆண்டு, இலங்கை வாழ் முஸ்லிம்களின் வாழ்வியல் வரலாற்றில் சோக ரணங்களின் சுவடுகளை மொத்தமாய் விட்டுச் சென்ற ஆண்டு. இதற்கு முன் என்றும் இல்லாதவாறு பேரினவாத சக்திகளின் வெறித்தனமான பன்முகத் தாக்குதல்களுக்கு உள்ளாகி உதவிக்கரம் நீட்டுவார் யாருமின்றி நிலை குழைந்து நிற்கிறது எம் முஸ்லிம் சமூகம்.
அகிம்சையை போதித்த காவி உடைகளுக்குள் எம் முஸ்லிம் உம்மத்தின் முகவரியை கூட சுவடின்றி கருவறுக்க வேண்டும் என்ற மூர்க்கத்தனமான இனவாதம் கருக்கொண்டது கல்வியாளர்களின் விழிப்புருவங்களையும் விண்ணுயர்த்த வைத்துள்ளது.
அகிம்சையை போதித்த காவி உடைகளுக்குள் எம் முஸ்லிம் உம்மத்தின் முகவரியை கூட சுவடின்றி கருவறுக்க வேண்டும் என்ற மூர்க்கத்தனமான இனவாதம் கருக்கொண்டது கல்வியாளர்களின் விழிப்புருவங்களையும் விண்ணுயர்த்த வைத்துள்ளது.
பீரங்கிச் சப்தங்கள் ஓய்ந்தாளும் இனவாத உணர்வலைகள் இம்மண்ணை விட்டும் நீங்க வில்லை என்பதற்கு அண்மைக்காலமாய் அதிகரித்து வரும் காவி உடை தரித்த கரச்சேவகர்களின் காடைத்தன நகர்வுகள் தக்க சான்றாகும். விஷம் கக்கும் இனவாதக் கண்ணோட்டத்தை அகங்களில் சுமந்த வண்ணம் கச்சை கட்டி களப்பணி புரியும் பேரினவாத அமைப்புகள் புற்றீசல் போன்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றமை எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாய் உள்ளது. சிகல உறுமய, ஹெல உறுமய, பொது பலசேன, சிங்கள ராவய, ரிபில்லியன் ஒப் 12, பௌத்த பாதுகாப்பு பௌண்டேஷன், ஊவா கொயும் மெத் சங்விதாணய உட்பட ஏராளமான அமைப்புகள் அப்பாவி உள்ளங்களில் இனவாத நஞ்சை கலக்கும் வன் செயலை நாசுக்காய் செய்து வருகின்றமை அனைவரும் அறிந்த பரம இரகசியம் என்றால் மிகையாக மாட்டாது.
20-04-2012 ஆம் திகதி தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைராத் பள்ளிவாசல் இடிப்பில் தூவப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான இனவாதத் தீப்பொறி, பாரியதோர் இன முறுகல் நிலையை இலங்கை தேசத்தில் தோற்றுவித்து வக்கிரக உணர்வு வேட்கைகளை கொழுந்து விட்டு எரிய வைத்துள்ளது. கடந்து வந்த ஆண்டின் தடயங்களாய் எஞ்சியுள்ள சில நிகழ்வுகளை, எமது எதிர்கால எட்டுக்களை எங்கனம் வைப்பது என்பதை தீர்மானிப்பதற்கு ஏதுவாய் இருக்கும் என்பதற்காய் இங்கு நினைவுட்ட அவாவுருகிறோம்.
25-07-2012 ஆம் திகதி தம்பகம அல் அக்ரம் பள்ளிவாசல் இழுத்து மூடப்பட வேண்டும் என்ற கோஷத்துடன் களமிறங்கிய காவி உடை குண்டர்கள் தெஹிவலை, நாஜகிரி, அநுராதபுரம் என்று தங்கள் பள்ளியிடிப்புப் புண்ணிய பணியை வியாபித்துக்கொண்டே சென்றனர். தமது இனவாத நரித்தனத்தை மறைத்து அப்பாவி பௌத்தர்களின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்கும் விதமாய், பங்களாதேஷில் பன்சலைகள் தாக்கப்பட்டமையை கையில் எடுத்து 05-10-2012 ஆம் அன்று கொழும்பில் முஸ்லிம்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் புரிந்தனர். முஸ்லிம்கள் குறித்த தவறானப்புரிதலை பொது மக்கள் மத்தியில் விதைத்து இனவாத உணர்வை வளர்க்கும் விதமாய், முஸ்லிம் வியாபாரியொருவர் புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட கையுறை விற்றதாக போலி நாடகம் ஆடி பதுள்ளையில் மீண்டும் ஒரு பேரணி 23-11-2012 அன்று நடாத்தினர். அத்தோடு, 30-11-2012 அன்று பல இனவாத பௌத்த அமைப்புகளும் ஒன்றிணைந்து முஸ்லிம்களை அழிக்கும் திட்டத்துடன் மஹரகம ரஜமஹா விகாரையில் பாரியதொரு ஒன்று கூடல் வைத்தனர். மேலும், முஸ்லிம்களை அவர்களது புர்வீக புமியைவிட்டும் துரத்தி நாதியற்றவர்களாய் நட்டாற்றில் விடவேண்டும் என்ற தீய நோக்கில் 22-12-2012 அன்று பிலியந்தளவில் வைத்து பாரியதொரு ஆர்ப்பாட்டம் நடாத்தினர். கொழும்பில் 1971ஆம் ஆண்டு 19% இருந்த முஸ்லிம்கள் 2012ஆம் ஆண்டு 40% ஆக அதிகரித்துள்ளனர். தலைநகரில் பௌத்தர்களின் ஆதிக்கம் குறைகிறது. இதை தடுக்கக் கோருவதே இந்த ஆர்ப்பாட்டத்தின் மையக்கருவாக அமைந்திருந்தது. இதே போன்று, கண்டி, காலி, களுத்துரை உள்ளிட்ட பல இடங்களில் தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றக் கோரி பல ஊர்வலங்கள் பிக்குகளால் நடாத்தப்பட்டன.
இதுமட்டுமின்றி, குருநாகல நகரிலுள்ள எதுகல்புர விகாரையில் 16-12-2012 அன்று முஸ்லிம்களுக்கெதிராய் கண்டனக் கூட்டம் நடாத்தப்பட்டது. முஸ்லிம்களை எப்படியாவது சமாதிகட்டியே தீர வேண்டும் என்ற முனைப்பை இன்னும் விசாலப்படுத்தும் விதமாய் முஸ்லிம்கள் குறித்து துவேச உணர்வை விதைக்கும் வண்ணம் பல இடங்களில் சுவரொட்டிகளை இக்காவிக் கும்பல் ஒட்டத்தொடங்கியது. 2025ஆம் ஆண்டில் இலங்கை சபரிஸ்தானாக மாறும். முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள்! எனும் சுலோகத்துடன் கண்டியில் 08-12-2012 அன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ‘பள்ளியை நிறுத்துவாயா? அல்லது நாம் நிறுத்தட்டுமா?’ எனும் கருத்தை சுமந்து 22-12-2012 அன்று மஹியங்களையில் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டன. 30-12-2012 அன்று பதுள்ளையில் வைத்து முஸ்லிம்களை தரக்குறைவாக பேசும் 5 பக்க துண்டுப் பிரசுரம் ஊவா கொயும் மெத் சங்விதாணயவினால் விநியோகிக்கப்பட்டது.
மேலும், ஜம்இய்யதுல் உலமாவினால் வழங்கப்படும் ஹலால் சான்றிதழை இரத்துச் செய்யக் கோரியும், ஹலால் உணவுகளை பகிஷ்கரிக்க வேண்டியும் எம்பிலிபிட்டியவில் ஜாதிக ஹெல உருமயினால் 24-12-2012 அன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்டது. ஹலால் சான்றிதழ் மூலம் ஜம்இய்யதுல் உலமாவுக்கு வருடத்திற்கு 90 கோடி வருவாய் வருவதோடு, இந்நிதி ஹமாஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு வழங்கப்படுவதாகவும் கோஷமெழுப்பி முஸ்லிம்களை தேசத்துரோகிகளாக இவ்வார்ப்பாட்டத்தின் மூலம் சித்தரிக்க முனைந்தனர். அதுமட்டுமின்றி 31-12-2012 அன்று ஹலால் சான்றிதழை கண்டித்து பொது பல சேனாவினால் ஊடகவியலாளர் மாநாடும் நடாத்தப்பட்டது.
இன்னும்; 4 பிரிவுகளில் பயிற்றுவிக்கப்பட்ட 12 000 ஜிஹாத் பயிற்சி பெற்றவர்கள் இலங்கையில் இருப்பதாக அவதூறுப்பிரச்சாரம் பரப்பப்படுகிறது. இதுமட்டுமின்றி, பாராளுமன்றத்தில் கூட முஸ்லிம்களை இழிவு படுத்தும் கைங்கரியங்கள் தாராளமாக அரங்கேரி வருகின்றன. பாராளுமன்றத்தில் பன்றி இறைச்சி சமைக்கப்பட வேண்டும் என்று ஐ.தே.க. உறுப்பினர் ஜோன் அமரதுங்க கூறிய வாக்கு மூலம், இஸ்லாமிய சட்டங்கள் காட்டுமிராண்டித்தனமானவை என்று ஐ.தே.க.உறுப்பினர் கூத்தாடி ரஞ்சன் ராமநாயக விடுத்த அறிக்கை உள்ளிட்டவை இதற்கான சான்றுகளாகும்.
இவை போக முஸ்லிம்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கு இலங்கை தூதுவரை உத்தியோக புர்வமாய் நியமித்துள்ளமை மஹிந்த ராஜபக்ஷவின் அரசு எத்திசை நோக்கி பயணிக்கிறது என்பதை வௌ்ளிடை மலையாய் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. முஸ்லிம்களை அழித்தொழிக்கும் பணியை பொது பல சேனா போன்ற பௌத்த இனவாத குழுக்களை பயன்படுத்தி மஹிந்த அரசே முன்னெடுத்துச் செல்கிறது. இனச்சுத்திகரிப்பு பணியில் களம் இறங்கியுள்ள இனவாத அமைப்புகளின் கடிவாளம் மஹிந்த அரசிடமே உள்ளது என்பதை அரசோடு ஒத்தூதும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அமைச்சர் உதய கம்மன்பில ஒத்துக்கொண்டுள்ளமை ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய அம்சமாகும்.
கடந்த வருடத்தின் பேரினவாத சக்திகளின் நிகழ்ச்சி நிரலை பார்க்கும் போது இலங்கை, முஸ்லிம்களுக்கான சவக்குழியாய் மாறும் என்பதை கட்டியம் கூறி நிற்கிறது. பதவிக்காய் மாரடித்து, சமூக பிரக்ஞையின்றி வசுல் வேட்டை நடாத்தும் அரசியல் வாதிகளை நம்புவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகவே இருக்கும். கொள்கையை தாரை வார்க்காது சமூக உரிமைக்காய் குரல் கொடுக்கும் சமுதாயப் பேரியக்கத்தின் தேவை முன்பைவிட இப்போது அதிகரித்திருக்கிறது. அத்தகைய இஸ்லாமிய இயக்கத்தை கட்டியெழுப்பும் பணி மக்களே உங்கள் கைகளில் தான் இருக்கிறது. சிந்திக்குமா நம் சமூகம்?
(ஜனவரி மாத அழைப்பு இதழின் ஆசிரியர் தலையங்கம்.)
நன்றி - sltjweb
Post a Comment