உலக முடிவின் நாளை பற்றி இஸ்லாம்


இரண்டாவது சூர் ஊதப்பட்டவுடன் (நீதி விசாரனைக்கு முன்) அன்நாளில் 
நம்முடைய நிலை எப்படி இருக்கும்

'நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரம் குறிக்கப்பட்டதாக
இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக
வருவீர்கள்'. (அல்குர்ஆன் 78:17,18)

இரண்டாம் சூர் ஊதப்பட்டவுடன் மனிதர்கள் எவ்வாறு உயிர்பிக்கப்படுவார்கள்?
அதைத் தொடர்ந்து நடைபெறுவது என்னவென்பதை இனி காண்போம்.

பூமியைப் பிளந்து வெளியேறுவர்

இரண்டாவது சூர் ஊதப்பட்டவுடன் எல்லா மனிதர்களும் பூமியைக் கிழித்துக்கொண்டு வெளிப்படுவார்கள். 

'பூமி பிளந்து அவர்கள் வேகமாக வரும் நாள் அது தான். யாவரையும் ஒன்று சேர்க்கும் நாள்! இது நமக்கு மிக எளிதானதேயாகும்'. (அல்குர்ஆன் 50:44)

'இலக்குகளை நோக்கி செல்வது போல் அவர்கள் மண்ணறைகளிலிருந்து வெளியேறுவார்கள்'. (அல்குர்ஆன் 70:43)


அழிவு நாளின் போது அழிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து மனிதர்களும் பூமிக்குள்ளிருந்தே உயிருடன் வெளிப்படுவார்கள். ஏதோ ஒரு இலக்கை நோக்கிச்செல்வது போல் வேகமாக விரைவார்கள் என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன.

மண்ணறைகளில் தங்கிய காலத்தை உணரமாட்டார்கள்

பல்லாயிரம் ஆண்டுகள் மண்ணறைகளில் புதைந்து கிடந்தவர்கள் உட்பட எவருமே தாம் மண்ணறைகளில் தங்கியிருந்த கால அளவை உணரமாட்டார்கள். ஏதோ சற்று நேரம் உறங்கி விட்டு எழுந்திருப்பதாகவே அனைவரும் உணர்வார்கள். இதைப் பின்வரும் வசனங்கள் விளக்குகின்றன.

'இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில் பகலில் சிறிது நேரம் தவிர (மண்ணறைகளில்) இருக்க வில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும்'. (அல்குர்ஆன் 46:35)

'நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில் காலையிலோ, மாலையிலோ சொற்ப நேரமே தங்கியிருந்ததாக அவர்களுக்குத் தோன்றும்'. (அல்குர்ஆன் 79:46)

'அன்றியும் அந்த நாள் வரும்போது சற்று நேரமே தங்கியிருந்ததாக
குற்றவாளிகள் சத்தியம் செய்து கூறுவார்கள்'. (அல்குர்ஆன் 30:55)


எங்களுக்கு ஏற்பட்ட துக்கமே (எங்கள் உறங்குமிடங்களிலிருந்து) எங்களை
எழுப்பியவர்கள் யார்?' (அல்குர்ஆன் 36:52) இதை 10:45, 17:62

வசனங்களும் கூறுகின்றன. கப்ருகளில் வேதனை செய்யப்பட்டதும், பல்லாண்டு மண்ணறைகளில் கழித்ததும் அவர்களுக்குத் தெரியாது. உறங்கிய போது ஏற்பட்ட கனவாகவே அதை அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். எங்கள் உறக்கத்திலிருந்து எழுப்பியவர் யார் என்று அவர்கள் கேட்பது இதனால்தான். இந்த உணர்வுடன் எழுவோர் குற்றவாளிகள் தாம், நல்லடியார்கள் உலகில் வாழும்
போதே மறுமை நாளை நம்பியவர்கள் இந்த நிகழ்ச்சிகள் ஏற்படும் என்பதை குர்ஆனிலிருந்து படித்து அறிந்த மக்கள் இவ்வாறு எண்ண மாட்டார்கள். 30:55
வசனத்தில் 'குற்றவாளிகள்' என்று கூறப்படுவதிலிருந்து இதை அறியலாம். 30:56
வசனத்தில் நல்லடியார்கள் இவ்வாறு எண்ண மாட்டார்கள் என்பதைத் தெளிவாகவும் இறைவன் கூறுகிறான்.

'ஆனால் எவர்களுக்கு கல்வியும் ஈமானும் கொடுக்கப்பட்டனவோ அவர்கள் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி திரும்ப உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாள் வரையில் (மண்ணறையில்) தங்கியிருந்தீர்கள். உயிர் பெற்று எழும் நாள் இது தான். இதனை அறியாதவர்களாகவே நீங்கள் இருந்தீர்கள் என்று
கூறுவார்கள்'. (அல்குர்ஆன் 30:56)

பிறந்த மேனியாக எழுப்பப்படுவார்கள்

நபிமார்கள், நல்லவர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் அனைவருமே நிர்வாணமாக எழுப்பப்படுவார்கள். எவருமே ஆடை யணிந்திருக்க மாட்டார்கள். மேலும் இவ்வுலகில் கத்னா செய்திருந்தவர்கள் உட்பட அனைவரும் கத்னா செய்யப்படாதவர்களாகவே எழுப்பப்படுவார்கள்.

'நிச்சயமாக நீங்கள் நிர்வாணமாகவும், செருப்பணியாமலும், கத்னா
செய்யப்படாமலும் எழுப்பப்படுவீர்கள்' என்று நபி (ஸல்) கூறிவிட்டு 21:104 வசனத்தை ஓதிக்காட்டினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
'கியாமத் நாளில் மக்கள் செருப்பணியாமலும், நிர்வாணமாகவும், கத்னா செய்யப்படாமலும் எழுப்பப்படுவீர்கள்' என்று நபி (ஸல்) கூறிய போது'அல்லாஹ்வின் திருத்தூதரே! ஆண்களும் பெண்களும் திரண்டிருக்கும் போது சிலர் சிலரைப் பார்ப்பார்களே? என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்)அவர்கள் 'ஆயிஷாவே! சிலர் சிலரைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட நிலமை மிகவும் கடுமையானதாக இருக்கும்' என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்:
ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)


சிலர் குருடர்களாகவும், ஊமையர்களாகவும் எழுப்பப்படுவர்

எவ்வாறு பிறந்தார்களோ அவ்வாறே மறுமையில் எழுப்பப்படுவார்கள் என்றாலும் உலகில் வாழும் போது பார்வை, செவி, பேசும் திறனுடன் இருந்து தவறான வழியில் சென்றவர்கள் குருடர்களாகவும் ஊமையர்களாகவும் செவிடர்களாகவும்
எழுப்பப்படுவார்கள்.

'யார் வழிகெட்டு விட்டார்களோ அவர்களுக்கு அவனையன்றி உதவிசெய்வோர் எவரையும் நீர் காண மாட்டீர்! மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் முகம் குப்புற (நடப்பவர்களாக) கியாமத்
நாளில் எழுப்புவோம்'. (அல்குர்ஆன் 17:97)


'எவன் என்னுடைய போதனையைப் புறக்கணிக்கின்றானோ அவனுக்கு நிச்சயமாக நெருக்கடியான வாழ்க்கையே இருக்கிறது. மேலும் நாம் அவனைக் கியாமத் நாளில் குருடனாகவே எழுப்புவோம். (அப்போது அவன்) என் இறைவனே! நான்
பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்? என்று கூறுவான். (அதற்கு இறைவன்) அவ்வாறு தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்த போது அவற்றை நீ மறந்து விட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும்
மறக்கப்பட்டு விட்டாய் என்று கூறுவான். ஆகவே எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல் வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறு தான் நாம் கூலி கொடுப்போம். (இதை விட) மறுமையின் வேதனை மிகவும்
கடுமையானதும், நிலையானதுமாகும்'. (அல்குர்ஆன் 20:124-127)


இறைவனின் வேத வசனங்களை நம்பாத அனைவரும் குருடர்களாகவே எழுப்பப்படுவார்கள் என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன. முகம் கறுத்தவர்களாக எழுப்பப்படுவர்
விசாரணைக்குப் பின் கிடைக்கும் தண்டனை தனியாக இருக்க விசாரணைக்கு முன்பே குற்றவாளிகள் குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமைகளாகவும், தனி அடையாளத்துடன் எழுப்பப்படுவது போல், முகம் கறுத்தவர்களாகவும் எழுப்பப்படுவார்கள். நல்லவர்கள் உலகில் கறுப்பர்களாக இருந்தாலும் - வெண்மை முகத்தவர்களாகவும், தீயவர்கள் - உலகில் வெண்மை நிறத்தவர்களாக இருந்தாலும், முகம் கறுத்தவர்களாகவும் எழுப்பப்படுவர். இதைப் பின் வரும்
வசனம் விளக்குகின்றது.
'அந்த நாளில் சில முகங்கள் வெண்மையாகவும், மற்றும் சில முகங்கள் கறுப்பாகவும் இருக்கும். எவரது முகங்கள் கறுப்பாக உள்ளனவோ அவர்களிடமும்'நீங்கள் நம்பிக்கை கொண்டபின் நிராகரித்தீர்கள் அல்லவா? நீங்கள்நிராகரித்ததற்காக இந்த வேதனையைச் சுவையுங்கள் (என்று கூறப்படும்)''.
(அல்குர்ஆன் 3:100)

யா அல்லா அந்நாளின் வேதனைகளை விட்டு எங்கள் அனைவரயும் பாதுகாப்பாக ஆமீன்
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger