மாநிலங்களவைத் தேர்தல்களில் திமுக போட்டியிடுவது குறித்து இன்னமும் முடிவேதும் எடுக்கப்படவில்லை என திமுக தலைவர் மு கருணாநிதி கூறியிருக்கிறார்.
வியாழனன்று சென்னையில் நடந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்னமும் அவகாசம் இருக்கிறது, மற்ற கட்சிகளுடனும் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றார். வேறு எத்தகவலையும் அவர் அளிக்கவில்லை.
தற்போதைய சூழலில் ஒருவர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட அவருக்கு 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவசியம்.
ஆனால் திமுகவிற்கு சட்டமன்றத்தில் 23 இடங்களே உள்ளன.
தேமுதிக
அஇஅதிமுகவுடன் முரண்பட்டு நிற்கும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்திற்கு 29 உறுப்பினர்கள் இருந்தாலும், அவர்களில் ஏழு பேர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர்.
கட்சி தொடர்ந்து பலவீனமடைந்து வரும் நிலையில், அஇஅதிமுக எதிர்ப்பைத் தீவிரப்படுத்தாமல் மாநிலங்களவைத் தேர்தல்களைப் புறக்கணிக்கலாமா என கட்சித்தலைவர் விஜயகாந்த் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதனால்தானோ என்னவோ தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு கோரி திமுக செய்தி அனுப்பியும் அவர் எவ்வித முடிவும் எடுத்ததாகத் தெரியவில்லை என நோக்கர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கடந்த தேர்தல்களில் அஇஅதிமுக கூட்டணியிலிருந்த இன்னொரு கட்சியான (சிபிஎம்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவைப் பெற திமுக முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அக்கட்சிக்கு சட்டமன்றத்தில் 10 இடங்கள் உள்ளன. ஆனால் இன்னமும் சிபிஎம்மும் எந்த ஒரு முடிவையும் அறிவிக்கவில்லை.
சட்டமன்றத்தில் 8 உறுப்பினர்களைக் கொண்ட (சிபிஐ) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தன் நிலை குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
டி ராஜா
தற்போது பதவிக்காலம் முடிந்த ஆறு தமிழக மாநிலங்களவை உறுப்பினர்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி ராஜாவும் ஒருவர் . அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட அஇஅதிமுக உதவும் என அக்கட்சி நம்பியது.
இன்றைய கட்டத்தில் ஆளும் அஇஅதிமுகவிற்கு மிக விசுவாசமாக இருக்கும் கட்சியாக அது பார்க்கப்படுகிறது.
ஆனால் அஇஅதிமுகவோ ஐந்து வேட்பாளர்களை நிறுத்திவிட்டது. அவர்களில் நால்வர் அ இஅதிமுக உறுப்பினர்கள் ஆதரவில் வென்றுவிடமுடியும்.
ஐந்தாவது வேட்பாளர் வெல்ல மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்படும்.
இந்நிலையில் டி ராஜா வெல்வது மிகக் கடினம். ஆனால் தேமுதிக தேர்தல்களைப் புறக்கணித்தால் வெல்வதற்குத் தேவையான வாக்கு எண்ணிக்கை குறையும். அத்தகைய சூழல் உருவானால் ராஜா போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது.
Post a Comment