இஸ்லாமியத் திருமணம் - PJ - தொடர் 5


திருமண துஆ

நமது நாட்டில் வழக்கமாக திருமணத்தின் போது ஒரு துஆ ஓதி வருகின்றனர். அல்லாஹும்ம அல்லிப் பைனஹுமா..... என்று ஓதப்படும் அந்த துஆ நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலோ ஸஹாபாக்கள் காலத்திலோ, தாபியீன்கள் காலத்திலோ, நான்கு இமாம்களின் காலத்திலோ நடைமுறையில் இருந்ததில்லை. தமிழகத்தைச் சேர்ந்த சிலரது கண்டுபிடிப்பாகும் இது.

ஆதம்லிஹவ்வா போல் வாழ்க! அய்யூப்லிரஹிமா போல் வாழ்க! என்ற கருத்தில் பல நபிமார்களின் இல்லறம் போல் வாழுமாறு பிரார்த்திக்கும் விதமாக இந்த துஆ அமைந்துள்ளது.

அந்த நபிமார்களும் அவர்களின் மனைவியரும் எப்படி இல்லறம் நடத்தினார்கள் என்ற விபரமோ, அவர்களின் மனைவியர் அவர்களுக்கு எந்த அளவு கட்டுப்பட்டு நடந்தனர் என்ற விபரமோ நமக்குத் தெரியாது. அவர்களின் இல்லறம் எப்படி இருந்தது என்பது தெரியாமல் அது போன்ற வாழ்க்கையைக்கேட்பது அர்த்தமற்றதாகும். உனக்கு அறிவில்லாத விஷயங்களை நீ பின்பற்ற வேண்டாம் என்று அல்குர்ஆன் கூறுகிறது. (அல்குர்ஆன் 7:38)
 

எனவே இது போன்ற துஆக்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கூட்டாக வேறு துஆக்களை ஓதுவதற்கும் ஆதாரம் இல்லை.

மணமக்களுக்கு நபிகள் நயாகம் (ஸல்) அவர்கள் பல துஆக்களைச் செய்துள்ளனர்.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) தமக்குத் திருமணம் நடந்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது பாரகல்லாஹு லக (அல்லாஹ் உனக்கு பரகத் லி புலனுக்கு எட்டாத பேரருள் - செய்வானாக) எனக் கூறினார்கள். (புகாரி 5155, 6386.)

இதை ஆதாரமாகக் கொண்டு பாரகல்லாஹு லக என்று கூறி வாழ்த்தலாம்.


பாரகல்லாஹு லகும், வபாரக அலைகும் என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத் தந்ததாகவும் ஹதீஸ் உள்ளது. (அஹ்மத் 15181)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர் என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ 1011, அபூதாவூத் 1819, அஹ்மத் 8599


அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக என்பது இதன் பொருள். ஒவ்வொருவரும் இந்த துஆவை வாழ்த்தைக் கூற வேண்டும்.


தவிர்க்கப்பட வேண்டியவை

திருமணத்தின் போது பல்வேறு சடங்குகள் முஸ்லிம் சமுதாயத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. இஸ்லாத்திற்கும் அந்த சடங்குகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. எனவே அது போன்ற சடங்குகளைத் தவிர்க்க வேண்டும்.

  • தாலி கட்டுதல் , கருகமணி கட்டுதல்
  • ஆரத்தி எடுத்தல்
  • குலவையிடுதல்
  • திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையைக் கட்டியணைத்து வாழ்த்துதல்
  • ஆண்களும் பெண்களுமாக மணமக்களைக் கேலி செய்தல்
  • வாழை மரம் நடுதல்
  • மாப்பிள்ளை ஊர்வலம்
  • ஆடல், பாடல், கச்சேரிகள் நடத்துதல்
  • பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின் பல சந்தர்ப்பங்களில் சீர் வரிசை என்ற பெயரில் கேட்டு வாங்குவது.
  • முதல் குழந்தைக்கு நகை செய்து போடுமாறு பெண் வீட்டாரைக் கட்டாயப்படுத்துதல்.
  • தலைப்பிரசவச் செலவை பெண் வீட்டார் தலையில் சுமத்துவது.
  • பல்வேறு காரணங்களை காட்டி பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண் வீட்டாரிடம் விருந்துகளைக் கேட்பது.

பிற மதத்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட இந்தக் கொடுமைகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர் என்பது நபிமொழி. நூல்: அபூதாவூத் 3512


அன்பளிப்பு மொய்

திருமணத்தின் போதும், மற்ற சமயங்களிலும் உற்றாரிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் அன்பளிப்புப் பெறுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.

ஒருவருக்கு அவரது சகோதரர்களிடமிருந்து நல்ல பொருள் ஏதேனும் அவர் கேட்காமலும், எதிர்பார்க்காமலும் கிடைக்குமேயானால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளவும். ஏனெனில் அது அல்லாஹ் அவருக்கு வழங்கிய பாக்கியமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: காலித் பின் அதீ (ரலி) நூல்: புகாரி 1380, 6630
 
அன்பளிப்புகளை மறுக்கலாகாது என்பதை இந்த ஹதீஸ் கூறுகிறது.

மொய் என்றும் ஸலாமீ என்றும் கூறப்படும் போலித்தன மான அன்பளிப்புகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு பொருளைக் கொடுத்து விட்டு தங்களுக்கு அது திரும்பக் கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே மொய் என்பது அமைந்துள்ளது.

கொடுத்து விட்டு திரும்பிப் பெற எண்ணும் போது அது அன்பளிப்பாகாது.

அன்பளிப்புச் செய்து விட்டு அதைத் திரும்ப எதிர்பார்ப்பவன் வாந்தி எடுத்துவிட்டு அதையே திரும்ப சாப்பிடுபவனைப் போன்றவன் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1490, 2589, 2621, 2623, 3003, 6975


இந்த வெறுக்கத் தக்க போலி அன்பளிப்புகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்..
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger