தூய மார்க்கத்தை தழுவிய கேட் ஸ்டீபன்ஸ்-3


இருளிலிருந்து வெளிச்சத்திர்க்கு....3


குர்ஆனோடு  நான்:
பைத்துல் முகத்தஸிலிருந்து எனது சகோதரர் குர்ஆன் மொழிபெயர்ப்பு ஒன்றைக்
கொண்டு வந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தாலும் அந்த
வேதத்தைப் பற்றிய அலாதியான எதிர்பார்ப்பும் அது எனக்கு மகிழ்ச்சியளிக்கும் என்ற நம்பிக்கையும் நான் இழந்து போனதை அதில் கண்டெடுப்பேன் என்ற உறுதியும் அவரிடம் இருந்தன.
அந்த வேதத்தை நான் வாசித்த போது அதில் நேர்வழி உள்ளது என்பதை அறிந்தேன்.
அது நாம் படைக்கப்பட்டதன் நோக்கத்தையும் எனது வாழ்க்கையின் இலட்சியத்தையும் நான் எங்கிருந்து வந்தேன் என்ற விபரத்தையும் தெளிவுபடுத்தியது. அதேவேளையில் நான் இதுதான் சத்திய மார்க்கம் என்று
உணர்ந்தேன். இம் மார்க்கம் மேற்கத்தியவர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது, நடைமுறை சாத்தியமானது, வயதாகிவிட்ட நிலையில் ஆசைகள்
அடங்கி விட்ட போது மேற்கொள்ள வேண்டுமெனக் கூறப்படும் மற்ற சித்தாந்தங்களைப் போன்றதல்ல.

ஆன்மீகத்திற்கும் உடலுக்குமிடையே உள்ள தொடர்பைக் கண்டு நான் வியந்தேன்.
இவ்விரண்டும் பிரியாது, இணைந்திருக்கும் என்பதையும் உணர்ந்தேன். எனவே உலக வாழ்க்கையை வெறுக்காமல் காடு, மலைகளிடையே போய் தங்காமலேயே ஆன்மீகத்தை அனுபவிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தேன்.

அத்தோடு நிச்சயமாக நாம் இறைவனின் நாட்டத்திற்குக் கட்டுப்பட
வேண்டியவர்கள் என்பதற்காகவும் அதுவே வானவர்களின் அந்தஸ்த்திற்கு நம்மை
உயர்த்தக்கூடிய ஒரே வழி என்பதாகவும் உறுதி கொண்டேன். அப்போது தான்
இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்குள்
வலுப்பெற்றது.

அனைத்துமே அல்லாஹ்வின் படைப்புகளும் அவனது தயாரிப்புகளும் தான். அவனைச் சடைவோ உறக்கமோ பீடிப்பதில்லை என்பதை முதலாவதாக அறிந்தேன். அப்போது தான் நான் எனது தற்பெருமையிலிருந்து இறங்கலானேன். ஏனெனில் நான் என்னைப் படைத்தது யார்? என்பதையும் நான் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான எதார்த்தமான காரணம் யாது? என்பதையும் அறிந்து கொண்டேன். அது, இறைவனுடைய சட்டங்களை அறிந்து கொண்டு அவற்றிற்கு முழுமையாகக் கட்டுப்படுவதாகும். அதுவே இஸ்லாம் என்று அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நான் ஒரு முஸ்லிம் என்பதை
ஆழமாக உணர்ந்து கொண்டேன்.

இறைவன் பல தூதர்களைப் பலதரப்பட்ட சமூகங்களுக்கு அனுப்பி ஒரே தூதுச்
செய்தியைத்தான் அருளியிருக்கிறான் என்பதைத் திருக்குர்ஆனைப் படிக்கும்
போதுஅறிந்து கொண்டேன். ஆனாலும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் கருத்து
வேற்றுமை கொண்டதற்கு என்ன காரணம்? ஆம், யூதர்கள் ஈஸா (அலை) அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் அவர்கள் ஈஸாவின் கூற்றை மாற்றியவர்கள். ஏன், கிறிஸ்தவர்களும் கூட ஈஸா (அலை) அவர்களின் தூதுத்துவத்தைப் புரிந்து கொள்ள வில்லை. எனவே தான் ஈஸாவை இறைவனின் குமாரர் எனக் கருதினர் - என்றெல்லாம் எனக்குத் தெளிவானது.

குர்ஆனைப் புரட்டும் போதெல்லாம் அதுகூறக்கூடிய காரணங்களைப் பார்க்கும்
போது அவை அறிவுப்பூர்வமானவையாகவும் தர்க்க ரீதியானவையாகவும் உள்ளன
என்பதையறியலாம்.

மென்மேலும் நான் குர்ஆனைப் படித்து தொழுகை, ஜகாத், நடைமுறை ஒழுக்கம்
ஆகியவற்றைப் பற்றி அதிகமதிகமாக அறிந்து கொண்டேன். அப்போதும் நான்
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வில்லை. ஆனாலும் குர்ஆன்தான் நான் தொலைத்த
பொக்கிஷம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

இஸ்லாத்தை தழுவுதல்:

எனது சகோதரனைப் போலவே நானும் பைத்துல் முகத்தஸ் சென்று வர முடிவு
செய்தேன். அங்கு சென்று பள்ளியில் அமர்ந்திருக்கும் போது ஒருவர் வந்து
என்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்டார். நான் ஒரு முஸ்லிம் என்றேன். எனது
பெயரைக் கேட்டார். நான் ஸ்டீபன்ஸ் எனக் கூறியதும் அவர் திகைத்துப்
போனார். பிறகு நான் தொழுகையாளிகளுடன் வரிசையில் நின்று என்னால் இயன்ற வரை சில அசைவுகளை மேற்கொண்டு தொழுதேன்.

நான் லண்டன் திரும்பிய போது நஃபீஸா என்றொரு இஸ்லாமிய சகோதரியைச் சந்தித்த போது நான் இஸ்லாத்தைத் தழுவ விரும்புவதாகக் கூறினேன். அப்போதவர், நியூரீஜன்ட் பள்ளிவாசலுக்குச் செல்லுமாறு வழி காட்டினார்.
இது நான் குர்ஆனைப் படிக்க ஆரம்பித்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது
1977 ஆம் ஆண்டு நடந்தது. அந்த நேரத்தில் நான் எனது பெருமையையும்
ஆணவத்தையும் சாத்தானிய சேட்டைகளையும் விட்டொழித்து விட்டு ஒரேயொரு பாதையை நோக்கி முகம் திருப்ப வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

ஒரு வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பள்ளியில் உள்ள இமாமை –
தலைவரை நெருங்கிப் போய் அவர் முன்னிலையில் எனது முடிவை அறிவித்தேன்.
ஷஹாதத்தை மொழிந்தேன். பொருளாதாரமும் பிரபலமும் பெற்றுத் தராத நேர்வழியை எனக்குக் குர்ஆன் தான் கற்றுத் தந்தது. இன்று கிறிஸ்துவம் போன்ற பிற மதங்களைப் போலல்லாது அல்லாஹ்வோடு நேரடித் தொடர்பு கொள்ளக்கூடிய அளவுக்கு நான் இருக்கின்றேன்.

ஒரு முறை ஒரு இந்துப் பெண்மணி, 'இந்துமதக் கோட்பாடுகளைப் பற்றி
உங்களுக்குத் தெரியாது. நாங்கள் ஒரே கடவுளை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால்
இந்த விக்கிரகங்களை மன ஓர்மைக்காகவே பயன்படுத்துகின்றோம்' என்று
கூறினார். அவருடைய கூற்றிலிருந்து, இறைவனை நெருங்குவதற்கு இடைத் தரகர்கள் தேவைப்படுகின்றனர் என்று விளங்க முடிகின்றது. ஆனால் இஸ்லாமோ இவ்வாறான எல்லா தடைகளையும் தகர்த்து எறிந்து விட்டது. விசுவாசிகளையும்
மற்றவர்களையும் பிரித்தறியக் கூடிய ஒரே அடையாளம் தொழுகைதான். அதுவே
ஆத்மசுத்திக்கு வழி.

இறுதியாக,

எனது காரியங்கள் யாவும் இறைவனுடைய திருப்திக்காகவே அமைய வேண்டும் என நான் நாடுகின்றேன். நான் இஸ்லாத்தைத் தழுவிய இந்த வரலாற்றுத்தகவல்
படிப்போருக்கு படிப்பினையாக அமைய வேண்டும் என அல்லாஹ்வை வேண்டுகிறேன். நான் இஸ்லாத்தை தழுவும் முன்பு எந்த முஸ்லிமையும் சந்தித்ததுமில்லை வேறு யார் மூலமாகவும் நான் பாதிப்பு அடையவுமில்லை.

நான் குர்ஆனை படிக்கும் போது கவனித்தேன். மனிதனில் முழுமையானவர் என்று
எவருமிலர். ஆனால் இஸ்லாமிய மார்க்கமோ பரிபூரணமானது. எனவே திருமறை
குர்ஆனையும் திருநபி வழியையும் நாம் மேற்கொள்ளும் போது இவ்வுலக
வாழ்க்கையில் நாம் வெற்றியடையலாம்.

நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை நாம் பின்பற்றுவதற்கு அல்லாஹ் நமக்கு
அருள்புரிவானாக. . !முற்று பெற்றது....
நன்றி - jesusinvites 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger