மாய(ன்) உலகு அழிந்தது!



விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் போட்டிபோட்டு முன்னேறிக் கொண்டிருக்கும் நவீன யுகத்தில் 'மாயன்கள்' என்ற தென்னமெரிக்கப் பழங்குடிமக்களின் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு யூகத்தில் விதைக்கப்பட்ட,  டிசம்பர்-21,2012 அன்று உலகம் அழியும் என்ற வதந்தியும், அதைத்தொடர்ந்து மக்களிடம் ஏற்பட்டஅச்சங்கலந்த பீதியும் சனியன்று  காலை சூரிய உதயத்துக்குப் பின்னர் முடிவுக்கு வந்தன.

உலகம் எவ்வாறு தோன்றியது, அதன் சுற்றுவட்டப்பாதைஎது, அதன் சுழற்சிஏன் , தட்பவெப்ப நிலை மாற்றங்கள் எப்படி என்பன குறித்த தகவல்கள் உள்ளங்கைக்குள் வந்துவிட்டபோதிலும், மாயன்களின் நாட்காட்டியில் டிசம்பர்-21, 2012 க்குப் பிறகு நாள் கணக்கீடு இல்லை என்பதால் அன்றைய தினம் உலகம் முடிவுக்கு வருமென மாயன்கள் முன்கூட்டி அறிந்திருந்த காரணத்தாலேயே டிசம்பர்-21க்குப் பிறகு அவர்கள் நாட்காட்டியில் குறிப்பிடவில்லை என்று பரவிய நச்சுக் கருத்து நகைப்புக்கு உரியது.

சூரியனை அடிப்படையாகக் கொண்ட கிரிகோரியன் (Gregorian), சந்திரனை அடிப்படையாகக் கொண்ட ஹிஜிரா (Hijra) மற்றும் கிரகங்களை அடிப்படையாகக் கொண்ட பிற நாட்காட்டிகள் மட்டுமே இப்போது  நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்நிலையில் யாருமே பின்பற்றாத மாயன்களின் நாட்காட்டியை மையமாக வைத்து உலக மக்களைப் பீதிக்குள்ளாக்கியது கண்டனத்துக்குரியது.

கடந்த 2000 ஆம் ஆண்டு கணினியின் செயல்பாடுகள் அனைத்தும் நின்றுவிடும் என்றும், கணினியின் கடிகாரம் dd-mm-yy என்ற வடிவில், ஆண்டு இரு இலக்கம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருப்பதால், 01-01-2000 நாளில் கணினி கடிகாரம் 01-01-00 என ஆகும்போது கணினி அதனை 01-01-1900 என்றே எடுத்துக்கொள்ளும் என்றும் அப்போது கணினியின் கட்டுப்பாட்டில் செயல்படும் செயற்கைக்கோள்கள் முதல் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டறை வரைக்கும் குழப்பம் ஏற்பட்டு உலகத்துக்கே அது அச்சுறுத்தலாக அமையலாம் என்றும் பீதியைக் கிளப்பி அதற்கு Y2K-2000 மில்லனியம் பக் (Millennium Bug) என்று பெயரிட்டு பாமரர்கள் மட்டுமின்றி படித்தவர்களும் சிலகாலம் குழம்பி இருந்தனர். எனினும், கணினி வல்லுநர்கள் அதற்கு தீர்வு கண்டறிந்து குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

மனிதப் படைப்பில் உருவான கணினி நாட்காட்டிகளில் ஏற்பட்ட பிரச்சினைக்கேனும் நியாயமான காரணங்கள் இருந்தன. ஆனால், 21-12-2012 குழப்பத்திற்கு மாயன்களின் நாட்காட்டியின் அடிப்படையில் விதைக்கப்பட்ட யூகம் மட்டுமே காரணமாக இருந்தது.

2004 ஆம் ஆண்டில் வந்த சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவுகளிலிருந்து மீண்ட உலகம், தற்போதைய நவீன தொழில் நுட்ப உதவியால் அவ்வப்போது சுனாமி எச்சரிக்கைகளை விடுப்பதும், பிறகு திரும்பப் பெறுவதுமாக இருந்து வருகிறது. ஆனால், இது போன்ற உலக அழிவு குறித்த புரளிகளைப் பெரும்பாலான அரசாங்கங்கள் அலுவல் ரீதியாகத் தெளிவுபடுத்தி, மக்களைக் குழப்பங்களில் இருந்து விடுவித்ததாகத்  தகவல் இல்லை. ஒருசில நாடுகளில் மட்டும் புரளி கிளப்பியவர்களுக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டிலுள்ள மலைக்குன்றுமேல் ஏறி நின்றால், வேற்றுக்கிரகவாசிகள்!? தங்கள் விண்கலங்களில்? வந்து அங்கிருப்பவர்களை மட்டும் ஏற்றிச்சென்று காப்பாற்றுவார்கள் என்ற மூடநம்பிக்கையால், அந்தப்பகுதிக்குப் படை எடுத்தவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் பிரான்ஸ் அரசின் ஒத்துழைப்பைக் கோரியது அப்பகுதி நிர்வாகம். ஜப்பானில் ஒரு நிறுவனம் கருங்கல் பாறைக்குப்பிக்குள் ஒளிந்து கொண்டால் உலக அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று பாதுகாப்புக் குப்பிகளைக் கூவிகூவி விற்பனை செய்ததாகவும் செய்திகள் வந்தன.

ஊடகங்களும் தங்கள் பங்குக்குக் கற்பனைகளையும் சோதிடர்களின் பேட்டிகளையும் பரபரப்பாக வெளியிட்டுப் பக்கங்களை நிரப்பின. தனிநபர்களும் வலைப்பூ, முகநூல், டிவிட்டரில் தத்தமது கருத்துக்களைப் பரப்பி 21-12-2012 அன்று நள்ளிரவுவரை பொழுதுபோக்கினர். 2012 ஆம் ஆண்டில் உலகம் அழியும் என்ற புரளியை மக்களிடம் எடுத்துச் சென்றதில் கணினி வரைகலை யுக்திகளுடன் வெளியான  2012-End Of The World என்ற ஹாலிவுட் திரைப் படத்துக்கும் முக்கிய பங்குண்டு.  மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாக, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மேற்கத்திய நாடுகளின் சதியும் உலக அழிவுப் புரளியின் பின்னணியில் இருக்கக் கூடும். 

மொத்தத்தில் கற்பனையும், தொழில் நுட்பமும் இருந்தால் நவீன ஊடகங்களின் உதவியோடு மக்களை மடையர்கள் ஆக்க முடியும் என்பதும், மக்களின் அறியாமை மற்றும் அச்சத்தை வைத்துகூட காசுபார்க்க முடியும் என்பதும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதைத் தவிர உலக அழிவு புரளியால் வேறு எந்தப்பயனு
மில்லை.

நன்றி - இந்நேரம் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger