தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ எழுச்சி - ஓர் வரலாற்றுப் பார்வை (தொடர் - 5)


முதல் மற்றும் கடைசி உண்ணாவிரதப் போர்

மீண்டும் மக்கள் சக்தியைத் திரட்டி ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஜாக் தலைமையிடம் இது தொடர்பாக பீ.ஜே. தொடர்பு கொண்டார். கலந்து பேசினார்.

ரிபாயியைக் கைது செய்ததைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும், காவல்துறை அதிகாரி இந்திர ஜித் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உண்ணாவிரதம் நடத்துவதற்கு கமாலுத்தீன் மதனியிடம் பீ.ஜே. அனு மதி கேட்கின்றார். பலத்த யோசனை, தயக்கம், தடுமாற்றத்திற்குப்பின் அனுமதி கிடைக்கின்றது.


தலைவர் என்ற முறையில் தவ்ஹீத் மக்களைத் திரளுமாறு அழைப்பு விடுங்கள். தமுமுக என்ற பெயரில் அழைத்தால் மக்கள் வரமாட்டார்கள் என்று பீ.ஜே. வ­யுறுத்தினார். ஆனால் கமாலுத்தீன் மதனி அதற்கு உடன்பட வில்லை. எனது தலைமையில் உள்ள மக்களை, ஹனிபாவின் பின்னால் திரளுமாறு நான் அறிவிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்தார். இரண்டு தலைமை ஏற்படுவதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டார். அப்பாவிகள் கைது செய்யப் பட்டது அவரை எந்தவிதத்திலும் பாதிக்கவேயில்லை.

நீங்கள் அழைப்பு விடுக்காவிட்டால், பீ.ஜே. என்ற என் பெயரிலேயே மக்களை அழைப்பேன். நீங்கள் அழைப்பு விடுக்காமலே தவ்ஹீத் சகோதரர்கள் நிச்சயம் திரளுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். தனது தலைமைப் பீடம் டம்மியாகிவிடும் என்று அஞ்சிய தால் கீழிறங்கி வந்து, ஜாக் தலைவர் என்ற பெயரில் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். அதைப் பிரசுரங்களாக வெளியிட்டோம்.

கமாலுத்தீன் மதனியின் பதவி ஆசை இப்போதுதான் தெளிவாக அனைவருக்கும் தெரிந்தது. தமுமுக என்பதற்கு தவ்ஹீத் மக்களைத் தவிர அன்றைக்கு கடுகளவு ஆதரவும் இருக்கவில்லை என்பதும் இதி­ருந்து தெளி வாகும்.

தவ்ஹீத்வாதிகளின் எழுச்சிமிகு உரையில் ஊர்கள் தோறும் தமுமுக கிளைகள் வேரூன்றின. இத்துடன் தவ்ஹீத் கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர்களும் இயக்கத்தில் இணைந்தனர்.

இயக்கம் வளர்ந்துவிட்டபின் இனி மேல் இயக்கம் தடை செய்யப்பட முடியாது என்ற நிலை ஏற்பட்டு, தமுமுக வுக்கு ஒரு மரியாதை ஏற்பட்டபின் பீ.ஜே. அமைப்பாளர் பொறுப்பி­ருந்து விலகினார். இப்போது இருப்பவர்கள் நல்ல தலைவர்கள் கஷ்டமான காலத்தில் நான் விட்டு விட்டு ஓடவில்லை.  இனிமேல் நானில்லாவிட்டாலும் இயக்கத்தை சிறப்பாக நடத்துவார்கள் என்று மனம் திறந்து மடல் எழுதி, பொறுப்பிலிருந்து விலகினார். 

மாபெரும் மக்கள் இயக்கமாக ஒரு இயக்கத்தை வளர்த்துவிட்டு, அதன் முதல் நிலைத் தலைவராக இருக்கும் ஒருவர் மன நிறைவோடு ஒதுங்குவது எங்குமே நடந்திராத ஒன்று. இவர்கள் நன்றாக இயக்கத்தைக் கொண்டு செல்வார்கள் என்று பீ.ஜே.யை இவர்கள் நம்ப வைத்திருந்தார்கள்.

ஆனால் பீ.ஜே. முழுமையாக இயக்கத்தை இவர்கள் கையில் ஒப்படைத்த பிறகுதான் இவர்கள் நயவஞ்சக வேடம் போட்டது ஒவ்வொன்றாக அம்பலமானது.

பீ.ஜே. பொறுப்பி­ருந்து விலகியது முதல், பிஞ்சிலே பழுத்த ஒருவரை ஊர்கள்தோறும் அனுப்பி, நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து தவ்ஹீத்வாதிகளைக் களையெடுத்தனர்.

தவ்ஹீத்வாதிகளுக்கும், மற்றவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டு நியாயம் கேட்டு தலைமையை அணுகினால் தமுமுக பொறுப்பில் இருப்பது என்றால் பிரச்சினைக்குரியவற்றை விட்டுவிலக வேண்டும் என்று இப்போதைய தலைவரும், செயலாளரும் எச்சரிக்கும் நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தன.

பொறுப்பில் இருந்து பீ.ஜே. விலகினாலும் அமைப்புக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. ஆலோசனை கேட்கும் போதெல்லாம் ஆலோசனை வழங்கத் தவறவில்லை. அதேசமயம் இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலைபோவதைக் கவனித்து கவலைப்பட்டார். அந்த அளவுக்கு கீழ்த்தரமாகச் செல்வார்கள் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்று நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கவலைப்பட்டார்.

ஜாக்கில் இருந்து கொண்டே, கமாலுத்தீனின் பணத்தாசை, பதவிவெறி யைக் கண்டு புழுங்கியது போன்ற நிலை ஏற்பட்டது. தவ்ஹீத் தாயிகள் மத்தியில் அதிருப்தியும், கொந்தளிப்பும் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட தவ்ஹீத்வாதிகளுக்கு உதவமுடியாத நிலையில் இருக்கிறோமோ என்று வேதனைப்படும் அளவுக்கு தமுமுக தவ்ஹீதுக்கு எதிராகக் காய்களைத் திட்டமிட்டு நகர்த்தி வந்தது.

உண்ணாவிரதம் சென்னை குறளகத்திற்கு எதிரில் நடைபெறுகின்றது. மக்கள் அந்தப் போராட்டத்திற்கும் வந்து கலந்து கொண்டனர். காவல்துறையின் கண்களை மிரளச் செய்யும் அளவுக்கு மக்கள் கூட்டம். 

ஆம்! தவ்ஹீத்வாதிகளின் கூட்டம் வந்து குவிந்தது. குறளகத்திற்கு எதிரில் குரல் கொடுத்தோம்; கைதுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இவர்களில் யார் மீது கை வைத்தாலும் மக்கள் சக்தி திரளும் என்பதை ஒரு முறை அல்ல! இரண்டாவது முறையாக, வ­மையாக எடுத்துக் காட்டினோம்.

(உண்ணாவிரதம் நடத்துவது மார்க்கஅடிப்படையில் கூடுமா? என்பது விவாதப் பொருளாகி, இறுதியில் கூடாது என்று முடிவானது. இதனால் அன்றிருந்து உண்ணாவிரதத்தைக் கை கழுவி விட்டோம்.)


ஜாக் - தமுமுக உரசலும் விரிசலும்

தான் தடை செய்யப்படலாம் என்ற கவலை ஜாக்கிற்கு இருந்தது. இந்தத் தயக்கத்தை பீ.ஜே. நன்கு புரிந்து வைத்திருந்தார். அதனால்தான், தன்னால் ஜாக்கிற்கு எந்தவொரு ஆபத்தும் வந்து விடக்கூடாது என்பதற்காக ஜாக்கின் தலைமை நிர்வாகக் குழு பொறுப்பிருந்து விலகினார். 

(இதுவே அவருக்குப் பின்னர் பாதகமானது. அவர் வளர்த்த அந்த ஜாக் இயக்கத்தில் உறுப்பினர் உரிமைகூட இல்லாமல் பறிக்கப்பட்டது)

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஜாக்கின் அரசியல், சமுதாயப் பிரிவாக தமுமுகவை செயல்படுத்திக் கொள்ளலாம். இதை வெளிப்படையாகக் கூட கமாலுத்தீன் மதனி செய்ய வேண்டியதில்லை. மறைமுகமாக அனுமதி தந்தால் போதும். அதற்காக பொறியாளர் அப்துஸ்ஸமது, குணங்குடி ஹனீபா ஆகியோர் கமாலுத்தீன் மதனியிடம் பைஅத் செய்வதற்குக் கூடத் தயாராக இருந்தார்கள். (அப்போது நாம் 'அமீர்' சித்தாந்தத்தை ஆதரித்த காலம் அது)

பீ.ஜே. உட்பட பலர் மாநில அமீரிடம் ஒரு போராட்டத்தையே நடத்தினார்கள். பலப்பல அமர்வுகள்! பலப்பல கலந்தாலோசனைகள்! பல்வேறு கட்ட முயற்சிகள்! இத்தனையும் எதற்கு? இவ்வளவு நாள் வியர்வை அல்ல! இரத்தத் துளிகளால் வளர்ந்த ஓர் இயக்கத்தை விட்டுப் பிரிந்து விடக் கூடாது என்பதற்காகவே!

ஜாக் என்ற கட்டமைப்பு வருவதற்கு முன்பே தவ்ஹீத் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்த சகோதரர் கலீல் ரசூல் அவர்களும், நானும் தனிப்பட்ட முறையில் கமாலுத்தீன் மதனியை நாகர் கோவி­ல் போய்ச் சந்தித்தோம். நீண்ட நேரம் உரையாடினோம்; கெஞ்சினோம். கல்லும் கரையும் என்பார்கள். ஆனால் கல்மனம் கொண்ட கமாலுத்தீன் மதனி கரையவில்லை.

இதன் பின்னர் திருச்சி அரிஸ்டோ ஹோட்ட­ல் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழகம் முழுவதிலும் உள்ள தாயீக்கள் கலந்து கொண்டனர். அதில் தமுமுகவின் அப்போதைய செயல்பாடுகள் குர்ஆன், ஹதீசுக்கு உட்பட்டவை தான் என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகளை குர்ஆன், ஹதீஸ் ஒளியிருந்து பீ.ஜே. எடுத்து வைத்தார். 

நீண்ட வாதப்பிரதிவாதங்களுக்குப் பிறகு கமாலுத்தீன் மதனி, நான் பரிசீலித்து விட்டுச் சொல்கிறேன் என்று இறுதியில் சொல்­விட்டுப் போனார். பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அதன் பிறகு அவர் பேசுகின்ற மேடை தோறும் தமுமுவை விமர்சிக்கலானார்.

கமாலுத்தீன் மதனி, தமுமுகவை அடாது விமர்சித்தாலும், விடாது நமது தரப்பில் சமரச முயற்சிகளை மேற்கொண்டோம். ஜாக் உருவாக்கத்தில் ஆரம்ப காலகட்டத்தில் பங்கெடுத்து, உழைப்பு தியாகங்கள் செய்த சகோதரர்களைத் திரட்டி மீண்டும் அதே அரிஸ்டோ ஹோட்ட­ல் ஒரு சமரசக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மக்களைத் திரட்டும் பணியில் நானும், ஸைபுல்லாஹ் ஹாஜா, அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி ஆகியோரும் ஈடுபட்டிருந் தோம். ஊர் ஊராகச் சென்று ஆட்களை அழைத்தோம். 

அதன் பின்னர் 31.08.1997 அன்று இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள இயலாமல் போனது. காரணம், அப்போது மேலப்பாளையத்தில் நடைபெற்ற சில அசம்பாவித சம்பவங்களில், சம்பந்தமில்லாமல் நானும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தேன்.

இந்தக் கூட்டத்திற்குப்பின் ஓர் இணக்கம் ஏற்பட்டது. ஜாக்கின் வேனை எடுத்துக் கொண்டு பீ.ஜே. திருச்சியில் நடைபெற்ற தமுமுக கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட அந்த இணக்கம் அற்ப ஆயுளிலேயே முடிந்து விட்டது. அந்த வருடம் ரமளான் பிறை விஷயத்தில் கமாலுத்தீன் தான்தோன்றித்தனமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் ஜாக் - தமுமுக உறவில் உரசல் அல்ல! விரிசல் ஏற்பட்டது.


தவ்ஹீத் பிரச்சாரக் குழு உதயம்

துளைத்தெடுத்த துரோகங்கள், வரம்பு மீறிய வாக்குமீறல்கள், அடுக்கடுக்கான அவமானங்கள் இவ்வளவுக்குப் பிறகும் இவருடன் இருக்க இயலாது என்பதைவிட இவர் நம்முடன் இருக்க விரும்பவில்லை, நம்மை வெளியேற்ற விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொண்டோம். 

வெளிநாட்டுத் தொடர்புகள், தொடர் வரவுகள் இவையெல்லாம் அவருக்குத் தன்னிறைவையும், தலைக்கனத்தையும் ஏற்படுத்தியிருந்தன. அதனால் ஜாக்கி­ருந்து வெளியேறி தவ்ஹீத் பிரச்சாரக் குழு என்ற இயக்கத் தைக் கண்டோம். 

தமுமுக என்ற அமைப்பு நம்மிடம் இருந்தாலும் தவ்ஹீதுக்கு என்று தனி அமைப்பு இருக்கட்டும் என்றெண்ணி இந்த அமைப்பைத் துவக்கினோம். அதற்கு ஹாமித் பக்ரி தலைவராக இருந்தார். அதன் பிறகு நான் (ஷம்சுல்லுஹா) தலைவராக நியமிக்கப்பட்டேன்.

இந்த அமைப்பின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, செய்யது முஹம்மது மதனீ, ஆர்.டி.ஓ.வில் பணி புரிந்த பஷீர் ஆகியோரின் முயற்சியில், நாகர் கோவில் ஹனீபா நகர் பள்ளிவாச­ல் ஒரு சமரசக் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டது. இதை சகோதரர் எம்.எஸ். சுலை மான் முன்னின்று ஏற்பாடு செய்தார்.

இந்த சமரசக் கூட்டத்திற்கு வர மாட்டேன் என்று கமாலுத்தீன் முரண்டு பிடித்தார். கடைசியில் ஒருவாறாக அவரைப் பள்ளியில் கொண்டு வந்து சேர்த்தனர்.

இறுதியில் பீ.ஜே. ஒரு சில கோரிக் கைகளை அல்லது நிபந்தனைகளை முன் வைத்தார்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger