டிசம்பர் 13- நாடாளுமன்ற தாக்குதல்-அப்சல் தூக்கு: அருந்ததி ராய் எழுப்பிய 13 கேள்விகள்!


டிசம்பர் 13, 2001-இல் நாடாளுமன்ற வளாகம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரையான விவகாரத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்சல் குரு இவையனைத்தையும் திட்டமிட்டதாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இன்று தண்டனை ரகசியமாக நிறைவேற்றப்படவும் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தபோது சமூக ஆர்வலரும், இலக்கிய எழுத்தாளரும் அறிவு ஜீவியுமான அருந்ததி ராய் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் ஒரு 13 கேள்விகளை எழுப்பினார். அதன் தமிழ் வடிவம் இதோ:


கேள்வி 1: நாடாளுமன்றம் தாக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன்பே அரசும் போலீசும் நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்று கூறிவந்துள்ளது. டிசம்பர் 12,2001-இல் பிரதமர் வாஜ்பாய் கூட்டம் ஒன்றில் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் உள்ளதாக எச்சரிக்கை விடுத்தார். மறுநாளே தாக்குதல் நடந்தது. "மேம்பட்ட பாதுகாப்பு பயிற்சி" என்று கூறினார்களே அப்படியிருக்கும்போது வெடிபொருட்கள் நிரம்பிய கார்குண்டு எப்படி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது?

கேள்வி 2: தாக்குதல் நடந்து முடிந்து சிலநாட்களிலேயே இந்த தாக்குதலை ஜைஷே மொகமட் மற்றும் லஸ்க‌ர் இ தொ‌ய்பா திட்டமிட்டு நடத்தியுள்ளது என்று டெல்லி போலீஸின் சிறப்பு செல் கூறியது. இந்த தாக்குதலை தலைமை ஏற்று நடத்தியவர் மொகமட் என்பவர் என்றும் கூறியது. இவர் ஐ.சி.814 - விமானத்தை 1999ஆம் ஆண்டு கடத்தியவர் என்று கூறபட்டது. பிறகு இது சிபிஐ-யால் மறுக்கப்பட்டது. இவையெல்லாம் கோர்ட்டில் சாட்சி பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. டெல்லி ஸ்பெஷல் செல்லிற்கு என்ன ஆதாரம் இருந்தது?

கேள்வி 3: இந்த அனைத்து தாக்குதலும் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த படங்களைக் காட்டவேண்டும் என்று கபில் சிபல் கோரிக்கை வைத்தார். இவரது கோரிக்கையை ராஜ்யசபா துணை சபாநாயகர் நஜ்மா ஹெப்துல்லா ஆதரித்தார். மேலும் இவர் இந்த சம்பவம் குறித்து பல குழப்பங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா கூறும்போது, 'நான் பார்த்தபோது காரிலிருந்து 6 பேர் இறங்கினர். 5 பேர்தான் கொல்லப்பட்டனர். சிசிடிவி 6 பேர் இருந்ததைக் காட்டியது' என்றார். தாஸ் முன்ஷி சரி என்றால் போலீஸ் ஏன் 5 பேர்தான் காரில் இருந்ததாக கூறவேண்டும்? யார் அந்த 6வது நபர்? அவர் எங்கே இப்போது? சிசிடிவி படங்களை அரசு தரப்பு சாட்சியமாக ஏன் கோர்ட்டில் போட்டுக் காட்டவில்லை? ஏன் அது பொதுமக்கள் பார்வைக்கு விடப்படவில்லை?

கேள்வி 4: இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டபோது நாடாளுமன்றம் ஏன் ஒத்தி வைக்கப்பட்டது?

கேள்வி 5 : டிசம்பர் 13‌க்கு பிறகு சில நாட்கள் கழித்து பாகிஸ்தானின் தொடர்பிருப்பதாக சுமார் 5 லட்சம் ராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பினர். துணைக்கண்டம் அணு ஆயுதப் போருக்கு தயாரானது போல்தான் இருந்தது. அப்சல் குருவை சித்ரவதை செய்து வாங்கப்பட்ட வாக்குமூலம் தவிர முரண்பட முடியாத சாட்சியம் என்ன இருந்தது?

கேள்வி 6: டிசம்பர் 13, நாடாளுமன்ற தாக்குதலுக்கு நீண்ட நாட்களுக்கு முன்பாகவே எல்லையில் ராணுவத்தினரை குவிக்கும் திட்டம் நடந்தேறியது என்பது உண்மைதானா?

கேள்வி 7 : சுமார் 1 ஆண்டு எல்லையில் இந்த ராணுவத்தினரின் இருப்புக்கு செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு? சரியாக கையாளத்தெரியாது வெடித்த கண்ணி வெடிகளினால் எவ்வளவு ராணுவத்தினர், பொது ஜனங்கள் உயிரிழந்தனர்? கிராமங்கள் வழியாக லாரிகளும், ராணுவத்தினரும் ரோந்தில் ஈடுபட்டதால் எவ்வளவு விவசாயிகள் தங்களது வீடுகளையும் விளை நிலங்களையும் இழந்தனர்? அவர்களது நிலங்களில் கண்ணி வெடிகள் வைக்கப்பட்டதா இல்லையா?

கேள்வி 8: எந்த ஒரு கிரிமினல் குற்ற விசாரணையிலும் ஒருவ‌ர் எப்படி குற்றவாளி என்று கண்டுபிடித்தோம் என்பதை போலீஸ் கோர்ட்டிற்கு விளக்குவது அவசியம். எப்படி மொகமது அப்சல் குருவை போலீஸ் பிடித்தது? ஸ்பெஷல் செல் கூறியது ‌கிலானி மூலம் அப்சலைப் பிடித்தோம் என்று. ஆனால் அப்சல் குருவை பிடிக்குமாறு ஜம்மு காஷ்மீர் போலீசுக்கு செய்தி அனுப்பப்பட்டது ‌கிலானியை கைது செய்வதற்கு முன்பே! எப்படி ஸ்பெஷல் செல் அப்சல் குருவை இதில் குற்றவாளியாக சேர்த்தது?

கேள்வி 9 : அப்சல் குரு சரணடைந்த தீவிரவாதி. இவர் தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினருடன் தொடர்பில் இருந்துள்ளார், குறிப்பாக சிறப்பு அதிரடிப்படையினருடன் இவர் அடிக்கடி தொடர்பில் இருந்துள்ளார் என்பதை கோர்ட்டுகளே ஒப்புக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர்களது கண்காணிப்பின் கீழ் இருந்த அப்சல் குரு எப்படி இவ்வளவு பெரிய சதித் திட்டத்தை தீட்டினார்?

கேள்வி 10: சிறப்பு அதிரடி படையின் சித்ரவதைக்கூடத்தில் சிக்கிய, அவர்களுடன் அடிக்கடி தொடர்புடைய, அவர்களது கண்காணிப்பின் கீழ் உள்ள அப்சல் குருவை வைத்து ல‌ஷ்ய‌ர் இ தொ‌ய்பா, ஜைஷீ அமைப்புகள் தாக்குதலை திட்டமிட்டிருக்க முடியுமா?

கேள்வி 11: அப்சல் குரு கோர்ட்டில் கூறும்போது, அப்சல் குருவை மொகமட் என்பவருக்கு அறிமுகம் செய்தவர் டாரிக் அவர்தான் மொகமடை டெல்லிக்கு அழைத்து செல்லக் கூறினார் என்றார். தாரிக் அதிரடிப்படையில் வேலை செய்பவர். போலீஸ் குற்றப்பத்திரிக்கையில் தாரிக் இருக்கிறார். ஆனால் அவர் எங்கே?

கேள்வி 12: டிசம்பர் 19, 2001-இல் தானே போலீஸ் கமிஷனர் எஸ்.எம். ஷங்கரி, நாடாளுமன்ற தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் மொகமது யாசின் படே மொகமட் என்றும், இவர் லஸ்கரைச் சேர்ந்தவர் என்றும், அவர் 2000 ஆம் ஆண்டே மும்பையில் கைது செய்யப்பட்டார் என்றும் இவரை உடனடியாக ஜம்மு போலீசிடம் ஒப்படைத்ததாகவும் கூறினார். இவர் கூறுவது உண்மையெனில் ஜம்மு காஷ்மீர் போலீஸ் காவலில் இருந்த ஒருவர் நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டுள்ளாரா? இது தவறு மொகமது யாசின் எங்கே?

கேள்வி 13: கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகள் யார் யார்? ஏன் இன்று வரை நமக்கு அது பற்றி கூறப்படவில்லை?


Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger