இயேசு இறை மகனா ? தொடர் - 1

"இயேசு இறை மகனா?"ஆய்வுத் தொடர் ..இன்ஷா அல்லாஹ் இயேசு இறைமகன் அல்ல என்பதை ஆதாரத்துடன்  விளக்கும் முகமாகாக இந்தக்கட்டுரையை எமது இணையதளத்தில் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்...இன்ஷா அல்லாஹ் இதை அறிந்து பொருளுணர்ந்து படிக்கும் எமது கிருஸ்துவ அன்பர்கள்  நேர்வழி பெற வல்ல இறைவனிடம் துவா செய்தவனாக,,,,,,றை மகனா ? - தொடர் 1
பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றியடைய எது சரியான வழி என்பதைக் கிறித்தவ சமுதாயத்தினர் அறிந்து கொள்வதற்காக எழுதப்பட்டதே "இயேசு இறை மகனா?" என்ற இந்த தொடர். இயேசு (ஈஸா நபியவர்கள்) கடவுளின் தூதர் தானே தவிர அவர் கடவுளின் குமாரர் அல்லர்'' என்பதை பைபிளின் சான்றுகளிலிருந்தே இந்த தொடர் விளக்கும். 

"இயேசு அல்லாஹ்வின் திருத்தூதர்' என்றும் "ஒரே இறைவனாகிய கர்த்தரை மட்டும் மக்கள் வணங்க வேண்டும் என்று போதனை செய்த சீர்திருத்த வாதிகளில் ஒருவர்' என்றும் முஸ்லிம்கள் நம்புகின்றனர். திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவ்வாறே இயேசுவை அறிமுகப்படுத்தியுள்ளதால் அப்படி நம்புவது முஸ்லிம்களின் கடமைகளில் ஒன்றாகவும் இருக்கின்றது. இயேசுவை நம்புகின்ற, அவரை ஏற்றுக் கொண்டிருக்கின்ற கிறித்தவ சமயத்தினர் இயேசுவைக் கடவுளின் குமாரர் என்றும் அவரே கடவுள் என்றும் நம்பி வழிபட்டு வருகின்றனர்.

உலகின் இரு பெரும் மார்க்கங்களால் ஏற்கப்பட்டுள்ள இயேசுவைப் பற்றிய சரியான முடிவு என்ன? இது பற்றி அலசும் கடமையும், உரிமையும் நமக்கிருக்கின்றது. குர்ஆனில் இயேசுவைப் பற்றிப் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ள வசனங்களை மேற்கோள் காட்டி "இயேசு இறை மகனே' என்று முஸ்லிம்களையும் நம்பச் செய்யும் முயற்சிகளில் கிறித்தவ சமயத்தினர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் இந்த அவசியம் மேலும் அதிகரிக்கின்றது. பைபிளைப் பற்றியும், குர்ஆனைப் பற்றியும் ஞானமில்லாதவர்கள் கூட  நியாயமான பார்வையுடன் ஆராய்ந்தால் கடவுளுக்கு மகனிருக்க முடியாது என்ற முடிவுக்கு எளிதில் வர முடியும்.

இப்படித் தெளிவான முடிவுக்கு வர வாய்ப்பிருந்தும் மத குருமார்களால் தவறாக வழி நடத்தப்பட்டு, சத்தியமும் ஜீவனுமாயிருக்கின்ற கர்த்தரின் போதனைக்கு மாற்றமாக, கடவுளுக்குக் குமாரனைக் கற்பித்து, பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றியடையும் வாய்ப்பை கிறித்தவ சகோதரர்கள் தவற விட்டு வருகின்றனர். எனவே இயேசு இறை மகனா? அல்லது மனிதரா? என்பதை பைபிளின் துணையுடன் இந்த தொடர் விளக்கும். 

இந்த தொடர் நான்கு பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கும். 

எந்தக் காரணங்களால் இயேசுவை இறை மகன் என்று கிறித்தவர்கள் நம்புகின்றனரோ அந்தக் காரணங்களால் ஒருவரை இறை மகன் எனக் கூற முடியாது என்பது முதல் பகுதி. 

கடவுளுக்கென சில இலக்கணங்களை பல இடங்களில் பைபிள் குறிப்பிடுகின்றது. மனிதனுக்குரிய இலக்கணங்களையும் பைபிள் குறிப்பிடுகின்றது. பைபிளில் கடவுளுக்குரிய இலக்கணங்களாகக் கூறப்பட்ட பல விஷயங்கள் இயேசுவுக்குப் பொருந்தவில்லை. அதே சமயம் மனிதனுக்குக் கூறப்படுகின்ற அத்தனை இலக்கணங்களும் இயேசுவுக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றன என்பதை  இரண்டாம் பகுதி விளக்கும்.

"இயேசு இறை மகனல்லர்' என்று இறைவனே சில இடங்களில் கூறுவதாக பைபிள் ஒப்புக் கொள்கிறது. இயேசுவும் "தாம் இறை மகனல்லர்' என்று பல இடங்களில் வாக்கு மூலம் தந்துள்ளார். இத்தகைய சான்றுகளை முன்னிருத்தி இயேசு இறை மகனல்லர் என்பதை மூன்றாம் பகுதி விளக்கும்.

"இயேசு இறை மகன்' என்பதைக் குர்ஆன் ஒப்புக் கொள்வதாக கிறித்தவர்களால் செய்யப்பட்டு வரும் பிரச்சாரத்தின் போலித்தனத்தையும், அவர்கள் எழுப்பும் வாதங்களுக்கான நேர்மையான பதிலையும் இஸ்லாமிய அடிப்படையில் இயேசுவின் நிலை என்ன என்பதையும் நான்காம் பகுதி விளக்கும்.
இத்தொடரை விருப்பு வெறுப்பின்றி, நடுநிலையோடும் ஆய்வு நோக்கோடும் வாசிக்கும் கிறித்தவச் சகோதரர்கள் இந்த உண்மையைத் தெளிவாக உணர்வார்கள்.
இயேசுவைக் கடவுளாகவோ கடவுளின் குமாரராகவோ கருதாமல், அவர் தூய்மையான தீர்க்கதரிசி என்ற உண்மையை உணர்வார்கள். இதுவே எமது எதிர்பார்ப்பு!

இறைவனுக்கு மகனா...?
* இறைவன் தனித்தவன்
* யாரிடமும் எந்தத் தேவையுமற்றவன்
* அவன் யாரையும் பெறவில்லை
* யாராலும் பெறப்படவுமில்லை
* அவனுக்கு நிகராக யாருமே இல்லை
* அவனே அகிலங்களைப் படைத்தவன்
* அனைத்தையும் பரிபாலிப்பவன்
* ஆக்கவும், அழிக்கவும் ஆற்றலுள்ளவன்
* என்றென்றும் நிலையாக இருப்பவன்

இதுவே கடவுளைப் பற்றி அறிவுக்குப் பொருத்தமான உண்மை. கடவுளுக்கு மனைவி, மக்கள், அண்ணன், தம்பி, மாமன், மச்சான் போன்ற உறவினர்களைக் கற்பனை செய்வது, கடவுளின் தன்மையை மாசுபடுத்துவதாகும்.

தங்களுக்கு வேதமுண்டு; அது தீர்க்கமான சான்றுகளைக் கொண்டது என்று நம்புகின்ற கிறித்தவச் சகோதரர்களும் இந்த மாயையில் வீழ்ந்து பைபிளின் சான்றுகளுக்கும், இயேசுவின் போதனைக்கும் மாற்றமாக, "இறைவனுக்கு மகன் உண்டு'' என்று நம்பி வருகின்றனர். இயேசு கடவுளின் குமாரர் தாமா என்பதை ஆராயும் முன் இறைவனுக்கு மகன் தேவையா என்பதைப் பார்ப்போம்.

கடவுளுக்கு மகன் தேவையில்லை!
மரணத்தையும், முதுமையையும், பலவீனத்தையும் யார் எதிர்கொள்ள இருக்கிறாரோ அவருக்குத் தான் சந்ததிகள் தேவை!
உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றின் பால் யார் தேவையுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் - தங்களின் தள்ளாத வயதில் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக - வாரிசு தேவை! மனிதனிடம் இந்தப் பலவீனங்கள் இருக்கும் காரணத்தினால் தான் அவன் வாரிசுகளை விரும்புகிறான். மரணமோ, முதுமையோ ஏற்படாது எனும் உத்தரவாதத்துடன் மனிதன் படைக்கப்பட்டிருந்தால் ஒரு போதும் அவன் வாரிசை விரும்ப மாட்டான். தன் மீது காரணமில்லாமல் சுமைகளை ஏற்றிக் கொள்ளவும் மாட்டான்.

மரணம், முதுமை போன்ற பலவீனங்களை எதிர்பார்த்திருக்கும் போதே, குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது சிரமம் என்றெண்ணி இரண்டோடு மனிதன் நிறுத்திக் கொள்கிறான். உருவான கருவைக் கூட கலைத்து விடுகிறான். சந்ததிகளால் தனக்கு ஆதாயம் இருக்கிறது என்ற நிலையிலேயே ஒரு அளவுக்கு மேல் குழந்தைகளை விரும்பாத மனிதன், குழந்தைகளால் எந்த ஆதாயமும் இல்லை என்றால் ஒருக்காலும் குழந்தைகளை விரும்ப மாட்டான்.

கடவுளின் நிலை இத்தகையது என்று யாரும் கூற மாட்டார்கள்.
கடவுளை நம்புகின்ற மக்கள் கடவுளுக்கு மரணம் உண்டு என நம்புவதில்லை.
கடவுள் களைப்படைந்து விடுவார் என்றும் நம்புவதில்லை.
அவ்வாறிருந்தும் கடவுளுக்குச் சந்ததிகளைக் கற்பனை செய்து விட்டனர்.
கடவுளைச் சரியாகப் புரிந்து கொண்ட எவருமே கடவுளுக்குச் சந்ததி தேவையில்லை என்ற முடிவுக்குத் தான் வருவார்.

"இயேசு இறை மகன்' என்று நீண்ட காலமாக நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தினர் இது போன்ற தர்க்க வாதங்களுக்காகத் தங்களின் நம்பிக்கையை விட்டு விட மாட்டார்கள். இயேசு கடவுளின் குமாரன் இல்லை என்பதற்கு இந்தத் தர்க்க வாதம் மட்டும் காரணம் இல்லை. கிறித்தவர்கள் வேதம் என நம்பும் பைபிளும் இயேசு இறைவனின் மகன் இல்லை என்று தான் கூறுகிறது. இயேசு இறைவனின் மகன் என்று நம்புவதற்கு எவற்றை ஆதாரங்களாக முன்வைக்கிறார்களோ அவற்றை பைபிள் நிராகரிக்கிறது. விறுப்பு வெறுப்பு இல்லாமல் கிறித்தவ அன்பர்கள் இதை வாசித்தால் இந்த உண்மையை அவர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.

                                                         இன்ஷா அல்லாஹ் தொடரும்....
நன்றி - jesusinvites 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger