உலகின் முதல் எட்டு பெரும் பொருளாதார நாடுகளுடைய குழுவான ஜி-8 மாநாட்டுக்காக அந்நாடுகளுடைய தலைவர்கள் வட அயர்லாந்தில் கூடியுள்ளனர்.
அவர்கள் விவாதிக்கக்கூடிய விஷயங்களில் சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு யுத்தம் முக்கியமாக இடம்பிடிக்கவுள்ளது.
சிரியா நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் ஏற்படுவதற்கு இந்த இரண்டு நாள் கூட்டம் உதவும் என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் தெரிவித்துள்ளார்.
சிரியா சம்பந்தமாக சமாதானப் பேச்சுவார்த்தைகள் வேண்டும் என அமெரிக்காவும் ரஷ்யாவும் விரும்புகின்றன.
சிரியாவில் அரசாங்கத்தை எதிர்த்து சண்டையிடும் கிளர்ச்சிக்காரர்களுக்கு அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளி நாடுகள் சிலவும் ஆதரவளிக்கின்றன.
அதேநேரம் ரஷ்யாவோ சிரியாவின் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கிறது.
சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களுக்கு மேற்குலக நாடுகள் ஆயுதம் வழங்குவது சம்பந்தமாக நேற்று ஞாயிறன்றுதான் ரஷ்யா கடுமையான எச்சரிக்கைகளை விடுத்திருந்த நிலையில், இந்தச் சந்திப்பில் சிரியா சம்பந்தமாக ஒரு மாற்றம் வந்தால் அது பெரிய விஷயம்தான் என பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
வரி செலுத்துவதைத் தவிர்த்துவரும் பெரிய நிறுவனங்கள், வரி செலுத்த தேவையில்லை என்று கூறும் நாடுகள் போன்றவற்றை சமாளிப்பதற்கான வழிவகைகள் தொடர்பில் ஜி-8 மாநாட்டில் உடன்பாடு காணப்படும் வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிவதாக அவர் தெரிவிக்கிறார்.
Post a Comment