சத்தியப் பாதையில் அழைப்புப் பணி


இறைவன் தன்னுடைய அளவில்லா கருணையினால் இஸ்லாம் என்ற அற்புதத்தை ஏற்கும் பாக்கியத்தை நமக்கு வழங்கியுள்ளான். கோடிக்கணக்கான மக்களில் நம்மை தேர்வு செய்து இந்த பாக்கியத்தை வழங்கியுள்ளான். பெரும் பெரும் செல்வந்தர்களுக்கும் நாட்டையே ஆளும் வலிமைபடைத்தவர்களுக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை இஸ்லாத்தை ஏற்றதின் மூலம் நாம் பெற்றிருக்கிறோம்.

நபியாக இருந்த இப்ராஹிம் (அலை) அவர்களின் தந்தைக்குக் கூட இந்தச் சிறப்பு கிடைக்கவில்லை. நபி நூஹ் (அலை) அவர்களின் மகனுக்கும் மனைவிக்கும் இன்னும் நபி லூத் (அலை) அவர்களின் மனைவிக்கும் இந்தச் சிறப்பு கிடைக்கவில்லை. நபிமார்களின் உறவினர்களுக்கு கிடைக்காத இவ்வளவு பெரிய பேற்றை நாம் பெற்றதற்காக இறைவனுக்கு நாம் கட்டாயமாக நன்றி செலுத்த வேண்டும். இஸ்லாம் காட்டும் இந்த நேர்வழியை ஏற்றுக்கொள்வது மாபெரும் அருட்கொடை என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக் கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தனது சான்றுகளைத் தெளிவு படுத்துகிறான்.

அல்குர்ஆன் (3 : 103)

இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்பு நபித்தோழர்கள் இஸ்லாத்தை அறிந்துகொள்ளாத காரணத்தினால் ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டு எதிரிகளாக வாழ்ந்தார்கள். சரியான வழியறியாமல் தவறான வழியில் அவர்கள் திழைத்திருந்ததால் அதை அல்லாஹ் நரகத்தின் விழிம்பு என்று சுட்டிக்காட்டுகிறான். பின்பு இவர்களை இஸ்லாத்திற்குள் நுழையச் செய்து பாசமிகுந்த கொள்கைச் சகோதரர்களாக ஆக்கினான். இந்த பாக்கியத்தை மறந்து விடாமல் எப்பொழுதும் மனதில் எண்ணிப்பார்க்க வேண்டும் என அவர்களுக்கு அல்லாஹ் பணிக்கிறான்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

இறைவன் இவ்வாறு எண்ணிப்பார்க்கச் சொல்வதற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது. பொதுவாக மனிதர்கள் தான் பெற்ற இன்பத்தை இந்த வையகமும் பெற வேண்டும் என்று நினைப்பார்கள். ஒரு அற்புதமான அருவியை பார்த்துவிட்டால் உடனே தன்னுடைய உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு நாம் சென்றுவிடுகிறோம். இதைப் போல் இஸ்லாத்தின் அருமை பெருமைகளை நாம் விளங்கிக் கொண்டால் கண்டிப்பாக நம்மால் இதை பிறருக்கு எடுத்துச் சொல்லாமல் இருக்கவே முடியாது. எப்படியாவது இஸ்லாத்தை ஏற்காத நம்முடைய நண்பர்கள் அக்கம்பக்கத்து வீட்டார்கள் ஆகியோருக்கு இதை எடுத்துச் சொல்லி அவர்கள் இம்மார்க்கத்தில் நுழைய வேண்டும் என்று பேராவல்படுவோம்.

இறைவன் அளித்த இந்த பாக்கியத்தை நினைவுகூறுவது நாம் இஸ்லாத்தைப் பரப்புவதற்கு தூண்டுகோலாக இருக்கும் என்பதால் இறைவன் இதை எண்ணிப்பார்க்கச் சொல்கிறான். இதையறியாத நம்மில் பலர் கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை என்ற பழமொழிக்கிணங்க செல்வம் தான் பெரும் பாக்கியம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். வெண்ணையை வைத்துக் கொண்டு வேப்ப இழையை உண்பது போல இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தவறான வழியில் செல்கிறார்கள். ஆகையால் இவர்களைப் போல் பெயரளவில் இஸ்லாத்தில் இருப்பவர்களுக்கும் இஸ்லாத்தை தழுவாத மாற்றுமத அன்பர்களுக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வது நம்மீது கட்டாயக் கடமை.

அழைப்புப் பணியின் சிறப்பு

கடைசி நபியான முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின்பு இனி யாரும் நபியாக வரமாட்டார்கள். நபிகள் நாயகம் இறந்துவிட்டாலும் அவர்கள் கொண்டுவந்த குர்ஆனும் ஹதீஸýம் இன்றும் உயிருடன் இருக்கிறது. ஏன் உலகம் அழியும் நாள் வரைக்கும் நிலைத்து நிற்கும். ஒரு பேச்சுக்கு இப்போது நபி (ஸல்) அவர்கள் உலகத்திற்கு வருவார்களானால் புதிதாக எதையும் அவர்கள் கூறமாட்டார்கள். ஏற்கனவே கூறிய செய்திகளையே திரும்பவும் கூறுவார்கள். ஏùன்றால் மார்க்கத்தை அல்லாஹ் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே பூரணப்படுத்திவிட்டான். ஒன்று கூட மீதம் வைக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் எதை மக்கள் மத்தியில் போதனை செய்தார்களோ அதை அப்படியே இறைவன் பாதுகாத்து நமது கையில் குர்ஆன் ஹதீஸôகத் தந்துள்ளான். இஸ்லாத்தைப் பரப்புவதை விட அழகிய பணி உலகில் வேறு எதுவும் இல்லை. நாமும் இஸ்லாத்தின் படி நடந்து பிறரையும் இஸ்லாத்தின் பால் அழைத்து மகிழ்ச்சியுடன் நான் முஸ்லிம் என்று கூறுவதை விட இறைவனிடத்தில் சிறந்த வார்த்தை எதுவும் இல்லை.

அல்லாஹ்வை பக்கம் (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்

அல்குர்ஆன் (41 : 33)

பெருமானார் (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன்னால் மக்கள் திரண்டிருந்த நேரத்தில் நான் உங்களுக்கு இம்மார்க்கத்தை எத்திவைத்துவிட்டேன். சிறிய செய்தியாக இருந்தாலும் அதை என்னிடமிருந்து மக்களுக்கு நீங்கள் எத்திவைத்துவிடுங்கள் என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் சரி அதை (ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல் : புகாரி (3461)

அன்றைய அரபுகளிடம் ஒட்டகங்கள் மாபெரும் சொத்தாகத் திகழ்ந்தது. இன்றைக்கு நாம் நிலங்களை சொத்துக்களாக வைத்திருப்பது போல் அவர்கள் ஒட்டகங்களை பெருஞ் செல்வங்களாக கணக்கிட்டார்கள். ஒட்டகங்களில் உயர்ந்த ரக ஒட்டகமான செந்நிற ஒட்டகத்தை மதிப்பிட்டிருந்தார்கள். ஒருவர் செந்நிற ஒட்டகத்தை வைத்திருந்தால் அது அவருக்குப் பெருமையாக இருக்கம். இதை வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த ஒட்டகத்திற்கு மேல் அவர்கள் வேறெதையும் விரும்பவில்லை என்று சொல்லும் அளவிற்கு அதில் அதிக ஆசைவைத்திருந்தார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் செந்நிற ஒட்டகத்தை சுட்டிக்காட்டி நம் மூலம் ஒருவர் நேர்வழி பெறுவது இதை விடச் சிறந்தது என்று அலீ (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உம்மின் மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நேர்வழியளிப்பது சிவப்பு ஒட்டகைகளை விட உங்களுக்குச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள்

நூல் : புகாரி (4210)

நாம் முனைப்புடன் இப்பணியில் செயல்பட வேண்டும் என்பதற்காக இறைவன் ஏராளமான நன்மைகளை இப்பணிக்காக வாரிவழங்குகிறான். ஒரு விதையை விளைச்சலுக்காக நாம் தரையில் போடுகிறோம். ஆனால் அதிலிருந்து 1000 கணக்கான விதைகள் வருகின்றன. இதைப் போல் ஒருவரை நாம் இஸ்லாத்திற்கு அழைத்து வந்துவிட்டால் அவர் செய்யும் நல்லகாரியங்கள் அனைத்திற்கும் கிடைக்கும் நன்மையைப் போன்றே நமக்கும் கிடைக்கிறது. சில வேலை நம்மை விட நம்மால் இஸ்லாத்திற்கு அழைத்துவரப்பட்டவர் அதிகமான நன்மைகளை செய்யலாம். இப்போது நாம் சுயமாக செய்யும் நன்மைகளைக் காட்டிலும் அவர் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மை அதிகம். நன்மையை அதிம் சேகரிக்க விரும்புபவர்கள் நிச்சயமாக இந்த வழியை கடைபிடிக்காமல் இருக்கமாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மக்களை) நேரான வழியின் பால் அழைக்கிறாரோ அவருக்கு அதை பின்பற்றுபவரின் கூலிகளைப் போன்ற கூலி கிடைக்கும். இவ்வாறு கொடுப்பது அதை செய்தவர்களின் கூலியிலிருந்து கொஞ்சம் கூட குறைத்துவிடாது.

அறிவிப்பவர் : அபூஹ‎ýரைரா (ரலி) அவர்கள்

நூல் : முஸ்லிம் (4831)

கவலைப்பட வேண்டும்

இந்த அருமை மார்க்கத்திற்கு மாற்றமாக மக்கள் நடப்பதை நாம் பார்த்தால் இஸ்லாம் இவர்களை சென்று அடையவில்லையே என்று நாம் கவலைப்பட வேண்டும். ஒருவர் நெருப்பில் விழப்போகும் போது எவ்வாறு நாம் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோமோ அதைப் போல் தவறான வழியில் மக்கள் செல்வதைப் பார்க்கும் போது கண்டிப்பாக ஒரு முஸ்லிமால் பார்த்துக் கொண்டிருக்க இயலாது. அவனையறியாமல் அவனுடைய உள்ளத்தில் கவலை எழ வேண்டும். நம்மைச் சுற்றி எத்தனையோ மாற்றுமத சகோதரர்கள் இருக்கிறார்கள். என்றைக்காவது நாம் மறுமையில் அவர்களுடைய நிலை குறித்து யோசித்துப் பார்த்திருப்போமா?

அவர்களுடைய நிலையைக் கண்டு கவலைப்பட வேண்டிய நாம் அவர்கள் மூடநம்பிக்கைக் காரியங்களில் ஈடுபடுவதைக் கண்டால் நாம் சிரிக்கின்றோம். கேலி செய்கின்றோம். என்னவோ இஸ்லாம் என்பது நமக்கு மட்டும் உரியது போல் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்றில்லாமல் தன்னைச் சுற்றி வாழும் இஸ்லாத்தைத் தழுவாத மக்களின் நிலையைக் கண்டு கவலைப்பட்டார்கள். இதன் விளைவால் அரபு தேசமே இஸ்லாத்தைத் தழுவியது.

பொதுவாக ஒருவர் எந்த ஒரு துறையில் வெற்றி பெற நினைத்தாலும் அவருக்கு அதுசம்பந்தமாக கவலைகள் இருக்க வேண்டும். படிக்கும் மாணவனுக்கு தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்ற கவலை இருந்தால் தான் அவர் படித்து வெற்றிபெறுவார். இந்தக் கவலை நபி (ஸல்) அவர்களிடம் அதிகம் அதிகமாகக் காணப்பட்டது. பின்வரும் சம்பவம் இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை மாற்றுமதத்தார்களிடம் எடுத்துச் சொல்வதற்காக தாயிஃப் நகரத்திற்குச் சென்றார்கள். ஆனால் அவ்வூர் தலைவர் நபி (ஸல்) அவர்களிடம் முறையாகப் பேசவில்லை. நபி (ஸல்) அவர்களுடைய விருப்பத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. நபியவர்களுக்கு கடும் துன்பங்களைக் கொடுத்தார்கள். மக்களுக்கு ஏகத்துவக் கொள்கையை சொல்ல முடியாமல் போனதை எண்ணி நபி (ஸல்) அவர்கள் மிகவும் கவலைப்பட்டவர்களாக திரும்பி வந்தார்கள்.

மக்களால் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் சுய உணர்வையே இழந்துவிட்டார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை இடையில் சந்தித்து நீங்கள் அனுமதி கொடுத்தால் இரண்டு மலைகளுக்கிடையில் இருக்கும் இந்த ஊரின் மேல் மலைகளைப் புரட்டிப்போட்டு அழித்துவிடுகிறேன் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவர்களை அழிக்க வேண்டாம். இவர்களுடைய சந்ததிகள் ஏகத்துவக் கொள்கைவாதிகளாக வருவார்கள் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்

நூல் : புகாரி (3231)

ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் அழித்த பதிலை நாம் யோசிக்க வேண்டும். எவ்வளவு தூரநோக்கோடு அழைப்புப் பணியை நபி (ஸல்) அவர்கள் ஆற்றியுள்ளார்கள்! தன்னுடையக் கருத்தை இந்த மக்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இவர்களுடைய பிள்ளைகள் இஸ்லாத்தை ஏற்பார்கள் என்று கருதி தனக்குத் துன்பம் தந்தவர்களை அழிக்க வேண்டாம் என்று கூறினார்கள். அவர்களை அழித்து விட்டால் அவர்களுடைய பிள்ளைகளுக்கு இந்த இஸ்லாம் சென்றடையாது என்று பெருமானார் கவலைப்படுகிறார்கள். இது போன்ற கவலை நம்மிடம் வந்து விட்டால் மின்னல் வேகத்தில் இஸ்லாம் பரவத் தொடங்கிவிடும்.

அழகிய முறையில் நட்புக்கொள்ளுதல்

முந்தைய காலங்களில் நம்மில் பலர் மாற்றுமதத்தார்களை வேறுபடுத்தி அவர்களிடம் சரிவர பழகாமல் அந்நியர்களாகவே கருதிவந்தனர். ஆனால் இந்த ஏகத்துவ எழுச்சி தமிழகத்தில் பரவத் தொடங்கியது முதல் மாற்றாருக்கும் நமக்கும் மத்தியில் பலமான உறவு ஏற்பட்டிருக்கிறது. இஸ்லாத்தைத் தழுவாத மக்களிடையே அழகிய முறையில் பழக வேண்டாம் என்று மார்க்கம் சொல்லவே இல்லை. மாறாக நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய காலத்தில் வாழ்ந்த இஸ்லாத்தைத் தழுவாத மக்களிடம் அன்பாகவும் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொண்டும் இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் குறிப்பிட்டத் தவணையில் திருப்பித் தருவதாக உணவுப்பொருளை வாங்கினார்கள். (அதற்காக) அவரிடம் தமது இரும்புக் கவசத்தை அடைமானமாக வைத்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்

நூல் : புகாரி (2068)

நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய்விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்து அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொள் என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர் அபுல் காசிம் (என்ற) நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டான். உடனே நபி (ஸல்) அவர்கள் இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்விற்கே சகல புகழும் எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்

நூல் : புகாரி (1356)

நபி (ஸல்) அவர்கள் யூதர்களிடத்தில் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் சிறந்த ஆதாரமாக உள்ளது. நபியவருக்கு பணிவிடை செய்யும் அளவிற்கு யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நெருக்கமாகப் பழகியுள்ளார்கள். இந்த நெருக்கத்தினால் தான் யூதச் சிறுவன் நோய்வாய்ப்படும் போது அவனை நலம் விசாரிக்கச் செல்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் சிறுவனைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள் என்று கூறிய மாத்திரத்தில் அவனுடைய தந்தை ஏற்றுக்கொள்வதற்கு அனுமதியளிக்கிறார் என்றால் பெருமானார் மீது அவர் எவ்வளவு மரியாதை வைத்திருப்பார்! நபியவர்கள் அவரிடத்தில் அழகிய முறையில் நடந்துகொண்டதே இதற்குக் காரணம். எனவே மாற்றுமத சகோதரர்களிடம் அழகிய முறையில் நாம் பழகுவது அவர்கள் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுவதற்கு முக்கிய காரணமாகும்.

இன்னும் மாற்றுமதத்தார்கள் கஷ்டப்படும் போது அவர்களுக்க உதவி செய்வதும் இஸ்லாத்தின் பால் அவர்கள் ஈர்க்கப்படுவதற்கு முக்கியக் காரணமாகும். இதனால் தான் ஜகாத்தை மாற்றார்களுக்கு தருவதற்கு இஸ்லாம் அனுமதியளிக்கிறது. ஏனென்றால் அவர்களுக்கு ஜகாத் போன்ற உதவி கிடைக்கும் போது இஸ்லாத்தின் மீது ஒருவிதமான நல்லெண்ணம் ஏற்பட்டு இஸ்லாம் மனிதநேயமிக்க மார்க்கம் என்பதை அறிந்து கவரப்படுவார்கள்.

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் (9 : 60)

 
அப்பாஸ் அலீ எம்.ஐ.எஸ்.ஸி
 நன்றி - frtj 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger