கேரளாவில் உள்ள முஜாஹித் என்ற ஜமாஅத்தைப் பற்றித் தங்கள் கருத்து என்ன? அவர்கள் ஸலபி என்று கூறிக் கொள்கிறார்கள். அதைப் பின்பற்றலாமா?

சுதிர் அஹ்மத்

கேரளாவில் முஜாஹிதீன்கள் என்ற பெயரில் ஒரு ஜமாஅத்தினர் இயங்கி வருகிறார்கள். இவர்கள் தர்ஹா, மவ்லூத் போன்ற இணை வைப்புக் காரியங்களையும் கத்தம் பாத்திஹா போன்ற சில பித்அத்களையும் நம்மைப் போன்று எதிர்க்கின்றனர்.

இதனால் இவர்கள் கொள்கை விஷயங்கள் அனைத்திலும் நம்மைப் போன்றவர்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இவர்கள் ஷிர்க் பித்அத் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட சில அனாச்சாரங்களை எதிர்த்தாலும் அதே அடிப்படையிலான வேறு பல அனாச்சாரங்களை இவர்களே அரங்கேற்றி வருகின்றனர்.

ஒருவர் இஸ்லாம் அங்கீகரிக்காத அனைத்து தவறான கொள்கைகளிலிருந்து விடுபட்டால் தான் அவர் சரியான ஓரிறைக் கொள்கையைக் கொண்டவராகக் கருதப்படுவார்.

தர்ஹா, மவ்லித் போன்ற இணை வைப்பை ஒரு பக்கம் எதிர்த்துக் கொண்டு மறுபக்கம் மத்ஹபு என்ற வழிகேட்டை ஆதரிப்பவர்கள் ஏகத்துவவாதிகள் இல்லை என்று நம்புகிறோம். இது போன்று தான் இவர்களின் நிலையும் அமைந்துள்ளது.

குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதைப் போன்று ஸலஃபுகளைப் பின்பற்ற வேண்டும் என்பது இவர்களின் கொள்கையாகும். சுருக்கமாகச் சொல்வதென்றால் சஹாபாக்களின் மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகின்றனர். எனவே இமாம்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறும் மத்ஹபுவாதிகளுக்கும் இவர்களுக்கும் இடையே வித்தியாசம் ஒன்றுமில்லை.

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டுமே பின்பற்றும் கூட்டம் தான் வெற்றி பெறும். இதுவே நேரான வழி என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் இவர்கள் மூன்றாவதாக ஸலஃபுகளைப் பின்பற்ற வேண்டும் என்று சொன்னதன் மூலம் கொள்கை அடிப்படையில் நபியவர்கள் கூறிய நேர்வழியிலிருந்து விலகிவிட்டனர்.

இறைச் செய்தி அல்லாத விஷயங்களையும் பின்பற்ற வேண்டும் என்று கூறியதன் மூலம் ஏராளமான பித்அத்கள் சமூகத்தில் ஊடுறுவ வழியைத் திறந்து வைத்துள்ளனர்.
இவர்களின் இமாம் ஜும்ஆ உரையின் இறுதியில் பிரார்த்தனை செய்வார். அதைக் கேட்பவர்கள் ஆமீன் என்று கூறுவார்கள். இவ்வாறு செய்வதற்குக் குர்ஆன் ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை இவர்களும் அறிந்து வைத்திருக்கின்றனர்.

சவூதியில் உள்ள அறிஞர்கள் இவ்வாறு செய்கிறார்கள். மார்க்க விஷயங்களில் அவர்களைப் பின்பற்றினால் தான் அவர்களிடமிருந்து இவர்கள் பண உதவி பெற முடியும். இதற்காகக் குர்ஆன் ஹதீஸ் என்ற வட்டத்தைத் தாண்டி மார்க்க விஷயங்களில் சவூதியைப் பின்பற்றி பித்அத் செய்து வருகிறார்கள்.

இறந்தவரை அடக்கம் செய்த பிறகு இறந்தவருக்காக அவரவர் தனியாக மனதுக்குள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது நபிவழி. ஆனால் இவர்கள் இந்த வழிமுறைக்கு மாற்றமாக மார்க்கம் காட்டித் தராத அடிப்படையில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

யாராவது ஒருவர் பிரார்த்தனைக்குரிய வாசகங்களை சப்தமிட்டுச் சொல்வார். அங்கு கூடியிருக்கும் மற்றவர்கள் அதைக் கேட்டு அவர்களும் அப்படியே சப்தமிட்டு கூறுவார்கள். நபிவழியில் இதற்கு ஆதாரமில்லை என்று தெரிந்தும் இந்த பித்அத்தைச் செய்து வருகிறார்கள்.

இஸ்லாத்திற்கு எதிரான மூட நம்பிக்கைகளை இவர்கள் ஆதரித்து வருகின்றனர். மூட நம்பிக்கைகளுக்கு வலுவூட்டும் வகையில் பொய்யான செய்திகளை ஆதாரங்களாகக் கூறி மக்களை வழிகெடுக்கின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரால் பல பொய்யான செய்திகள் ஹதீஸ் என்ற பெயரில் நுழைந்துள்ளன. ஹதீஸ்களைப் பற்றி சரியான கண்ணோட்டம் இல்லாவிட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரால் இணை வைப்பையும் மூட நம்பிக்கைகளையும் ஆதரிக்கும் நிலை ஏற்படும்.
ஆனால் இந்தச் செய்திகளுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் எள்ளளவு கூட சம்பந்தமில்லை. இவர்கள் சரியான முறையில் ஹதீஸ்களை ஆய்வு செய்யாத காரணத்தால் ஹதீஸ்களின் பெயரால் இஸ்லாத்தில் இல்லாத பல அனாச்சாரங்களை அங்கீகரித்து வருகின்றனர்.

எந்த புறச் சாதனங்களும் இல்லாமல் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு எந்தப் பாதிப்புகளையும் ஏற்படுத்த முடியாது என்பது இஸ்லாமிய அடைப்படைக் கொள்கைகளில் ஒன்று. இவர்கள் சூனியம், கண் திருஷ்டி விஷயத்திலும், ஜின் விஷயத்திலும் இந்த அடிப்படைக்கு மாற்றமாக நம்புகின்றனர்.

நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது என்ற தவறான செய்தி ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு தற்போது பில்லி, சூனியம் பற்றி மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சரி காணுகின்றார்கள். இதனால் இறைவனுக்கு மட்டும் உரிய ஆற்றல் மனிதர்களுக்கும் உண்டு என்ற இணை வைப்பில் சிக்கியுள்ளனர்.

மேலும் ஜின் என்ற பெயரில் நடக்கும் அனைத்து பித்தலாட்டங்களையும் நம்புகின்றனர். ஜின் மனித உடலுக்குள் புகுந்து மனநிலையை மாற்றிவிடும் என்றும் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆற்றல் ஜின்களுக்கு உண்டு என்றும் நம்புகின்றனர்.

ஜின்களை நம்புகிறோம் என்று கூறிக்கொண்டு பேய், பிசாசு, மூட நம்பிக்கையை மக்களிடையே பரப்பி வருகின்றனர். இதன் மூலம் தர்ஹாக்களில் ஜின் பிடித்துவிட்டதாகக் கூறி நடக்கும் நாடகங்கள் உண்மையானவை என்று ஆதரிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர்.

நாம் யாருடைய உதவியையும் பெற முடியாத வகையில் ஏதாவது பிரச்சனையில் தன்னந்தனியாக மாட்டிக்கொண்டால் அப்போது, "அல்லாஹ்வின் அடியார்களே! எனக்கு உதவி செய்யுங்கள்' என சப்தமிட்டுக் கூறினால் உதவி கிடைக்கும் என்ற கருத்தில் ஒரு பலவீனமான செய்தி உள்ளது.

இதன் கருத்தைப் பார்த்தாலே இது பொய்யான செய்தி என்பதை எளிதில் அறிந்துவிட முடியும். அல்லாஹ்வின் மீது நம்பிக்கையில்லாதவர்கள் தான் இப்படிப்பட்ட செய்தியை நம்ப முடியும்.

யாரும் உதவி செய்ய முடியாத நேரத்தில் அல்லாஹ் நமக்கு உதவி செய்வான் என்ற நம்பிக்கையில் அல்லாஹ்வை அழைப்பது தான் ஒரு முஸ்லிமுடைய செயல். இந்த நேரத்தில் அல்லாஹ்வைத் தவிர்த்து வானவர்களை அழைத்தாலும் வானவர்களை வணங்கியவர்களாகி விடுவோம்.
ஆனால் இவர்களோ அல்லாஹ்வை விடுத்து அல்லாஹ்வின் அடியார்களை அழைக்கலாம். அழைத்தால் உதவி கிடைக்கும் என்று நம்புகின்றனர். இதை விட பெரிய வழிகேடு என்ன உள்ளது?


நன்றி - ஜனவரி ஏகத்துவம் 2013
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger