உலகில் ஒரு கோடிக்கும் அதிகமான சிறார்கள் வீட்டு வேலையாட்களாகப் பணிபுரிவதாகவும், அவர்களது பணியிட நிலைமைகள் பெரும்பாலும் ஆபத்தானவையாகவும், சில வேளைகளில் கொத்தடிமை நிலைமைக்கு அவை இட்டுச் செல்வதாகவும் சர்வதேச தொழிலாளர் நிறுவனம் கூறியுள்ளது.
சிறாரை தொழிலாளர்களாக பயன்படுத்துவதற்கு எதிரான தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், சிறார் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை ஒழிப்பதற்கான ஒழுங்குவிதிகள் தேவை என்று அது கோரியுள்ளது.
ஒரு கோடியே 5 லட்சம் சிறார்கள் - இவர்களில் பெரும்பாலானோர் சிறுமிகள்- வீட்டு வேலையாட்களாக செயற்படுவதாகவும், துப்பரவு செய்தல், சமைத்தல், குழந்தைகளை மற்றும் முதியவர்களை பராமரித்தல் ஆகியவற்றில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் அது கூறுகிறது.
இவர்களில் 65 லட்சம் சிறார்கள் 14 வயதுக்கு கீழானவர்களாவர் என்றும் 71 வீதத்தினர் சிறுமிகள் என்றும் உலக தொழிலாளர் நிறுவனம் கூறுகிறது.
இவர்களில் பலருக்கு ஊதியம் கொடுக்கப்படுவதில்லை என்றும் கல்விக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்றும் தொழிலாளர் நிறுவனம் கூறுகிறது.
இவர்களில் சிலர் கடத்தப்படுவதுடன், உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகத்துக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.
சில சிறார்கள் தமது குடும்பத்தினர் பெற்ற கடன்களை அடைப்பதற்காக சில வீடுகளின் பணியாளர்களாக அனுப்பப்படுவதாகவும் அது கூறுகிறது.
இன்னமும் ரகசியமாக இந்தச் சிறார்கள் வேலைவாங்கப்படுவதால், அது குறித்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சர்வதேச மட்டத்தில் ஒழுங்குவிதிகள் தேவை என்றும் அது கூறுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை சிறார் தொழிலாளர் நிலைமைகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்ற போதிலும், இன்னமும் நிறைய செய்ய வேண்டியிருப்பதாகக் கூறுகிறார் அமைதி அறக்கட்டளை என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனராக பால் பாஸ்கரன் கூறுகிறார்.
அதேவேளை இலங்கையிலும் நிலைமை முன்னேறியிருப்பதாகவும், ஆனாலும் இலங்கையின் மத்திய மலையகப் பகுதிகளில் இது தொடர்பில் நிறைய முன்னேற்றங்கள் தேவை என்றும் கூறுகிறார் தோட்ட, கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவரான மைக்கல் ஜோக்கிம்.
Post a Comment