நல்லதை அறிய அறிவு மட்டும் போதுமா?

மனிதனின் அறிவு நல்லதை மட்டும் ஏவுமா, தீயதையும் ஏவுமா? காரல் மார்க்ஸ் வாதிகள் 'மனிதனின் அறிவாற்றல் தான் எல்லாமே; மற்ற எந்த நம்பிக்கையும் வீண்' என்கிறார்கள். கல்லூரி மாணவிகள் இதைப் பற்றி அறிய பெரிதும் ஆவல் கொள்கிறார்கள். விளக்கவும்! 

-ஜுலைஹா புதல்வி, தருமாபுரம், காரைக்கால் 
பதில் : 

மனிதனின் அறிவு மகத்தானது என்பதில் ஐயமில்லை. 
பல விஷயங்களை அறிவு சரியாகவே கண்டு பிடித்து விடும். 

ஆயினும் சில விஷயங்களில் அறிவு தவறிழைத்து விடுவதும் உண்டு. 
பல விஷயங்களை அறிவு சரியாகக் கண்டு பிடித்து விட்டாலும் அறிவின் கண்டு பிடிப்பைக் காலில் போட்டு மிதித்து விட்டு வேறு வழியில் மனிதனை இழுத்துச் செல்லும் இன்னொரு ஆற்றல் மனிதனிடம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. 

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பது நன்மையா? எனக் கேட்டால் அதில் உள்ள கேடுகளை நம்மை விட விரிவாக அவர் விளக்குவார். அவரது அறிவு புகை பிடிப்பதைத் தவறு என்று தீர்ப்பளித்த பிறகும் ஏன் புகை பிடிக்கிறார்? தவறு எனக் கண்டு பிடித்தவுடன் அதை அந்த மனிதனால் ஏன் விட முடியவில்லை? எனச் சிந்தித்தால் அறிவுக்குப் பெரிய ஆதிக்கம் ஏதுமில்லை என அறியலாம். 

திருடுபவன், மது அருந்துபவன், கொலை செய்பவன் என பல்வேறு தீமைகளில் மூழ்கியிருப்போர்க்கு அவை தீமைகள் என்று அவர்களின் அறிவுகள் உணர்த்துகின்றன. உணர்த்துவதைத் தவிர அவர்களது அறிவால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை.

 செவிடன் காதில் ஊதிய சங்காக இதை மனிதன் எடுத்துக் கொள்கிறான். 

சர்வாதிகார நாட்டின் அதிபருக்கும், ஒரு பள்ளிக் கூட வாத்தியாருக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ அதை விட அதிக வித்தியாசம் மனிதனின் அறிவுக்கும் அவனை இயக்கும் மற்றொரு சக்திக்கும் இருக்கிறது. 
பள்ளிக்கூட வாத்தியார் நல்லது கெட்டது இது எனச் சொல்லித் தருவார். அந்த வழியில் மாணவனை நடத்திச் செல்ல அவருக்கு ஆற்றல் இல்லை. ஒரு சர்வாதிகாரி ஒரு உத்தரவின் மூலம் மனிதனை வழி நடத்திச் செல்வான். இந்த வகையில் அறிவு என்பது எவ்வித அதிகாரமும் செலுத்த முடியாத பள்ளிக் கூட வாத்தியார் போன்ற பரிதாப நிலையில் உள்ளது. 

எத்தனையோ விஷயங்கள் நன்மையானவை என்று மனிதனின் அறிவு கூறுகிறது. ஆயினும் அவற்றை அவன் செய்வதில்லை. அறிவு மூலம் நன்மையைக் கண்டு பிடிக்க முடிந்ததே தவிர அவ்வழியில் மனிதனை வழி நடத்த முடியவில்லை

காரல் மார்க்ஸுக்கு இது தெரியா விட்டாலும் நம் அனைவருக்கும் இது கண் கூடாகத் தெரிகிறது. 

நாமே கூட நமது அறிவை இப்படித் தான் நடத்துகிறோம். 

அறிவு சொல்லும் பாதையில் மனிதனை நடத்திச் செல்ல அவனை விட வலிமையான ஒரு சக்தியை நம்ப வேண்டும். தவறு, தீமை எனத் தெரிந்தவற்றை நாம் செய்தால் நம்மை ஒருவன் தண்டிப்பான் என்ற நம்பிக்கை மட்டுமே அறிவுக்கு மரியாதையைப் பெற்றுத் தரும். இது முதல் விஷயம். 

எல்லா விஷயத்திலும் நன்மையையும், தீமையையும் அறிவு கண்டு பிடித்து விடுகிறதா என்றால் இல்லை என்று அடித்துச் சொல்லலாம். 

இரண்டு அறிவாளிகள் ஒரு விஷயத்தை தீமை என்று முடிவு செய்வதில் மாறுபட்ட கருத்துக் கொள்கின்றனர். 

இவர்களில் ஏதோ ஒருவரது அறிவு தவறான முடிவை அவருக்குக் காட்டியுள்ளது. புதிய பொருளாதாரக் கொள்கை நன்மை பயப்பது என வாதிடுவோரும், தீமை பயப்பது என வாதிடுவோரும் முட்டாள்கள் அல்லர். 

மாபெரும் மேதைகள் தான் முரண் பட்ட இவ்விரண்டு வாதங்களையும் முன் வைக்கின்றனர். இவ்விரண்டும் ஒரு சேர உண்மையாக இருக்க முடியாது. ஏதோ ஒன்று தான் இதில் உண்மையாக இருக்க முடியும். அப்படியானால் ஒரு தரப்புடைய அத்தனை அறிவாளிகளின் அறிவும் அவர்களுக்குச் சரியான முடிவைக் காட்டவில்லை என்பது தெளிவு. 

வட்டி ஒரு வன்கொடுமை என வாதிடும் காரல் மார்க்ஸும், வட்டி ஒரு வணிகமே எனக் கூறுவோரும் அறிவாளிகள் தாம். முரண்பட்ட இவ்விரண்டில் எது சரியானது என வைத்துக் கொண்டாலும் ஒரு சாரரின் அறிவு சரியானதைக் கண்டு பிடிக்கவில்லை என்பது உறுதி. 


அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உடைய விஷயங்கள் ஆயிரமாயிரம் உள்ளன. இதிலிருந்து மனித அறிவின் லட்சணத்தை அறிந்து கொள்ளலாம். அறிவாற்றல் தான் எல்லாமே என்பது ஒரு மாயை! மார்க்ஸ் வழி வந்த ரஷ்யாவே மார்க்ஸை ஏன் ஓரம் கட்டியது? மார்க்ஸுக்குச் சரி எனப்பட்டது அவர் வழி வந்தவர்களுக்கே தவறு எனப்பட்டது ஏன்? 
என்றெல்லாம் சிந்தித்தால் அறிவு மமதையிருந்து விடுபட்டு, ஆன்மீக நெறியின் மூலம் மனிதன் தன்னை பக்குவப்படுத்துவதன் அவசியத்தை உணரலாம். 

பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து

Article Copied From: www.onlinepj.com , Read more at:http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/arvu_mattum_pothuma/
Copyright © www.onlinepj.com
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger