ஸிஹ்ர் ஓர் ஆய்வு – தொடர் 4


சூனியத்தின் மூலம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்று வைத்துக் கொண்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் ஏற்கத் தக்கதல்ல என்பது குறித்து நாம் ஆய்வு செய்து வருகிறோம்.
நம்முடைய திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் இது குறித்து நாம் எடுத்து வைத்த எந்த வாதத்துக்கும் இஸ்மாயீல் ஸலஃபி உருப்படியான ஒரு பதிலையும் தரவில்லை என்பதையும் பார்த்து வருகிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் யூதர்கள் நபிகள் நாயகத்தை விட யூத குருமார்கள் ஆன்மிக ஆற்றல்மிக்கவர்கள் என்று எண்ணி இருப்பார்கள் என்பதையும் ஒரு காரணமாக முன் வைத்து நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைத்திருக்க முடியாது என்பதை நிரூபித்தோம்.
இதையும் இஸ்மாயீல் ஸலஃபி பின்வருமாறு மறுக்கிறார்.
அடுத்து, சூனியம் செய்த யூதர்களை ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள் என்று எண்ணியிருப்பார்களாம்.
சூனியத்தை ஆன்மீகமாகவோ, அற்புதமாகவோ மக்கள் கருதவில்லை. அதைத் தீய சக்திகளின் துணையுடன் செய்யும் ஒரு தீய வேலையாகத் தான் மக்கள் கருதினர்.
இவர் குறிப்பிட்டுள்ள வசனங்களில்,
அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக்கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா? என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர் (21:3)
என்பதும் ஒன்றாகும்.
சூனியம் செய்வோரைச் சாதாரண மனிதர்களாகத் தான் அன்றைய மக்கள் கருதியுள்ளனர் என்பதை இந்த வசனம் தெளிவாக உணர்த்துகின்றது. எதையும் மிகைப்படுத்திப் பேசிப் பழகியதால், சூனியத்தையும் அற்புதம்-ஆன்மீகம் என்று மிகைப்படுத்தி, மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றார்.
இவர் செய்து காட்டிய அற்புதத்தை விட யூதர்கள் பெரிய அற்புதம் செய்து காட்டி விட்டார்கள். அற்புதம் செய்தவரையே மந்திர சக்தியால் வீழ்த்தி விட்டார்கள் என்று ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை. அதைக் காரணம் காட்டி ஒருவர் கூட இஸ்லாத்தை விட்டு விட்டு மதம் மாறிச் செல்லவில்லை.
எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் சீப்பையும், முடியையும் பயன்படுத்தி இறைத் தூதரை வீழ்த்தினார்கள் என்பது தவறான தகவல் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
இந்தப் பந்தியிலும் சூனியத்தின் மூலம் நபியவர்கள் வீழ்த்தப்பட்டதாகவும் ஒருவரும் விமர்சிக்கவில்லை, இஸ்லாத்தை விட்டும் வெளியேறவில்லை. எனவே, சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் பொய்யானது என்கிறார்.
நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதால், இல்லறத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக நினைத்தார்கள். இது அவர்களது மனைவிமாரைத் தவிர வேறு எவருக்கும் தெரியவராது. எனவே எவரும் விமர்சிக்கும் நிலையோ, இதைக் காரணம் காட்டி இஸ்லாத்தை விட்டும் வெளியேறும் நிலையோ ஏற்பட வாய்ப்பு இல்லை.
அடுத்து, தனக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்பது நபிக்கே இறுதியில் தான் தெரிய வந்தது. அப்படியிருக்க யூதர்கள் இவரை வீழ்த்தி விட்டனர் என மக்கள் விமர்சித்திருப்பார்கள், இவர் செய்த அற்புதத்தால் இவரை நம்பினால் யூதர்கள் இவரை விட பெரிய அற்புதத்தைச் செய்து விட்டார்களே என முஸ்லிம்கள் எண்ணி இருப்பர் என்ற வாதங்களும், யூகங்களும் அர்த்தமற்றவைகளாகும்.
இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி, நம்பிக்கை கொண்ட மக்களை அல்லாஹ் நிச்சயம் தடம்புரளச் செய்திருக்க மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை.
எல்லா விடயத்திலும் யூகம் செய்தவர், தற்போது அல்லாஹ்வின் விஷயத்திலும் யூகம் செய்கிறார். அதுவும் பிழையான யூகம்!
முதலில் சூனியத்தை ஆன்மீகம்-அற்புதம் என்கிறார். சூனியத்தால் நபி (ஸல்) அவர்கள் முடக்கப்பட்டார்கள்-வீழ்த்தப்பட்டார்கள் என்று சித்தரிக்கின்றார். பின்னர், இறைத் தூதருக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு அல்லாஹ் வழங்கியிருக்க மாட்டான் என்ற யூகத்தை முன்வைக்கின்றார். முடிவை மட்டும் நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை என்று உறுதியாகக் கூறி விடுகின்றார். தனது கருத்தை மக்கள் மனதில் பதியவைக்க அவர் கையாளும் தந்திரங்களில் இதுவும் ஒன்று.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மன நிலை பாதிக்கப்பட்டதாகத் தான் கூறுகின்றன. இதை முன் தொடர்களில் நிரூபித்து விட்டோம். மேலும் எதற்கெடுத்தாலும் ஊகம், யூகம் என்று அவர் தடுமாறுவதையும் சென்ற தொடரில் தெளிவுபடுத்தி விட்டோம்.
இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு அடுத்த வாதத்தைப் பார்ப்போம்.
இவருடைய இந்த வாதமும் இவருடைய சிந்திக்கும் திறனில் உள்ள குறைபாட்டை உணர்த்துகிறது.
இவர் எடுத்து வைக்கும் இவருக்கே எதிரானது என்பது கூட இவருக்கு விளங்கவில்லை.
சிந்திக்கும் வழிவகை இவருக்கு அறவே தெரியாததால் ஏறுக்கு மாறாகப் புரிந்து கொள்கிறார். பதில் சொல்ல முடியாத கேள்வியைச் சந்தித்தால் இது யூகம் என்று சொல்லி முடித்துக் கொள்கிறார். மக்களும் அவரைப் போலவே சிந்தனையற்றவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்.
(தனது கட்டுரையில் 22 இடங்களில் யூகம் யூகம் என்று குறிப்பிட்டு அறிவுப்பூர்வமான வாதங்களை அலட்சியம் செய்கிறார்.)
சூனியத்தை ஆன்மீகம் என்றோ அற்புதம் என்றோ நாம் வாதிடவில்லை. அந்தக் கருத்துக்கு மக்களையும் கொண்டு வரவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டு அதனால் அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டது என்பதை நம்பினால் இந்த நிலை ஏற்படும் என்று தான் நாம் குறிப்பிட்டுள்ளோம்.
ஒரு காரியத்தினால் ஒரு விளைவு கட்டாயம் ஏற்படும் என்றால் அந்த விளைவு ஏற்படாவிட்டால் அந்தக் காரியம் நடக்கவில்லை என்று புரிந்து கொள்வது தான் அறிவு. இதுவும் அல்லாஹ் நமக்குக் கற்றுத்தரும் லாஜிக் ஆகும். எதற்கெடுத்தாலும் யூகம் யூகம் என்று கூறி சிந்தனையை அவர் மழுங்கச் செய்திருப்பதால் இதையும் நாம் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
பின்வரும் வசனங்களைப் பாருங்கள்!
(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 3:159
நபிகள் நாயகத்தை விட்டு மக்கள் வெருண்டு ஓடவில்லை என்பதை வைத்து அவர்கள் நளினமாக நடந்தார்கள் என்று கூறினால் அதை ஊகம் என்று கூறுவாரா?
நபிகள் நாயகம் கடின சித்தம் உடையவராக நடந்து கொண்டார்கள் என்று இவர் புரிந்து கொள்வாரா?
நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால் எனக்கும், உங்களுக்குமிடையே காரியம் முடிக்கப்பட்டிருக்கும்.
திருக்குர்ஆன் 6:58
மக்கள் உடனடியாக அழிக்கப்படாததால் அந்த அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு இல்லை என்று புரிந்து கொள்வது யூகமா? அறிவின் தெளிவா?
அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது.
திருக்குர்ஆன்7:188
இதில் இருந்து நபிகள் நாயகத்துக்கு மறைவான ஞானம் உண்டு என்று விளங்குவதா? நபிகள் நாய்கத்துக்கு மறைவான ஞானம் இல்லை என்று விளங்குவதா? இல்லை என்று விளங்கினால் அது யூகமா?
அவர்கள் கூறுவது போல் அவனுடன் பல கடவுள்கள் இருந்திருந்தால் அவர்களும் அர்ஷுடைய (இறை)வனிடம் (சரணடைய) ஒரு வழியைத் தேடியிருப்பார்கள் என்று கூறுவீராக!
திருக்குர்ஆன்17:42
(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும்4 நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்!152 312 அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 29:48
அவர் (நம்மை) துதிக்காது இருந்திருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்1 வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.26
திருக்குர்ஆன் 37:143,144
அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.10
திருக்குர்ஆன் 21:22
அளவற்ற அருளாளனுக்குச் சந்ததி இருந்தால் அவரை நானே முதலில் வணங்குபவன் என (முஹம்மதே!) கூறுவீராக!
திருக்குர்ஆன் 43:81
இந்த வசனங்கள் அனைத்தும் இது நடந்திருந்தால் அது ஏற்பட்டிருக்கும். அது ஏற்படாததால் இது நடக்கவில்லை என்ற லாஜிக்கின் படி அமைந்துள்ளன.
அது போல் தான் நபிகள் நாயகத்துக்கு சூனியத்தின் மூலம் மனநிலை பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் யூதர்கள் தங்கள் ஆன்மிகத்தை உயர்ந்தது என்று சொல்லி இருப்பார்கள் என்று நாம் கூறினால் சூனியத்தை ஆன்மிகம் என்று நாம் கூறியதாக விளங்குகிறார்.
நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் அவர்களின் மன நிலை பல மாதங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் இஸ்லாத்தை விட யூத மதம் ஆற்றல் மிக்கது என்று தான் யூதர்கள் நம்பியிருப்பார்கள். அவ்வாறு பிரச்சாரமும் செய்திருப்பார்கள். அவர்கள் அவ்வாறு பிரச்சரம் செய்திருந்தால் அதற்கு குர்ஆனும் மறுமொழி கொடுத்திருக்கும்.
இப்படி ஒன்றுமே நடக்கவில்லை என்பதால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் செட்ய்யப்படவில்லை என்பத்தைத் தவிர வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்?
அல்லாஹ் கற்றுத் தரும் லாஜிக் அடிப்படையில் நாம் வாதிட்டால் வழக்கம் போல் யூகம் என்று கூறி நழுவப் பார்க்கிறார்.
அடுத்ததாக அவர் எழுப்பும் வாதம் அவருக்கே எதிரானது என்பதைக் கூட அவரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
சூனியத்தை ஆன்மீகமாகவோ, அற்புதமாகவோ மக்கள் கருதவில்லை. அதைத் தீய சக்திகளின் துணையுடன் செய்யும் ஒரு தீய வேலையாகத் தான் மக்கள் கருதினர்.
இவர் குறிப்பிட்டுள்ள வசனங்களில்,
அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா? என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர் (21:3)
என்பதும் ஒன்றாகும்.
சூனியம் செய்வோரைச் சாதாரண மனிதர்களாகத் தான் அன்றைய மக்கள் கருதியுள்ளனர் என்பதை இந்த வசனம் தெளிவாக உணர்த்துகின்றது. எதையும் மிகைப்படுத்திப் பேசிப் பழகியதால், சூனியத்தையும் அற்புதம்-ஆன்மீகம் என்று மிகைப்படுத்தி, மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றார்.
சூனியத்தை ஏமாற்றும் தந்திர வித்தை என்று தான் யூதர்கள் புரிந்து வைத்திருந்தார்கள் என்பது உண்மை. சூனியம் செய்வதைத் தொழிலாகக் கொண்ட அவர்களே இப்படி புரிந்து வைத்திருந்தால் சூனியம் ஏமாற்றும் தந்திர வித்தை என்பது முற்றிலும் உண்மையே. சூனியம் என்பது மாபெரும் அற்புதம் என்றோ ஆன்மிகத்தின் உயர் நிலை என்றோ அவர்கள் கருதவில்லை என்பதும் உண்மை தான்.
இந்த நிலையில் யூதர்கள் செய்த சூனியத்தினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனநோயாளியாகி விட்டார்கள் என்பது உண்மை என்றால் யூதர்களின் அபிப்பிராயம் நிச்சயம் மாறி இருக்கும்.
சூனியத்தை ஏமாற்றும் வித்தை என்று நாம் எண்ணிக்கொண்டிருந்தோம் ஆனால் அதன் மூலம் மாபெரும் மதத்தலைவரையே மனநோயாளியாக்க முடிவதால் நம்முடைய சூனியம் செய்யும் நம்முடைய மத குருமார்களின் ஆன்மிக நிலை மிக உயர்ந்தது என்று கருதி சூனியத்தை ஏமாற்றும் வித்தை என்ற தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டிருப்பார்கள். இதையே ஒரு பிரச்சார ஆயுதமாகக் கொண்டு இஸ்லாத்தின் பால் மக்கள் ஈர்க்கப்படுவதைத் தடுத்திருப்பார்கள் என்பது தான் நமது வாதம்
சூனியக் கலையின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்களைப் போல் நடந்து கொண்ட யூதர்கள் சூனியத்தால் ஒன்றும் பண்ண முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் சூனியம் பற்றி எதுவும் அறியாத இஸ்மாயீல் ஸலஃபி கூட்டம் சூனியத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆறு மாத கலம் மன நோய்க்கு ஆளானார்கள் என்று கூறுகிறார்.
எனவே நமது வாதம் இன்னும் உறுதியாகிறது. மேற்கண்ட வசனத்துக்கு எதிராக சூனியம் பற்றிய ஹதீஸ் அமைந்திருப்பது நிரூபணமாகிறது.
கட்டுக் கதையை ஆதரிக்கத் தயாராகி விட்டதால் குர்ஆன் கூட இவருக்கு அலட்சியமாகப் போய் விட்டதைப் பின்வரும் இவரது வாசகங்கள் தெளிவுபடுத்துகின்றன.
17:94, 36:15, 26:186, 26:154, 25:7, 23:33, 23:47, 21:31, 3:184, 7:101, 35:25, 10:74, 10:13, 40:22, 9:76, 64:6, 40:50, 57:25 இவ்வளவு வசனங்களின் கருத்தையும் 1299-1301 பக்கங்களில் பதிவு செய்து இந்த முடிவு நிறைய வசனங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிக்கிறார்இவ்வளவு வசனங்களை வைத்தும் அவர் வைக்கும் வாதம் என்னவென்றால்.
இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து அவர்களையே மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத் தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும். (பக்:1301)
சூனியத்தின் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறும் ஹதீஸை நம்பினால் அது இத்தனை வசனங்களின் கருத்துக்கும் எதிராக அகிவிடும் என்று விரிவாக நாம் விளக்கி இருக்கும் போது அதற்கு இவர் அளிக்கும் பதில் நிறைய வசனங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிக்கிறார் என்பது தான்.
இந்த வசனங்கள் கூறுவதும் அதன் அடிப்படையில் நாம் எழுப்பிய வாதமும் தவறு என்றால் அதை விரிவாக எடுத்துக் காட்டி மறுக்க வேண்டும். நம்பர்களை மட்டும் சுட்டிக் காட்டி மேற்கண்ட பதிலைக் கூறுவது தான் ஆய்வா?
இதன் மூலம் குர்ஆனை வெறும் நம்பராகத் தான் பார்க்கிறார். அல்லாஹ்வின் வசனங்களுக்கு இவரிடம் மரியாதை இல்லாத காரணத்தால் தான் குர்ஆனுடன் மோதும் ஹதீஸ்களையும் துக்கிப் பிடிக்கிறார்
அடுத்ததாகப் பின் வரும் ஆதாரத்தை முன்வைத்து பயங்கரமான வாதத்தை எடுத்து வைக்கிறார்.
நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இஸ்ரா மிஹ்ராஜ் என்ற அற்புதமே பலரைத் தடம்புரளச் செய்துள்ளது. இது குறித்து அவரே பேசியுமுள்ளார். அப்படி இருக்கும் போது இப்படி வாதம் செய்வது நியாயமா?
நாம் என்ன கூறுகிறோம் என்பதை விளங்கித் தான் இந்த வாதத்தை எடுத்து வைக்கிறாரா? அல்லது விளங்காதது போல் நடிக்கிறரா என்று தெரியவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைத் தூதர் என்று நிரூபிக்க சில அற்புதங்களைச் செய்து காட்டினர்கள். அந்த அற்புதம் செய்தவரையே தூக்கி அடிக்கும் வகையில் அவரை மனநோயாளியாக யூதர்கள் ஆக்கி விட்டார்கள் என்றால் சில மக்களின் நம்பிக்கையில் பாதிப்பு ஏற்படும் என்ற நமது வாதத்துக்குத் தான் மேற்கண்ட பதிலைக் கூறுகிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததை விட பெரிய அற்புதத்தை மற்றவர்கள் செய்ய முடியாது என்று நாம் கூறினால் அல்லாஹ் செய்த இன்னொரு அற்புதத்தை இவர் உதாரணம் காட்டுகிறார்.
அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சூனியத்தின் மூலம் யூதர்கள் தான் மிஃராஜுக்கு அழைத்துச் சென்றார்கள் என்கிறாரா?
மக்களை நல்வழிப்படுத்தவோ, வழிகேட்டில் தள்ளவோ அல்லாஹ் எதையும் செய்வான். சில அற்புதங்கள் நேர்வழியில் செலுத்தும். இன்னும் சில அற்புதங்கள் வழிகேட்டில் தள்ளும். ஆனால் நபிமார்களின் எதிரிகள் கையில் நபிமார்களை மிஞ்சும் வகையிலான அற்புத ஆற்றலை அல்லாஹ் வழங்க மாட்டான் என்பது தான் நமது வாதம் இந்த வாதத்துக்கு இது பதிலாகுமா?
மேற்கண்ட வாதத்துக்கு அவர் அளிக்கும் இன்னொரு பதிலும் இதே வகையில் தான் அமைந்துள்ளது.
தஜ்ஜால்எனும் இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரிக்கு அல்லாஹ் பல அற்புதங்களை வழங்குவான். அவன் வானத்தைப் பார்த்து,மழை பொழி என்றால் மழை பொழியும், அவனை ஏற்ற மக்களின் ஊர்கள் செழிப்படையும், ஏற்காதோரின் ஊர்கள் வரண்டு செழிப்பற்றுப் போகும் என்றெல்லாம் ஹதீஸ்கள் கூறுகின்றன. இஸ்லாத்தின் எதிரிக்கு அல்லாஹ் அற்புதத்தை(?) வழங்க மாட்டான் என்று எப்படிக் கூற முடியும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஏதாவது சமாளிப்புப் பதில்களை அளிப்பது அவருக்குச் சாத்தியமானதே!
தஜ்ஜால் என்பவன் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்து நபிகள் நாயகம் ஸல் அவர்களின் அற்புதங்களைத் தூக்கி அடிக்கும் வகையில் அற்புதம் செய்தது போன்றும் கருதிக் கொண்டால் தான் இந்த வாதத்தை எடுத்து வைக்க முடியும். இதற்கும் நமது வாதத்துக்கும் என்ன சம்மந்தம்?
அவர் உளறுகிறார் என்பது அவருக்கே தெரிகிறது. அதனால் தான் இவ்விரண்டையும் கூறி வீட்டு பின்வருமாறு தெரிவிக்கிறார்.
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஏதாவது சமாளிப்புப் பதில்களை அளிப்பது அவருக்குச் சாத்தியமானதே! எனினும், அவர் மறுக்க முடியாத அல்லாஹ்வின் விடயத்தில் அவர் செய்த யூகம் தவறானது என்பதை நிரூபிக்கத்தக்க சான்று ஒன்றை முன்வைக்க விரும்புகின்றேன்.
மூஸா (அலை) அவர்கள் தூர்சீனா மலைக்குச் செல்கின்றார்கள். ஹாரூன் (அலை) அவர்கள் சமூகத்திற்குத் தலைமை தாங்குகின்றார்கள். சாமிரி என்பவன் ஜிப்ரீல் (அலை) அவர்களின் காலடி மண்ணையும், நகைகளையும் ஒன்று சேர்த்து ஒரு காளைக் கன்றைச் செய்கிறான். அது மாடு கத்துவதைப் போன்று கத்துகின்றது.
அவன் அவர்களுக்குக் காளைக் கன்றின் உருவத்தை வெளிப்படுத்தினான். அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. உடனே, (மக்கள்) இதுதான் உங்கள் இரட்சகனும், மூஸாவின் இரட்சகனும் ஆகும். ஆனால், அவர் மறந்து விட்டார் என அவர்கள் கூறினர். (20:88)
(குறிப்பு: இந்த வசனத்தில் சாமிரி காளைக் கன்றைச் செய்ததும், (மக்கள்) இதுதான் உங்கள் கடவுள், மூஸாவின் கடவுள் என்றனர் என்று குர்ஆன் கூறுகின்றது. பகாலூ-அவர்கள் கூறினார்கள் என்று இருப்பதை கால-அவன் கூறினான் என்ற அடிப்படையில் தவறான மொழியாக்கம் செய்துள்ளார்.)
அப்பொழுது மக்கள் காளைக் கன்றை வணங்குகின்றனர். ஹாரூன் நபி, இதை வணங்காதீர்கள் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்கின்றார். மக்கள் அவரைக் கொலை செய்ய முற்படுகின்றனர். இந்த நிலையிலும் ஹாரூன் நபியால் இதற்கு மாற்றமாக அல்லது இதை மிகைக்கும் வண்ணம் அற்புதம் செய்து அவனைத் தோற்கடிக்க முடியவில்லை. இது குறித்து-கராமத் முஃஜிஸா பற்றிப் பேசும் போது இவரே விரிவாகவே பேசியுள்ளார்.
இங்கே எதிரிக்கு அல்லாஹ் அற்புதத்தை வழங்கியுள்ளான். நபிக்கு எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பலரும் தடம்புரண்டு, நபியையே எதிர்க்கும் நிலைக்குச் சென்றுள்ளனர். இப்படி இருக்க, இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி நம்பிக்கை கொண்ட மக்களை, அல்லாஹ் நிச்சயமாகத் தடம்புரளச் செய்திருக்க மாட்டான் என்ற இவரின் யூகம் குர்ஆனுக்கு முரண்பட்டது. அல்லாஹ்வின் விடயத்தில் குர்ஆனுக்கு மாற்றமாக இப்படி யூகம் செய்யும் அதிகாரத்தை இவருக்கு வழங்கியது யார்?
இந்தத் தவறான யூகத்தினதும், வாதத்தினதும் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸை மறுக்கும் அவரது வாதம் தவறானது என்பதை எவரும் எளிதில் உணரலாம்.
அதாவது முதலிரண்டு வாதங்களும் சரியில்லை என்றாலும் இது மறுக்க முடியாத ஆதாரம் என்று மார் தட்டுகிறார்.
இங்கேயும் இவருக்குச் சிந்திக்கும் திறன் இல்லை என்பது தெளிவாகிறது.
இவர் எடுத்துக் காட்டும் ஆதாரம் சரியானது தான். ஆனால் அவரது வாதம் தவறானது,
நபிமார்கள் காலத்தில் எதிரிகள் சில வித்தைகளைச் செய்து காட்டுவார்கள் என்பது உண்மையே. ஆனால் அந்த வித்தை பொய்யானது என்று அதே நபிமார்களால் நிரூபிக்கப்பட்டு விடும்.
மூஸா நபியின் முன்னே சூனியக்காரர்கள் வித்தைகளைச் செய்து காட்டிய போது மூஸா நபி கூட பயப்படும் அளவுக்கு அவர்களின் வித்தை அமைந்திருந்தது. இதைத் திருக்குரானும் கூறுகிறது.
இல்லை! நீங்களே போடுங்கள்! என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார்.
திருக்குர்ஆன் 20:65,66
ஆனால் முடிவில் மூஸா நபி வெற்றி பெற்றார்கள். சூனியக்காரர்களின் செயல் வெறும் தந்திர வித்தை என்பது நிரூபிக்கப்பட்டது.
அது போல் தான் ஸாமுரி ஒரு வித்தையைச் செய்து காட்டிய போது ஹாரூன் நபி எவ்வளவு தான் விளக்கினாலும் அதை சில மக்கள் ஏற்கவில்லை.
ஆனால் முடிவு என்னவானது?
இதோ திருக்குர்ஆன் கூறுகிறது
அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?
திருக்குர்ஆன் 20:89
ஸாமிரியே! உனது விஷயமென்ன? என்று (மூஸா) கேட்டார். அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது என்றான். நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் ‘தீண்டாதே’ என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம் என்று (மூஸா) கூறினார்.19
20:95,96,97
மேற்கண்ட வசனங்கள் மூலம் ஸமுரி செய்தது வித்தை என்பது மூஸா நபியவர்களால் நிரூபிக்கப்பட்டது.
மேலும் அவன் செய்து காட்டிய வித்தை மூஸா நபியின் மீதோ ஹாரூன் நபியின் மீதோ அல்ல. காளைக் கன்றின் சிற்பத்தில் தான் தன் வித்தையைக் காட்டினான். அது வித்தை தான் என்பது மூஸா நபியவர்களால் நிரூபிக்கப்பட்டது.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இந்த வகையில் அமைந்துள்ளதா? சூனியம் வென்றதாக அந்த ஹதீஸ் கூறுகிறதா? சூனியம் தோற்றதாகக் கூறுகிறதா?
சூனியம் வைக்கப்பட்டது ஆறு மாத காலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மன நோயாளியாக்கியது என்றால் இங்கே சூனியம் வென்றதா? நபிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வென்றார்களா?
அந்த ஹதீஸ் கூறுவது என்ன? ஆறுமாத காலம் மன நோயாளியாக்கும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதிக்கப்பட்டதாக கூறி சூனியம் ஜெயித்ததாகக் கூறுகிறது.
பிறகு இறைவன் மூலம் இது அறிவித்துக் கொடுக்கப்பட்ட பிறகாவது சூனியம் தோற்றதாகக் கூறப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை.
சூனியக்காரனை இழுத்து வரச் செய்து இனி மேல் உன்னால் எதுவும் செய்ய முடியாது என்று அறிவித்திருந்தால் கடைசியில் சூனியம் தோற்றது என்றாவது ஆகி இருக்கும். அப்படியும் நடக்கவில்லை.
سنن النسائي – بأحكام الألباني – (7 / 112)
4080 – أخبرنا هناد بن السري عن أبي معاوية عن الأعمش عن بن حيان يعني يزيد عن زيد بن أرقم قال : سحر النبي صلى الله عليه و سلم رجل من اليهود فاشتكى لذلك أياما فأتاه جبريل عليه السلام فقال إن رجلا من اليهود سحرك عقد لك عقدا في بئر كذا وكذا فأرسل رسول الله صلى الله عليه و سلم فاستخرجوها فجيء بها فقام رسول الله صلى الله عليه و سلم كأنما نشط من عقال فما ذكر ذلك لذلك اليهودي ولا رآه في وجهه قط
قال الشيخ الألباني : صحيح الإسناد
நபிகள் நாயகத்துக்கு நிவாரணம் கிடைத்தவுடன் அது குறித்து அந்த யூதனிடம் அவர்கள் கூறவும் இல்லை. அவன் முகத்திலும் விழிக்கவில்லை
என்று கூறப்படுகிறது.
அப்படியானால் சூனியக்காரன் தான் கடைசி வரை வெற்றி பெற்றுள்ளான். மீண்டும் ஒரு தடவை இன்னும் பல தடவை கூட அவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்து இன்னும் பல கேடுகளைச் செய்ய முடியும் என்று தான் இது குறித்த ஹதீஸ்களின் கருத்து அமைந்துள்ளது.
இஸ்மாயீல் ஸலஃபி வகையறாக்களின் வாதப்படி கியாம நாள் வரை சூனியத்தின் இந்த வெற்றி தொடர்கிறது. ஏனெனில் இனியும் இது போல் சூனியத்தின் மூலம் செய்ய முடியும் என்பது இவர்களின் கருத்து.
எனவே இவர்களின் மறுப்பில் உப்பு சப்பு இல்லாததால் நாம் எடுத்து வைத்த வாதம் முன்பை விட இன்னும் வலுவாக நிற்கிறது.
போகிற போக்கில் நமது தமிழாக்கம் பற்றியும் ஆங்காங்கே குறிப்பிடுகிறார். அது போல் மேற்கண்ட வாதத்தின் இடையிலும் பின் வருமாறு கூறுகிறார்.
(குறிப்பு: இந்த வசனத்தில் சாமிரி காளைக் கன்றைச் செய்ததும், (மக்கள்) இதுதான் உங்கள் கடவுள், மூஸாவின் கடவுள் என்றனர் என்று குர்ஆன் கூறுகின்றது. பகாலூ-அவர்கள் கூறினார்கள் என்று இருப்பதை கால-அவன் கூறினான் என்ற அடிப்படையில் தவறான மொழியாக்கம் செய்துள்ளார்.)
எனது தமிழாக்கம் குறித்து விவாதிக்க வந்த முஜீப் தேவையான குறிப்புகளைப் பெறுவதற்காக இலங்கை சென்றார். தொண்டி விவாதத்தின் போது மேற்கண்ட கேள்வியையும் முஜீப் கேட்டார். (இப்போது தான் இந்த பாயிண்ட் எங்கிருந்து சப்ளை செய்யப்பட்டது என்பது தெரிய வருகிறது.)
நாம் செய்த தமிழாக்கம் சரி தான் என்பதைத் தகுந்த காரணத்தோடும் இவர்கள் ஏற்றுக் கொள்ளும் அரபு தஃப்ஸீர்கள் துணையுடனும் நிரூபித்தோம். (விவாத வீடியோவைப் பார்த்து அதை அறிந்து கொள்க.)
ஆயினும் எட்டாவது பதிப்பில் இது போன்ற விமர்சனம் கூட வரக் கூடாது என்பதற்காக இதை விடச் சிறந்த முறையில் மாற்றியிருக்கிறோம். (தவறு என்பதற்காக மாற்றவில்லை.)
இவர் எடுத்து வைக்கும் இன்னும் சில ஆதாரங்களை இன்ஷா அல்லாஹ்  பார்ப்போம்.
நன்றி - ஆன்லைன் pj 
நன்றி - sltjweb.com 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger