Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label உணர்வு. Show all posts
Showing posts with label உணர்வு. Show all posts

குஜராத்தில் நடந்ததை மறந்திட வேண்டுமாமே?

முஸ்லிம்கள் குஜராத் கலவரத்தை மறந்துவிட வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளாரே?

 பாபர் மசூதி இடிப்பின் போது செய்த துரோகத்தை மறந்துவிட வேண்டும் என்று காங்கிசார்  சொன்னார்கள். அதையே இப்போது பா.ஜ.க வும் சொல்கிறது. 

கலவரங்களின் போது காங்கிரஸ் செய்த கணக்கிலடங்காத துரோகங்களை மறந்து விட்டுத் தான் முஸ்லிம்கள் காங்கிரசுக்கு வாக்களித்து வருகின்றனர். 

அதுபோல பா.ஜ.க  செய்த அக்கிரமங்களை எப்போது மறக்கலாம்? 

நாங்கள் இந்துத்துவா கொள்கையைக் கைவிட்டு விட்டோம். 

பாபர் மசூதி பிரச்சனையில் நாங்கள்  இனித் தலையிட மாட்டோம். 

முஸ்லிம்கள் கல்வி வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டால் உரிய வாய்ப்புகளைப் பெற நாங்கள் உறுதி கூறுகிறோம். 

முஸ்லிம்கள் தங்கள் மத நம்பிக்கைப்படி நடந்து கொள்வதற்கு குறுக்கே நிற்க மாட்டோம். முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை  வைக்க மாட்டோம். 

என்று பகிரங்கமாக அறிவித்தால் அப்போது இது குறித்து பரிசிலனை செய்யலாம்.    

முஸ்லிம்களுக்கு நாம் ஒன்றும் செய்யாவிட்டாலும் பி.ஜே.பி. வரக்கூடாது என்பதற்காக நம்மை அதரிப்பதைத் தவிர முஸ்லிம்களுக்கு வழி இல்லை என்ற ஆயுதத்தை  காங்கிரசிடமிருந்து பிடுங்கியாக வேண்டும். 

ஆனால் பா.ஜ.க மறக்கச் சொல்வது இத்தகையதாக இல்லை. 

உன்னை அடித்ததை மறந்து விடு! இனியும் உன்னை அடிக்கத்தான் செய்வேன். 

பள்ளிவாசல் இடத்தை மறந்து விடு! இனியும் பள்ளிகளை இடிப்பேன் 

என்பது தான் பா.ஜ.கவின் கொள்கையாக இருப்பதால் நடந்ததை மறக்கச் சொல்வதை அயோக்கியத் தனமாகத்தான் கருத முடியும்.

onlinepj.com
0 comments

விபச்சாரத்தைத் திருமணமாக்கிய உயர்நீதி மன்றம்

திருமணம் செய்யாமல் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டால், அதுவும் திருமணம்தான் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது சரியா? திருமணம் செய்யாமல், இருவர் சேர்ந்து வாழ்வதும் திருமணம் மூலம் சேர்ந்து வாழ்வதும் சமமானதுதான் என்று இதை ஒட்டி எழுப்பப்படும் வாதங்கள் சரியானவையா? 

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் முஸ்லிம்களாக உள்ளதால், முஸ்லிம் சட்டத்தில் நீதி மன்றம் தலையிடுவதற்கு இதை முன்னோடியாக எடுத்துக் கொள்ளலாமா?

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டின் சட்டப்படி சரியானதுதானா என்றால் நமது சட்டத்தில் உள்ள குளறுபடிகள் காரணமாக இதைச் சரி என்றும் வாதிட முடியும். தவறு என்றும் வாதிட முடியும். 

நமது நாட்டின்  சட்டப்படி ஒரு ஆணும் பெண்ணும் மனம் விரும்பி உடலுறவு கொள்வது விபச்சாரமாகக் கருதப்படுவதில்லை. அவர்கள் மீது விபச்சார வழக்குப் போட முடியாது. விபச்சாரம் இல்லை என்று சட்டம் சொன்னால் அது திருமணம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று புரிந்து கொள்ள முடியும். 

அது போல் ஒருவனுக்கு மனைவி இருக்கும் போது இன்னொருத்தியை அல்லது இன்னும் பலரை வைப்பாட்டியாக வைத்துக் கொண்டு குடும்பம் நடத்தினால் அந்த ஆண் மீதும், பெண் மீதும் விபச்சார வழக்குகள் போட முடியாது. அதாவது அது சட்டப்படியான செயல்தான் என்று நமது சட்டம் சொல்கிறது. 

கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதும், விபச்சாரத்தைத் தொழிலாக நடத்துவதும் தான் நமது நாட்டு சட்டப்படி குற்றமாகத் தெரிகிறது. இதை மட்டும் கவனத்தில் கொள்ளும் நீதிபதிகள் சட்டப்படி குற்றமில்லாத வகையில் உடலுறவு நடந்துள்ளதால் அது கணவன் மனைவி உறவாகத்தான் ஆகும் என்று தீர்ப்பளித்து விடுகிறார்கள். 

விரும்பிச் செய்தால் அது குற்றமில்லை என்று சட்டம் இயற்றப்பட்டுள்ள நாட்டில் இப்படி நீதிபதி தீர்ப்பளித்ததை முற்றாக எதிர்க்க முடியாது. அவர் மேற்கண்ட வாதங்களை வைத்து தனது தீர்ப்பை நியாயப்படுத்துவார். ஆனால் இதற்கு முரணாகத் தீர்பளிக்கும் வகையிலும் நமது நாட்டுச் சட்டம் அமைந்துள்ளதைக் காண முடிகிறது. 

நமது நாட்டில் முஸ்லிமல்லாதவர்கள் ஒன்றுக்கு மேல் திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். 

ஒரு மனிதனுக்கு மனைவி இருக்கும் போது இன்னொருத்தியை வைப்பாட்டியாக வைத்துக் கொள்கிறான்; அல்லது பலரை வைப்பாட்டியாக வைத்துக் கொள்கிறான். 

வைப்பாட்டிகள் நீதிமன்றத்தை அணுகி எங்களுடன் மனவிருப்பத்துடன் பத்து வருடம் குடும்பம் நடத்தினார். எங்கள்  பிள்ளைகளுக்கு தந்தை எனக் கூறி பள்ளிச் சான்றிதழிலும் குறிப்பிட்டுள்ளார். எனவே எங்களையும் அவரது மனைவியராக ஆக்கி உத்தரவு போட வேண்டும் என்று வழக்குப் போட்டால் என்ன தீர்ப்பு அளிப்பார்கள்? என்ன தீர்ப்பு அளித்துள்ளார்கள்? 

இரண்டாம் திருமணம் செய்து நீதிமன்றங்களால் தண்டிக்கப்படாதவர்கள் : 

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த, இந்து மதத்தைச் சேர்ந்த பாவ்ராவ் சங்கர் லோகாண்டே முதல் மனைவி இருக்க இரண்டாம் திருமணம் செய்தார். முதல் மனைவி இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். கீழ்நிலை நீதிமன்றங்களும், உயர் நீதிமன்றமும் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தன. 

ஆனால் பாவ்ராவ் சங்கர் லோகாண்டே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தபோது இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் இரண்டாவதாக நடந்தது திருமணமே இல்லை. எனவே பாவ்ராவ் சங்கர் இரண்டாம் திருமணம் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  

(பாவ்ராவ் சங்கர் லோகாண்டே எதிர் மராட்டிய அரசு 1965 - 1566) 

சுரேஷ் சந்திர கோஷ் என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். அவரது மனைவி பிரியா பாலா கோஷ் அவருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் இரண்டாம் திருமணம் செய்த சுரேஷ் சந்திர கோஷைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் நடந்தது நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி சுரேஷைத் தண்டிக்க மறுத்து விட்டது.

 (பிரியா பாலா கோஷ் எதிர் சுரேஷ் சந்திர கோஷ் AIR 1971 sc 1153) 

ஆந்திராவைச் சேர்ந்த எல்.வெங்கடரெட்டி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்தார். முதல் மனைவி லிங்காரி ஒப்புல்லம்மா கணவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் வெங்கடரெட்டியைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின்போது சில சடங்குகள் செய்யப்படாததே காரணம். 

(லிங்காரி ஒப்புல்லம்மா எதிர் எல்.வெங்கடரெட்டி மற்றும் சிலர் AIR 1979 sc 848) 

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பங்காரி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் அது திருமணமே அல்ல. இரண்டாம் மனைவி அவரது வைப்பாட்டி தான். வைப்பாட்டி வைத்துக் கொள்வதைத் தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்று காஷ்மீர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

 (பங்காரி எதிர் ஜம்மு கஷ்மீர் மாநில அரசு AIR 1965 jk105) 

இப்படி ஏராளமான வழக்குகளில் நாட்டின் உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ளன. 

மேற்கண்ட நீதிபதியிடம் இது போன்ற வழக்கு வந்தால் உடலுறவு நடந்துவிட்டதால் மனைவியர் தான் என்று சொல்வாரா? சொல்ல மாட்டார் என்றுதான் நாம் நினைக்கிறோம். 

இவர்களும் மனைவியர் தான் என்று சொல்வது மட்டும் போதாது.  ஒரு மனைவிக்கு மேல் திருமணம் செய்யக் கூடாது என்ற சட்டத்தை மீறியதற்காக அவருக்கு உரிய சிறைத் தண்டனை அளித்தும் உத்தரவிட வேண்டும். 

நாடு சுதந்திரமடைந்தது முதல் ஒரே ஒரு வழக்கில் கூட இப்படி தீர்ப்பளிக்கப்பட்டதாக நாம் அறியவில்லை. பல வழக்கறிஞர்களிடம் கேட்ட போது அவர்களுக்கும் இப்படி தீர்ப்பளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. 

அப்படியானால் உடலுறவு நடந்தாலே போதும்! பள்ளிச்சான்றிதழில் பெயர் இருந்தாலே போதும் என்ற வாதம் இப்போது என்னாவது? 

மேலை நாடுகளில் இருந்த குரூப் செக்ஸ் எனும் கலாச்சாரம் இங்கேயும் பரவி வருகிறது. ஒரு பெண்ணுடன் இரண்டு  மூன்று ஆண்கள் பல வருடங்கள் இப்படி உடலுறவு கொண்டால் அந்தப் பெண்ணிற்கு அந்த இருவரும் கணவர்களா? 

அந்தப் பெண்ணுக்கு பிறந்த ஒரு குழந்தைக்கு ஒருவன் தந்தை எனவும், இன்னொரு குழந்தைக்கு இன்னொருவன் தந்தை எனவும் பள்ளிச் சான்றிதழில் குறிப்பிட்டு இருந்தால் நீதிபதி எப்படித் தீர்ப்பளிப்பார்? அந்தப் பெண்ணுக்கு இருவரையும் கணவர்கள் என்று தீர்ப்பளிப்பாரா? 

குழப்பமான சட்டங்களை வைத்துக் கொண்டு தாமும் குழம்பி மக்களையும் குழப்புகிறார்கள் என்பது இது போன்ற முரண்பட்ட தீர்ப்புகள் மூலம் தெரிய வருகிறது. 

இஸ்லாம் சொல்வதுபோல திருமணம் மூலம்  தவிர உடலுறவு நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் அது  தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் இருந்தால் பெண்ணும் ஆணைத் தன் வலையில் வீழ்த்த நினைக்க மாட்டாள். ஆணும் பெண்ணை ஏமாற்றி அனுபவிக்க நினைக்க மாட்டான். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினால் சட்டப்படி திருமணம் செய்து கொள்வார்கள். இதுபற்றிய வழக்குகள் நீதிமன்றத்துக்கே வராமல் போய்விடும்.

 மேற்படி தீர்ப்பைப்பற்றி சட்டத்தின் பார்வை இதுதான். 

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் அறிவு ஜீவிகள் என்ற போர்வையில் நாட்டைக் கெடுக்கும் விஷக்கிருமிகள் புரட்சிகரமான தீர்ப்பு என்று கிருக்கித் தள்ளுகின்றனர். 

திருமணம் செய்தாலும் அவர்களிடையே பிரச்சனை வருகிறது; திருமணம் செய்யாவிட்டாலும் பிரச்சனை வருகிறது. எனவே இரண்டும் ஒன்றுதான் என்று உளறிக் கொட்டுகின்றனர். 

விஷம் குடித்தாலும் சாகிறார்கள் விஷம் குடிக்காதவர்களும் சாகிறார்கள். இரண்டும் ஒன்று தான் என்று கூறுவதற்குச் சமமாக இந்த விஷக்கிருமிகளின் வாதங்கள் அமைந்துள்ளன. 

ஆரோக்கியமாக இருந்தவனும் சாவான், நோயாளியும் சாவான் என்பதால் இரண்டும் ஒன்றாகி விடாது. நோயாளிகளில் அதிக சதவிகிதம் சாவார்கள். ஆரோக்கியமானவர்களில் குறைந்த சதவிகிதம் சாவார்கள். 

நாட்டில் சுமார் 95 சதவிகிதம் மக்கள் திருமண வாழ்க்கையில் உள்ளனர். திருமணம் ஆகாமலே குடும்பம் நடத்துபவர்கள் 5 சதவிகிதம் கூட இருக்க மாட்டர்கள். ஆனால் திருமண வாழ்க்கையில் ஈடுபட்ட 95 சதவிகித மக்களிடம் ஏற்படும் அதே அளவு பிரச்சனை ஐந்து சதவிகிதத்திலும் உள்ளது என்றால் இது எவ்வளவு பெரிய வேறுபாடு? 

அறிவைப் பயன்படுத்தி சிந்தித்தால் எது பாதுகாப்பானது? எது நன்மை பயக்கக் கூடியது என்று இவர்கள் அறிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அறிவாளிகளுக்கு முற்போக்கு பட்டம் கிடைக்காதே? அதனால்தான் சிந்திக்க மறுத்து முற்போக்காளர்களாக ஆகிக் கொண்டு இருக்கிறார்கள். 

திருமணம் நடக்கும்போது அதில் ஒரு உறுதிமொழி உள்ளது. அதில் ஒரு ஒப்பந்தம் உள்ளது. ஒருவர் மற்றவரிடம் தலையிடும் உரிமை உள்ளது. இருவருக்கும் இடையே சமுதாயம் முன்னின்று நடத்தி வைத்ததால் அவர்களின் தலையீடு இருக்கும். 

பெண்ணின் இளமையை அனுபவித்துவிட்டு ஓடிப்போனால் கட்டிவைத்து உதைப்பார்கள் என்ற அச்சம் காரணமாகவும், வேறு  இடத்தில் யாரும் பெண் தர முடியாத நிலை ஏற்படும் என்பதற்காகவும் மனைவி அழகிழந்த போதும் அவருடனே ஆண்கள் வாழ்கிறார்கள். 

ஒரு ஆணும் பெண்ணும் தாமாகப் பேசி சேர்ந்து வாழும்போது பெண்ணுக்கு ஒரு குழந்தையுடன் அழகு போய்விட்டால் அடுத்தவளைத் தேடிச் சென்று இது போல வாழ்வான். அவளுக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர் வர மாட்டார்கள்.  பெண்ணுக்கு அப்படி நினைத்த மாத்திரத்தில் துணை அமையாது. 

திருமணம் மூலம் பெண்களின் வாழ்வுக்கும் எதிர்காலத்துக்கும் உத்தரவாதம் கிடைக்கின்றது. 

திருமணம் இல்லாமல் வாழும் நூறு பேர் திருமணம் செய்த நூறு பேர் என்று எடுத்துக்கொண்டு பார்த்தால் முதல் நூறில் சரிபாதி பஞ்சாயத்தாக போய் விடும். இரண்டாம் நூறில் ஒரு பஞ்சாயத்து நடந்தால் அதுவே அதிகம். 

எனவே ஒழுக்க மாண்புகளின் அடிப்படையிலும், பெண்களின் பாதுகாப்பு என்ற அடிப்படையிலும் நீதிபதியின் தீர்ப்பு கண்டனத்துக்கு உரியது. அறிவு ஜீவிகளின் வாதம் கிறுக்குத்தனமானது. 

அடுத்து இவ்வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதால் நமக்குப் பாதிப்பு ஏற்படுமா என்பதை எடுத்துக் கொள்வோம். 

உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முஸ்லிம்களையும், முஸ்லிம் தனியார் சட்டத்தையும் எள் முனையளவும் பாதிக்காது. முஸ்லிம் தனியார் சட்டத்துக்கு அரசியல் சாசனத்தில் உத்தரவாதம் இருக்கும்வரை நாட்டின் எந்த நீதிமன்றமும் அதில் தலையிட முடியாது. 

அப்படித் தலையிட்டால் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஒருங்கிணைந்து அதைத் தக்க முறையில் சந்திப்பார்கள். 

வழக்கில் சம்மந்தப்பட்ட இருவரும் முஸ்லிம் சட்டப்படி திருமணம் செய்யாமலே சின்ன வீடு போல் வாழ்ந்ததால் அவர்கள் முல்லிம் தனியார் சட்டத்தின் கீழ் வர மாட்டார்கள். 

இஸ்லாம் கூறும் முறைப்படி திருமணம் நடந்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு முஸ்லிம் தனியார் சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்படும். எனவே இது முஸ்லிம்களின் பிரச்சனை அல்ல.  இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்த எந்த முஸ்லிமையும் இந்தத் தீர்ப்பு பாதிக்காது.

 முஸ்லிமாகப் பிறந்தவன்  தாலி கட்டி திருமணம் செய்தால் அவன் பெயர் அரபு மொழியில் உள்ளதால் அவன் முஸ்லிம் தனியார் சட்டத்துக்குள் வரமாட்டான். அதுபோல இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்யாமல் பதிவுத் திருமணம் செய்து கொண்டால் அவர்களாகவே முஸ்லிம் தனியார் சட்டத்தில் இருந்து விடுவித்துக் கொண்டதால் அவர்களும் முஸ்லிம் தனியார் சட்டத்துக்குள் வரமாட்டார்கள். 


எனவே இந்தத் தீர்ப்பு முஸ்லிமாக வாழாத இஸ்லாமிய  தண்டனைச் சட்டத்தை மதிக்காத இருவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பதால் இதுபற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

நன்றி - ஆன்லைன்பிஜே

0 comments

பத்ரு சையதுக்கு பகிரங்க அறை கூவல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பகிரங்க அறை கூவலுக்கு பதுரு சையது பதில் தருவாரா?

தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராகவும், சென்னை திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் பத்ரு சைய்யத். மேல்தட்டுக் கலாச்சாரத்தைப் பின்பற்றும் வழக்கறிஞரான இவர் இஸ்லாமிய ஆடையான புர்காவை அணியாதவர் என்பதோடு, இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு எதிராக வாளை வீசும் குணம் கொண்டபவருமாவார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் (?) வழக்கு தாக்கல் செய்துள்ளார்.  அதில் இஸ்லாமியப் பெண்களுக்கு விவாகரத்து விவகாரங்களில் மற்ற மதத்தினருக்கு உள்ள சட்ட உரிமைகள் இல்லை. முஸ்லிம் பெண்களுக்கு மதம் சார்ந்த கட்டுப்பாட்டுகள்; இருப்பதால் அவர்களின் உரிமைக்காக முஸ்லிம் பெண்களால் போராட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, ஜைனம், புத்தம் என்று ஏராளமான மதங்கள் உள்ளன.  இந்த மதங்களில் திருமணச் சட்டங்கள் பற்றி நிறைய சொல்லப்பட்டு உள்ளன.  ஆனால் விவாகரத்து எப்படிச் செய்ய வேண்டும்?  அதற்கான சட்டங்கள், விதிமுறைகள் என்ன? என்று தெரிவிக்கப்படவே இல்லை.  

இஸ்லாம் ஒரு மதமல்ல.  மாறாக அது ஒரு வாழ்க்கை நெறி.  அதனால் விவாகரத்து பற்றி அது சொல்லாமல் இருக்காது.  இருக்க முடியாது.  உலகிலேயே விவாகரத்து சம்பந்தமாக சரியான சட்ட நெறிகளை வகுத்த மார்க்கம் என்றால் அது இஸ்லாம் மட்டுமே! பத்ரு சையிது இஸ்லாம் குறித்து சரிவர தெரிந்து வைத்திருக்கவில்லை.  அதனால்தான் உயர்நீதிமன்றத்தில் கன்னா பின்னா என்று எழுதி,  பிரமாண பத்திரம் தாக்கல் செய்கிறார்.  

விவாகரத்து செய்வதற்கு ஆணுக்கு மட்டும் உரிமை வழங்கி, பெண்ணுக்கு அந்த உரிமையை இஸ்லாம் வழங்காமல் இருந்தால் இஸ்லாம் பெண்களுக்கு விவாகரத்து விவகாரங்களில் இஸ்லாம் உரிமை வழங்கவில்லை என்று சொல்லலாம். இஸ்லாத்தில் அப்படிப்பட்ட பாகுபாடு எதுவும் இல்லை.  ஒரு கணவன் தனது மனைவியை விவாகரத்து செய்வது போல ஒரு மனைவி தனது கணவனை விவாகரத்து செய்ய முடியும்.  இவ்வாறு மனைவி, கணவனை விவாகரத்து செய்யும் முறைக்கு குலா என்பது பெயர். இது குறித்து குர்ஆன் சொல்வதைப் பாருங்கள்.  

அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் (மஹ்ராக) வாங்கியதில் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை.  இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும்.  எனவே அவற்றை மீறாதீர்கள்.  அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்களாவர்.  (திருக்குர்ஆன் 2 :229)  

இஸ்லாமியப் பெண்களுக்கு விவாகரத்து உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை மேற்காணும் திருக்குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது.  அப்படி இருக்கும் போது விவாகரத்து விஷயங்களில் மற்ற மதத்தினருக்கு உள்ளது போன்ற சட்ட உரிமைகள் முஸ்லிம் பெண்களுக்கு இல்லை என்று பத்ரு சையது சொன்னால் அவர் கருத்துக்  குருடராக இருக்க வேண்டும்.  அல்லது இஸ்லாம் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவராக இருக்க வேண்டும்.  இதில் அவர் எந்த ரகம்? என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.  

ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஸாபித்பின் கைஸ் (ரலி) என்பவரின் மனைவி வருகிறார் அவர் அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறைகூற மாட்டேன்.  ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்.(அதாவது கணவர் நல்லவராக இருந்த போதும் அவருடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்கிறார்.)  உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் (அவர் உனக்கு திருமணக் கொடையாகத் தந்த) அவரது தோட்டத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறாயா? என்று கேட்டார்கள்.  அதற்கு அப்பெண்மணி சரி என்றார்.  உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்துவிடு என்றார்கள் 

அறிவிப்பவர் :   இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி 5273  

முஸ்லிம் பெண்களுக்கு விவாகரத்து உரிமை உண்டு என்பதை மேற்கண்ட நபி வழி நிரூபிக்கிறது. இஸ்லாத்தின் அடிப்படை திருக்குர்ஆனும், நபி வழியும் மட்டுமே! இந்த இரண்டும் பெண்களுக்கு விவாகரத்து உரிமையை வழங்கி இருக்கும் போது முஸ்லிம் பெண்களுக்கு விவாகரத்து விஷயங்களில் உரிமை இல்லை என பத்ரு சையது சொல்வது அவரது அறிவின்மையை வெளிப்படுத்துகிறது அல்லவா?  

முஸ்லிம் அல்லாத பெண்ணை அவளது கணவர் விவாகரத்து செய்ய வேண்டுமானால் நீதிமன்றத்திற்கு சென்று அவளை நடத்தை கெட்டவள் என்று சொல்ல வேண்டும் 

அல்லது சட்டம் ஏற்கும் ஏதாவது காரணத்தை அவள் மீது பழியாக தூக்கிப் போட வேண்டும்.  

அப்போதுதான் விவாகரத்து கிடைக்கும்.  

முஸ்லிம் பெண் மீது இப்படி அவதூறு சுமத்தி, விவாகரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை. காரணத்தை வெளியில் காட்டாமலேயே ஒரு முஸ்லிம் பெண்ணால் விவாகரத்து பெற்று விட முடியும்.  முஸ்லிம் பெண்களுக்கு உள்ள இந்த உரிமைகளைப் பிற மத பெண்களுக்கும் தர வேண்டும் என்று பத்ரு சையது சொன்னால் அது நியாயம்.  அதை விட்டு விட்டு இஸ்லாமியப் பெண்களுக்கு விவாகரத்து பிரச்சனையில் சட்டஉரிமை இல்லை என்று சொன்னால் விவாகரத்து செய்யும் ஒவ்வொரு முஸ்லிம் கணவனும், தனது மனைவியை நடத்தை கெட்டவள் என சொல்ல வேண்டும் என்று பத்ரு சையது சொல்ல வருகிறாரா? இது தான் அவருடைய நோக்கம் என்றால் முஸ்லிம் சமுதாயம் இதை எதிர் கொள்ள வேண்டிய விதத்தில் எதிர்கொள்ளும்.  

மனைவிக்குத் தெரியாமலேயே மூன்று முறை தலாக் கூறிவிட்டு, ஹாஜிக்களிடம் விவாகரத்துக்கான ஒப்புதல் மற்றும் சான்றிதழைப் பெற்றுக் கொள்கின்றனர்.  இது இஸ்லாமியப் பெண்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.  எனவே தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவருக்கு ஒப்புதலும், சான்றிதழும் அளிப்பதற்கு தமிழக தலைமை ஹாஜி மற்றும் ஹாஜிக்களுக்கு தடை விதிக்க வேண்டும்.  விவாகரத்துக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம்  ஹாஜிக்களுக்கு இல்லை என்று அறிவிக்க வேண்டும் என்று பத்ரு சையது தனது மனுவில் தெரிவித்துள்ளார். 

இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரே சமயத்தில் மூன்று முறை தலாக் சொல்லும் முறையே கிடையாது.  இதை ஹாஜிக்களும் புரிந்து கொள்ளவில்லை. பத்ரு சையதுக்கும் தெரியவில்லை.  ஒருவர் டவுன் ஹாஜியிடம் செல்கிறார்.  நான் எனது மனைவியை ஒரே சமயத்தில் முத்தலாக் சொல்லிவிட்டேன்.  அதற்கான ஆதாரம் இதோ! என்று காட்டுகிறார்.  இவருடைய ஆதாரத்தின் அடிப்படையில் இது குறித்து விளக்கமளிக்கவும், நேரில் ஆஜராகவும் டவுன் ஹாஜி மனைவிக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்.  இந்த நோட்டீஸை மதித்து நேரில் ஆஜரானால் உனது கணவர் உன்னை முத்தலாக் கூறிவிட்டார்.  இனிமேல் நீங்கள் கணவன், மனைவி கிடையாது.  இனி இருவரும் கணவன், மனைவி ஆக வேண்டும் என்றால் மனைவி இன்னொருவரை திருமணம்செய்து அந்த கணவர் விவாகரத்து செய்தால் மட்டுமே நீங்கள் மறுபடியும் திருமணம்  செய்ய முடியும் என்று சொல்லி, விவாகரத்துக்கான ஒப்புதல் சான்றை வழங்கி விடுகிறார்.  

மனைவி வராவிட்டாலோ, விளக்கம் சொல்லாவிட்டாலோ குறிப்பிட்ட அவகாசத்திற்குப் பிறகு ஹாஜி விவாகரத்து வழங்கி விடுகிறார்.  ஒரே சமயத்தில் முத்தலாக் சொல்வது செல்லும் என சொல்லி, கணவன், மனைவியை நிரந்தரமாக பிரிப்பது பாவமான செயலாகும். இதை ஹாஜிக்கள் செய்யக் கூடாது என்று பத்ரு சையது சொன்னால் அது சரி. 

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரே சமயத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது.  

அறிவிப்பாளர்.  இப்னு அப்பாஸ், நூல், முஸ்லிம் 2691. 

இந்த நபி வழியின் அடிப்படையில் பத்ரு சையது வாதம் வைக்கவில்லை.  மாறாக தலாக் சான்றிதழையே ஹாஜிக்கள் தரக் கூடாது என்கிறார்.  

இந்த வாதம் இஸ்லாமியக் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிரானது.  ஸாபித்பின் கைஸ் (ரலி) அவர்களின் மனைவி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முறையிட்டு விவாகரத்து பெற்றதின் மூலம் டவுன் ஹாஜி மட்டுமல்ல. சமுதாயத் தலைவர் எவரிடமும் முறையிட்டு ஒரு இஸ்லாமியப் பெண் விவாகரத்து பெற முடியும் என்பதே சட்டத்தின் நிலையாகும்.  

இந்த சட்டத் தெளிவு இல்லாமல் டவுன் ஹாஜிக்கு உள்ள உரிமையைப் பறிக்க வேண்டும் என பத்ரு சையது சொல்வது அபத்தமானது. விவாகரத்து பெறுவது சிரமமானால் அங்கு கொலைகளும், கள்ள உறவுகளும் தான் அதிகாரிக்கும். இதைத் தான் பத்ரு சையது விரும்புகிறாரா? எனத் தெரியவில்லை. 

மனைவிக்குத் தெரியாமலேயே கணவர்கள் தலாக் கூறி வருகிறார்கள் என்ற அபத்த வாதத்தையும் பத்ரு சையது வைக்கிறார். அது எப்படி முடியும் என்று தெரியவில்லை. இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு கணவன் எடுத்த எடுப்பில் மனைவியை தலாக் சொல்லி விட முடியாது. 

திருகுர்ஆனின் 4:34 வது வசனப்படி 

ஒரு கணவன்,  தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு முன் அறிவுரை கூறி மனைவியை திருத்த முயல வேண்டும். 

அது பயன்தராத போது மனைவியை படுக்கையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். 

அதுவும் பயன்தராத போது லேசாக அடித்து திருத்த முயல வேண்டும். 

இதன் பிறகும் கணவனுக்கும் , மனைவிக்கும் இடையில் இணக்கம் ஏற்படவில்லை என்றால் இருவரது குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள் மூலம் பேசித் தீர்க்குமாறு திருக்குர்ஆனின் 4:35வது வசனம் கட்டளையிடுகிறது. 

இந்த நான்கு வழிமுறைகளும் பயனில்லாத போதுதான் கணவன், மனைவியை தலாக் சொல்ல வேண்டும். தலாக்கிற்கு முன்பு கணவன் மனைவிக்கு அறிவுரை சொல்லும் போதே கணவனின் தலாக் நோக்கம் மனைவிக்கு தெரிந்து விடும். மனைவியை படுக்கையில் இருந்து விலக்கி வைக்கும் போது சந்தேகத்திற்கு இடமின்றி தலாக் நோக்கம் புரிந்துவிடும். அடிக்கும் போது தலாக் நோக்கம் அப்பட்டமாக தெரிந்து விடும். இரு குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள் சமரசம் பேசும் போது இரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் தலாக் நோக்கம் தெரிந்து விடும். பின்னர் கணவன் முதல் தலாக் சொல்லும் போது மனைவிக்கு தெரியாமல் கணவன் தலாக் சொல்லி விட்டான் என்று எப்படி சொல்ல முடியும்? 

கணவன் தனது மனைவியை தலாக் சொல்வதற்கு முன்பு திருக்குர்ஆனின் கூறும் 4 வழிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? என்று டவுன் ஹாஜி விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். இதை அவர் சரிவர செய்வது கிடையாது. ஒரே சமயத்தில் சொல்லப்படும் முத்தலாக் செல்லாது. இந்த இஸ்லாமிய சட்டத்தை டவுன் ஹாஜி விளங்கிக் கொள்ளாமல் பல சமயங்களில் சொல்லப்படும் மூன்று தலாக்குக்கான சட்டத்தை ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லப்படும் தலாக்குக்கு  பயன்படுத்தி குடும்பத்தில் பெரும் குழப்பம் செய்துவிடுகிறார்.  

டவுன் ஹாஜியின் இந்தத் தவறான செயலைத் தடுத்து நிறுத்தும் வகையில் பத்ரு சையதின் மனு இல்லை.  மாறாக விவாகரத்து விஷயங்களில் முஸ்லிம் பெண்களுக்கு சட்ட உரிமைகள் இல்லை என்பது போலவும், இஸ்லாமியத் தலைவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் தந்துள்ள சட்ட உரிமைகளைப் பறிக்கும் நோக்கத்திலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.  

விவாகரத்து விஷயத்தில் இவர் இஸ்லாமியக் கொள்கைகளைத் தெரிந்து கொள்ள நினைத்தால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை பத்ரு சையித் அணுகலாம்.  அல்லது தனது கொள்கையில் பத்ரு சையத் உறுதியாக இருந்தால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தோடு அவர் நேரடி விவாதம் செய்து தனது நிலைப்பாடு சரி என நிரூபிக்க முன் வர வேண்டும்.  

ஆரோக்கியமான இந்த இரு வழிமுறைகளை பத்ரு சையது புறக்கணித்து இஸ்லாத்திற்கு எதிராக வாளை உருவினால் இவரை முஸ்லிம் சமுதாயம் எதிர் கொள்ள வேண்டிய முறையில் எதிர் கொள்ளத் தயங்காது என சொல்லிக் கொள்கிறோம். 


குறிப்பு : பதர் சையதுக்கு விவாத அறைகூவல் கடிதம் அனுப்பப்பபட்டுள்ளது. (காண்க : ஸ்கேன் செய்யப்பட்ட கடிதம்) 

நன்றி- ஆன்லைன் பி ஜே

0 comments

வேண்டாம் அதிக மதிப்பெண் போதை

கேள்வி  – இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களில் போதுமான முஸ்லிம்கள் தேறவில்லையே? இந்தப் பின்னடைவுக்குக் காரணமென்ன? இதை எப்படிச் சரி செய்வது? 

பதில்  – இதில் பின்னடைவு ஏதும் இல்லை. சரி செய்வதற்கும் ஒன்றுமில்லை. முதல் மூன்று இடங்களைப் பிடிக்க வேண்டும் என்று வெறியூட்டப்படுவதே கண்டிக்கத்தக்கதாகும். பிஞ்சுப் பருவத்திற்கென்று சில ஆசைகளும் தேவைகளும் உள்ளன. 

உடலை வலுவாக வைத்திருக்கும் விளையாட்டுக்கள், நண்பர்களுடன் பொழுதுபோக்குதல், போதுமான தூக்கம், தேவையான ஓய்வு, குறித்த நேரத்தில் சாப்பாடு என்று அனைத்தையும் வழக்கம்போல் செய்துகொண்டு படிக்கவும் வேண்டும். ஆடல், பாடல், சினிமா போன்ற பயனற்றவைகளைத் தவிர்க்கலாமே தவிர எப்போது பார்த்தாலும் புத்தகமும் கையுமாக இருக்கப் பழக்கப்படுத்தக் கூடாது. 

பிள்ளைப்பருவத்தின் சந்தோஷங்களைக் கெடுத்து முதல் மதிப்பெண்தான் லட்சியம் என்று போதிக்கப்படுவதாலும், அனைவரும் இதை ஊக்குவிப்பதாலும், மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காவிட்டால், இதை அவமானமாகக் கருதி தற்கொலையும் செய்கிறார்கள். 

சில பெற்றோர்கள் அதிக மதிப்பெண் எடுக்காவிட்டால், நடப்பதே வேறு என்று எச்சரித்து பயம் காட்டுவதாலும், மதிப்பெண் குறைவாகப் பெறும்போது, தற்கொலை செய்ய மாணவர்கள் தூண்டப்படுகின்றனர். இந்த மனநிலை மாறவேண்டும். முஸ்லிம் மாணவர்களுக்கு இதுபோல் வெறியேற்ற வேண்டிய அவசியம் இல்லை. 

படிப்பில் ஆர்வமூட்டி அவனது நினைவாற்றலுக்கு ஏற்ப எடுக்கும் மதிப்பெண்களை பெற்றோரும் பொருந்திக் கொள்ள வேண்டும்.  பெற்றோர் பொருந்திக் கொள்வார்கள் என்பதை அந்த மாணவனுக்கு உணர்த்தப்பட வேண்டும். 

அதிக மதிப்பெண் குறித்த இன்னும் சில உண்மைகளையும் நாம் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம். அதில் மறைந்துள்ள மர்மங்களை அறிந்து கொண்டால் அதிக மதிப்பெண் என்ற வெறி பிடித்து அலைவது ஒழிந்துவிடும். 

நமது நாட்டில் உள்ள கல்வி முறையில் திறமைக்கோ, சிந்திக்கும் திறனுக்கோ மதிப்பெண்கள் போடுவதில்லை. மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதற்குத்தான் மதிப்பெண்கள் போடப்படுகின்றன. புரியாமல் மனப்பாடம் செய்திருந்தால்கூட அதை எழுதினால் மதிப்பெண் கிடைத்துவிடும். 

இதன் பின்னர் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைச் சமாளிக்க இந்த மனப்பாடமும் அதனால் கிடைத்த மதிப்பெண்களும் உதவாது. 

மொழியறிவும், சிந்திக்கும் திறனும் உடைய முன்னாள் முதல்வர் கருணாநிதி எஸ்.எஸ்.எல்.சி.யில் பெயில் ஆனவர்தான். 

கடந்த 20 ஆண்டுகளாக 12ஆம் வகுப்பில் முதலிடம் பெற்றவர்களின் பட்டியலைத் திரட்டிப் பாருங்கள். அவர்கள் அனைவருமே நாட்டில் சிறந்த விஞ்ஞானியாக, சிறந்த மருத்துவராக, சிறந்த எஞ்சீனியராக சிறந்த பேராசிரியராக இருக்கிறார்களா? ஓரிருவர் அப்படி இருப்பார்களே தவிர, மற்றவர்களால் பிரகாசிக்க இயலவில்லை என்பதை அறியலாம். 

அதே நேரத்தில் முதல் நிலையில் பல்வேறு சாதனைகள் படைத்தவர்களிடம் நீங்கள் 12ஆம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்தவரா என்று விசாரித்துப் பாருங்கள். அவர்களில் அதிகமானவர்கள் சராசரியான மதிப்பெண் பெற்றவராகவே இருப்பார்கள். 

எனவே மதிப்பெண்களுக்காக அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அது மட்டுமே திறமைக்கும், அறிவுக்கும் ஒரே அடையாளம் அல்ல. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 

மனப்பாடத்திற்காகத்தான் மதிப்பெண்கள் கிடைக்கின்றன என்பது கூட முழுமையான உண்மை அல்ல. அது ஓரளவுக்குத்தான் உண்மை.

 100 கேள்விகளிலிருந்து 10 கேள்விகள் கேட்கப்படும் என்பதற்காக 100 கேள்விகளுக்கான விடைகளையும் மாணவர்கள் மனப்பாடம் செய்கிறார்கள். 

அதில் ஒரு மாணவன் 95 கேள்விகளுக்கான விடைகளை மனப்பாடம் செய்துவிட்டான். ஆனால் கேட்கப்பட்ட பத்து கேள்விகளில் எட்டு கேள்விகள் அவன் மனப்பாடம் செய்ததாகவும், இரண்டு கேள்விகள் அவன் மனப்பாடம் செய்யாத ஐந்து கேள்விகளில் இருந்து கேட்கப்பட்டால் அவனுக்கு 80 சதவிகித மதிப்பெண்தான் கிடைக்கும். 

இன்னொரு மாணவனோ 70 கேள்விகளுக்கான விடைகளை மனப்பாடம் செய்தான். கேட்ட கேள்விகள் அனைத்தும் அந்த 70க்குள் அடங்கியிருந்தால் அவன் 100 சதவிகித மதிப்பெண் பெறுவான். 

அதாவது 95 சதவிகிதம் மனப்பாடம் செய்தவனுக்கு 80 மதிப்பெண்களும், 70 சதகிவிதம் மனப்பாடம் செய்தவனுக்கு 100 மதிப்பெண்ணும் கிடைத்து விடுகிறது. முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் சில நேரங்களில் இந்தத் தரத்திலும் இருப்பார்கள். 

இதில் திறமை மட்டுமின்றி, மனப்பாடத் திறனும் கவனிக்கப்படாமல் விடப்படுகிறது. நாம் மனப்பாடம் செய்ததில் கேள்விகள் அமைவதைப் பொருத்துத்தான் இது முடிவு செய்யப்படுகிறது. 

அதாவது வாய்ப்புக்கள்தான் இதைத் தீர்மானிக்கின்றன. தினசரி வகுப்புகளிலும், டெஸ்டுகளிலும் முதலிடத்தில் வந்த மாணவர்கள் சிலரது மதிப்பெண்களைவிட அதுபோன்ற தேர்வுகளில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் முந்திவிடும் அவலத்திற்கும் இதுதான் காரணம். 

இதுபோக மதிப்பெண்கள் போடக்கூடியவர்களின் குணநலன்களும் இதைத் தீர்மானிக்கின்றன. நன்றாகத் தேர்வு எழுதியவனின் விடைத்தாள் கஞ்சத்தனம் செய்யும் ஆசிரியரின் கைக்குக் கிடைத்தால், அவனுக்கு கிடைக்க வேண்டியதைவிடக் குறைவான மதிப்பெண்ணே கிடைத்திருக்கும். சுமாராக எழுதியவனின் விடைத்தாள் தாரள சிந்தனை கொண்டவர்களிடம் போனால், அவன் எதிர்பார்த்ததைவிட கூடுதல் மதிப்பெண்ணுடன் முதலாமவனை இவன் முந்திவிடுகிறான். 

விடைத்தாள்களை யார் திருத்துகிறார்கள் என்பதும் இதைத் தீர்மானிப்பதால் திறமைக்கும் மனப்பாடத்திற்குமான அடையாளமாக மதிப்பெண்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. என்ன எழுதியிருக்கிறது என்பதை வாசித்து நேரத்தை வீணாக்க விரும்பாத ஆசிரியர்கள் அதிக வரிகளுக்கு அதிக மதிப்பெண்களும், குறைந்த வரிகளுக்கு குறைந்த மதிப்பெண்களும் போட்டு கடமையை நிறைவேற்றுவதும் உண்டு. 

முன்னாள் முதல்வரின் கைங்கரியத்தால், கண்பார்வை குறைந்த, ஊணமானவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தேர்வுத்தாள் திருத்தும் பணியில் நியமிக்கப்படுகின்றனர். கண்ணுக்கு அருகில் வைத்தால்கூட எழுத்தைச் சரியாக வாசிக்கத் தெரியாதவர்கள், தேர்வுத்தாளை திருத்தினால், அவரது மனநிலையைப் பொருத்து, கீழே உள்ளவன் மேலே வருவான். மேலே வரவேண்டியவன் கீழே போய்விடுவான். இப்படியும் மதிப்பெண்கள் போடப்படுகின்றன. 

இது தவிர சில தனியார் பள்ளிகள் தங்கள் பெயரைத் தக்க வைப்பதற்காக, கேள்வித்தாளுடன் விடைகளையும் கொடுத்து, எழுத ஆசிரியர்கள் துணை செய்வதும், மேற்பார்வையாளர்களுக்குப் பெருந்தொகை கொடுத்து சரிக்கட்டுவதும் நடப்பது உண்டு. 

எப்போதுமே நாமக்கல் மாவட்டத்தினரைச் சேர்ந்தவர்களே முதல் இடங்களைப் பிடித்து வருகின்றனர். இது ஏன் என்று ஆய்வு செய்தபோது நாமக்கல்லில் இந்த மோசடி நடப்பதைக் கண்டறிந்தனர். 

இந்த ஆண்டு சிறப்பு பறக்கும்படை அமைத்து மாணவர்கள் காப்பி அடிக்க பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் உடந்தையாக இருப்பதைக் கையும் களவுமாகப் பிடித்து பள்ளிக்கூட அனுமதியையும் ரத்து செய்தன. சில பள்ளிகள் அப்படியும் தப்பித்துவிட்டன. முதல் இடங்களைப் பிடிக்கும் பள்ளிக் கூடங்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுக்க சில பெற்றோர்கள் தயாராக இருக்கின்றனர். 

எனவே கோடி கோடியாகக் கொள்ளையடிக்க உதவும் என்பதால், ஆசிரியர்களே தில்லுமுல்லு செய்து சராசரி மா‘ணவனை முதல் மதிப்பெண் எடுக்க வைக்கிறார்கள். இவ்வளவும் சில நேரங்களில் முதல் மதிப்பெண்ணைத் தீர்மானிக்கின்றன. 

மனப்பாடம் செய்தால் நிச்சயம் சிறந்த மதிப்பெண் என்பதற்கே உத்தரவாதம் இல்லை எனும்போது, இடம் பெறும் கேள்விகளும், திருத்தக்கூடிய ஆசிரியர்களும், தேர்வு கண்காணிப்பாளர்களும் தான் இதைத் தீர்மானிக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொண்டால் மதிப்பெண்ணுக்காக அளவற்ற தியாகங்களைச் செய்ய மாட்டார்கள். 

மாணவர்கள் உண்ணாமலும், உறங்காமலும், சிறுபிள்ளைத் தனங்கள் செய்யாமலும் எந்திரத் தன்மையுடன் வளர்க்கப்படுவதை நாமும் ஊக்குவிக்கக் கூடாது. எல்லாக் கடமைகளையும் செய்துகொண்டு உயர் கல்வி கற்பதற்கான மதிப்பெண்களை எடுக்கும் அளவுக்கு பாடுபடுங்கள் என்று ஆர்வம் ஊட்டுவதே போதுமானது. 

முதல் 10 இடம் என்பதெல்லாம் லட்சியம் இல்லை. எல்லா உயர்கல்வி இடங்களும் முதல் 10 இடத்திற்கு வந்தவர்களைக் கொண்டு நிரப்பப்படாது. இதை அனைவரும் உணர்வது நல்லது.

onlinepj.com
0 comments

விரட்டிய இடத்தில் புரட்டிய தவ்ஹீத்!

வட சென்னை மாவட்டத்திலுள்ள நேதாஜி நகர் பகுதியானது தவ்ஹீத் வரலாற்றில் அதிகமான எதிர்ப்புகளை சந்தித்த பகுதிகளில் முக்கிய பகுதி. ஏனெனில் முரீது, தரீக்கா, தர்ஹா வழிபாடு போன்ற ஷிர்க்கான காரியங்களில் முதன்மையாக இருக்கும் பகுதி. தெருவுக்குத் தெரு தரிக்காக்களை வைத்து “நாயகம் வாப்பா” போன்ற ஷெய்குகளின் காலைக் கழுவிக் குடிப்பது, இருட்டு திக்ர் செய்வது போன்ற அனாச்சாரங்கள் அதிக அளவில் நடக்கும் பகுதி.
1990களில் மெல்லத் துவங்கிய தவ்ஹீத் பிரச்சாரம் 1995-களில் மிக வீரியம் அடைந்து 1998-ல் கலவரம் நடக்கும் அளவிற்குச் சென்றது. 1998 கலவரத்தில் பல தவ்ஹீத் சகோதர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் சிறை சென்றனர். வழக்குகளை சந்தித்தனர். இப்படி பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யபட்டுவந்தது. தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்ததின் விளைவாக தவ்ஹீதை எதிர்த்த மக்களில் பலர் ஏகத்துவவாதிகளாகவும், சிலர் ஏகத்துவத்திற்கு ஆதரவாளர்களாகவும் அல்லாஹ்வின் அருளால் மாறியுள்ளார்கள்.
இளைய சமுதாயம் தொடர்ந்து இந்த தவ்ஹீத் கொள்கையின் பக்கம் வந்தது. இதன் விளைவாக நம்மை விரட்டி அடித்த சுன்னத் ஜமாத் பள்ளிக்கு மிக அருகில் (30 அடி தூரத்தில்) வசிக்கும் சகோதரர் நமது ஜமாஅத் சார்பாக பெண்கள் பயான் நடத்த கோரிக்கை வைத்தார். அதன்படி வாரா வாரம் ஞாயிற்றுக் கிழைமை மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்று வருகின்றது.
முதலில் 60 பெண்கள் கலந்து கொண்டார்கள். அடுத்தடுத்த வாரங்களில் அல்லாஹ்வின் அருளால் பயான் நடக்கும் மாடியும் நிரம்பி, பக்கத்து வீட்டு மாடியும் நிரம்பக்கூடிய அளவிற்கு பெண்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்….
இதை பொருத்துக்கொள்ளாத சுன்னத் (?) ஜமாத்தினர் முதலில் ஒரு குழுவினர் சென்னை கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று புகார் செய்தனர். அது பலனளிக்கவில்லை என்ற உடன் வாரந்தோறும் நமக்குப் போட்டியாக அதே நேரத்தில் சுன்னத் ஜமாஅத் உலமாக்களை (?) வர வழைத்து பயான் நடத்துகின்றார்கள்.
பெரிய பெரிய ஒலி பெருக்கிகளை நமது பயான் நடக்கும் இடம் அருகில் வைத்து நம்மை பயான் செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்துகின்றார்கள். இந்த வரிசையில் 17/2/13 அன்று வழிகெட்ட பரலேவிகளின் தலைவராக இருக்கக் கூடிய சேக் அப்துல்லாஹ் ஜமாலியை அழைத்து வந்து கேள்வி-பதில் நிகழ்ச்சி நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சியில் ஏகத்துவ சிந்தனை கொண்ட சகோதர, சகோதரிகளில் சிலர் அங்கு சென்று ஜமாலியை கேள்வி கேட்டு பயந்து ஓட வைத்துவிட்டனர். அல்ஹம்துலில்லாஹ்…
கேள்வி கேட்ட ஒரு பெண்மனி “வரதட்சணை கல்யாணத்திற்கு போகலாமா?” எனக் கேட்டார். அதற்கு ஜமாலி “வரதட்சணை தவறுதான்; ஆனால் கல்யாணத்தில் கலந்து கொள்ளலாம். ஏனென்றால் நாம் கலந்து கொள்ளவில்லை என்றால் யார் திருமணத்தை நடத்திவைப்பது?. யாரும் வரவில்லை என்றால் அவர்கள் வழிதவறிப் போய்விடுவார்கள் என அறிவார்ந்த(?) பதிலைக் கூறினார். இந்த பதில் அங்குவந்த பெண்களுக்கு பரலேவி கொள்கையின் மீது வெறுப்பை அதிகப்படுத்தியது.
மேலும் சிறுவர்களும் இளைஞர்களும் கேள்வி கேட்டார்கள். ஒரு சகோதரர் “தொழுகையில் தொப்பி அணிவது சுன்னத் எனக் கூறி தொப்பி இல்லை என்றால் பிளாஸ்ட்டிக் தொப்பி வைத்து தொழ வரும் அனைவரையும் தொப்பி போட சொல்லும் நீங்கள், தாடி வைப்பதும் சுன்னத்தாக இருப்பதால், பிளாஸ்ட்டிக் தொப்பிபோல பிலாஸ்ட்டிக் தாடிவைக்கவும் கட்டாயப் படுத்தலாமே” எனக் கேட்ட போது சிரிப்பொலி ஜமாலியின் காதை கிழித்தது. இதற்கும் பதில் சொல்ல வழியில்லாமல் சில மழுப்பலான பதில்களை வாந்தி எடுத்தார் ஜமாலி.
கேள்விகளின் உக்கிரத்தை உணர்ந்த ஜமாலி உடனடியாக ” நிகழ்ச்சி முடிந்துவிட்டது” என ஓட்டம் எடுத்தார். மேலும் தன்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்த பள்ளிவாசல் நிர்வாகிகளையும் வறுத்தெடுத்தார். ஏன் இப்படிப்பட்ட நிகழ்சிக்கு என்னை அழைத்தீர்கள்; பயானுக்கு வந்தவர்களில் பாதிப்பேர் தலையில் தொப்பி இல்லை. நஜாத் காரர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு என்னை ஏன் அழைத்தீர்கள்? என கொட்டி தீர்த்துவிட்டு சென்றார்.
இதன்பிறகு இவர்கள் தொடர்ந்து நடத்தும் பயான்களில் கேள்வி-பதில் பகுதியையே தூக்கிவிட்டனர். இப்படி இவர்கள் அழைத்துவரும் உலமாக்கள் (?) ஷிர்க் பித் அத்தையே தூக்கிப்பிடிப்பவர்களாக இருப்பதினால் இவர்களை இப்படியே விடக்கூடாது என அந்த சுன்னத் ஜமாத் பள்ளி அருகில் நமது ஜமாஅத் சார்பாக நூலகம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
இந்த நூலகத்தின் மூலம் இஸ்லாமிய பயான் டிவிடிக்களை இலவசமாகக் கொடுத்து வருகின்றனர்.
மேலும் செல்ஃபோன் மெமரி கார்டுகளில் இலவசமாக இஸ்லாமிய பயான்களை பதிவேற்றம் செய்து தருகின்றனர். மேலும் இணையதளம் மூலமாக கிளையின் செயல்பாடுகளைக் கொண்டு செல்லும் முகமாக தனியொரு இணையதளத்தையும் துவக்கி சிறப்பாக செயல்படுகின்றனர்.
இந்த சுன்னத் ஜாமஅத் பள்ளிவாசலில் “சுன்னத் ஜமாத்தினரைத் தவிர யாரும் தொழ வரக்கூடாது” என பல வருடங்களாக அறிவிப்பு வைத்துள்ளனர். தற்போது இப்படிப்பட்ட அறிவிப்பிற்கு அந்தப் பகுதி மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஐந்து வேளை தொழுது சமுதாயத்திற்கு தேவையான பல்வேறு நற்பணிகள் புரியும் தவ்ஹீத் மக்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்றால், ஒருவேளை தொழுகை இல்லாதவனெல்லாம் எப்படி பள்ளிவாசல் நிர்வாகிகளாக இருக்க முடியும் என, பொது மக்கள் மிகக் கடுமையாக எதிப்புக் குரல் கொடுத்து வருகின்றனர். பள்ளிவாசலுக்கு அடுத்த கட்டடத்தில் வசிக்கும் ஒரு சகோதரர் தனது வீட்டு சுவரில் “பள்ளிவாசலை நிர்வகிக்க தகுதியானவர்கள் யார்?” என்ற தலைப்பிலும், “அநியாயக்காரன் யார்?” என்ற தலைப்பிலும் குர் ஆன் வசனத்தை எழுதியுள்ளார்.
இப்படியாக அல்லாஹ் தனது கிருபையால் நேதாஜி நகர் பகுதியில் தவ்ஹீதை விரட்டி அடித்த அந்த சுன்னத் ஜமாஅத் பள்ளி நிர்வாகிகளுக்கு தொடர்ந்து இழிவை ஏற்படுத்தி வருகின்றான். மக்களும் தவ்ஹீத்வாதிகளை எதிர்க்க “இந்த தொழுகை இல்லாத ஒழுக்கம் இல்லாத போலி சுன்னத் ஜமாத் தலைவர்களுக்கு அருகதை இல்லை” என எதிர்க்குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் தவ்ஹீத் வாதிகளை மிரட்டிப் பணியவைக்கும் முயற்சியில் இந்த போலி சுன்னத் ஜமாத் தலைவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் அல்லாஹ்வின் கிருபையால் இவர்களின் மிரட்டலுக்கு சிறிதும் அஞ்சாமல் நமது சகோதர்கள் தொடர்ந்து தங்களது பிராச்சாரப் பணியை செய்துவருகின்றனர்.
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger