பைபிளும் குரானும் பேசுவது ஒன்றுதானா?




2002 ஆம் ஆண்டு கல்கி ஏட்டில் பீஜைனுல் ஆபிதீன் அளித்த பேட்டி. பின்னர் இது ஒற்றுமை இதழிலும் வெளியிடப்பட்டது. நேயர்களுக்குப் பயன்படும் என்பதால் இதை வெளியிடுகிறோம்.
பைபிளும் குரானும் பேசுவது ஒன்றுதானா?
சமீபத்தில் The Bible and Quran எனும் தலைப்பிட்டு நியூஸ் வீக் வார இதழ் ஒரு கட்டுரை வெளியிட்டது. இக்கட்டுரையைக் குறித்து இஸ்லாமிய அறிஞர் மவ்லவி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களிடமும், பிரபல எழுத்தாளர் வலம்புரி ஜானிடமும் பேட்டி எடுத்து கட்டுரை எழுதியுள்ளது கல்கி வார இதழ். கல்கி நிருபர் சித்தார்த், மற்றும் ஸ்ரீநிவாசன் எழுதியுள்ள அக்கட்டுரை வாசகர்களுக்குப் பயனளிக்கும் என்பதால் இங்கே அளிக்கிறோம். ஒற்றுமை 16.03.2002
பைபிளும் - குரானும் ஒரே செய்தியைத் தான் சொல்கின்றன. இரண்டுமே கடவுளின் தூதர்களைப் பற்றியும் மீட்சியைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் தான் பேசுகின்றன. இப்படி இருக்கையில் மதத்தின் பெயரால் போராட்டம் ஏன்? என்று ஆரம்பித்து, நியூஸ் வீக் இதழில் குரானையும் - பைபிளையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது
அந்தக் கட்டுரையிலிருந்து
பைபிளைப் போலவே, குரானிலும் தெய்வீக அதிகாரம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் தெய்வீக அருள் பெற்ற மனிதர்கள் தான் பைபிளை எழுதினார்கள் என்று யூதர்களும், கிறித்தவர்களும், கருதுகிற போது, அல்லாஹ்வின் நிரந்தரமான வார்த்தைகளாகவே குரானை முஸ்லிம்கள் நினைக்கிறார்கள். குரான் என்றால் ஒப்பித்தல் என்று அர்த்தம். ஆக, கடவுளின் சொற்களை வெளிப்படுத்த முஹம்மத் ஒரு கருவியாக இருந்திருக்கறார்; அவராக அவற்றை உருவாக்கவில்லை. மேலும், முஹம்மதுவிடம் கடவுள் பேசிய மொழி அரபி, ஆதலால், குரானின் மொழிபெயர்ப்புகள், கடவுளின் அசல் உரைகளுக்கு விளக்க உரைகளாகவே கருதப்படுகின்றன.
பைபிளைப் படிக்கிறவர்கள், ஆபிரகாம், மோஸஸ், டேவிட், ஜான் த பாப்டிஸ்ட், ஜீஸஸ் - ஏன், கன்னிமேரி ஆகிய பெயர்களைக் குரானிலும் பார்க்கலாம். ஆனால், இவர்களைப் பற்றிய செய்திகள் பைபிளில் இருப்பதற்கு முற்றிலும் மாறுபட்டவை. குரானில், தேவ தூதர்கள் எல்லோருமே முஸ்லிம்கள், உதாரணமாக, ஆபிரகாம் (இப்ராஹீம்), முதல் முஸ்லிம் ஆகக் கருதப்படுகிறார். ஏனெனில், அவர் தமது தகப்பனாரின் மதத்தை ஏற்காமல் அல்லாஹ்வைச் சரண் அடைந்தார்; அவருடைய பெயரும் பைபிளில் குறிப்படப்படவில்லை. இஸ்லாமிய புனிதத் தலமான மெக்காவில் அவர் காபா கட்டிய குறிப்பும் இல்லை. குரானில் பேசப்படும் மூஸா பைபிளில் வரும் மோஸஸ் போல இருக்கிறார். பெற்றோருக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்பது திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. குரானில் வரும் ஈஸா, பைபிளில் வரும் ஜீஸஸ் போன்றே சித்தரிக்கப்பட்டிருக்கிறார். மெக்காவில் முஹம்மதுவை முதலில் மக்கள் நிராகரித்து அலட்சியம் பண்ணியது போலவே அவரையும் வெறுத்திருக்கிறார்கள். ஆனால், ஏசு கடவுளின் குழந்தை என்ற கிறிஸ்தவர்களின் கூற்றை குரான் ஏற்கவில்லை. சிலுவையில் ஏசு அறையப்பட்டதைக் கூட மேலோட்டமாகத் தான் சொல்லுகிறது. ஆனால், குரானின்படி ஏசுபிரான் மர்மமான முறையில் இறக்கவில்லை; அல்லாஹ் அவரை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறார்!
அரசியல் ரீதியாக, மேற்கத்திய நாடுகளில் தற்போதைய நிலை குரானுக்கு எப்படித் தவறாகச் சிலர் அர்த்தம் கற்பிக்கிறார்கள் என்பது தான். குரான் ஒரு ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றிச் சொல்லுகிறது. ஆனால், சரித்திரத்தைப் பார்த்தால், மதரீதியான அதிகாரத்துக்கும், இஸ்லாமிய அரசுகளுக்கும், தொடர்ந்து போராட்டம் இருந்து வருவது தெரியும். ஒரு காலத்தில் குரானில் அடிப்படையில் நடுவர்கள் தீர்ப்பளித்து வந்தார்கள். இன்றைய இஸ்லாமிய நாடுகளைப் பொறுத்த வரை அதிகாரப்பூர்வமான மதத் தலைமையின் கருத்துக்களுக்கு முழுதுமான மதிப்பும், அங்கீகாரமும் கிடைப்பதில்லை.
எல்லா நாடுகளிலும் உள்ள மதவாதிகளைப் போலவே, முஸ்லிம்களும் தமது விதண்டாவதங்களுக்கு எல்லாம் குரானை ஆதாரம் காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். தங்களுக்குச் சாதகமாக இவற்றைக் கூற ஆரம்பித்து விடுகிறார்கள். உஸாமா பின் லாடன் அவர்களில் ஒருவர் எனக் கூறலாம்.
மேற்கண்ட கட்டுரை பற்றி மார்க்க அறிஞர் மவ்லவி ஜைனுல் ஆபிதீனிடமும் - வலம்புரி ஜானிடமும் கேட்டோம்.
மத ரீதியான போராட்டம் அல்ல!
ஜைனுல் ஆபிதீன்:
பைபிளிலும், திருக்குரானிலும் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களில் அடிப்படையாகவே பல வேறுபாடுகள் உண்டு
1- கடவுளுக்கு மனைவி, மக்கள் இல்லை. இது இஸ்லாத்தின் அடிப்படை. ஆனால் கிறிஸ்தவம் ஏசுவை கடவுளின் குமாரர் என்கிறது
2- கிறித்துவம் பிதா - சுதன் - பரிசுத்த ஆவி என்ற திரித்துவத்தைச் சொல்கிறது.
3- மனிதன் பாவியாகவே பிறக்கிறான் என்று பைபிள் சொல்கிறது. ஆனால் ஒரு பாவமும் அற்றவனாகப் பிறக்கிறான் என்று இஸ்லாம் சொல்கிறது.
4- எல்லோருடைய பாவங்களையும் சுமந்து கொள்வதற்காக ஏசு தன்னைத்தானே சிலுவையில் பலியாக்கிக் கொண்டார் என்று கிறித்துவம் சொல்கிறது. ஒருவரது பாவத்தை மற்றவர் சுமக்கவே முடியாது என்று இஸ்லாம் சொல்கிறது.
5- பாவம் செய்து விட்டால் மதகுருமார்களிடம் Confession செய்வதன் மூலம் பாபநிவர்த்தி அடையலாம் என்று கிறித்துவம் சொல்கிறது. ஆனால் இஸ்லாமோ கடவுளிடம் நேரடியாகப் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்று சொல்கிறது.
6-சொர்க்கம், நரகம் பற்றி இரண்டு வேதங்களில் பேசப்பட்டாலும், அதை அடைவதற்கான வழிகளில் இரண்டும் வித்தியாசப்படுகின்றன. ஒருவன் செய்யும் நன்மை, தீமைக்கேற்ப, சொர்க்கமா, நரகமா என்பதைக் கடவுள் தீர்மானிப்பார் என்று மிகத் தெளிவாகவே குரானில் சொல்லப்பட்டிருக்கிறது.
7-பைபிளிலும், குரானிலும் கிட்டத்தட்ட ஒத்த பெயருடைய பலரைப் பற்றிச் செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், அவர்களை அறிமுகப்படுத்தும் விதத்தில் வித்தியாசப்படுகின்றன. உதாரணமாக, தாவீது (குரானில் தாவூத்) லோத்து (குரானில் லூத்) ஆகியோரைப் பற்றி பைபிளில் தவறான முறையில் சொல்லப்பட்டிருக்கின்றன. குரான் இதை மறுக்கிறது.
இரு மதங்களுக்கிடையே போராட்டம் என்பது முற்றிலும் தவறாகும். அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பதும், கிறித்துவ மார்க்கத்தைப் பரப்புவதற்காகவோ நிலை நிறுத்துவதற்காகவோ அல்ல. உண்மையில் யூதர்கள் தான் கிறித்தவர்களுக்கு முதல் எதிரி. (கிறித்தவ நம்பிக்கைப்படி) ஏசுவைக் கொன்றவர்கள் மட்டுமல்ல அவர் வாழ்ந்த காலத்தில் இழிசொற்களால் ஏசியவர்களும் யூதர்களே!
எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டவே இஸ்ரேலை ஊக்கப்படுத்தி, முஸ்லிம் நாடுகளை மிரட்டி வருகிறது அமெரிக்கா. உஸாமா பின் லாடனைப் பிடிப்பதற்காக ஆப்கான் மீது படையெடுத்து அப்பாவிகளைக் கொன்றது கிறித்துவ மார்க்கத்தின் நோக்கமாக இருக்கவே முடியாது. ஆப்கான் மீது தன் ஆதிக்கத்தை நிலை நாட்டவே இந்தப் படையெடுப்பு.
திருக்குரானில் இரண்டு விதமான கட்டளைகள் உள்ளன. தனி மனிதர்கள் பின்பற்ற வேண்டியவை; அரசுகள் பின்பற்ற வேண்டியவை என்று இரு வகைகள். துரதிஷ்டவசமாக குரானில் உள்ள போர் குறித்த கட்டளைகளை, முஸ்லிம் அல்லாதவர்கள் - அதிலும் இஸ்லாத்தை வெறுப்பவர்கள், இஸ்லாத்துக்குத் தவறான வடிவம் தர பயன்படுத்திக் கொள்கிறார்கள். குரானில் வெட்டுங்கள்; கொல்லுங்கள் என்ற வசனங்கள் உண்டு. ஆனால், இவற்றைத் தனியாகப் பார்க்கக் கூடாது. இந்த வசனங்களுக்கு முன் உள்ள வசனங்களைப் பார்த்தால் யுத்த களத்தில், செயல்படுத்த வேண்டிய கட்டளைகள் என்பது புரியும் (உதாரணம், இரண்டாவது அத்தியாயம்: 190,191).
முஸ்லிம்களிலும் அரைகுறையாகப் புரிந்து கொள்ளும் சிலர் மக்களைத் தூண்டி ஆள் சேர்ப்பதற்காக இத்தகைய வசனங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இரண்டுமே தவறாகும்.
நன்றி: கல்கி (03.03.2002)
நன்றி - jesusinvites.com 


)



Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger