திருமணம் செய்யாமல் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டால், அதுவும் திருமணம்தான் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது சரியா? திருமணம் செய்யாமல், இருவர் சேர்ந்து வாழ்வதும் திருமணம் மூலம் சேர்ந்து வாழ்வதும் சமமானதுதான் என்று இதை ஒட்டி எழுப்பப்படும் வாதங்கள் சரியானவையா?
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் முஸ்லிம்களாக உள்ளதால், முஸ்லிம் சட்டத்தில் நீதி மன்றம் தலையிடுவதற்கு இதை முன்னோடியாக எடுத்துக் கொள்ளலாமா?
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டின் சட்டப்படி சரியானதுதானா என்றால் நமது சட்டத்தில் உள்ள குளறுபடிகள் காரணமாக இதைச் சரி என்றும் வாதிட முடியும். தவறு என்றும் வாதிட முடியும்.
நமது நாட்டின் சட்டப்படி ஒரு ஆணும் பெண்ணும் மனம் விரும்பி உடலுறவு கொள்வது விபச்சாரமாகக் கருதப்படுவதில்லை. அவர்கள் மீது விபச்சார வழக்குப் போட முடியாது. விபச்சாரம் இல்லை என்று சட்டம் சொன்னால் அது திருமணம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று புரிந்து கொள்ள முடியும்.
அது போல் ஒருவனுக்கு மனைவி இருக்கும் போது இன்னொருத்தியை அல்லது இன்னும் பலரை வைப்பாட்டியாக வைத்துக் கொண்டு குடும்பம் நடத்தினால் அந்த ஆண் மீதும், பெண் மீதும் விபச்சார வழக்குகள் போட முடியாது. அதாவது அது சட்டப்படியான செயல்தான் என்று நமது சட்டம் சொல்கிறது.
கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதும், விபச்சாரத்தைத் தொழிலாக நடத்துவதும் தான் நமது நாட்டு சட்டப்படி குற்றமாகத் தெரிகிறது. இதை மட்டும் கவனத்தில் கொள்ளும் நீதிபதிகள் சட்டப்படி குற்றமில்லாத வகையில் உடலுறவு நடந்துள்ளதால் அது கணவன் மனைவி உறவாகத்தான் ஆகும் என்று தீர்ப்பளித்து விடுகிறார்கள்.
விரும்பிச் செய்தால் அது குற்றமில்லை என்று சட்டம் இயற்றப்பட்டுள்ள நாட்டில் இப்படி நீதிபதி தீர்ப்பளித்ததை முற்றாக எதிர்க்க முடியாது. அவர் மேற்கண்ட வாதங்களை வைத்து தனது தீர்ப்பை நியாயப்படுத்துவார். ஆனால் இதற்கு முரணாகத் தீர்பளிக்கும் வகையிலும் நமது நாட்டுச் சட்டம் அமைந்துள்ளதைக் காண முடிகிறது.
நமது நாட்டில் முஸ்லிமல்லாதவர்கள் ஒன்றுக்கு மேல் திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும்.
ஒரு மனிதனுக்கு மனைவி இருக்கும் போது இன்னொருத்தியை வைப்பாட்டியாக வைத்துக் கொள்கிறான்; அல்லது பலரை வைப்பாட்டியாக வைத்துக் கொள்கிறான்.
வைப்பாட்டிகள் நீதிமன்றத்தை அணுகி எங்களுடன் மனவிருப்பத்துடன் பத்து வருடம் குடும்பம் நடத்தினார். எங்கள் பிள்ளைகளுக்கு தந்தை எனக் கூறி பள்ளிச் சான்றிதழிலும் குறிப்பிட்டுள்ளார். எனவே எங்களையும் அவரது மனைவியராக ஆக்கி உத்தரவு போட வேண்டும் என்று வழக்குப் போட்டால் என்ன தீர்ப்பு அளிப்பார்கள்? என்ன தீர்ப்பு அளித்துள்ளார்கள்?
இரண்டாம் திருமணம் செய்து நீதிமன்றங்களால் தண்டிக்கப்படாதவர்கள் :
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த, இந்து மதத்தைச் சேர்ந்த பாவ்ராவ் சங்கர் லோகாண்டே முதல் மனைவி இருக்க இரண்டாம் திருமணம் செய்தார். முதல் மனைவி இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். கீழ்நிலை நீதிமன்றங்களும், உயர் நீதிமன்றமும் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தன.
ஆனால் பாவ்ராவ் சங்கர் லோகாண்டே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தபோது இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் இரண்டாவதாக நடந்தது திருமணமே இல்லை. எனவே பாவ்ராவ் சங்கர் இரண்டாம் திருமணம் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
(பாவ்ராவ் சங்கர் லோகாண்டே எதிர் மராட்டிய அரசு 1965 - 1566)
சுரேஷ் சந்திர கோஷ் என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். அவரது மனைவி பிரியா பாலா கோஷ் அவருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் இரண்டாம் திருமணம் செய்த சுரேஷ் சந்திர கோஷைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் நடந்தது நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி சுரேஷைத் தண்டிக்க மறுத்து விட்டது.
(பிரியா பாலா கோஷ் எதிர் சுரேஷ் சந்திர கோஷ் AIR 1971 sc 1153)
ஆந்திராவைச் சேர்ந்த எல்.வெங்கடரெட்டி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்தார். முதல் மனைவி லிங்காரி ஒப்புல்லம்மா கணவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் வெங்கடரெட்டியைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின்போது சில சடங்குகள் செய்யப்படாததே காரணம்.
(லிங்காரி ஒப்புல்லம்மா எதிர் எல்.வெங்கடரெட்டி மற்றும் சிலர் AIR 1979 sc 848)
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பங்காரி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் அது திருமணமே அல்ல. இரண்டாம் மனைவி அவரது வைப்பாட்டி தான். வைப்பாட்டி வைத்துக் கொள்வதைத் தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்று காஷ்மீர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
(பங்காரி எதிர் ஜம்மு கஷ்மீர் மாநில அரசு AIR 1965 jk105)
இப்படி ஏராளமான வழக்குகளில் நாட்டின் உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ளன.
மேற்கண்ட நீதிபதியிடம் இது போன்ற வழக்கு வந்தால் உடலுறவு நடந்துவிட்டதால் மனைவியர் தான் என்று சொல்வாரா? சொல்ல மாட்டார் என்றுதான் நாம் நினைக்கிறோம்.
இவர்களும் மனைவியர் தான் என்று சொல்வது மட்டும் போதாது. ஒரு மனைவிக்கு மேல் திருமணம் செய்யக் கூடாது என்ற சட்டத்தை மீறியதற்காக அவருக்கு உரிய சிறைத் தண்டனை அளித்தும் உத்தரவிட வேண்டும்.
நாடு சுதந்திரமடைந்தது முதல் ஒரே ஒரு வழக்கில் கூட இப்படி தீர்ப்பளிக்கப்பட்டதாக நாம் அறியவில்லை. பல வழக்கறிஞர்களிடம் கேட்ட போது அவர்களுக்கும் இப்படி தீர்ப்பளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அப்படியானால் உடலுறவு நடந்தாலே போதும்! பள்ளிச்சான்றிதழில் பெயர் இருந்தாலே போதும் என்ற வாதம் இப்போது என்னாவது?
மேலை நாடுகளில் இருந்த குரூப் செக்ஸ் எனும் கலாச்சாரம் இங்கேயும் பரவி வருகிறது. ஒரு பெண்ணுடன் இரண்டு மூன்று ஆண்கள் பல வருடங்கள் இப்படி உடலுறவு கொண்டால் அந்தப் பெண்ணிற்கு அந்த இருவரும் கணவர்களா?
அந்தப் பெண்ணுக்கு பிறந்த ஒரு குழந்தைக்கு ஒருவன் தந்தை எனவும், இன்னொரு குழந்தைக்கு இன்னொருவன் தந்தை எனவும் பள்ளிச் சான்றிதழில் குறிப்பிட்டு இருந்தால் நீதிபதி எப்படித் தீர்ப்பளிப்பார்? அந்தப் பெண்ணுக்கு இருவரையும் கணவர்கள் என்று தீர்ப்பளிப்பாரா?
குழப்பமான சட்டங்களை வைத்துக் கொண்டு தாமும் குழம்பி மக்களையும் குழப்புகிறார்கள் என்பது இது போன்ற முரண்பட்ட தீர்ப்புகள் மூலம் தெரிய வருகிறது.
இஸ்லாம் சொல்வதுபோல திருமணம் மூலம் தவிர உடலுறவு நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் இருந்தால் பெண்ணும் ஆணைத் தன் வலையில் வீழ்த்த நினைக்க மாட்டாள். ஆணும் பெண்ணை ஏமாற்றி அனுபவிக்க நினைக்க மாட்டான். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினால் சட்டப்படி திருமணம் செய்து கொள்வார்கள். இதுபற்றிய வழக்குகள் நீதிமன்றத்துக்கே வராமல் போய்விடும்.
மேற்படி தீர்ப்பைப்பற்றி சட்டத்தின் பார்வை இதுதான்.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் அறிவு ஜீவிகள் என்ற போர்வையில் நாட்டைக் கெடுக்கும் விஷக்கிருமிகள் புரட்சிகரமான தீர்ப்பு என்று கிருக்கித் தள்ளுகின்றனர்.
திருமணம் செய்தாலும் அவர்களிடையே பிரச்சனை வருகிறது; திருமணம் செய்யாவிட்டாலும் பிரச்சனை வருகிறது. எனவே இரண்டும் ஒன்றுதான் என்று உளறிக் கொட்டுகின்றனர்.
விஷம் குடித்தாலும் சாகிறார்கள் விஷம் குடிக்காதவர்களும் சாகிறார்கள். இரண்டும் ஒன்று தான் என்று கூறுவதற்குச் சமமாக இந்த விஷக்கிருமிகளின் வாதங்கள் அமைந்துள்ளன.
ஆரோக்கியமாக இருந்தவனும் சாவான், நோயாளியும் சாவான் என்பதால் இரண்டும் ஒன்றாகி விடாது. நோயாளிகளில் அதிக சதவிகிதம் சாவார்கள். ஆரோக்கியமானவர்களில் குறைந்த சதவிகிதம் சாவார்கள்.
நாட்டில் சுமார் 95 சதவிகிதம் மக்கள் திருமண வாழ்க்கையில் உள்ளனர். திருமணம் ஆகாமலே குடும்பம் நடத்துபவர்கள் 5 சதவிகிதம் கூட இருக்க மாட்டர்கள். ஆனால் திருமண வாழ்க்கையில் ஈடுபட்ட 95 சதவிகித மக்களிடம் ஏற்படும் அதே அளவு பிரச்சனை ஐந்து சதவிகிதத்திலும் உள்ளது என்றால் இது எவ்வளவு பெரிய வேறுபாடு?
அறிவைப் பயன்படுத்தி சிந்தித்தால் எது பாதுகாப்பானது? எது நன்மை பயக்கக் கூடியது என்று இவர்கள் அறிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அறிவாளிகளுக்கு முற்போக்கு பட்டம் கிடைக்காதே? அதனால்தான் சிந்திக்க மறுத்து முற்போக்காளர்களாக ஆகிக் கொண்டு இருக்கிறார்கள்.
திருமணம் நடக்கும்போது அதில் ஒரு உறுதிமொழி உள்ளது. அதில் ஒரு ஒப்பந்தம் உள்ளது. ஒருவர் மற்றவரிடம் தலையிடும் உரிமை உள்ளது. இருவருக்கும் இடையே சமுதாயம் முன்னின்று நடத்தி வைத்ததால் அவர்களின் தலையீடு இருக்கும்.
பெண்ணின் இளமையை அனுபவித்துவிட்டு ஓடிப்போனால் கட்டிவைத்து உதைப்பார்கள் என்ற அச்சம் காரணமாகவும், வேறு இடத்தில் யாரும் பெண் தர முடியாத நிலை ஏற்படும் என்பதற்காகவும் மனைவி அழகிழந்த போதும் அவருடனே ஆண்கள் வாழ்கிறார்கள்.
ஒரு ஆணும் பெண்ணும் தாமாகப் பேசி சேர்ந்து வாழும்போது பெண்ணுக்கு ஒரு குழந்தையுடன் அழகு போய்விட்டால் அடுத்தவளைத் தேடிச் சென்று இது போல வாழ்வான். அவளுக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர் வர மாட்டார்கள். பெண்ணுக்கு அப்படி நினைத்த மாத்திரத்தில் துணை அமையாது.
திருமணம் மூலம் பெண்களின் வாழ்வுக்கும் எதிர்காலத்துக்கும் உத்தரவாதம் கிடைக்கின்றது.
திருமணம் இல்லாமல் வாழும் நூறு பேர் திருமணம் செய்த நூறு பேர் என்று எடுத்துக்கொண்டு பார்த்தால் முதல் நூறில் சரிபாதி பஞ்சாயத்தாக போய் விடும். இரண்டாம் நூறில் ஒரு பஞ்சாயத்து நடந்தால் அதுவே அதிகம்.
எனவே ஒழுக்க மாண்புகளின் அடிப்படையிலும், பெண்களின் பாதுகாப்பு என்ற அடிப்படையிலும் நீதிபதியின் தீர்ப்பு கண்டனத்துக்கு உரியது. அறிவு ஜீவிகளின் வாதம் கிறுக்குத்தனமானது.
அடுத்து இவ்வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதால் நமக்குப் பாதிப்பு ஏற்படுமா என்பதை எடுத்துக் கொள்வோம்.
உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முஸ்லிம்களையும், முஸ்லிம் தனியார் சட்டத்தையும் எள் முனையளவும் பாதிக்காது. முஸ்லிம் தனியார் சட்டத்துக்கு அரசியல் சாசனத்தில் உத்தரவாதம் இருக்கும்வரை நாட்டின் எந்த நீதிமன்றமும் அதில் தலையிட முடியாது.
அப்படித் தலையிட்டால் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஒருங்கிணைந்து அதைத் தக்க முறையில் சந்திப்பார்கள்.
வழக்கில் சம்மந்தப்பட்ட இருவரும் முஸ்லிம் சட்டப்படி திருமணம் செய்யாமலே சின்ன வீடு போல் வாழ்ந்ததால் அவர்கள் முல்லிம் தனியார் சட்டத்தின் கீழ் வர மாட்டார்கள்.
இஸ்லாம் கூறும் முறைப்படி திருமணம் நடந்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு முஸ்லிம் தனியார் சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்படும். எனவே இது முஸ்லிம்களின் பிரச்சனை அல்ல. இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்த எந்த முஸ்லிமையும் இந்தத் தீர்ப்பு பாதிக்காது.
முஸ்லிமாகப் பிறந்தவன் தாலி கட்டி திருமணம் செய்தால் அவன் பெயர் அரபு மொழியில் உள்ளதால் அவன் முஸ்லிம் தனியார் சட்டத்துக்குள் வரமாட்டான். அதுபோல இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்யாமல் பதிவுத் திருமணம் செய்து கொண்டால் அவர்களாகவே முஸ்லிம் தனியார் சட்டத்தில் இருந்து விடுவித்துக் கொண்டதால் அவர்களும் முஸ்லிம் தனியார் சட்டத்துக்குள் வரமாட்டார்கள்.
எனவே இந்தத் தீர்ப்பு முஸ்லிமாக வாழாத இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தை மதிக்காத இருவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பதால் இதுபற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
நன்றி - ஆன்லைன்பிஜே
Post a Comment