ராஜ்ய சபா தேர்தல் - ஸ்டாலினுக்கு என்ன லாபம்?

ராஜ்யசபா தேர்தலில் கனிமொழியைப் போட்டியிட வைக்கும் திட்டத்துடன் திமுக தலைவர் கருணாநிதி பாமகவின் ஆதரவைக் கேட்டு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருந்த நிலையில்,
கூட்டம் ஒன்றில் பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின் ''எந்த திராவிடக் கட்சி பாமகவுடன் கூட்டணி அமைக்க அலைந்தது?'' எனப் பேசி கனிமொழிக்குப் பாமக தரவிருந்த ஆதரவுக்குத் தடை போட்டார்.

கனிமொழி எம்.பி ஆவதை ஸ்டாலின் விரும்பாததன் காரணமாகவே பாமகவை வெறுப்பேற்றும் விதமாக ஸ்டாலின் பேசியதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் திமுக செயற்குழுக் கூட்டத்தில் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலே ராஜ்யசபா தேர்தலில் திமுகவின் அதிகாரப் பூர்வ வேட்பாளராக ஸ்டாலின் சகிதமாக தலைமைச் செயலகம் சென்று கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்.

கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தவுடன் எதிர்க் கட்சியான தேமுதிகவும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தது. தேமுதிக பொருளாளர் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப் பட்டு வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதிமுகவின் 4 வேட்பாளர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோரின் வெற்றி உறுதி செய்யப் பட்டு விட்ட நிலையில் மீதமுள்ள ஒரு இடத்துக்கு எதிர்க் கட்சியான தேமுதிகவும், திமுகவும் மோதுவது இரண்டு கட்சிகளுக்குமே ஒரு வித நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் தேமுதிகவின் பலம் 29. அதில் 7 அதிருப்தி எம்.எல்.ஏ க்களின் வாக்குகள் போக மீதமிருப்பது 22. தேமுதிகவுக்கு உள்ள ஒரே ஆறுதல் அதன் சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்க 6 மாத காலத் தடை விதிக்கப் பட்ட எம்.எல் ஏ க்களும் வாக்கு அளிக்கலாம் என்ற உத்தரவே. இருப்பினும் 22 வாக்குகள் பதிவாகுமா அல்லது அதிலும் ஒன்றிரண்டு வாக்குகள் குறையுமா என்பது தேர்தல் முடிந்த பின்னர் தான் தெரியும்.

இந்தத் தேர்தலில் தேமுதிகவை ஓரம் கட்டி திமுக வெற்றி பெறுவதன் மூலம் கனிமொழிக்கு எம்.பி பதவி கிடைக்கும். அதே சமயத்தில் எதிர்க் கட்சியால் ஒரு எம் பி பதவியைக் கைப் பற்ற முடியாத நிலையில் தேமுதிக எதிர்க் கட்சிக்குத் தகுதியான கட்சியா என்ற வாதமும் எழக் கூடும்.

தேமுதிகவுக்கு 22 வாக்குகளோ அல்லது அதற்கும் குறைவான வாக்குகளோ கிடைக்கும் நிலையில் 23 உறுப்பினர்களை வைத்து இருக்கும் திமுக எதிர்க் கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்ற முயற்சி செய்யலாம். அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் சட்டமன்ற கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கக் கூடும்.

இனி காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்று பேசிய ஸ்டாலின் தம் ஆதரவாளரான டி.ஆர் பாலுவை டெல்லிக்கு அனுப்பி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து திமுகவுக்கு காங்கிரசின் ஆதரவைக் கோரியுள்ளார்.

மற்றொரு பக்கம் தாமே அன்புமணியைச் சந்தித்து பாமகவின் 3 உறுப்பினர்களின் ஆதரவைக் கேட்டுள்ளார். மனித நேய மக்கள் கட்சியின் ஆதரவையும் திமுகவுக்கு உறுதிப் படுத்தி விட்டார்.

ஒருவேளை தேமுதிக வேட்பாளர் தம் வேட்புமனுவை வாபஸ் பெற்று விட்டால் கனிமொழி போட்டியில்லாமல் வெற்றி பெறுவார். அவ்வாறில்லாமல் போட்டி இருந்து தேமுதிக தோற்கும் நிலை ஏற்பட்டால் கனிமொழிக்கு எம். பி பதவியும் ஸ்டாலினுக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியும் கிடைக்கலாம்.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger