குவைத்: வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் அங்கு வசித்து வரும் பிற நாட்டவர்களை வெளியேற்றும் நோக்குடன் கடுமையான சோதனைகள் நடைபெறுவது குறித்து ஏற்கனவே சில செய்திகளை வெளியிட்டிருந்தோம்.
இத்தருணத்தில் குவைத்தில் வசித்து வரும் தமிழர்கள் குவைத்தின் சட்ட விதிகளைப் பற்றி தெளிவு பெற்று பாதுகாப்புடன் இருக்கும் நோக்குடன் இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது. மேலும் சில சட்ட விதிகள் ஏறகனவே பிரசுரிக்கப்பட்டுள்ள செய்திக் கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ளது.
ஃகாதீம் என்று அழைக்கப்படும் வீட்டுப்பணியாள் விசாவில் வேலைக்கு வந்து, பணிக்கு எடுத்தவரிடம் (ஸ்பான்சர்) பணிபுரியாமல் வேறு ஒருவரிடம் பணிபுரிவது குற்றம் ஆகும். தற்போது நடைபெற்று வரும் சோதனை இத்தகையோருக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஸ்பான்சர் வசிக்கும் முகவரியல்லாத இடத்தில் அந்த நபர் வசிப்பதே குற்றமாக கருதப்படும்.
குடும்பச் சார்பு விசாவில் (Family - Dependent visa) கணவருடைய ஸ்பான்சர்ஷிப் கீழ் இருக்கும் உறுப்பினர்கள் நிறுவனங்களிலோ அல்லது பிறரிடமோ பணிபுரிதல் சட்ட விதிகளின்படி குற்றமாகும். இல்லதரசிகள் பலர் பள்ளிக்கூடங்களில் ஆசிரியைகளாகவும், நிறுவனங்களில் செயலாளர் (Secretary) உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகின்றனர். இவர்களுக்கும் இந்த சோதனை அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
வாகனம் வைத்திருப்போர் தாங்கள் பணிக்குச் செல்லும் போது பிறரை தங்களுடைய வாகனத்தில் ஏற்றிச் செல்வதையும் இதற்கு மாதக்கட்டணம் பெற்றுக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். வாடகைப் வாகன உரிமம் (Taxi License) பெற்றிருப்பவர்கள் தவிர பிறர் இது போன்ற தொழிலில் ஈடுபடுதல் சட்ட விதிகளின்படி குற்றச் செயலாகும். இவர்களும் தற்போதய சோதனையால் பாதிக்கபடுகின்றனர்.
சோதனை நடைபெறும் போது குவைத் காவல்துறையினரில் பெரும்பாலோர் நாம் சொல்வதை காது கொடுத்துக் கேட்க கூடிய இயல்பு நிலையில் இருப்பதில்லை. இதனால் முறையான ஆவணங்களை பெற்றிருப்போர் கூட பல சமயங்களில் பாதிக்கப்பட்டு அலை கழிக்கப்பட கூடிய சூழல் நிலவி வருகின்றது.
தொகுப்பு: எச்.உமர் ஃபாரூக், குவைத்
இந்நேரம்
Post a Comment