ஸிஹ்ர் ஓர் ஆய்வு – தொடர் 6


நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர்.(25:08)
மேற்கண்ட வசனத்தை அடிப்படையாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாக கூறுவோர் அநியாயக்காரர்கள் என்று நாம் வாதிட்டோம். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் மேற்கண்ட வசனத்துக்கு மாற்றமாக இருப்பதால் அந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல எனவும் நாம் வாதிட்டிருந்தோம்.
அதை மறுக்கப் புகுந்த இஸ்மாயீல் ஸலபி மேற்கண்ட வசனத்தில் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதர் என்று சொல்லப்பட்டாலும் சூனியம் செய்யும் நபர் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்று குர் ஆன் வசனத்துடன் விளையாடி இருக்கிறார்.
இது குறித்து அவர் எடுத்து வைக்கும் வாதம் இது தான்.
சூனியக்காரர் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்ட சூனியம் செய்யப்பட்டவர் என்ற பதம்:
அறபு மொழி வழக்கிலும் அல்குர்ஆனிய நடையிலும் செய்தவன் என்பதைச் செய்யப்பட்டவன் என்ற பதம் கொண்டு பயன்படுத்தும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
உதாரணமாக மூஸா (அலை) அவர்கள் ஒன்பது அத்தாட்சிகளைக் காட்டுகின்றார்கள். இது குறித்துக் குர்ஆன் கூறும் போது,
நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை வழங்கினோம். (தமது சமூகமாகிய) அவர்களிடம் அவர் வந்த போது (என்ன நிகழ்ந்தது? என நபியே!) நீர் இஸ்ராஈலின் சந்ததியினரிடம் கேட்டுப்பாரும். மூஸாவே! நிச்சயமாக சூனியம் செய்யப்பட்டவராக உம்மை நான் எண்ணுகிறேன் என்று பிர்அவ்ன் அவரிடம் கூறினான். (17:101)
என்று கூறுகின்றது. ஒன்பது அத்தாட்சிகளை-அற்புதங்களைக் காட்டிய பின் மூஸா நபியைப் பார்த்துச் சூனியக்காரன் எனக் கூறுவானா? சூனியம் செய்யப்பட்டவன் என்று கூறுவானா? என்று கேட்டால் சூனியக்காரன் என்று தான் கூறுவான் என்று யாரும் பதிலளிப்பர். சகோதரர் கூட அப்படித் தான் பதிலளிப்பார். அவர் அவரது தர்ஜமாவில் இதை எழுத்து மூலம் அளித்துமுள்ளார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைக் கண்ட போது, இவர் சூனியம் செய்கிறார் என்று சில வேளை விமர்சனம் செய்தனர். (பக்:1302)
எனவே, அற்புதம் செய்தவரைப் பார்த்து مسحور சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறப்பட்டாலும் அதன் அர்த்தம் ساحر சூனியம் செய்பவர் என்பது தான். இதை நான் எனது சொந்தக் கருத்தாகக் கூறவில்லை.
மூஸா நபி குறித்து மஸ்ஹூர்-சூனியம் செய்யப்பட்டவர் என்ற பதம் சூனியக்காரர் என்ற அர்த்தத்தில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என அறபு மொழியை அறிந்த அல்குர்ஆன் விளக்கவுரையாளர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக,
تفسير ابن كثير / دار طيبة – (5 / 125)
( إِنِّي لأظُنُّكَ يَا مُوسَى مَسْحُورًا ) قيل: بمعنى ساحر. والله تعالى أعلم.
பொருள்:
(மூஸாவே உன்னை நான் சூனியம் செய்யப்பட்டவராகக் கருதுகிறேன்.) இந்தப் பதம், சூனியக்காரர் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அல்லாஹ் மிகவும் அறிந்தவன். (தப்ஸீர் இப்னு கதீர்)
அல் பராஉ அவர்களும், அபூ உபைதா அவர்களும் இதன் அர்த்தம் சூனியம்செய்யப்பட்டவர் என்பதல்ல, சூனியம் செய்பவர் என்பது தான் என்று கூறுகின்றனர்.
تفسير البغوي – (5 / 134)
وقال الفراء وأبو عبيدة: ساحرا فوضع المفعول موضع الفاعل. وقال محمد بن جرير: معطى علم السحر فهذه العجائب التي تفعلها من سحرك (2) .
பொருள்:
இன்னும் முஹம்மத் இப்னு ஜரீர் அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்பதன் அர்த்தம் சூனியக் கலை பற்றிய அறிவைப் பெற்றவர். நீ செய்யக்கூடிய இந்த அதிசய செயல்கள் எல்லாம் உனது சூனியத்தால் செய்கிறாய் என்பது இதன் அர்த்தம் என்கின்றார்கள். (சுருக்கம் தப்ஸீர் பகவி)
அல்குர்ஆன் விளக்கவுரையாளர்களின் கூற்றை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அறபு மொழி வழக்கையாவது ஏற்றுக்கொள்வார்கள் என எண்ணுகின்றேன்.
அத்துடன் மூஸா நபி ஒன்பது அற்புதங்களைக் காட்டிய போது சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறியதாக ஒரு இடத்தில் வருகின்றது. மற்றொரு இடத்தில் தெளிவாகவே அத்தாட்சிகளைப் பார்த்த போது சூனியக்காரன் என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
(அனைவரும்) காணும் வகையில் அவர்களிடம் நமது அத்தாட்சிகள் வந்த போது, இது தெளிவான சூனியமேஎன்று அவர்கள் கூறினர்.
இன்னும், அவர்களது உள்ளங்கள் அவற்றை உறுதியாக நம்பியிருந்தும், அநியாயமாகவும் ஆணவத்துடனும் அவற்றை அவர்கள் மறுத்தனர். குழப்பம் விளைவித்தோரின் இறுதி முடிவு என்னவாயிற்று? என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! (27:13-14)
அவர்கள் (இவர்) சூனியக்காரரும், பெரும் பொய்யருமாவார் எனக் கூறினர். (40:24)
இது போன்ற வாதங்களை முன்வைத்து சூனியம் செய்யப்பட்டவர் என்பது அதன் அர்த்தம் அல்ல சூனியக்காரர் என்பது தான் அதன் அர்த்தம் என்கின்றார்கள்.
இதற்கு மற்றுமொரு உதாரணத்தை இதே சூறாவில் காணலாம்.
குர்ஆனை நீர் ஓதினால் உமக்கும் மறுமையை நம்பிக்கை கொள்ளாதோருக்கும் இடையில், மறைக்கப்பட்ட ஒரு திரையை நாம் ஏற்படுத்தி விடுவோம். (17:45)
இந்த வசனத்தில் حجابا مستورا (மறைக்கப்பட்ட திரை) என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் حجابا ساترا (மறைக்கும் திரை) என்பதுதான் இதன் அர்த்தம் என அல்குர்ஆன் விளக்கவுரைகள் கூறுகின்றன. இதைப் பின்வரும் கூற்று உறுதி செய்கின்றது.
وقوله مستورا ساترا فهو من اطلاق اسم المفعول وارادة اسم الفاعل كميمون بمعنى يامن ومشئوم بمعنى شائم الوسيط لسيد طنطاوي -1 2636
.செய்யப்பட்டவன் என்ற பதம், செய்பவன் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படலாம் என்ற அறபு இலக்கண மரபுக்கு இவை ஆதாரமாக அமைகின்றன.
இவரது இந்த வாதமும் வழக்கம் போல் இவரது அரைகுறை அறிவுக்கு அத்தாட்சியாக விளங்குகிறது. இது அரபு மொழி இலக்கணம் பற்றிய வாதமாக இருப்பதால் இது குறித்து சற்று விரிவாகவே நாம் விளக்க வேண்டும்.
அரபு பொழியானாலும் வேறு எந்த மொழியானாலும் ஒவ்வொரு சொல்லுக்கும் நேரடிப் பொருள் இருக்கும். எது நேரடிப் பொருளாக உள்ளதோ அந்தப் பொருளில் தான அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் மிகமிகச் சில நேரங்களில் ஒரு சொல்லுக்கு நேரடிப் பொருள் கொள்ள முடியாமல் இருக்கும். நேரடிப் பொருள் கொள்வது பொருத்தமற்றதாக ஆகி விடும். அது போன்ற சந்தர்ப்பங்களில் நேரடிப் பொருளைத் தவிர்த்து விட்டு மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். அவ்வாறு மாற்றுப் பொருள் கொடுக்கும் போது அதற்கான ஆதாரம் அந்த வாக்கியத்தில் ஒளிந்திருக்க வேண்டும்.
உதாரணமாக சிங்கம் என்ற சொல்லின் நேரடிப் பொருள் ஒரு குறிப்பிட்ட வன விலங்காகும். எந்த இடத்தில் சிங்கம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டாலும் அதற்கு சிங்கம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
நான் மண்ணடியில் ஒரு சிங்கம் முழங்கியதைப் பார்த்தேன் என்று ஒருவன் கூறினால் அப்போது சிங்கம் என்று பொருள் கொடுக்க முடியாது. ஏனெனில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக மண்ணடி இருப்பதால் அங்கே சிங்கத்தைப் பார்த்திருக்க முடியாது. மேலும் சிங்கம் முழங்கவும் செய்யாது. இந்த இரண்டு காரணங்களும் வன விலங்கு என்ற அர்த்தத்தில் அவன் இதைக் கூறவில்லை என்பதையும் வீரமான ஒரு மனிதனைத் தான் இப்படிக் குறிப்பிடுகிறான் என்பதையும் நமக்குக் காட்டி விடுகிறது.
வன விலங்கைக் குறிக்கவில்லை என்பதற்கு இது போன்ற ஆதாரம் இல்லாவிட்டால் சிங்கம் என்ற சொல்லின் பொருள் குறிப்பிட்ட வனவிலங்கு தான்.
மேற்கண்ட வாக்கியத்தில் சிங்கம் என்பதற்கு வீரமான மனிதன் என்று பொருள் கொண்டதால் சிங்கம் என்று பயன்படுத்தப்பட்ட எல்லா இடங்களிலும் எவ்வித ஆதாரமும் இல்லாமல் மனிதன் என்று தான் பொருள் கொள்வேன் என்று ஒருவன் கூறினால் அவன் அறிவற்றவன் என்று நாம் கருதுவோம்.
ஆனால் நேரடிப்பொருள் கொள்வதற்கு ஆதாரம் தேவை இல்லை. நேரடிப்பொருளை விட்டு விட்டு வேறு பொருள் நாடினால் தான் அதற்குரிய காரணத்தைச் சொல்ல வேண்டும்.
அது போல் ஒரு சொல்லுக்கு பல வடிவமைப்புகள் இருக்கும். ஒவ்வொரு வடிவமைப்புக்கும் ஒரு பொருள் இருக்கும். இது போன்ற இடங்களில் அந்த வடிவமைப்புக்கு என்ன பொருளோ அதைத் தான் அச்சொல்லின் பொருளாகக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக அடித்தல் என்ற சொல் அடித்தான் என்ற வடிவம் போது அது கடந்த காலத்தைக் குறிக்கும். அடிப்பான் என்று வேறு வடிவத்துக்கு மாறும் போது அது வருங்காலத்தைக் குறிக்கும். அடித்தவன் என்ற வடிவத்தில் இருந்தால் அடி கொடுத்தவனை அது குறிக்கும். அடிக்கப்பட்டவன் என்று கூறினால் அடி வாங்கியவனைக் குறிக்கும். ஒவ்வொரு வடிவத்தையும் ஒரு குறிப்பிட்ட பொருள் தருவதற்காகத் தான் அம்மொழி பேசுவோர் உருவாக்கியுள்ளனர்.
அடித்தான் என்ற சொல்லுக்கு நாளைக்கு அடிப்பான் என்று பொருள் கொள்ள முடியாது. அப்படி பொருள் கொண்டால் மொழியின் மூலம் தெளிவு கிடைப்பதற்குப் பதிலாக குழப்பம் தான் மிஞ்சும்.
ஆனாலும் சில நேரங்களில் அதன் நேரடிப் பொருள் கொள்ள முடியாமல் அந்த வாசக அமைப்பு தடையாக அமையும். அல்லது அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்ட விதம் சூழ்நிலை ஆகியவை நேரடிப் பொருள் கொள்வதற்கு தடையாக இருக்கும். இது போன்ற சந்தர்ப்பங்களில் மாற்றுப் பொருள் கொள்ளலாம். ஆனால் அதற்கான ஆதாரம் இருக்க வேண்டும்.
உலக அழிவு நாள் இனி மேல் தான் வரப் போகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் உலகம் அழிந்து விட்டது என்று குர்ஆன் கூறுகிறது. இதற்கு அழிந்து விட்டது என்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் உலகம் அழிந்திருந்தால் இந்த வசனமே வந்திருக்காது. நம் கண் முன்னே உலகம் அழியவில்லை என்பது தெரிவதால் இனி அழியும் என்பது தான் இவ்வாறு கூறப்படுகிறது. நிச்சயம் நடந்து விடும் என்ற உறுதி இருந்தால் அது நடப்பதற்கு முன்பே நடந்து விட்டது என்று சொல்வது எல்லா மொழிகளிலும் உள்ளது தான்.
இரண்டு அணிகளுக்கிடையே ஒரு விளையாட்டுப் போட்டி நடக்கிறது. ஒரு அணியின் விளையாடும் திறன் படு மோசமாக இருக்கிறது. இன்னொரு அணி விளாசித்தள்ளுகிறது. ஆனால் விளையாட்டு முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம். இந்த அணி வெற்றி பெற்று விட்டது என்று கூறுவோம். வெற்றி பெறும் என்பதைத் தான் வெற்றி பெற்று விட்டது என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறோம்.
இது போல் ஒரு சொல்லுக்கு நேரடி அர்த்தமே ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கும். ஆனாலும் அதனுடன் இணைக்கப்படும் சொல்லுக்கேற்ப அந்தச் சொல்லுக்கு பொருள் கொள்வோம். ஒரு டாக்டர் ஊசியை எடுத்து வா என்று தனது உதவியாளரிடம் கூறினால் உடலில் செலுத்துவதற்கான ஊசியைபக் குறிப்பிடுகிறார் என்று புரிந்து கொள்கிறோம். ஒரு தையல் கடை முதலாளி ஊசியை எடுத்து வா என்று கூறினால் தைக்கும் ஊசி என்று பொருள் கொள்வோம்.
மடத் தலைவர் என்று கூறினால் முட்டாள் தலைவன் என்றும் பொருள் உண்டு. மடம் எனும் ஆசிரமத்தின் தலைவர் என்றும் பொருள் உண்டு. ஆயினும் பயன்படுத்தும் இடத்தைப் பொருத்து பொருத்தமான அர்த்தத்தைக் கண்டு கொள்கிறோம்.
இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இஸ்மாயீல் ஸலபி வாதத்தைக் கவனிப்போம்.
சூனியம் செய்யப்பட்டவர் என்பதன் பொருள் அவருக்கு மற்றவர்கள் சூனியம் செய்து விட்டார்கள் என்பது தான். அந்த அந்தப் பொருளைத் தான் பொதுவாக எடுத்துக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் அந்த வாக்கிய அமைப்பு அவ்வாறு பொருள் கொள்வதற்குத் தடையாக அமைந்து விட்டால் அப்போது வேறு வடிவத்துக்குரிய பொருளைக் கொடுக்கலாம் என்பது தான் அரபு மொழி மட்டுமின்றி அனைத்து உலக மொழிகளிலும் உள்ள பொதுவான விதி. இலக்கணம் மொழிக்கு மொழி மாறுபடுமே தவிர இலக்கியம் பொதுவானது தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காஃபிர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறினார்கள் என்பது நேரடியான வாசகம். இதன் நேரடிப் பொருள் அவருக்கு யாரோ சூனியம் செய்து விட்டார்கள் என்பது தான். அவர் சூனியம் செய்து விட்டார் என்பது நேரடிப் பொருள் அல்ல.
சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல்லுக்கு சூனியம் செய்தவர் மாற்றிப் பொருள் கொள்வதாக இருந்தால் நேரடிப் பொருள் கொள்வதற்கு தடங்கல் இருக்க வேண்டும். நேரடிப் பொருள் கொடுப்பதற்குத் தடை இல்லாவிட்டால் நேரடிப் பொருளைத் தான் கொடுக்க வேண்டும். இந்த அறிவு தான் அவருக்கு இல்லை.
சிங்கம் ஒரு கழுதையை அடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது என்று சொன்னால் இந்த இடத்தில் மாவீரன் என்று தான் பொருள் செய்வேன் என்று இஸ்மாயீல் ஸலபி சொல்லாமல் சொல்கிறார். மண்ணடியில் சிங்கத்தைப் பார்த்தேன் எனும் போது மாவீரன் என்று பொருள் கொண்டதை இதற்கு ஆதாரமாகக் காட்டினால் இவரை என்னவென்பது?
நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர்.(25:08)
இவ்வசனத்தில் சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கும் போது அந்த அர்த்தத்தை விட்டு விட்டு வேறு அர்த்தம் செய்ய என்ன அவசியம் ஏற்பட்டது?
குர்ஆனை ஆராயும் போது காஃபிர்கள் நபிகள் நாயகத்தை எப்படியெல்லாம் விமர்சித்தனர் என்று கூறப்பட்டுள்ளது. என்பதை அறியலாம். அதற்கு ஏற்பவே மேற்கண்ட வசனம் அமைந்துள்ளது.
அறிவுரை அருளப்பட்டவரே! நீர் பைத்தியக்காரர் தான் என்று அவர்கள் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 15:6
அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை என்று அவர்களிடம் கூறப்பட்டால் பெருமை யடிப்போராக அவர்கள் இருந்தனர். பைத்தியக்காரக் கவிஞருக்காக நாங்கள் எங்கள் கடவுள்களை விட்டு விடுவோமா? என்று கேட்கின்றனர். அவ்வாறில்லை! அவர் உண்மையையே கொண்டு வந்துள்ளார். தூதர்களை உண்மைப்படுத்துகிறார்.
திருக்குர்ஆன் 37:35,36,37
அறிவுரை அவர்களுக்கு எவ்வாறு (பயனளிக்கும்?) அவர்களிடம் தெளிவான தூதர் வந்துள்ளார். பின்னர் அவரை அவர்கள் அலட்சியம் செய்தனர். பிறரால் கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர் என்றும் கூறினர்.
திருக்குர்ஆன் 44:13,14
இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ, சூனியக்காரர் என்றோ கூறாமல் இருந்ததில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் இது குறித்து பேசி வைத்துக் கொண்டார்களா? மாறாக அவர்கள் வரம்பு மீறிய கூட்டமாவர்.
திருக்குர்ஆன் 51:52,53
எனவே (முஹம்மதே!) அறிவுரை கூறுவீராக! உமது இறைவனின் பேரருளால் நீர் சோதிடர் அல்லர். பைத்தியக்காரரும் அல்லர்.
திருக்குர்ஆன் 52:29
(முஹம்மதே!) உமது இறைவனின் அருட்கொடையால் நீர் பைத்தியக்காரராக இல்லை. உமக்கு முடிவுறாத கூலி உண்டு.. நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர். உங்களில் யாருக்குப் பைத்தியம் என்று நீரும் பார்ப்பீர்! அவர்களும் பார்ப்பார்கள்.
திருக்குர் ஆன் 68:2-6
(முஹம்மதே!) இந்த அறிவுரையைச் செவியுற்ற போது (ஏக இறைவனை) மறுப்போர் உம்மைத் தமது பார்வைகளால் வீழ்த்தப் பார்க்கின்றனர். இவர் பைத்தியக்காரர்என்றும் கூறுகின்றனர்.
திருக்குர் ஆன் 68:51
உங்கள் தோழர் (முஹம்மது) பைத்தியக்காரர் அல்லர்.
திருக்குர்ஆன் 81:22
மக்களை எச்சரிப்பீராகஎன்றும்,நம்பிக்கை கொண்டோருக்கு தாம் செய்த நற்செயல் (அதற்கான கூலி) தம் இறைவனிடம் உண்டு என நற்செய்தி கூறுவீராக என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? இவர் தேர்ந்த சூனியக்காரர்என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர்.
திருக்குர் ஆன் 10:2
அவர்களிலிருந்தே எச்சரிப்பவர் அவர்களிடம் வந்ததில் ஆச்சரியப்பட்டனர். இவர் பொய்யர்; சூனியக்காரர் என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறினர்.
திருக்குர் ஆன் 38:4
காபிர்களின் மேற்கண்ட விமர்சனங்களைக் கவனித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து முரண்பட்ட இரண்டு நிலை காபிர்களிடம் இருந்ததை அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனம் கவரும் பிரச்சாரத்தைக் கண்ட சில காபிர்கள் இவர் சூனியத்தின் மூலம் தான் கூறுவதை நம்புமாறு செய்து விடுகிறார் என்று நினைத்தார்கள். சூனியக்காரர் என்று கூறினார்கள்.
இன்னொரு புறம் மறுமை சொர்க்கம் போன்ற நம்பச் சிரமமானவைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதைக் காணும் போது இவர் நம்ப முடியாதவைகளை உளறுகிறார். எனவே இவர் மனம் பேதலித்துப் போன பைத்தியக்காரர் என்று கூறினார்கள்.
மற்றவர்களை மயக்கும் அளவுக்கு திறன் படைத்தவர் என்பதும் தான் செய்வது என்னவென்று புரியாமல் உளறுபவர் என்பதும் முரண்பட்ட விமர்சனம் என்றாலும் இவ்விரு விமர்சனங்களையும் அவர்கள் செய்தனர் என்பதற்கு இவ்வசனங்கள் ஆதாரமாக உள்ளன.
பைத்தியக்காரராக இருப்பவர் சூனியக்காரராக இருக்க முடியாது. அடுத்தவரை மயக்கும் அளவுக்கு சூனியம் செய்பவர் பைத்தியக்காரராக இருக்க முடியாது. ஆனாலும் சிலர் பைத்தியம் என்றனர். மற்றும் சிலர் சூனியக்காரர் என்று கூறினர் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
சூனியக்காரர் என்று மட்டும் அவர்கள் விமர்சிக்கவில்லை. அவருக்கே சூனியம் செய்யப்பட்டு விட்டது அவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று அவர்கள் விமர்சித்திருக்கும் போது சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல்லின் நேரடிப் பொருளைக் கைகழுவும் அவசியம் என்ன?
சூனியக்காரர் என்று மட்டும் தான் அவர்கள் சொன்னார்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்று சொன்னதே இல்லை என்று வேறு வசனங்கள் கூறி இருந்தால் இந்த இடத்தில் சூனியம் செய்யப்பட்டவர் என்பதன் அர்த்தத்தை மாற்றலாம். அவ்வாறு இல்லாத போது சூனியம் செய்தவர் என்ற சொல்லுக்கு அதன் நேரடிப் பொருளையும் சூனியம் செய்யப்பட்டவர் என்பதற்கு அதன் நேரடிப் பொருளையும் கொடுப்பது தான் குர்ஆனை அணுகும் முறையாகும். அவ்வாறு இன்றி தனது தவறான கருத்துக்கு மரண அடியாக உள்ளது என்பதற்காக ஒரு சொல்லின் நேரடி அர்த்தத்தை மாற்றுவது அறிவு நாணயம் மிக்க செயலா? இவரைப் போன்றவர்களை நாம் எப்படி நம்புவது?
அடுத்ததாக சூனியக்காரர்களை மிஞ்சும் வகையில் எப்படி புரட்டுகிறார் என்று பாருங்கள்?
மூஸா நபி அவர்களைப் பற்றி சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறப்படும் ஒரு வசனத்தை எடுத்துக் காட்டி அந்த வசனத்தில் சூனியம் செய்யப்பட்டவர் என்பது பொருந்தாது என்று வாதிடுகிறார்.
இப்ராஹீம் திருடியது உறுதியானதால் இஸ்மாயீலின் கையை வெட்டித் தான் ஆக வேண்டும் எண்று ஒருவர் வாதிட்டால் அவரது நிலை என்ன? அந்த நிலையில் தான் இவரது மேற்கண்ட வாதம் அமைந்துள்ளது.
மூஸா நபி அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்று ஃபிரவ்ன் கூறினான். அந்த இடத்தில் சூனியம் செய்பவர் என்ற அர்த்தம் தான் பொருந்தும் என்பது அவரது வாதம். நாம் கேட்கிறோம். மூஸா நபி தொடர்பாக பயன்படுத்தப்பட்ட வாசக அமைப்பு நேரடி அர்த்தம் செய்ய தடையாக இருக்கிறது என்ற காரணத்துக்காக சூனியம் செய்பவர் என்று பொருள் செய்தால் தடையாக இல்லாத அனைத்து வசனங்களிலும் அப்படித் தான் செய்வேன் என்பது தான் ஆய்வு செய்யும் இலட்சணமா?
ஏற்கனவே நாம் சுட்டிக் காட்டிய படி சிங்கம் ஒரு கழுதையை அடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது என்று சொன்னால் இந்த இடத்தில் மாவீரன் என்று தான் பொருள் செய்வேன் என்று இஸ்மாயீல் ஸலபி சொல்லாமல் சொல்கிறார். மண்ணடியில் சிங்கத்தைப் பார்த்தேன் எனும் போது மாவீரன் என்று பொருள் கொண்டதை ஆதாரமாகக் காட்டினால் இவரை என்னவென்பது? என்பதை மீண்டும் கேட்க விரும்புகிறோம்.
மூஸா நபி அவர்கள் அற்புதம் செய்யும் போது அதை விமர்சித்த ஃபிர்வ்ன் சூனியம் செய்பவர் என்று தான் கூற முடியும். சூனியம் செய்யப்பட்டவர் என்று கூற முடியாது. எனவே சூனியம் செய்பவர் என்பதற்கு சூனியம் செய்யப்பட்டவர் என்பது பொருள் என்று முடிவு செய்கிறார். இதன் படி இவர் வாதிப்பது என்றால் மூஸா நபி குறித்த மேற்கண்ட வசனத்துக்கு மட்டும் தான் அவ்வாறு பொருள் என்று முடிவு செய்யலாமே தவிர நபிகள் நாயகம் ஸல் அவர்களைக் குரித்து பேசும் வேறு வசனத்துக்கும் அதே பொருளைக் கொடுப்பது என்ன நியாயம்?
மூஸா நபி குறித்த விஷயத்திலும் கள்ளத்தனம் செய்திருக்கிறார்.
فَقَالَ لَهُ فِرْعَوْنُ إِنِّي لأظُنُّكَ يَا مُوسَى مَسْحُورًا } أي: مطبوبا سحروك قاله الكلبيوقال ابن عباس: مخدوعاوقيل مصروفا عن الحق. وقال الفراء وأبو عبيدة: ساحرا فوضع المفعول موضع الفاعل. وقال محمد بن جرير: معطى علم السحر فهذه العجائب التي تفعلها من سحرك (2) .
என்று அவர் மேற்கோள் காட்டும் நூலில் இருக்க அடிகோடிட்ட வார்த்தைகளை இருட்டடிப்பு செய்து விட்டு இது தான் மரபு என்று சொல்கிறார்.
இதன் முழுமையான அர்த்தம் இது தான். மூஸாவே யாரோ உனக்கு சூனியம் செய்து விட்டனர் என்று ஃபிரவ்ன் கூறினான் என்பதே இதன் கருத்து என கலபி கூறுகிறார். யாராலோ ஏமாற்றப்பட்டு விட்டார் என்று இப்னு அப்பாஸ் கூறுகிறார். சத்தியத்திலிருந்து திசை திருப்பட்டவர் என்ற பொருளில் அப்படிக் கூறினான் என்றும் பொருள் கொள்ளப்பட்டது.
இப்படி கூறிய பிறகு தான் ஸலபி சொல்வது போலவும் பொருள் கொள்ளலாம் என்று அந்த நூலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அதாவது மூஸா நபி தொடர்பான அந்த வசனத்தில் கூட சூனியம் செய்யப்பட்டவர் என்று நேரடிப் பொருள் கொள்வது தடை இல்லை என்பது அவர் எடுதுக் காட்டிய மேற்கோளில் இருந்து புரியும் விஷயம்.
நாம் எவ்வளவு தான் ஆதாரத்தைக் காட்டினாலும் ஒரு ஆதாரமும் காட்டவில்லை என்று விவாதங்களில் எதிர் அணியினர் பொய்யாகக் கூறுவார்கள். அது போல் மூஸா நபி எவ்வளவு அற்புதம் செய்து காட்டிய போதும் ஒன்றுமே செய்து காட்டாமல் அற்புதம் என்று உளறுகிறாய் எனவே உனக்குக் கிறுக்குத் தான் பிடித்துள்ளது என்று ஃபிரவ்ன் அதன் நேரடி அர்த்தத்தில் கூறுவது ஆச்சரியமானதல்ல.
மூஸா நபி குறித்த அந்த வசனத்தில் சூனியம் செய்யப்பட்டவர் என்ற பொருள் பொருந்தாது என்று வைத்துக் கொண்டாலும். அதற்கும் நபிகள் தொடர்பான வசனத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
அதே நேரத்தில் மூஸா நபி விஷயத்தில் பயன்படுத்தப்பட்ட சூனியம் செய்யப்பட்டவர் என்பதற்கு சூனியம் செய்பவர் என்று தனக்கு சாதகமான அர்த்தத்தை யாராவது செய்திருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தவர் எந்த வசனம் குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோமோ அந்த வசனத்துக்கு அரபு மொழி அறிந்த வல்லுனர்கள் விரிவுரையாளர்கள் என்ன பொருள் கூறியுள்ளனர் என்பது தெரிந்தும் இருட்டடிப்புச் செய்வது ஏன்?
تفسير ابن كثير / دار طيبة – (6 / 95)
قال الله تعالى: { انْظُرْ كَيْفَ ضَرَبُوا لَكَ الأمْثَالَ } أي: جاءوا بما يقذفونك به ويكذبون به عليك، من قولهم ساحر، مسحور، مجنون، كذاب، شاعر وكلها أقوال باطلة، كل أحد ممن له أدنى فهم وعقل يعرف كذبهم وافتراءهم في ذلك؛ ولهذا قال: { فضلوا } أي: عن طريق الهدى ، { فَلا يَسْتَطِيعُونَ سَبِيلا }
உம்மை சூனியக்காரர் என்றும் சூனியம் செய்யப்பட்டவர் என்றும் பைத்தியக்காரர் என்றும் பொய்யர் என்றும் புலவர் என்றும் கூறுவதைக் கவனிப்பீராக! இவை அனைத்துமே பொய் என்று இப்னு கஸீர் கூறுகிறார். அதாவது சூனியம் செய்யப்பட்டவர் என்று அதன் நேரடி பொருளிலேயே காபிர்கள் பயன்படுத்தினார்கள் என்று இப்னு கஸீர் கூறுவது ஏன் கண்ணுக்குத் தெரியவில்லை?
تفسير ابن كثير / دار طيبة – (6 / 157)
والأظهر في هذا قول مجاهد وقتادة: أنهم يقولون: إنما أنت في قولك هذا مسحور لا عقل لك
உனக்கு சூனியம் செய்யப்பட்டதால் உனக்கு அறிவு இல்லாமல் போய் விட்டது என்று முஜாஹித் கதாதா ஆகியோர் கூறுவதே நேரடியான கருத்தை ஒட்டி அமைந்துள்ளது எனவும் இப்னு கஸீர் கூறியுள்ளாரே இவர் அரபு பொழி பண்டிதர் இல்லையா?
தப்ரீ அவர்கள் பின் வருமாரு கூறுகிறார்களே அது இவரது கண்ணுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்து இருட்டடிப்பு செய்துள்ளாரா?
تفسير القرآن العظيم المنسوب للإمام الطبراني – (0 / 0)
{ وَإِذْ هُمْ نَجْوَى } ؛ في أمرِكَ يتَناجَوْنَ ، فيقولُ بعضهم : هذا كاهنٌ ، ويقول بعضُهم : هذا ساحرٌ ، ويقول بعضهم : هذا مجنونٌ ، ويقول بعضُهم : هذا شاعرٌ. وَقِيْلَ : إنَّ رسولَ اللهِ صلى الله عليه وسلم أمَرَ عَلِيّاً رضي الله عنه أنْ يتَّخِذ طَعاماً ، فيدعُو إليه أشرافَ قُريش من المشركين ، ففعلَ ذلكَ ، ودخلَ رسولُ اللهِ صلى الله عليه وسلم وقرأ عليهم القرآنَ ، ودعاهُم إلى التوحيدِ ، فكانوا يستَمِعون ويقولون فيما بينهم مُتَنَاجِينَ : هو ساحرٌ ، وهو مجنون مسحورٌ. فأخبرَ اللهُ تعالى نَبيَّهُ بذلكَ ، وأنزلَ عليه { نَّحْنُ أَعْلَمُ بِمَا يَسْتَمِعُونَ بِهِ إِذْ يَسْتَمِعُونَ إِلَيْكَ وَإِذْ هُمْ نَجْوَى } أي يتناجَون بينهم بالتكذيب والاستهزاءِ ، { إِذْ يَقُولُ الظَّالِمُونَ } ؛ أي أُولئك المشرِكون : { إِن تَتَّبِعُونَ إِلاَّ رَجُلاً مَّسْحُوراً } أي مغلوبَ العقلِ قد سُحِرَ ، وأُزيلَ عن حدِّ الاستواءِ.
சூனியக்காரர் என்றும் அவர்கள் கூறினார்கள். சூனியம் செய்யப்பட்ட பைத்தியக்காரர் என்றும் கூறினார்கள் ஸூனியம் செய்யப்பட்டதால் அறிவு கெட்டு விட்டவர் நிதானத்தை இழந்தவர் என்று கூறினார்கள் என்று தபரி அவர்கள் கூறுவது அரபு மொழி மரபுக்கு ஏற்ப உள்ளதா? சம்மந்தமில்லாமல் உளறுவது அரபு மொழி மரபுக்கு ஏற்ப உள்ளதா?
இவர்கள் மதிக்கும் சவூதியின் பெரிய ஆலிம இஸ்மாயீல் ஸலபி கூறுவது பொய் என்கிறாரே அதற்கு என்ன சொல்லப் போகிறார்.
مجموع فتاوى ورسائل ابن عثيمين – (2 / 180)
ولكن هذا لا شك أنه لا يستلزم موافقة هؤلاء الظالمين بما وصفوا به النبي ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؛ لأن أولئك يدعون أن الرسول ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، مسحور فيما يتكلم به من الوحي ، وأن ما جاء به هذيان كهذيان المسحور
இவர் வஹீ என்று கூறும் விஷயங்களில் சூனியம் செய்யப்பட்டு விட்டார். இவர் சொல்வது சூனியம் செய்யப்பட்ட்வனின் உளறல் போல் உள்ளது என்று காபிர்கள் விமர்சனம் செய்ததாத இப்னு உஸைமீன் அவர்கள் கூறுகிறாரே?
ஆக இவரது இந்த வாதத்திலும் அறிவு சார்ந்த விஷயம் இல்லை. அறியாமையின் திரட்டாகவே இது அமைந்துள்ளது.
எனவே நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக யார் கூறினாலும் எந்த நூலில் அது பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அது பொய் தான் என்பது நிரூபணமாகிறது.
அடுத்ததாக இவர் எடுத்து வைக்கும் வாதம் இதைத் தூக்கி அடிக்கும் வகையிலும் குர்ஆனை இழிவு படுத்தும் வகையிலும் அமைந்துள்ளதை நாம் காண்போம்.
நன்றி - sltjweb.com 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger