ஈமானின் சுவை



கண்ணியமிக்க அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: அல்லாஹ்வின் அருளிலும், அன்பிலுமே அவர்கள் மகிழ்ச்சி அடையட்டும். அவர்கள் திரட்டுவதை விட இது சிறந்தது என்று கூறுவீராக! (அல்குர்ஆன். 10 : 58)

இன்றைய காலத்தில் வாழும் முஸ்லிம்களில் அதிகமானோர் தங்களை அறியாமலேயே தவறுகள் செய்வதற்கு காரணம் அவர்களுக்கு ஈமான் என்றால் என்ன? என்பத தெறியாதது தான்.

ஆனால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஈமானைப் பற்றி அழகிய முறையில் சொல்லிக் காண்பிக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். எவரிடம் மூன்று தன்மைகள் உள்ளதோ அவர் இறை நம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். அவை,

1.அல்லாஹ்வும் அவனின் தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்துக்குரியோராவது. 

2.ஒருவரை மற்றவர் அல்லாஹ்விற்காக நேசிப்பது. 

3.இறை மறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மை விடுவித்த பின் அந்த இறை மறுப்பிற்கே திரும்பிச் செல்வதை ஒருவர் நெருப்பில் வீசப்படுவதைப் போன்று வெறுப்பது. (அனஸ் (ரலி) புகாரி 21)

மேற்கண்ட ஹதிஸில் நபி(ஸல்) அவர்கள் ஈமானின் அடையாளமாக மூன்று விஷயங்களை கூறுகிறார்கள். அதில் முதல் விஷயம், ஒரு மனிதன் உலகிலுள்ள அனைத்தையும் விட அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முன்னுரிமை கொடுத்து நேசிப்பதாகும்.


அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசித்தல்

இன்றைக்கு அதிகமானவர்கள் வழி தவறுவதற்கு நபி(ஸல்) அவர்கள் சொன்ன இந்த கட்டளையை மறந்ததே காரணம்.

வரதட்சணை வாங்கி திருமணம் முடிக்கும் ஆண்கள், பெற்றோரைக் காரணம் காட்டி இந்தப் பாவத்தைச் செய்கிறார்கள். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்யும் காரியம் இது என்று அவர்களிடம் சொன்னால் பெற்றோர்களை எதிர்க்க முடியாது என்று கூறி விடுகிறார்கள். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விட இவர்கள் பெற்றோர்க்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். 

மேலும், இவர்கள் ஒரு பெண்ணை விரும்பும் போது மட்டும் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்கிறார்கள். ஒரு பெண்ணின் மீது வைத்திருக்கும் பிரியத்தைக்கூட அல்லாஹ்வின் மீதும் அவனது தூதரின் மீதும் கொண்டிருக்கவில்லை என்பதை இதன் மூலம் தெளிவுப்படுத்துகிறார்கள்.

இதே போன்று வியாபாரத்தில் கலப்படம் செய்பவர்கள், அடுத்தவர் பொருளை அபகரிப்பவர்கள், இன்ன பிற பாவங்களைச் செய்பவர்கள் அணைவருமே நபி(ஸல்) அவர்களது கட்டளையைத் துணிச்சலாக அலட்சியம் செய்வதால் தான் இந்த பாவங்களை செய்கிறார்கள்.

இன்னும் சிலர் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மனைவி, மக்கள் ஆகியோருக்காக அல்லாஹ்வையும் அவனது தூதரையும் புறக்கணிக்கின்றனர். இவர்களை அல்லாஹ் மிகக் கடுமையாக எச்சரிக்கிறான்.

உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துனைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவனது பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான் என்று கூறுவீராக! (9:24)

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்து விட்டால் நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்னுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (33:36)

அல்லாஹ்வுக்காக நேசித்தல் 

அடுத்ததாக நபி(ஸல்) அவர்கள் கூறும் விஷயம், ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காக மட்டுமே நேசிப்பதாகும்.

ஒருவர் அல்லாஹ்வுக்காக, அவனது மார்க்கத்திற்காக மட்டுமே மற்றொருவரை நேசிக்க வேண்டும். ஆனால் இன்று நட்புக்காக மார்க்கத்தை விடக் கூடிய சூழ்நிலையைத் தான் நாம் பார்க்கிறோம்.

வரதட்சணை, யாநபி பைத் போன்ற அனாச்சாரங்கள் நடக்கும் திருமணங்களில் கலந்து கொள்ளாதீர்கள் என்று கூறினால், அவர் எனக்கு நெருங்கிய நண்பர்: அதனால் அவரது திருமணத்திற்குச் செல்லாமல் இருக்க முடியாது என்று கூறுகின்றனர். அல்லாஹ்வுக்காக நட்புக் கொள்வதை விட்டு விட்டு நட்புக்காக இறைவனுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடுகின்றனர். 

ஈமானின் சுவையை உணர்வதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறும் அடுத்த விஷயம், இறை நிராகரிப்பை நெருப்பில் வீசப்படுவதைப் போன்று வெறுப்பதாகும். அதாவது இறைவன் ஒருவன் தான் என்று ஏற்றுக் கொண்ட பிறகு அதன் மூலம் என்ன சோதனைகள் வந்தாலும் அதில் இறுதி வரை உறுதியாக இருக்க வேண்டும்.

இந்த மூன்று விஷயங்களும் ஒருவரிடம் இறுதி வரை இருந்தால் தான் அவர் உண்மையான முஃமினாக முடியும்.

இன்னும் சிலர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கிறோம் என்ற பெயரில் பாவமான காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். மவ்லிது, ஃபாத்திஹா, மீலாது விழா போன்ற அனாச்சாரங்களைச் செய்து வருகிறார்கள். அதுவும் நன்மை என்ற பெயரில் இவற்றைச் செய்து வருகின்றனர். இதற்கு காரணம், அல்லாஹ்வையும் தூதரையும் நேசிப்பது என்றால் என்ன? என்று தெரியாமல் இருப்பது தான்.

அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிப்பதன் அடையாளம் அவர்கள் ஏவியதைச் செய்து அவர்கள் தடை செய்ததை விட்டு விலகி வாழ்வதாகும். மவ்லிது, ஃபாத்திஹா போன்ற காரியங்களை அல்லாஹ்வும் அவனின் தூதரும் காட்டித் தந்துள்ளார்களா? என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை. இது போன்ற செயல்களுக்கு நன்மை கிடைக்காது என்பதுடன் தண்டனையும் கிடைக்கும்.

செயல்களில் நஷ்டம் அடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீனாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர். அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே, கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையம் ஏற்படுத்த மாட்டோம். அவர்கள் (என்னை) மறுத்ததற்கும், எனது வசனங்களையும் தூதர்களையும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை. (18:103-106)

நபி(ஸல்) அவர்களை நேசிப்பதென்பது, ஒருவர் உலகிலுள்ள அனைத்தையும் விட, தனது உயிரை விட நபியவர்களை மேலாக நினைத்து, தனது விருப்பு, வெறுப்பு எல்லாவற்றையும் நபி (ஸல்) அவர்களின் சொல்லின் அடிப்படையில் ஏற்படுத்திக் கொள்வதாகும். இதை நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அணைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை அவர் இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார். அனஸ் (ரலி) புகாரி 15)

நபித்தோழர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசித்த விதம்

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நபித்தோழர்கள் தங்கள் உயிரை விட மேலாக நேசித்து வந்தார்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு கட்டளையிட்டால் அதை உடனே நிறைவேற்றக் கூடியவர்களாகவும், அவ்விருவரும் ஒரு விஷயத்தைத் தடை செய்தால் அதை விட்டு உடனே விலகக் கூடியவர்களாகவும் நபித்தோழர்கள் இருந்தனர். அத்தகைய செய்திகளை பார்ப்போம்.

நான் அபுதல்ஹா(ரலி) அவர்கள் வீட்டில் மக்களுக்கு மது பரிமாறுபவனாக இருந்தேன். அந்த நாட்களில் பேரீச்சம் பழ மதுவை அவர்கள் குடித்து வந்தனர். (மதுவை தடை செய்யும் வசனம் அருளப்பட்டவுடன்) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, (மக்களே) மது தடை செய்யப்பட்டது விட்டது என அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள். அபு தல்ஹா(ரலி) என்னிடம், வெளியே சென்று இதை ஊற்றி விடு என்று கூறினார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றி விட்டேன். மதினா நகரின் தெருக்களில் அது ஓடியது. (அனஸ்(ரலி) புகாரி 2464)

மது தடை செய்யப்பட்டு விட்டது என்ற செய்தியை கேட்டவுடன் நபித்தோழர்கள் வைத்திருந்த மது அனைத்தையும் தெருக்களில் ஊற்றி ஆறாக ஓட செய்து விட்டார்கள். இது போன்ற நாட்டுக் கழுதையின் இறைச்சி தடை செய்யப்பட்டு விட்டது என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போது, சமைத்துக் கொண்டிருந்த இறைச்சியைத் தரையில் கொட்டிய செய்தியும் ஹதிஸ்களில் இடம் பெற்றுள்ளது.

நாங்கள் கைபருக்கு வந்து கைபர்வாசிகளை முற்றுகையிட்டோம். அப்போது எங்களுக்குக் கடமையான பசி ஏற்பட்டது. அதன் பிறகு (யூதர்களான) அவர்களுக்கு எதிராக அல்லாஹ் (எங்களுக்கு) வெற்றி அளித்தான். அவர்கள் வெற்றிக் கொள்ளப்பட்ட அன்றைய மாலை நேரத்தில் (மக்கள்) அதிகமாக நெருப்பு மூட்டினர். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், இது என்ன நெருப்பு? எதற்காக (இதை) மூட்டியிருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். இறைச்சி சமைப்பதற்காக! என்று மக்கள் பதிலளித்தனர். எந்த இறைச்சி என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நாட்டுக் கழுதையின் இறைச்சி என்று மக்கள் கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அவற்றை கொட்டி விட்டு அந்தப் பாத்திரங்களை உடைத்து விடுங்கள் என்று கூறினார்கள். அப்போது ஒருவர் இறைச்சிகளைக் கொட்டிவிட்டு அதன் பாத்திரங்களை நாங்கள் வைத்துக் கொள்ளலாமா? என்று கேட்டார். அப்படியே ஆகட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸலாமா பின் அக்வஃ(ரலி) புகாரி 6148)

என் தந்தை அபுபக்கர் (ரலி) சித்திக் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதானையாக! என் மகள் ஆயிஷா குறித்து அவதூறு கூறிய பின்பு ஒரு போதும் மிஸ்தஹீக்காக நான் சிறிதும் செலவிட மாட்டேன் என்று சத்தியமிட்டுக் கூறினார்கள். மிஸ்தஹ் பின் உஸாஸா, தமது உறவினர் என்பதாலும் அவர் ஏழை என்பதாலும் அவருக்காக அபுபக்கர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள்.

அப்போது அல்லாஹ், உங்களில் செல்வம் மற்றும் தயாள குணம் படைத்தோர் உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழைகளை) பொருட்படுத்தாமல் விட்டு விடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும் கிருபையுடையோனுமாக இருக்கிறான் என்ற (24:22) வசனத்தை இறக்கினான்.

அபுபக்கர் (ரலி) அவர்கள், ஆம்! அல்லாஹ்வின் மீதானையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறி விட்டு, மிஸ்தஹீக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். அல்லாஹ்வின் மீதானையாக! அவருக்குச் செய்யும் இந்த உதவியை நான் ஒரு போதும் நிறுத்த மாட்டேன் என்றும் கூறினார்கள் (ஆயிஷா(ரலி) புகாரி 2661)

இப்படி நபித்தோழர்களின் வாழ்வில் எண்ணற்ற நிகழ்ச்சிகளை நாம் எடுத்துக் காட்ட முடியும். அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விஷயத்தில் முடிவு செய்து விட்டால் சுய விருப்பத்தை விட்டு விட்டு, அந்த முடிவுக்குக் கட்டுப்படக் கூடியவர்களாக நபித்தோழர்கள் திகழ்ந்துள்ளனர்.

அதனால் தான் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர் என்று திருமறையில் புகழ்ந்து கூறுகின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களும், நீங்கள் உஹது மலை அளவுக்கு தங்கத்தை தர்மம் செய்தாலும் எனது தோழர்களுக்கு ஈடாக முடியாது என்று பாராட்டியுள்ளார்கள்.

அந்த நபித்தோழர்கள் ஈமானின் சுவையை அறிந்து, அதைப் பின்பற்றியது போல் நாமும் செயல்பட்டு இம்மை, மறுமையில் நாம் வெற்றி பெற்றவர்களாக ஆக வேண்டும்.
நன்றி - dubaitntj 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger