ஸிஹ்ர் ஓர் ஆய்வு – தொடர் 3


ஸிஹ்ர் மூலம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த முடியுமா? என்பதைப் பார்ப்பதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர் செய்யப்பட்டதாக அறிவிக்கப்படும் செய்தி உண்மையானதா? என்பதைப் பார்த்து வருகிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர் வைக்கப்பட்டது என்பதை ஆதரிக்கும் இஸ்மாயீல் ஸலஃபி கூட் நபிகள் நாயகத்துக்கு மன நிலை பாதிப்பு ஏற்படவில்லை என்று தான் வாதிடுகிறார். தம் மனைவியுடன் சேராமலே சேர்ந்தது போன்ற போலித் தோற்றம் ஏற்பட்டதே தவிர அவர்களின் மன நிலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் இதை மறுக்க முடியாது என்பது தான் அவரது வாதம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மன நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டால் அந்தச் செய்தி ஏற்கக் கூடியது அல்ல என்பது தான் அவரது வாதத்திற்குள் அடங்கியுள்ள உட்கருத்து.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலை பாதிக்கப்படவில்லை என்று அந்த ஹதீஸ் கூறுகிறதா இல்லையா என்பது தான் இப்போது கேள்வி. அந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மன நிலை பாதிக்கப்பட்டதாகத் தான் கூறப்பட்டுள்ளது என்பதை இஸ்மாயீல் ஸலபியின் வார்த்தைகளைக் கொண்டே நிரூபித்து விட்டதால் அந்த ஹதீஸ் பொய்யானது என்பது அவரது மறைமுகமான வாதத்தின் படியே நிரூபணமாகி விட்டது.
சென்ற தொடரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்து எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன் என்று நாம் எழுதியது குறித்து இஸ்மாயீல் ஸலபி கூறிய மறுப்பு தவறானது என்பதை விளக்கினோம்.
அதைத் தொடர்ந்து அவர் பின் வருமாறு கேள்விகளை எழுப்புகிறார்.
இப்போது நியாயமான ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகின்றோம்.
இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான அறிவிப்பாளர் தொடருடன் புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறுபட்ட அறிஞர்களின் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் இடம்பெற்ற நூற்களுக்கு விளக்கவுரைகளும் எழுதப்பட்டுள்ளன.
இந்த ஹதீஸ் முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் அறிந்த மஸ்ஹூர்-பிரபலமான அறிவிப்பாகவும் திகழ்கின்றது.
நம்பத் தகுந்த நல்லறிஞர்கள் யாரும் ஏன் இந்த ஹதீஸை விமர்சிக்கவில்லை? அவர்கள் இந்த ஹதீஸை விமர்சிக்காதது இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பதற்கான சான்றாகத் திகழ்கின்றதல்லவா?
அவர்கள், இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கருதவில்லை, பகுத்தறிவுக்கு முரண்பட்டதாகக் கருதவில்லை.
சூனியம் பற்றிய குர்ஆனின் நிலைப்பாட்டிற்கு முரண்பட்டதாகக் கருதவில்லை, இந்த ஹதீஸை ஏற்றுக் கொண்டால் குர;ஆனில் சந்தேகம் ஏற்படும் என்று கருதவில்லை.
இப்படி இருக்க, இவருக்கு மட்டும் இப்படியெல்லாம் தோன்றுகின்றது என்றால் அவர்கள் அத்தனை பேரையும் அறிவிலிகள் என்பதா? குர்ஆன்-ஸுன்னாவைப் புரிந்து கொள்ளத் தெரியாதவர்கள் என்பதா? அல்லது இவர், தான் புரிந்து கொள்வதில் ஏதோ கோளாறு விடுகின்றார் என்று கருதுவதா? இதை ஒவ்வொரு கொள்கைச் சகோதரனும் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.
காஃபிர்கள் விமர்சனம் செய்யவில்லை, எனவே, சூனியம் செய்யப்பட்டதாக வந்த ஹதீஸ் பொய் என்று கூறுவதா?
அல்லது முஸ்லிம் அறிஞர்கள் இந்த ஹதீஸை விமர்சிக்கவில்லை, எனவே, இந்த ஹதீஸ் உண்மையானது என்பதா?
எது வலுவான நியாயமான வாதம்? என்பதைச் சிந்திக்க வேண்டும். இப்படிச் சிந்திக்கும் போது இவர் தவறான கோணத்தில் அணுகி பிழையான அடிப்படையில் விமர்சித்து, அர்த்தமற்ற வாதங்களை முன்வைத்து, அந்த ஹதீஸை மறுக்க முயல்வதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
ஆய்வு செய்யும் எந்தத் தெளிவும் இவரிடம் இல்லை என்பதற்கு இவரது இந்த வாதம் மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது. மேலும் இவர் குர்ஆன் ஸுன்னாவை விட்டு வெகு தொலைவு சென்று விட்டார் என்பதையும் இந்த வாதம் தெளிவுபடுத்துகிறது.
இந்த இடத்தில் இவர் குறிப்பிட்டுள்ள பின்வரும் வாதத்தை முதலில் கவனிப்போம்.
காஃபிர்கள் விமர்சனம் செய்யவில்லை, எனவே, சூனியம் செய்யப்பட்டதாக வந்த ஹதீஸ் பொய் என்று கூறுவதா? அல்லது முஸ்லிம் அறிஞர்கள் இந்த ஹதீஸை விமர்சிக்கவில்லை, எனவே, இந்த ஹதீஸ் உண்மையானது என்பதா? எது வலுவான நியாயமான வாதம்?
என்று கேள்வி எழுப்புகிறார். அதாவது முஸ்லிம் அறிஞர்களை நம்பாமல் காஃபிர்களை ஆதாரமாகக் கொள்வது போன்ற தோற்றத்தை இவர் ஏற்படுத்துகிறார். காஃபிர்கள் வாதத்தை ஏற்பதா முஸ்லிம்களின் வாதத்தை ஏற்பதா என்பது இங்கு பிரச்சனையே இல்லை. காஃபிர்கள் எடுத்து வைத்த வாதத்தை ஏற்றுக் கொள்வது என்ற பிரச்சனைக்கு இங்கே இடம் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டு மன நிலை பாதிப்பு ஏற்பட்டைருந்தால் கண்டிப்பாக அது குறித்து காபிர்கள் கேள்வி கேட்டிருப்பார்கள் என்பது காபிர்களின் வாதம் அல்ல. மூளையும் சிந்திக்கும் திறனும் உள்ளவர்களின் வாதம் தான்.
ஒரு காரியம் நடந்ததா? இல்லையா என்பதை அறிவதற்கான வழிமுறைகளில் விளைவுகளை வைத்துச் சிந்திப்பதும் ஒன்றாகும்.
ஒரு ஊரில் அணு குண்டு போடப்பட்டதாக ஒரு செய்தி கிடைக்கிறது. ஆனால் அந்த ஊரில் எந்த மனிதனுக்கோ அல்லது வேறு உயிரனங்களுக்கோ எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அங்கே அணுகுண்டு போடப்படவில்லை. அது பொய்யான செய்தி என்று நாம் முடிவு செய்வோம். அந்தச் செய்தியைச் சொல்பவர் எத்தகைய நம்பகமானவர் என்றாலும் அவ்வூரில் அணுகுண்டு போடப்பட்டது என்பதை நாம் நம்ப மாட்டோம்.
ஏனெனில் அணுகுண்டு போடப்பட்டால் அதனால் என்ன விளைவு ஏற்பட வேண்டுமோ அந்த விளைவுகள் ஏற்பட வேண்டும் என்று நாம் சிந்திப்பதே காரணம். நல்ல அறிஞர்கள் ஒன்று கூடி அங்கே அணுகுண்டு போடப்பட்டது என்று கூறினாலும் நாம் ஏற்க முடியாது.
அந்த அடிப்படையில் தான் நாம் நமது பல கேள்விகளில் இக்கேள்வியையும் எடுத்து வைத்தோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அவர்களது மார்க்கத்தையும் ஒழித்திட இணை வைப்பவர்களும் யூதர்களும் கங்கணம் கட்டி செயல்பட்டு வந்தனர். எப்படியாவது இவரை வீழ்த்த வேண்டும் என்று சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருந்தனர். சின்னச் சின்ன தோல்விகள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட போதெல்லாம் இவரால் தான் இது ஏற்பட்டது என்று கூறி வந்தனர். ஆயிஷா ரலி மீது களங்கம் சுமத்தப்பட்ட போது அதை எப்படியெல்லாம் முனாஃபிக் கூட்டம் பரப்பியது என்பதை நாம் அறிவோம்.
இப்படியெல்லாம் இவர்கள் தக்க சந்தர்ப்பத்துக்காகக் காத்து கிடக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு மன நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இது அவர்களுக்கு எவ்வளவு அற்புதமான வாய்ப்பு? ஆயிஷா (ரலி) அவர்கள் மீது சொல்லப்பட்ட அவதூறை விட இது அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால் இது குறித்து யூதர்களோ, முஸ்லிம்களூடன் இரண்டறக் கலந்திருந்த நயவஞ்சகர்களோ எவ்வித் விமர்சனமும் செய்யவில்லை. அப்படி எந்த விமர்சனமும் இல்லை என்றால் அப்படி ஒரு மந்திர வேலை நடக்கவில்லை என்பது உறுதி என்பதையும் ஒரு வாதமாக முன் வைத்தோம்.
இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர் என்ற தலைப்பில் நாம் குறிப்பட்ட செய்தியையும் இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.
இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது உண்மையாக இருந்தால் அவர்களை அன்றைய மக்கள் இறைத் தூதர் என்று நம்பியிருக்க மாட்டார்கள். ஏற்கனவே அவர்களை இறைத் தூதர் என்று நம்பியிருந்தவர்களில் பலரும் அவர்களை விட்டு விலகியிருப்பார்கள்.
ஒருவரை இறைத் தூதர் என்று நம்புவதற்கு இறைவன் எத்தகைய ஏற்பாட்டைச் செய்திருக்கிறான் என்பதை அறிந்து கொண்டால் தான் இதைப் புரிந்து கொள்ள முடியும்.
இறைத் தூதர்கள் என்பதற்கான சான்றுகள்
இறைத் தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள்.
எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?’ என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது.
(திருக்குர்ஆன் 17:94)
நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள் என்று கூறினர்.
(திருக்குர்ஆன் 36:15)
நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.
(திருக்குர்ஆன் 26:186)
நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!(என்றும் கூறினர்.)
(திருக்குர்ஆன் 26:154)
இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா? என்று கேட்கின்றனர்.
(திருக்குர்ஆன் 25:7)
இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அலிருந்துவதையே இவரும் அலிருந்துகிறார் என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதி, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.
(திருக்குர்ஆன் 23:33)
இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா? என்றனர்.
(திருக்குர்ஆன் 23:47)
அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா? என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.
(திருக்குர்ஆன் 21:3)
மனிதனால் நியமிக்கப்படும் தூதர் மனிதனாக இருக்கலாம். இறைவனால் நியமிக்கப்படும் தூதர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவராகத் தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் மக்கள் கருதினார்கள்.
மக்கள் இவ்வாறு எண்ணியதிலும் நியாயங்கள் இருந்தன. இறைத் தூதர் என்று ஒருவர் கூறியவுடனே அவரை ஏற்றுக் கொள்வது என்றால் இறைத் தூதர்கள் என்று பொய்யாக வாதிட்டவர்களையும் ஏற்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
மற்ற மனிதர்களிலிருந்து எந்த வகையிலாவது இறைத் தூதர் வேறுபட்டிருக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை ஓரளவு இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.
தனது தூதராக யாரை அனுப்பினாலும் அவர் இறைத் தூதர் தான் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் சில அற்புதங்களை அவர்களுக்குக் கொடுத்து அனுப்புகிறான்.
மற்ற மனிதர்களால் செய்ய முடியாத அந்த அற்புதங்களைக் காணும் போது அவர் இறைவனின் தூதர் தான் என்று நம்புவதற்கு நேர்மையான பார்வையுடயவர்களுக்கு எந்தத் தயக்கமும் ஏற்படாது.
இதன் காரணமாகவே எந்தத் தூதரை அனுப்பினாலும் அவருக்கு அற்புதங்களை வழங்கியே அனுப்பி வைத்ததாக திருக்குர்ஆன் பல்வேறு வசனங்களில் சுட்டிக் காட்டுகிறது.
உம்மை அவர்கள் பொய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளி வீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.
(திருக்குர்ஆன் 3:184)
இந்த ஊர்கள் பற்றிய செய்திகளை உமக்குக் கூறுகிறோம். அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்தனர். முன்னரே அவர்கள் பொய்யெனக் கருதியதால் அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே (தன்னை) மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
(திருக்குர்ஆன் 7:101)
அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யரெனக் கருதியுள்ளனர். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளிவீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.
(திருக்குர்ஆன் 35:25)
அவருக்குப் பின்னர் பல தூதர்களை அவரவர் சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் முன்னரே பொய்யெனக் கருதியதால் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே வரம்பு மீறியோரின் உள்ளங்கள் மீது முத்திரையிடுவோம்.
(திருக்குர்ஆன் 10:74)
உங்களுக்கு முன் அநீதி இழைத்த பல தலைமுறையினரை அழித்திருக்கிறோம். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. குற்றம் புரியும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம்.
(திருக்குர்ஆன் 10:13)
அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது மறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அவன் வலிமையுள்ளவன்; கடுமையாகத் தண்டிப்பவன்.
(திருக்குர்ஆன் 40:22)
அவர்களுக்கு முன் சென்ற நூஹுடைய சமுதாயம், ஆது, மற்றும் ஸமூது சமுதாயம், இப்ராஹீமின் சமுதாயம், மத்யன் வாசிகள், (லூத் நபி சமுதாயம் உள்ளிட்ட) தலைகீழாகப் புரட்டப்பட்டோரைப் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கு இழைத்தவனாக இல்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்தனர்.
(திருக் குர்ஆன் 9:70)
அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்ததும், ஒரு மனிதர் எங்களுக்கு வழி காட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏக இறைவனை) மறுத்துப் புறக்கணித்ததும் இதற்குக் காரணம். அவர்களைத் தேவையற்றோராக அல்லாஹ் கருதினான். அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன்.
(திருக்குர்ஆன் 64:6)
உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வரவில்லையா? என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு இவர்கள் ஆம் என்று கூறுவார்கள். அப்படியானால் நீங்களே பிரார்த்தியுங்கள்! என்று (நரகின் காவலர் கள்) கூறுவார்கள். (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே முடியும்.
(திருக்குர்ஆன் 40:50)
நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், மக்கள் நீதியை நிலை நாட்ட தராசையும் அருளினோம். இரும்பையும் அருளினோம்.
(திருக்குர்ஆன் 57:25)
இறைத் தூதர்கள் அனைவருக்கும் அற்புதங்கள் வழங்கப்பட்டன. அற்புதம் வழங்கப்படாமல் ஒரு இறைத் தூதரும் அனுப்பப்படவில்லை என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து அறியலாம்.
தான் செய்து காட்டும் அற்புதங்கள் மூலம் தான் ஒரு இறைத் தூதர் தன்னை இறைத் தூதர் என்று நிரூபிக்கும் நிலையில் இருக்கிறார்.
இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து அவர்களையே மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத் தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும்.
இறைவனால் தேர்வு செய்யப்பட்டவரையே முடக்கிப் போட்டார்கள் என்றால் அன்று எத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்?
நம்மைப் போன்ற மனிதராக இவர் இருந்தும் இவர் செய்து காட்டிய சில அற்புதங்களைக் கண்டு இறைத் தூதர் என்று நம்பினோம்; இன்று அவரது மனநிலையையே பாதிக்கச் செய்து விட்டார்களே; இவரை விட யூதர்கள் அல்லவா ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள் என்று அம்மக்களில் கனிசமானவர்கள் எண்ணியிருப்பார்கள்.
இவர் செய்து காட்டிய அற்புதத்தை விட யூதர்கள் பெரிய அற்புதம் செய்து காட்டி விட்டார்கள். அற்புதம் செய்தவரையே மந்திர சக்தியால் வீழ்த்தி விட்டார்கள் என்று ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை. அதைக் காரணம் காட்டி ஒருவர் கூட இஸ்லாத்தை விட்டு விட்டு மதம் மாறிச் செல்லவில்லை.
எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் சீப்பையும், முடியையும் பயன்படுத்தி இறைத் தூதரை வீழ்த்தினார்கள் என்பது தவறான தகவல் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி, நம்பிக்கை கொண்ட மக்களை அல்லாஹ் நிச்சயம் தடம் புரளச் செய்திருக்க மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை.
(இதற்கும் இஸ்மாயீல் பதில் கூறியுள்ளார். அது இதே தொடரின் இறுதியில் விளக்கப்பட்டுள்ளது)
எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன் என்ற தலைப்பில் கூறிய செய்தியுடன் மேற்கண்ட காரணங்களையும் கூறி விட்டுத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறுவது பொய் என்று நாம் வாதிட்டோம்.
முஸ்லிம் அறிஞர்கள் இதை ஏற்றுக் கொண்டார்கள் என்பதும், அவர்களுக்குத் தெரியாதது உனக்குத் தெரிந்து விட்டதா என்பதும் இவ்வாதங்களுக்கு உரிய பதிலாகுமா? அதிகமான அறிஞர்கள் (அனைவரும் அல்லர்) இந்த ஹதீஸை அங்கீகரித்துள்ளார்கள் என்றால் எந்த அடிப்படையில் அங்கீகரித்துள்ளார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?
நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று கூறும் ஹதீஸ்கள் சரியானவை என்று கூறும் அவர்கள் அந்த ஹதீஸ்களில் இல்லாத விளக்கத்தைக் கொடுத்தனர்.
அதாவது ஸிஹ்ர் வைக்கப்பட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மன நிலையில் ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்களுக்கு மனைவிமார்களுடன் உடலுறவு கொள்ள முடியவில்லை. அல்லது உடலுறவு கொள்ளாமலே உடலுறவு கொண்டதாக அவர்களுக்கு உணர்வு ஏற்பட்டது என்று விளக்கம் கூறிக் கொண்டதால் இது ஒரு பெரிய பாதிப்பு இல்லை என்று அவர்கள் திருப்திப்பட்டுக் கொண்டார்கள். இஸ்மாயில் ஸலபி இது குறித்து எழுதிய அனைத்தும் அவர்கள் அரபு மொழியில் எழுதியதன் தமிழாக்கம் தான்.
அந்த அறிஞர்கள் கூறும் இந்த விளக்கத்தை நாமும் பார்க்கத் தான் செய்தோம். அதைக் கண்னை மூடிக் கொண்டு இஸ்மாயீல் ஸலபி எடுத்து எழுதியது போல் நாமும் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் இவர்கள் விளங்கியது போல் விளங்குவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதா என்று சிந்தித்தோம். ஹதீஸ்களின் வாசகத்தில் இருந்து பெற முடியாத தங்களின் விருப்பத்தைத் தான் விளக்கமாகக் கொடுத்துள்ளனர் என்று நாங்கள் அறிந்தோம்.
எந்த விளக்கத்தை யார் கொடுத்தாலும் அந்த விளக்கம் அந்த ஹதீஸில் இருந்து பெறப்பட்டதாக இருந்தால் தான் நாம் ஏற்க முடியும். இது தான் தவ்ஹீதின் அடிப்படை.
மதஹபுவாதிகள் மத்ஹபுக்கு ஆதாரமாகச் சில வசனங்களையும் சில ஹதீஸ்களையும் எடுத்துக் காட்டுவார்கள். ஆனால் அந்த வசனங்களில் இல்லாத கருத்தை அதில் தினித்திருப்பார்கள் என்பதை நாம் அம்பலப்படுத்தியுள்ளோம். அது போல் தர்கா வாதிகளும் கூட குர்ஆன் வசனங்களை எடுத்துக் காட்டி தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவார்கள். இவர்கள் கூறும் கருத்து அந்த வசனங்களில் இல்லை என்று அப்போது நாம் சுட்டிக் காட்டியுள்ளோம்.
அதே போல் தான் இந்த விஷயத்தில் அறிஞர்கள் கூறிய கருத்தையும் அணுக வேண்டும். அதிகமான அறிஞர்களின் கருத்து என்று அணுகக் கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்களில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. உடலுறவு கொள்ளாமலெ உடலுறவு கொண்டதாக சில அறிவிப்புக்கள் கூறுகின்றன. அவர்கள் செய்யாத ஒன்றைச் செய்ததாக நினைத்தார்கள் என்று பல அறிவிப்புக்கள் கூறுகின்றன. இதைச் சென்ற தொடரில் அரபு மூலத்துடன் நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். இன்னும் சில அறிவிப்புக்களில் சூனியத்தின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடல் வேதனை ஏற்பட்டதாகவும் கூறுகின்றன. (صحيح البخاري) فَقَالَ أَحَدُهُمَا لِلآخَرِ مَا وَجَعُ الرَّجُلِ
எந்த ஹதீஸை இவர்கள் சரி என்று கூறுகிறார்களோ அந்த ஹதீஸ் இவர்கள் கூறும் கருத்தில் இருக்கவில்லை எனும் போது எப்படி இவர்கள் கூறும் விளக்கத்தை ஏற்க முடியும் என்பது தான் இங்குள்ள கேள்வி. அதிகமான அறிஞர்கள் ஆதரித்துள்ளார்களா என்பது இங்கே கேள்வி அல்ல. அதிகமான அறிஞர்கள் ஆதரிக்கும் இந்த ஹதீஸ்கள் நபிகள் நாயகம் ஸிஹ்ர் மூலம் மன நோய்க்கு ஆளானார்கள் என்று தெளிவாகக் கூறும் போது அதில் இல்லாத கருத்தை அறிஞர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக ஏற்க முடியுமா?
அன்னியப் பெண்ணிடம் இளைஞர் ஒருவருக்குப் பாலூட்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஹதீஸையும் பொய் என்று நாம் கூறினோம். அந்த ஹதீஸையும் இதே அறிஞர்கள் சரியானது என்று தான் கூறி இருக்கிறார்கள். ஆனால் அது குறித்து நாம் எழுப்பிய கேள்விக்கு இன்று வரை இஸ்மாயீல் ஸலபியால் பதில் சொல்ல முடியவில்லை.
எல்லா அறிஞர்களும் இதைச் சரி கண்டு விட்டதால் அனைவருக்கும் மாற்றமாக பீஜே கூறுவதை ஏற்க முடியுமா என்று இவரால் கேட்க முடியவில்லை. அந்த அறிஞர்கள் எல்லாம் பால்குடி விஷயத்தில் எங்கே போனார்கள்?
இன்னும் நாம் பட்டியல் போட்ட பல ஹதீஸ்களையும் இதே அறிஞர்கள் சரியானது என்று தான் கூறியுள்ளனர். ஆனால் நாம் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் அவர்களிடம் பதில் இல்லை. அது போல் தான் நபிகள் நாய்கம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட ஹதீஸிலும் அவர்கள் தவறாகக் கூறி விட்டார்கள் என்று கூறுகிறோம்.
ஒருவரும் சொல்லாவிட்டாலும் அந்தக் கருத்து சரியாக இருக்கிறதா என்பதில் மட்டுமே நாம் கவனம் செலுத்துவோம். ஆனால் ஒருவருமே சொல்லாத கருத்தை நாம் கூறுவதாக இவர் சொல்வது கூட உண்மை இல்லை.
ஏனெனில் காரிஜிய்யாக்களாகவும், முஃதஸிலாக்களாகவும் இல்லாத பல அறிஞர்கள் நாம் கூறிய கருத்தை முன்னரே கூறியும் இருக்கிறார்கள்
فتح الباري – ابن حجر – (10 / 222)
واختلف في السحر فقيل هو تخبيل فقط ولا حقيقة له وهذا اختيار أبي جعفر الاسترباذي من الشافعية وأبي بكر الرازي من الحنفية وبن حزم الظاهري وطائفة قال النووي والصحيح أن له حقيقة وبه قطع الجمهور وعليه عامة العلماء ويدل عليه الكتاب والسنة الصحيحة المشهورة انتهى
ஸிஹ்ர் விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. இது வெறும் கற்பனை மட்டுமே. இதில் எந்த உண்மைத் தன்மையும் இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஷாபி மத்ஹபைச் சேர்ந்த அபூ ஜஃபர் அல் இஸ்திராபாதீ, ஹனபி மத்ஹபைச் சேர்ந்த அபூபக்ர் ராஸீ, இப்னு ஹஸ்ம் அள்ளாஹிரி, மற்றும் சிலர் இவ்வாறு கூறுகின்றனர். ஸிஹ்ருக்கு உண்மைத் தன்மை உள்ளது என்பதே சரியான கருத்து என்று நவவீ கூறுகிறார். பெரும்பாலோர் இதை உறுதிப்படுத்துகின்றனர். அதிக உலமாக்களும் இக்கருத்திலேயே உள்ளனர். குர்ஆனும் சரியான ஹதீஸ்களும் இதையே அறிவிக்கின்றன
இவ்வாறு ஃபத்ஹுல் பாரியில் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார். பெரும்பாலானவர்களின் கருத்துக்கு மாற்றமான கருத்துடையவர்களும் முந்தைய காலங்களில் இருந்துள்ளனர் என்பது இதில் இருந்து தெரிகிறது.
الإعلام بتوضيح نواقض الإسلام – (1 / 39)
(أجمعوا على أن السحر له حقيقة إلا أبا حنيفة فانه قال: لاحقيقة له عنده) انتهى.
ஸிஹ்ர் என்பதற்கு உண்மைத் தன்மை இருக்கிறது என்பதில் அபூஹனீபா அவர்களைத் தவிர அனைவரும் கூறுகின்றனர் என்று முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் எடுத்துக் காட்டுகிறார்.
الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان – (1 / 15)
9 – اخْتَلَفَ الْعُلَمَاءُ فِي أَنَّ السِّحْرَ هَل لَهُ حَقِيقَةٌ وَوُجُودٌ وَتَأْثِيرٌ حَقِيقِيٌّ فِي قَلْبِ الأَْعْيَانِ ، أَمْ هُوَ مُجَرَّدُ تَخْيِيلٍ ؟.فَذَهَبَ الْمُعْتَزِلَةُ وَأَبُو بَكْرٍ الرَّازِيُّ الْحَنَفِيُّ الْمَعْرُوفُ بِالْجَصَّاصِ ، وَأَبُو جَعْفَرٍ الإِْسْتِرَابَاذِيُّ وَالْبَغَوِيُّ مِنَ الشَّافِعِيَّةِ ، إِلَى إِنْكَارِ جَمِيعِ أَنْوَاعِ السِّحْرِ وَأَنَّهُ فِي الْحَقِيقَةِ تَخْيِيلٌ مِنَ السَّاحِرِ عَلَى مَنْ يَرَاهُ ، وَإِيهَامٌ لَهُ بِمَا هُوَ خِلاَفُ الْوَاقِعِ ، وَأَنَّ السِّحْرَ لاَ يَضُرُّ إِلاَّ أَنْ يَسْتَعْمِل السَّاحِرُ سُمًّا أَوْ دُخَانًا يَصِل إِلَى بَدَنِ الْمَسْحُورِ فَيُؤْذِيهِ ، وَنُقِل مِثْل هَذَا عَنِ الْحَنَفِيَّةِ ، وَأَنَّ السَّاحِرَ لاَ يَسْتَطِيعُ بِسِحْرِهِ قَلْبَ حَقَائِقِ الأَْشْيَاءِ ، فَلاَ يُمْكِنُهُ قَلْبُ الْعَصَا حَيَّةً ، وَلاَ قَلْبُ الإِْنْسَانِ حِمَارًا .
ஸிஹ்ர் என்பதற்கு உண்மைத் தன்மை உள்ளதா? ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்றுவதில் பாதிப்பை ஏற்படுத்துமா? அல்லது வெறும் மாயையா என்பதில் உலமாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. முஃதஸிலாக்களும், அபூ பக்ர் அல்ஜஸ்ஸாஸ்,. அபூஜஃபர், இமாம பகவீ, ஆகியோர் பொய்த் தோற்றம் ஏற்படுத்துவதே ஸிஹ்ர் என்கின்றனர். ஸிஹ்ர் செய்பவன் விஷத்தையோ, புகையையோ ஒருவன் மீது பயன்படுத்தினால் அன்றி எந்தக் கேடும் ஏற்படாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். ஹனபி மத்ஹபினரின் கூற்றும் இது தான் என்று அறிவிக்கப்படுகிறது என்று இப்னு தைமிய்யா அவர்கள் எடுத்து எழுதுகிறார்கள்.
ஸிஹ்ர் தொடர்பாக முன்னுள்ள அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் இருக்கவில்லை. அவ்வாறு இருந்ததாக உண்மைக்கு மாறான தகவலை இஸ்மாயீல் ஸலபீ கூறுகிறார்.
சில விஷயங்களில் அதிகமான அறிஞர்களை விட குறைவான அறிஞர்களின் முடிவு சரியாக அமைந்திருப்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. எனவே அதிகமான அறிஞர்கள் மடையர்களா என்று கேட்டு வந்த வழியே இஸ்மாயீல் ஸலபீ செல்லக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர் என்ற தலைப்பில் நாம் குறிப்பிட்ட சில விஷயங்களையும் இஸ்மாயீல் ஸலபி மறுக்கிறார்.
அவற்றையும் நாம் ஆராய்வோம்.
17:94, 36:15, 26:186, 26:154, 25:7, 23:33, 23:47, 21:31, 3:184, 7:101, 35:25, 10:74, 10:13, 40:22, 9:76, 64:6, 40:50, 57:25 இவ்வளவு வசனங்களின் கருத்தையும் 1299-1301 பக்கங்களில் பதிவு செய்து இந்த முடிவு நிறைய வசனங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிக்கிறார். இவ்வளவு வசனங்களை வைத்தும் அவர் வைக்கும் வாதம் என்னவென்றால்.
இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து அவர்களையே மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத் தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும். (பக்:1301)
நபி(ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தால் அவர் முடக்கிப் போடப்பட்டதாக ஹதீஸ் கூறவில்லை. இது தேவையில்லாத மிகைப்படுத்தலாகும். தொடர்ந்து வரும் பந்திகளிலும் சூனியத்தால் நபி(ஸல்) அவர்கள் முடக்கப்பட்டதாகவும், வீழ்த்தப்பட்டதாகவும் சித்தரிக்கின்றார். இது ஹதீஸில் கூறப்படாததைக் கூறி, மிகைப்படுத்தி, அதன் பின் அந்த ஹதீஸை மறுக்கும் தவறான அணுகுமுறையாகும். இப்படி மிகைப்படுத்தினால்தான் மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டு வரலாம் என்பதற்காக, அவர் மறுக்கும் எல்லா ஹதீஸ்களிலும் இந்த மிகைப்படுத்தும் தவறான போக்கைக் கைக்கொள்கின்றார்.
இறைவனால் தேர்வு செய்யப்பட்டவரையே முடக்கிப் போட்டார்கள் என்றால் அன்று எத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்?
நம்மைப் போன்ற மனிதராக இவர் இருந்தும் இவர் செய்து காட்டிய சில அற்புதங்களைக் கண்டு இறைத் தூதர் என்று நம்பினோம், இன்று அவரது மனநிலையையே பாதிக்கச் செய்து விட்டார்களே, இவரை விட யூதர்கள் அல்லவா ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள் என்று அம்மக்களில் கணிசமானவர்கள் எண்ணியிருப்பார;கள்.
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியத்தால் ஏற்பட்ட பாதிப்பு அவர்களுக்கும், அவர்களது மனைவியருக்கும் மட்டும் தெரிந்த செய்தி என்று ஏற்கனவே நாம் விளக்கி விட்டோம். அத்துடன் சூனியம் செய்யப்பட்ட செய்தி அறியப்பட்ட பின்னர் கூட இந்த செய்தி மக்கள் மத்தியில் பரவி தீமை உருவாகி விடக் கூடாது என நபி(ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.
அத்தோடு நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட செய்தி அவர்களுக்கே இறுதியில் தான் தெரிந்தது. தெரிந்த உடனேயே பரிகாரமும் கிடைத்து விட்டது. இப்படித்தான் ஹதீஸ் கூறுகின்றது.
இப்படி இருக்க, நபி(ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் செய்து நபியையே முடக்கிப் போட்டார்கள். எனவே, நபியை விட யூதர்களே ஆன்மீக ஆற்றல் பெற்றவர்கள் எனச் சிலர்; எண்ணியிருப்பார்கள், இதை விமர்சித்திருப்பார்கள், இஸ்லாத்தை விட்டும் வெளியேறியிருப்பார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் கேள்வி எழுப்புவது எப்படி நியாயமாகும்?
சூனியம் செய்யப்பட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முடக்கப்படவே இல்லை என்று இவர் கூறுகிறார். இது மக்களுக்குத் தெரியாது; நபிகள் நாயகம் அவர்களுக்கும் அவர்களின் மனைவிகளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும் என்ற இவரது பதில் சரியில்லை என்பதை சென்ற தொடரில் நிரூபித்து இருக்கிறோம்.
மனைவி சம்மந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் இன்றி பொதுவாகவும் செய்யாததைச் செய்ததாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதையும் நிரூபித்து இருக்கிறோம். சூனியம் வைத்த யூதனுக்கு நிச்சயம் இது தெரிந்திருக்கும். அவன் மூலம் முழு யூதர்களுக்கும் தெரிந்திருக்காமல் இருக்காது என்பதையும் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம். கிணற்றில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று வானவர்கள் சொன்னவுடன் மக்களை அழைத்துச் சென்று அப்புறப்படுத்தினார்கள் என்றால் இது அனைவருக்கும் தெரியாத ஒன்றாக இருக்க முடியாது. பல நாட்கள் சூனியத்தின் காரணமாக நோய்வாய்ப்பட்டார்கள் என்று நஸயியில் ஹதீஸ் உள்ளது (: سحر النبي صلى الله عليه و سلم رجل من اليهود فاشتكى لذلك أيام)
சிந்தித்து விளங்கக் கூடிய எந்த ஒரு விஷயம் பற்றியும் யூகம் என்ற வார்த்த்தையைப் பயன்படுத்துவதை கட்டுரை முழுவதும் இவர் கையாள்கிறார்.
ஒரு வாசகத்துக்குள் அடங்கியுள்ள கருத்துக்களை நாம் வெளிப்படுத்திக் காட்டும் போதெல்லாம் இவர் சொல்லும் ஒரே பதில் யூகம் என்பது தான்.
சீ என்று பெற்றோரைக் கூறக் கூடாது என்று குர்ஆன் கூறுகிறது. பெற்றோரை அடிக்கலாமா என்று ஒருவர் கேட்டால் நாம் கூடாது என்று இந்த வசனத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கலாம். சீ என்று கூறக் கூடாது என்றால் அடிக்கக் கூடாது என்பது அதற்குள் அடக்கம் என்று கூறினால் இது யூகமா? சிந்தனையின் தெளிவா?
இஸ்மாயீல் ஸலபி அவர்கள் எதையும் சரியாகச் சிந்திக்காமல் எழுதுவதற்குக் காரணமே அவருக்கு சிந்திப்பது என்றாலே என்ன வென்று தெரியாதது தான்.
ஒருவன் செத்து விட்டான் என்று கூறப்படுகிறது. அவனுக்குக் காது கேட்காது; கண் தெரியாது என்று நாம் கூறினால் இல்லாததை ஊகமாகக் கூறுகிறார் என்று இஸ்மாயீல் ஸலபி கூறுவார் என்று தெரிகிறது.
ஒரு மாபெரும் தலைவருக்கு மனநிலையும், உடல் நிலையும் சேர்ந்து ஆறு மாத காலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அது நாட்டு மக்களில் ஒருவருக்கும் தெரியாது என்பது வெற்று யூகமா? இது அனைவருக்கும் தெரியாமல் இருக்க முடியாது என்பது வெற்று யூகமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் செய்யாததைச் செய்ததாகக் கூறினார்கள் என்பது ஹதீஸில் உள்ளது தான். மனைவியுடன் சேர்ந்ததைக் கூட அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதும் ஹதீஸில் உள்ளது தான். இது ஆறு மாதம் நீடித்தது என்பதும் ஹதீஸில் உள்ளது தான். இவ்வளவு பெரிய பாதிப்பை உதிர்ந்த முடிக்குள் மந்திரத்தின் மூலம் ஒரு யூதன் செய்திருக்கிறான் என்பதும் ஹதீஸில் உள்ளது தான்.
எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் எங்கோ இருந்து கொண்டு நபிகள் நாயகத்தின் மனநிலையைப் பாதிக்கச் செய்து விட்டார்கள் என்ற கருத்து இதில் உள்ளதா? வெற்று யூகமா? செய்ததைச் செய்யவில்லை என்று ஆறு மாத காலம் ஒருவர் கூறிக் கொண்டிருந்தால் அவர் முடக்கப்பட்டு விட்டார் என்று கருத்து அதில் இருக்கிறதா? அல்லது வெற்று யூகமா?
அடுத்ததாக அவர் எடுத்து வைக்கும் வாதத்தைப் பாருங்கள்!
அத்தோடு நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட செய்தி அவர்களுக்கே இறுதியில் தான் தெரிந்தது. தெரிந்த உடனேயே பரிகாரமும் கிடைத்து விட்டது. இப்படித் தான் ஹதீஸ் கூறுகின்றது.
இதிலும் அவருக்கு சிந்திக்கத் தெரியவில்லை என்பது உறுதியாகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை அவர்கள் ஆரம்பம் முதலே அறிந்திருந்தார்கள். தாம் செய்யாததைச் செய்ததாக அவர்கள் கூறுவதையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதை இஸ்மயீல் ஒப்புக் கொண்டுள்ளதை முதல் தொடரில் எடுத்துக் காட்டியுள்ளோம். ஆனால் இந்த பாதிப்பு எதனால் ஏற்பட்டது என்பது தான் அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது. அது தான் கடைசியில் தெரிந்தது. காரணம் தெரியவில்லை என்பதால் மனநிலை பாதிக்கப்பட்டது யாருக்கும் தெரியாது என்று ஆகிவிடுமா?
இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர் என்ற தலைப்பில் நாம் மேலே குறிப்பிட்டது தொடர்பாக இன்னும் சில விமர்சனங்களைச் செய்கிறார். அதை அடுத்த தொடரில் காண்போம்.
நன்றி - sltjweb.com 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger