குர்ஆனை ஓதுங்கள், தினமும் மாற்றத்தை உணருங்கள்!

உலகில் மக்களை நல்வழிப் படுத்துவதாகக் கூறி சிறப்பான வேதங்கள் என்று பலரும் பல
 வேதங்களை தங்களுக்கு மத்தியில் வைத்துக் கொண்டு வழிபாடுசெய்கிறார்கள். ஆனால் அந்த 
வேதங்களில் தவறுகளும், அசிங்கங்களும், ஆபாசங்களும் நிறைந்து காணப்படுவதை 
பார்ப்பவர்கள் அவதானிக்க முடியும்.

இன்றைய உலகில் பல தரப்பினராலும் பல வகையான விமர்சனங்களுக்கும் உற்படுத்தப்படும் 
ஒரு வேதமாக திருமறைக் குர்ஆன் காணப்படுகின்றது.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத, இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியையும், வேகத்தையும் 
தாங்கிக் கொள்ள முடியாத பலர் இஸ்லாத்திற்கெதிராக தங்கள் விஷமக் 
கருத்துக்களை பரப்புவதில் குறியாக இருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த அனைத்து விமர்சனங்களையும் தாண்டி இஸ்லாம் தான் தூய்மையான 
மார்க்கம் என்று உலகமே ஒத்துக் கொள்ளும் அளவிற்கு தன்னைத் தானே உண்மைப்
 படுத்தும் வேதமாக புனித மிக்க திருமறைக் குர்ஆன் காணப்படுகின்றது.

முஸ்லீம்களும், திருமறைக் குர்ஆனும் ஓர் சமூகவியல் ஒப்பீடு.

இன்றைய நாட்களில் திருமறைக் குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்டிருக்கும் நமது 
சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை சிந்திக்கும் போது
 அவர்களின் நிலை மிகவும் கவலைக்குறியதாகவே காணப்படுகின்றது.

ஏன் என்றால் இறைவனிடமிருந்து வந்த வஹியை தம் கரங்களில் வைத்துக் கொண்டிருக்கும் 
நமது சமுதாய சொந்தங்கள் அதைப் பற்றிய உண்மையான கண்ணியத்தைப் புரிந்து 
அதற்குறிய உரிமையைக் கொடுப்பதாகத் தெரியவில்லை.

# வயதில் மூத்த பலருக்கு இன்றும் குர்ஆன் ஓதத் தெரியாத அவல நிலை காணப்படுகின்றது.

# வருடத்தில் ஒரு தடவை கூட குர்ஆனைத் திறக்காத பலர் நம் சமுதாயத்தில் இன்றும் 
இருக்கத்தான் செய்கிறார்கள்.

# ரமழான் மாதத்தில் மாத்திரம் குர்ஆனை முற்படுத்தி விட்டு மற்ற 11 மாதங்களும் அதை 
மறந்து வாழ்வோர் நம்மில் பலர்.

# மரணித்தவர்களுக்கு மாத்திரம் குர்ஆனை ஓதி (பித்அத்தை செய்து பாவத்தை சுமந்து) விட்டு 
காலம் கழிப்பவர்கள் பலர்.

# குர்ஆன் சாதாரண மக்களுக்கு புரியாது 64 கலைகள் படித்த அறிஞர்களுக்குத் தான் புரியும் 
என்று கூறி இன்றும் மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் இருக்கிறார்கள்.

# குர்ஆனை உழு செய்து விட்டுத்தான் தொட வேண்டும், உழூ இல்லாதவர்கள் தொடக்
 கூடாது என்று கூறி ஓத நினைப்பவர்களுக்கும் தடை போடுபவர்கள் நிறையவே உள்ளனர்.

ஆனால் திருமறைக் குர்ஆனும் நபியர்களின் வாழ்வும் திருமறைக் குர்ஆனின் முக்கியத்துவம்
 தொடர்பாக பல ஆழமான கருத்துக்களை முன்வைத்திருப்பதை ஏனோ இந்த
 இஸ்லாமிய சமுதாயம் புரிந்து கொள்வதில்லை?

திருமறைக் குர்ஆன் தொடர்பாகவும், அதனை ஓதுவது தொடர்பாகவும் இஸ்லாம் 
முன்வைக்கம் கருத்துக்களைப் பாருங்கள்.

ஒட்டகங்களுக்கு ஈடாகும் வசனங்கள்.

திருமறைக் குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தின் பெருமானத்தைப் பற்றியும் பெருமானார் 
முஹம்மது (ஸல்) அவர்கள் மிகவும் அருமையாக தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்.

நாங்கள் பள்ளியின் திண்ணையில் இருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) 
அவர்கள் வந்தார்கள். "உங்களில் ஒருவர் பாவத்திலும் உறவைத் துண்டிப்பதிலும் ஈடுபடா 
வண்ணம், புத்ஹான் அல்லது அகீக் என்ற இடத்திற்குச் சென்று கொழுத்த திமில் உடைய 
இரு பெண் ஒட்டகங்களைக் கொண்டு வர விரும்புவாரா?'' என்று கேட்டார்கள். அதற்கு 
நாங்கள் "அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் விரும்புகின்றோம்'' என்று 
பதிலளித்தோம். "உங்களில் ஒருவர் அதிகாலையில் பள்ளிக்குச் சென்று மகத்துவமும்
 கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை விளங்கவோ
 அல்லது ஓதவோ கூடாதா? அவ்வாறு சென்று இரு வசனங்களை ஓதுவது இரு பெண் 
ஒட்டகங்களை விடவும் சிறந்தது. மூன்று வசனங்கள் மூன்று பெண் ஒட்டகங்களை விடச் 
சிறந்தது. நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்தது. இந்த அளவுக்கு
 வசனங்கள் இதே அளவுக்கு ஆண் ஒட்டகங்களை விடச் சிறந்தது'' என்று சொன்னார்கள். 
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி), நூல் : முஸ்லிம்.

ஒவ்வொரு வசனத்தை ஓதுவதற்கும் ஒவ்வொரு ஒட்டகங்கள் கிடைப்பது சமனானது என 
நபியவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இவ்வளவு நிறைவான பலன்கள் கிடைக்கும் திருமறைக் குர்ஆனை ஓதுவதற்கு நம்மில்
 எத்தனை பேர் ஆர்வம் காட்டுகின்றோம். அதன் வசனங்களை படித்து விளங்க வேண்டும், 
அதன் மூலம் இம்மை மறுமை பயன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்
 நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?

வேதப் புத்தகமாக, வாழ்கை வழிகாட்டியாக இறக்கப்பட்ட திருமறைக் குர்ஆன், பக்திப் 
பரவசத்தோடு பார்க்கப்படுகிறதே தவிர படிக்கப்படவில்லை. தூசு தட்டி கண்ணாடிப் பெட்டிகளில் வைத்துப் பாதுகாப்பவர்கள்,தூய்மையான வேதத்தை படித்துணர ஆசைப்படுவதில்லையே?

எந்த வேதத்திற்கும் இல்லாத “எழுத்துக்குப் பத்து நன்மை” என்ற பெருமை.

திருமறைக் குர்ஆனை ஓதுபவருக்கு வசனத்திற்கு ஒரு ஒட்டகம் கிடைப்பதைப் போல்
 ஒரு எழுத்திற்கு பத்து நன்மைகளையும் இறைவன் அள்ளித் தர தயாராக இருப்பதாக 
நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

"அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு
 நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப், லாம், மீம் - என்பதை ஓர் எழுத்து 
என்று சொல்ல மாட்டேன். மாறாக, அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து 
என்று தான் கூறுவேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : திர்மிதி.

ஒரு எழுத்தை ஓதினால் கூட பத்து நன்மைகளை இறைவன் அதன் மூலம் நமக்கு
வழங்குவதாக நபியவர்கள் கூறுகின்றார்கள். உதாரணமாக ஓரிடத்தில் இருக்கும் போது 
திருமறைக் குர்ஆனின் பத்து வசனங்களை நாம் ஓதினால் அந்த வசனங்களில் இருக்கும் 
ஒவ்வொரு எழுத்திற்கும் பத்து நன்மைகள் என்ற அடிப்படையில் பல்லாயிரக் 
கணக்கான நன்மைகளை அள்ளித் தருவதற்கு இறைவன் தயாராக இருக்கிறான்.

இந்த நன்மைகளையெல்லாம் பெற்றுக் கொள்வதற்கு நாம் எத்தனை தடவைகள் முயற்சி 
செய்திருப்போம்?

வானவர்களுடன் இருக்கும் மனிதராக.............

இறைவனின் தூதர்களான வானவர்கள் (மலக்குகள்) நம்முடன் இருக்கும் பாக்கியம் 
கிடைப்பது என்பது உண்மை முஃமினுக்கு எவ்வளவு சந்தோஷமான செய்தியாக 
இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தாலே உள்ளம் குளிர்ந்து விடும்.

நபியவர்களின் நற்செய்தியைப் பாருங்கள்.

குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக்
 கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு 
தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றன என்று அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல்கள் : முஸ்லிம், திர்மிதி

நீங்கள் எழுமிச்சையானவரா? பேரிச்சையானவரா? அல்லது குமட்டிக் காயானவரா?

நல்லவராக இருந்து கொண்டு குர்ஆனை ஓதுபவருக்கும், நல்லவராக இருந்து 
கொண்டு குர்ஆனை ஓதாமல் இருப்பவருக்கும், தீயவராக இருந்து கொண்டு குர்ஆனை 
ஓதுபவருக்கும், தீயவராகவும் இருந்து கொண்டு குர்ஆனையும் ஓதாமலும் இருப்பவருக்கும் 
உவமானம் என்னவென்பதை பிரித்துப் பிரித்து உதாரணம் கூறி நபியவர்கள் தெளிவுபடுத்தும் 
காட்சியைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது 
எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும்நன்று!
 (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர், பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். 
அதன் சுவை நன்று அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை 
ஓதிவருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் 
வாசனைநன்று, சுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் 
இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் 
கசப்பு, அதற்கு வாசனையும் கிடையாது. 
அறிவிப்பவர் : அபூமூஸல் அஷ்அரீ (ரலி), நூல் : புகாரி (5020)

பொறாமைப்பட்டு நன்மை செய்யுங்கள்.
இஸ்லாம் பொறாமை என்ற கெட்ட குணத்தை தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று 
கண்டிப்பாக பல இடங்களில் தெளிவுபடுத்துகின்றது. 
ஆனால் இரண்டு விஷயங்களில் தாராளமாக பொறாமைப் படலாம்,பொறாமைப்பட 
வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அதில் ஒன்றாக திருமறைக் குர்ஆன் 
ஓதப்பட வேண்டும் என்பதையும் நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர 
வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.

1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு 
நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.

2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவு,
 பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
 நூல் : புகாரி (5025)

திருமறைக் குர்ஆனுடன் ஒட்டி வாழ்பவர்களைப் பார்த்து நாமும் பொறாமைப் பட்டு 
அவர்களைப் போல் திருமறைக் குர்ஆனை நமது வாழ்வில் இணைத்து குர்ஆனிய வாழ்க்கை 
வாழ முற்பட வேண்டும்.

அமைதி இறங்கும். அருள் வானவர்களும் சூழ்ந்து கொள்வார்கள்.

அல்லாஹ்வின் ஆலையமான பள்ளியில் திருமறைக் குர்ஆனுடன் தொடர்பு வைப்பவர்கள் 
தொடர்பாக விரிவாகப் பேசும் ஒரு செய்தியைப் பாருங்கள்.

"அல்லாஹ்வுடைய வீடுகளில் ஒரு வீட்டில் மக்கள் கூடி அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி 
தங்களுக்கு மத்தியில் அதை ஓதிக் காட்டி, பாடம் படிக்கும் போது அமைதி அவர்கள் 
மீது இறங்காமல் இருக்காது. அவர்களை அருள் அரவணைத்துக் கொள்கின்றது. 
மலக்குகள் அவர்களைச் சூழ்ந்து விடுகின்றனர். குர்ஆன் ஓதும் அவர்களை அல்லாஹ் 
தன்னிடம் உள்ள மலக்குகளிடம் நினைவு கூர்கின்றான்'' என்று அல்லாஹ்வின்
 தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.

திருமறைக் குர்ஆனை கற்றுக் கொள்வது, கற்றுக் கொடுப்பது, அதனுடன் தொடர்பை 
ஏற்படுத்திக் கொள்வது போன்ற விஷயங்கள் அனைத்தும் இம்மை, மற்றும் மறுமையில் 
அதிக நன்மைகளைப் பெற்றுத் தரும் செயல்பாடுகளாகும். இதனடிப்படையில் இறைவனின் 
இறுதி வேதமான புனித திருக் குர்ஆனை நமது வாழ்வில் எடுத்து நடந்து குர்ஆனிய 
சமுதாயமாக மாற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக! 

Rasmin. MISC
நன்றி -  தவ்ஹீத் முழக்கம் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger