துபாய் : ஈரானின் அணு உலையால் வளைகுடா நாடுகள் பயப்படுகிறதோ இல்லையோ நிச்சயம் ஈரான் என்றவுடன் நில நடுக்கத்தை கண்டு அஞ்சத் தான் செய்கின்றன வளைகுடா நாடுகள்.
வளைகுடாவின் வசந்தம் என அழைக்கப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இவ்வாரம் மட்டும் இரண்டு முறை ஈரான் நில நடுக்கத்தின் அதிர்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த செவ்வாய்கிழமை அன்று ஈரானின் அணு உலை அருகே ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் ஸ்கேலில் 6.3 ஆக பதிவானது. கடந்த செவ்வாயன்றே துபாயில் பல இடங்களில் அதன் அதிர்வுகள் தெரிந்தன. குறிப்பாக துபாயின் முக்கிய வானாளவிய கட்டிடங்கள் இருக்கும் ஷேக் ஜெயித் சாலையில் மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியே பதற்றத்துடன் விரைந்தனர்.
காணொளி
இன்றும் 7.8 ஆக ரிக்டர் ஸ்கேலில் பதிவான நில நடுக்கத்தின் அதிர்வுகள் அமீரகத்தில் சுமார் 2.45க்கு மணிக்கு உணரப்பட்டன. இத்தடவை நில நடுக்கத்தின் அதிர்வுகள் துபாய் மட்டுமின்றி அபுதாபி, ஷார்ஜா, புஜைரா என அமீரகத்தின் மற்ற பகுதிகளிலும் உணரப்பட்டன. துபாயின் மீடியா சிட்டி, ஷேக் ஜெயித் சாலை, அபுதாபி சிட்டி, ஷார்ஜாவில் உள்ள முக்கிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை உடனே வெளியேற்றின. பின் சில நிறுவனங்கள் அதிர்வால் சிதறிய கண்ணாடி துகள்கள் பாதிக்க கூடும் என்ற அச்சத்தில் அவர்களை மீண்டும் அலுவலத்திற்குள் வரவழைத்தனர்.
அபுதாபியில் உள்ள காலிதியா, எலக்ட்ரா, ஹம்தான் மற்றும் அல் பலாஹ் பகுதிகளில் உள்ள குடியிருப்பு உரிமையாளர்கள் உடனே குடியிருப்போரை வெளியேற்ற செய்து பின் தகுந்த ஆலோசனைகள் கூறி மீண்டும் இல்லங்களுக்கு அனுப்பினர். நில நடுக்கம் சுமார் 30 முதல் 40 விநாடிகள் உணரப்பட்டதாக பலர் கூறினார். ஆனால் சிலர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும் வேறு சிலர் அப்படி எதுவும் உணரவில்லை என்றும் தெரிவித்தனர்.
நில நடுக்க அதிர்வு இந்நேரம் சார்பாக சிலரிடம் தொலைபேசியில் கருத்து கேட்டது. புஜைராவை சார்ந்த முகம்மது என்பவர் தாம் கடுமையான உலுக்கலை உணர்ந்தவுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் வெளியில் செடி, கொடிகளை யாரோ இழுத்து அசைப்பது போன்று தெரிந்ததாக கூறினார். ஷார்ஜாவை சார்ந்த ராஜேந்திரனோ சிலர் சொன்ன பிறகு தான் நிலநடுக்க அதிர்வு குறித்து தெரியவந்ததாக கூறினார்.
நிலநடுக்க அதிர்வு குறித்து கருத்து தெரிவித்த துபாயை சார்ந்த உவைஸ் இது வரை தான் துபாயில் சந்தித்த நில அதிர்வுகளில் இது கடுமையானது என்று தெரிவித்தார். அபுதாபியை சார்ந்த ஸ்டீபன் நிலநடுக்க அதிர்வின் போது ஏற்பட்ட தலைவலி இன்னும் தீரவில்லை என்றும் ரகுமான் என்பவர் தம் தற்காலிக தங்குமிடத்தை யாரோ உலுக்குவது போன்று உணர்ந்ததாக கூறினார்.
நன்றி - இந்நேரம்
Post a Comment