அகீகாவின் சட்டங்கள்


குழந்தை பிறந்த ஏழாம் நாளில் ஆண்குழந்தையாக இருந்தால் அதற்காக இரண்டு ஆடுகளையும் பெண்குழந்தையாக இருந்தால் அதற்காக ஓருஆட்டையும் அறுத்து ஏழை எளியவர்கள் உறவினர்களுக்கு உணவளிப்பதற்கு அகீகா என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்துள்ளார்கள். ஆனால் கடமையாக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பையன் (பிறந்த) உடன் அகீகா (கொடுக்கப்படல்) உண்டு. ஆகவே அவனுக்காக (ஆடு அறுத்து) குர்பானி கொடுங்கள். அவன் (தலை முடி களைந்து) பாரத்தை இறக்கிவிடுங்கள் என்று அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.

அறிவிப்பவர் : சல்மான் பின் ஆமிர் (ரலி)
நூல் : புகாரி (5472)

எத்தனை ஆடுகள் அறுக்க வேண்டும்?

நபி (ஸல்) அவர்களிடம் அகீகாவைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மாறுசெய்வதை நான் விரும்பமாட்டேன். யாருக்கேனும் குழந்தை பிறந்து அதற்காக அவர் (ஆட்டை) அறுத்து வணக்கம்புரிய விரும்பினால் அவர் ஒரே மாதிரியான இரண்டு ஆட்டை ஆண்குழந்தைக்கும் ஒரு ஆட்டை பெண்குழந்தைக்கும் கொடுக்கட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : அஹ்மத் (6530)

விரும்புபவர் அகீகா கொடுக்கட்டும் என்று மேலுள்ள ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அகீகா கொடுப்பது கடமையில்லை. கொடுப்பது சிறந்தது என்பது அறிந்துகொள்ளலாம்.

ஆண்குழந்தைக்கு ஓரு ஆட்டை அறுத்துப் பலியிடுவதற்கும் ஆதாரம் உள்ளது. இதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஹசனுக்கும் ஹ‚ஸைனுக்கும் ஒரு ஆட்டை அகீகாவாக தந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : அபூதாவூத் (2458)

பெற்றோருக்கு பதிலாக மற்றவர்கள் கொடுக்கலாமா?

பெற்றோருக்குப் பதிலாக குழந்தையின் உறவினர்கள் அகீகாவை நிறைவேற்றுவதற்கு அனுமதி உள்ளது. பெற்றோர்கள் தான் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை.

குழந்தைக்காக ஆடு அறுக்கப்படும் என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பெற்றோர்கள் தான் அகீகா கொடுக்க வேண்டுமென்றால் குழந்தையின் பெற்றோர்கள் அறுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள்.

ஓவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜன்துப் (ரலி)
நூல் : அபூதாவூத் (2455)

மேலும் அலி (ரலி) ஃபாதிமா (ரலி) ஆகிய இருவருக்கும் பிறந்த ஹசன் மற்றும் ஹ‚ஸைன் (ரலி) அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் அகீகா கொடுத்துள்ளார்கள். குழந்தையின் உறவினர்கள் யார் வேண்டுமானலும் அகீகா கொடுக்கலாம் என்பதை இதன் மூலம் அறியலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹசன் மற்றும் ஹ‚ஸைன் (ஆகியஇருவருக்காக) அகீகா கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)
நூல் : நஸயீ (4142)

அகீகா கொடுப்பவர் இறைச்சியை உண்ணலாமா?

அகீகா கொடுப்பவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்பதற்கு எந்தத் தடையும் இல்லை. ஹஜ்ஜ‚ப் பெருநாளன்று அறுக்கப்படும் குர்பானிப் பிராணியின் இறைச்சியை குர்பானிக் கொடுப்பவர் உண்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதிக்கவில்லை. குர்பானியும் அகீகாவும் இறைவனுக்கு செலுத்தப்படுகின்ற வணக்கமாக இருப்பதால் இவை இரண்டுக்கும் ஒரேவகையான சட்டம்தான்.

ஹஜ்ஜின் போது அறுக்கப்படுகின்ற பிராணியை அறுப்பவர்கள் தானும் உண்டு ஏழை எளியவர்களுக்கும் உண்ணக்கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான் இவ்வாறே அகீகா விஷயத்திலும் நடந்துகொள்ள வேண்டும்.

அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!

அல்குர்ஆன் (22 : 28)

ஏழாவது நாளுக்குப் பிறகு அகீகா கொடுக்கலாமா?

அகீகா என்பது குழந்தைப் பிறந்த ஏழாவது நாள் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகிறது. ஆனால் சில பலவீனமான ஹதீஸ்களில் பதினான்காம் நாளும் இருபத்து ஒன்றாம் நாளும் கொடுக்கலாம் என்று வந்துள்ளது.

அகீகா (வாக கொடுக்கப்படும் பிராணி) ஏழாவது நாளும் பதினான்காம் நாளும் இருபத்து ஓன்றாம் நாளும் அறுக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)
நூல் : பைஹகீ (பாகம் 9 பக்கம் 303)

இந்த ஹதீஸ் அல்முஃஜமுல் அவ்ஸத் மற்றும் அல்முஃஜமுஸ்ஸஹீர் போன்ற நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் பின் முஸ்லிம் என்ற பலகீனமானவர் இடம்பெறுகிறார்.

பெற்றோர்கள் தனக்கு அகீகாக் கொடுக்காததால் பெரியவராக ஆன பின்பு தனக்குத் தானே அகீகா கொடுக்கலாமா? என்று சிலருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் ஆதாரம் எதுவும் இல்லை. 

அகீகா என்ற வணக்கம் குழந்தை பிறந்து ஏழாவது நாள் செய்யப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் அன்று தான் இவ்வணக்கத்தை செய்ய வேண்டும். இந்த நாளைக் கடந்தப் பிறகு கொடுத்தால் அது சாதாரண தர்மமாக ஆகும். அகீகா கொடுப்பதற்குரிய நன்மை கிடைக்காது.

அகீகா கடமையில்லாத காரணத்தினால் கடமையானவைகளை பின்பு நிறைவேற்றுவதைப் போன்று இதை நிறைவேற்ற வேண்டியதில்லை. நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்கு வந்தப் பின் தனக்காகவோ அல்லது அவர்களது தோழர்களுக்காகவோ அகீகா கொடுக்கவில்லை. நபித்தோழர்களும் அவ்வாறு செய்யவில்லை. எனவே இந்த புதிய வழிமுறையை நாம் ஏற்படுத்க்கூடாது. 

நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள் என்று சில ஹதீஸ்கள் வருகின்றது. இவையனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.

பிராணியின் எலும்பை உடைக்கலாமா?

அகீகாக் கொடுக்கப்படும் பிராணியின் எலும்பை உடைக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் இது பலவீனமான செய்தியாகும். எனவே பிராணியின் எலும்பை உடைப்பதற்கு தடையேதும் இல்லை.

ஹசன் ஹ‚ஸைன் ஆகிய இருவருக்காக ஃபாத்திமா (ரலி) அவர்கள் அகீகா கொடுத்த போது நீங்களும் (இதிலிருந்து) உண்ணுங்கள். (பிறருக்கும்) உண்ணக்கொடுங்கள். இதன் எழும்பை உடைத்துவிடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்தச் செய்தி இமாம் அபூதாவூத் அவர்கள் எழுதிய அல்மராசீல் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை முஹம்மத் பின் அலீ என்பவர் அறிவிக்கிறார். இவர் நபி (ஸல்) அவர்களை சந்திக்கவில்லை. இவருக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் சில அறிவிப்பாளர்கள் விடுபட்டுள்ளார்கள். எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

பெயர் வைத்தலும் முடியயை களைதலும்:

அகீகாக்கொடுக்கும் போதே குழந்தைக்கு பெயர் வைத்து அதன் முடியை களைவது நபிவழியாகும்.

ஒவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜ‚ன்துப் (ரலி)
நூல் : அபூதாவூத் (2455)

தலைமுடி முழுவதையும் களைய வேண்டும்:

குழந்தையின் முடியை களையும் போது பாதியை மளித்து பாதியை விட்டுவிடக்கூடாது. அறைகுறையாக மளிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

தலையின் ஒரு பகுதி சிரைக்கப்பட்டு மறுபகுதி சிரைக்கப்படாமலிருந்த ஒரு சிறுவனை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது இவ்வாறு செய்வதை அவர்கள் தடைசெய்தார்கள். (சிரைத்தால்) முழுமையாக சிரைத்துவிடுங்கள். (முடியை வைக்க நினைத்தால்) முழுமையாக விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள்

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நஸயீ (4962)

முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்ய வேண்டுமா?

பிறந்த குழந்தையின் முடியை எடுத்து அதன் எடைக்கு நிகரான வெள்ளியை தர்மம் செய்வது நபிவழி என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு சில ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் பலவீனமான செய்தியாக உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களுக்கு ஓரு ஆட்டை அகீகாவாக கொடுத்தார்கள். (தனது மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கி) ஃபாத்திமாவே அவருடைய (ஹசன்) தலையை மளித்து அவரது முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்வீராக என்று கூறினார்கள். எனவே நான் அதை நிறுத்துப்பார்த்தேன். அதனுடைய எடை ஒரு திர்ஹம் அல்லது சில திர்ஹம்களின் எடையாக இருந்தது.

அறிவிப்பவர் : அலீ (ரலி)
நூல் : திர்மிதி (1439)

இந்த ஹதீஸை பதிவுசெய்த இமாம் திர்மிதி அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அறுந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இதனுடைய அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் அலீ என்பவர் அலீ (ரலி) அவர்களை சந்திக்கவில்லை. இந்த வகையில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதேக் கருத்தில் 25930 வது ஹதீஸாக அஹ்மதில் ஒரு அறிவிப்பு உள்ளது. இதில் இடம்பெறுகின்ற அப்துல்லாஹ் பின் முஹம்மத் பலகீனமானவர் ஆவார்.

மேலும் இக்கருத்தில் ஹாகிம் இமாம் தொகுத்த முஸ்தத்ரக் என்ற நூலில் ஒரு ஹதீஸ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது நம்பத்தகுந்த நபிமொழி இல்லை என்று இமாம் தஹபி அவர்கள் கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமின்றி இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களின் ஒருவரான அலீ பின் ஹ‚ஸைன் அவர்கள் அலீ (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கிறார். ஆனால் அலி பின் ஹ‚ஸைன் பிறந்த இரண்டு வருடத்தில் அலீ (ரலி) அவர்கள் மரணித்துவிட்டார்கள். எனவே இது தொடர்பு அறுந்து காணப்படுகிறது.

இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் ஆதாரமற்றவையாக இருப்பதால் இதை செயல்படுத்த வேண்டியதில்லை.

'இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு' என்ற தலைப்பில் மௌலவி அப்பாஸ் அலி அவர்கள் எழுதிய நூலிலிருந்து எடுக்கப்பட்டது. முழு நூலையும் வாசிக்க இங்கே சொடுக்கவும்.

thanks to athirai tntj
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger