மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் வேலை வாய்ப்பிற்காக பயணமாகின்றார்கள். இதில் கணவன், மணைவியாக பயணிப்பவர்கள் சிரலாக இருந்தாலும் பெரும்பாலும் வயது பாகுபாடின்றி பலரும் மத்திய கிழக்கு நோக்கி பயணிக்கவே செய்கின்றனர்.
திருமணம் செய்யாத ஆண், பெண் திருமணம் முடித்து மணைவியை நாட்டில் விட்டு வெளிநாட்டிற்கு செல்லும் கணவன். கணவனைப் பிரிந்து வெளிநாட்டு வேலைக்காக செல்லும் மணைவிமார்கள் என்று வரையரை இன்றி அனைவரும் இதில் பங்கெடுக்கின்றார்கள்.
வெளிநாட்டு மோகத்தின் காரணமான தங்கள் உறவுகளைப் பிரிந்து தொழில் வாய்ப்பிற்காக அங்கு செல்பவர்கள் தங்கள் குடும்பத்தில் நடக்கும் சீர்கேட்டைப் பற்றி ஏனோ அலட்டிக் கொள்வதில்லை? மற்ற சமுதாயத்தவர்களை விட வெளிநாட்டு மோகத்தில் தொழில்வாய்ப்புத் தேடி அங்கு செல்பவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்களாக இருக்கிறார்கள்.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இருந்துதான் அதிகமானவர்கள் வெளிநாடு நோக்கி பயணமாகின்றார்கள். அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் ஆண்கள் தான் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள், ஆனால் இலங்கையிலோ திருமணம் முடித்த, முடிக்காத இரு தரப்பு பெண்களும் கூட வேலைவாய்ப்பிற்காக வெளிநாட்டிற்கு செல்கின்றார்கள்.
இதனால் ஏற்படும் விழைவுகள் சாதாரணமானவைகள் அல்ல. கன்னிகளாக வெளிநாடு செல்லும் இளம் பெண்களில் கற்பை இழந்து நாடு திரும்பும் அவலம். மணைவியை விட்டு சென்றவன் அங்கொரு துணைவியை அமைத்துக் கொள்ளும் துர்பாக்கிய நிலை, தனக்குத் துணையில்லாத காரணத்தினால் தனது ஆசையைத் தீர்க்க அண்ணியவனின் துணை தேடும் மணைவி, திருமணம் செய்யும் வயதில் வெளிநாடு சென்றவன் விபச்சாரத்தை நோக்கி திசை திரும்பும் நிலை என வெளிநாட்டுப் பயணங்களினால் பலவிதமான பிரச்சினைகளும் குடும்ப உருவாக்கத்தில் நிறையவே உருவாகின்றன.
யாரெல்லாம் வெளிநாட்டு வேலை வாய்பை நாடிச் செல்கின்றார்களோ அவர்களில் ஒரு சதவீதத்தினர் கூட உண்பதற்கு உணவில்லை, அணிவதற்கு ஆடையில்லை, குடும்பத்தின் வருமை என்ற காரணங்களினால் வெளிநாடு செல்வதில்லை. வாடகை வீட்டில் இருக்கின்றேன் சொந்த வீடு கட்ட வேண்டும், பக்கத்து வீட்டுக்காரன் கார் வைத்திருக்கின்றான். நான் குறைந்தது ஒரு பைக்காவது வாங்க வேண்டும். வீட்டுக்கு குளிர்சாதனப் பெட்டி வேண்டும், டிவி வேண்டும், மகனுக்கும் மணைவிக்கும் ஆப்பில் மொபைல் வேண்டும் என்ற அளவில்லா ஆசை வைப்பவர்கள் தான் அதிகமாக வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள்.
இலங்கையில் சில முஸ்லிம் ஊர்களில் வீட்டில் கணவன் இருக்கின்றானோ இல்லையோ லேப்டாப் கண்டிப்பாக இருக்கின்றது. மணைவியின் கையில் சகல வசதிகளும் கொண்ட தொலை பேசி இருக்கின்றது. கட்டுப்பாடற்ற இது போன்ற நவீன உபகரண பயன்பாட்டில் ஏற்படும் தீய விளைவுகளை அறியாததின் காரணமாக நம் சமுதாய இளம் பெண்கள் வழிகேட்டில் மிக வேகமாகவே சென்று விழுகின்றார்கள்.
வெளிநாட்டுப் பயணங்களினால் ஏற்பட்ட சில தீய விழைவுகளின் உண்மைச் சம்பவங்களை இங்கே தொகுத்திருக்கின்றோம் நமது நாட்டில் நாளுக்கு நாள் இது போன்ற பிரச்சினைகள் நடைபெற்று வந்தாலும் அவை வெளியுலகுக்கு சொற்பமாகத்தான் வெளிவருகின்றன. சமுதாய நலனை கருத்தில் கொண்டு இது போன்ற சம்பவங்களை இங்கு குறிப்பிடுகின்றோம்.
சம்பவம் 01
கணவனை விட்டு, கணவனின் அக்கா மகனைத் தேடும் மணைவி?
மணைவிக்கும் பிள்ளைகளுக்கும் உழைத்துக் கொடுக்க வேண்டும், சந்தோஷமாக வாழவைக்க வேண்டும் என்பதற்காக நாட்டைவிட்டு பல ஆண்டுகள் வெளிநாட்டில் உழைத்து ஓடாய்ப் போய் இலங்கை வந்தார் ஒரு சகோதரர். இலங்கை வந்து ஒரு சில மாதங்களில் நோயாளியாக மாறினார். நோயாளிக் கணவனுடன், மணைவி வாழ்கிறாள் என்ற பரிதாப அன்பு மக்கள் மத்தியில் இந்த குடும்பத்தைப் பற்றி நிறையவே ஏற்பட்டிருந்தது.
திடீரென மணைவிக்கும் இன்னொரு பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை காரணமாக குடும்ப உறவு கேள்விக் குறியாகும் பூகம்பம் ஒன்று வெடித்தது.
ஆம் மூன்று பிள்ளைகளின் தாயான குறிப்பிட்ட பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கும் காலத்தில் வீட்டுக்குக் காவலாக, பெண்களைப் பாதுகாக்கும் போலிஸ்காரனாக வீட்டுக்குள் நுழைந்தான் கணவனின் அக்கா மகன்.
‘வேலியே பயிரை மேய்ந்த கதையாக” அக்கா மகனுக்கும் குறிப்பிட்ட பெண்ணுக்கும் இடையில் கல்லத் தொடர்பு மெல்லத் துளிர் விட்டது.
தற்போது அந்தக் குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இரண்டு முதலாவது : குறிப்பிட்ட பெண்ணுக்குப் பிறந்த மூன்று பிள்ளைகளில் மூத்த பிள்ளையைத் தவிரவுள்ள இரண்டு பிள்ளைகளும் கணவனின் அக்கா மகனுக்குப் பிறந்த குழந்தைகள் என்பது இப்போது வெளியாகியுள்ளது. இது மணைவி கொடுக்கும் வாக்குமூலம்.
இரண்டாவது : கணவன் எனக்கு இனிமேல் வேண்டாம் கணவனின் அக்கா மகன் தான் எனக்கு வேண்டும் கணவனையும் என்னையும் பிரித்துவிட்டு கணவனின் அக்கா மகனை எனக்கு மணமுடித்துத் தாருங்கள். இது மணைவி வைக்கும் கண்டிப்பான கோரிக்கை.
வெளிநாட்டுப் பயணம் தந்த விபரீதத்தைப் பார்த்தீர்களா? தொழிலுக்காக வெளிநாடுதான் தீர்வு என்று பயணிப்பவர்கள் இவற்றை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
சம்பவம் 02
மணைவியை விட்டு வேறு துணைவியைத் தேடிய கணவன்.
மணைவிக்காகவும், பிள்ளைகளுக்காகவும் சொத்து சேர்க்க, சுகமாக வாழவைக்கவென வெளிநாட்டுக்கு செல்ல ஆசைப்பட்டான் கணவன். தமக்காக உழைக்கச் செல்லப் போகின்றாரே அவருக்கு நாம் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் கடன் வாங்கி கணவனை வெளிநாட்டுக்கு அனுப்பினால் மணைவி.
இரண்டு பிள்ளைகளின் தகப்பன் வெளிநாட்டுக்குச் சென்று ஆறு மாதங்களில் வேறு ஒரு பெண்ணுடன் ஏற்படுத்திக் கொண்ட தவரான தொடர்பு காரணமாக அவளும் கற்பமடைகிறாள். நாட்டில் வாழும் போது கட்டிய மணைவியுடன் இருந்தவன் வெளிநாட்டிற்கு சென்றதும் வேறு ஒருத்தியுடன் தொடர்பை ஏற்படுத்தி இப்போது கட்டிய மணைவியும் பெற்ற குழந்தைகளும் தனக்குத் தேவையில்லை என்றும் தான் தேடிக் கொண்ட வைப்பாட்டிதான் தனக்கு வேண்டும் என்றும் அடம்பிடிக்கின்றான்.
மணைவியோ பெற்ற பிள்ளைகளை காப்பாற்ற முடியாமலும், வாங்கிய கடனை அடைக்க முடியாமலும் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றாள். அன்பின் தாய்மார்களே இது யாரால் யாருக்கு ஏற்பட்ட வினை? வேளிநாட்டு வாழ்வுதான் தீர்வு என்றால் உங்கள் எதிர்கால வாழ்வின் நிலை என்னவாகும்?
சம்பவம் 03
கொழும்பைச் சோர்ந்த ஒரு சகோதரி குவைத்துக்கு வேலைக்குச் செல்கிறாள் அவள் திருமணம் செய்து சில நாட்களில் கணவன் தலாக் விட்டுவிடுகின்றான். அவளுக்கு 10 மாத குழந்தை ஒன்றும் இருக்கின்றது. குவைத்துக்கு வேலைக்கு வந்து சில நாட்களில் உடல் நலம் சரியில்லாமல் போய்விடுகின்றது. மருத்துவ மனையில் சேர்க்கப்படுகின்றாள். அங்கு மருத்துவர்கள் அவளுடைய நோய்க்கான காரணமாக சொன்ன செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஆம் 10 மாத குழந்தையை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு வந்தாள். குழந்தை குடிப்பதற்காக சுரக்கும் பால் அங்கும் அவளுக்கு சுரக்க ஆரம்பித்ததன் விளைவாக அவளுடைய நோய் மேலும் அதிகரித்தது.
மூன்று நாட்கள் மருத்துவ மனையில் தங்கி வைத்தியம் பார்த்தவர். தான் வேலைக்கு வந்த வீட்டுக் காரரிடம் தன்னை இலங்கைக்கு அனுப்பும் படி கேட்டும் அவர் குறிப்பிட்ட பெண்ணை இலங்கைக்கு அனுப்பாமல் தான் வாங்கிய வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திடமே ஒப்படைத்துவிட்டார். அந்நிறுவனமும் அவரை இலங்கைக்கு அனுப்பாமல் மீண்டும் மீண்டும் பலருக்கும் விற்க ஆரம்பித்தார்கள்.
குடும்பத்தை வாழ வைப்பதற்காக வெளிநாடு செல்லும் பெண்களே இந்தச் சம்பவம் உங்களை உறுத்தவில்லையா? பிள்ளைக்கு பால் கொடுப்பதை விட உங்கள் தொழில் தான் உங்களுக்கு முக்கியமானதா?
சம்பவம் 04
மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு வேலைவாய்பைத் தேடி தந்தை மத்திய கிழக்கு நாடு ஒன்றிற்கு செல்கின்றார். மகளை வளர்க்கும் பொறுப்பு தாயிடத்தில் வழங்கப்படுகின்றது. தாயோ மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக பாடசாலை மட்டுமல்லாமல் மேலதிக வகுப்புகளுக்கும் அனுப்புகின்றாள். மேலதிக வகுப்புக்கு சென்ற இளம் வயது பெண் பிள்ளை ஒரு ஆடவனுடன் தொடர்பு ஏற்பட்டு காதல் வயப்படுகின்றாள்.
தந்தை வெளிநாட்டில் தாயோ வீட்டில் தனது பிள்ளையோ காதலனுடன் காதல் மயக்கத்தில் இருக்கின்றாள். தாயோ மகளுக்கு இறைவனைப் பற்றியும், இஸ்லாத்தை பற்றியும் சொல்லிப் பார்க்கிறாள் ஆனால் அவன் தான் தனக்கு வேண்டும் என்று 15 வயதுக்கும் குறைந்த அந்த சிறுமி காதல் மயக்கத்தில் தாயுடன் வாதிடுகின்றாள். கணவனுக்கும் சொல்வதற்கு பயந்து, மகளையும் சரியான வழிக்கு கொண்டுவர முடியாமல் தினமும் கண்ணீரும், கம்பலையுமாக காலத்தைக் கழிக்கின்றாள் தாய்.
இந்த நிலைக்குக் காரணம் யார்? வெளிநாட்டு உழைப்புக்கு ஆசைப்பட்டு செல்லும் கணவர்கள் இதை கவணிக்க மறப்பதேன்?
சம்பவம் 05
திருமணம் நடந்து சில நாட்களிலேயே மணைவியைப் பிரிந்து வெளிநாட்டிற்கு செல்கின்றான் கணவன். கணவன் அனுப்பும் பணத்தில் கல்லக் காதலனுடன் காமக் களியாட்டம் நடத்துகின்றாள் மனைவி. இறுதியில் கல்லக் காதலன் மூலமாக கற்பமாகி குழந்தையும் கிடைக்கின்றது. இரவோடிரவாக குழந்தையை வீட்டுக்குள்ளேயே புதை;து விடுகின்றாள். விபரம் அறிந்தவர்கள் மூலம் அடுத்த நாள் செய்தி கிடைத்து போலிஸ் அவளையும், கல்லக் காதலனையும் கைது செய்கிறார்கள். இவ்வளவு விஷயங்களும் நடந்த பின் தான் கணவனுக்கு செய்தியே கிடைக்கின்றது.
கட்டிய கணவன் வெளிநாட்டில் கல்லக் காதலனுடன் காமக் களியாட்டத்தில் மனைவி உள்நாட்டில். இப்படி எத்தனை சம்பவங்கள்?
பொருளாதாரத்தை தேடுவதில் தவரில்லை.
பொருளாதாரத்தை தேடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
சிலரைவிட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:32)
பொருளாதாரத்தை சேர்ப்பதில், அதற்காக பாடுபடுவதில் எந்தத் தடையும் மார்க்கத்தில் இல்லை. மாறாக அதற்காக பாடுபடுபவர்கள் தானும், தனது குடும்மும், உறவும் அதன் மூலம் வழிகெடாத வண்ணம் அதனை கவணமாக கையால வேண்டும். யாராவது வெளிநாடு சென்றுதான் உழைக்க வேண்டும் என்ற இறுதி முடிவில் இருந்தால் அவர் தனது மனைவியையும் தன்னுடன் அழைத்து செல்லுங்கள். வயது வந்த பிள்ளைகள் இருந்தால் கண்டிப்பாக முடிந்தவரை உள்நாட்டிலேயே உங்கள் தொழிலை அமைத்துக் கொள்ள முடிவு செய்யுங்கள்.
வெளிநாட்டு வாழ்வை நேசிப்பவர்களே! இது உங்கள் சிந்தனைக்கு!
பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்வதற்காக வெளிநாட்டு வாழ்வை நோக்கிச் செல்லும் கணவர்களே! கணவனின் இயலாமைக்காக தங்கள் உழைப்பை நம்பி வெளிநாடு செல்லும் மனைவிமார்களே! பெற்றோரின் சுமை நீக்க உழைப்புக்காய் களமிறங்கும் இளம் மங்கைகளே!, இளைஞர்களே! அத்தனை பேருக்குமான ஒரு அன்பான அழைப்பாக இந்த ஆக்கத்தை வெளியிடுகின்றோம். குடும்ப வாழ்வை சீரழித்து இம்மை மறுமை வாழ்வைப் பாழாக்கும் இருட்டு வாழ்வை நோக்கி செல்வதை விடுத்து வெளிச்சத்தை நோக்கி வாருங்கள். ஒரு ரூபாயாக இருந்தாலும் கட்டிய மணைவியுடனும், பெற்ற பிள்ளையுடனும், பெற்றெடுத்த பெற்றோருடனும் சேர்ந்து உள்நாட்டில் உழைத்து சந்தோஷமாக வாழ்வதற்கு எத்தனியுங்கள்.
நன்றி - rasminmisc
Post a Comment