பாடல் இல்லாமல் இசை மட்டும் இசைப்பது ஹராமா ???


இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட அம்சமாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான்.

அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)

நூல் : அஸ்ஸ‚னனுல் குப்ரா, பாகம் : 3, பக்கம் : 272 புகாரி (5590)

விபச்சாரம் மது பட்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களுடன் இசையும் சேர்த்துச் சொல்லப்பட்டிருப்பதாலும் "இவற்றை ஆகுமாக்குவார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாலும் இவை ஆகுமானவை இல்லை என்பதை உணர்த்துவதாலும் இசை தடை செய்யப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.

புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைத் தூதரின் இல்லத்திலேயே சைத்தானின் இசைக் கருவிகளா? என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 1619

மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என்று வந்துள்ளது.

சைத்தானின் இசைக் கருவிகளா? என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய கருத்தை மறுக்கவில்லை. மாறாக இன்றைக்குப் பெருநாளாக இருப்பதால் இன்றைக்கு மாத்திரம் விட்டுவிடுமாறு விதிவிலக்குத் தருகிறார்கள். இசைக்கருவிகள் சைத்தானுடையது என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியது தவறு என்றிருந்தால் நீ சொல்வது தவறு. இசைக் கருவிகள் அனுமதியளிக்கப்பட்டவை தான் என்று நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியிருப்பார்கள். இன்றைக்கு மட்டும் விட்டுவிடு என்று அவர்கள் கூறுவதிலிருந்து மற்ற நாட்களில் இசைப்பது கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே இந்த ஹதீஸும் இசையைக் கேட்பது கூடாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அஹ்மத் 2494

ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தன் இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு (வேறொரு பாதையின் பக்கம்) வாகனத்தைத் திருப்பினார்கள். அவர்கள் (என்னிடம் அந்தச் சப்தம்) உனக்குக் கேட்கிறதா? என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு எனக்குக் கேட்கவில்லை என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதேப் பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டிடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : நாஃபிஃ (ரஹ்)

நூல் : அஹ்மத் (4307)

குழலோசையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் பொதுவாக இசை தடை செய்யப்பட்டது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
நன்றி - ONLINEPJ.COM 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger