தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ எழுச்சி - ஓர் வரலாற்றுப் பார்வை (தொடர் - 1)


-எம். ஷம்சுல் லுஹா ரஹ்மானி

1980 களுக்கு முன்னால் தமிழக முஸ்லிம்களின் நிலையும், தமிழக உலமாக்களின் நிலையும் எந்த நிலையில் இருந்தது என்பதை இன்றைய இளைஞர்கள் அறிய மாட்டார்கள்.

தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கை அவர்களிடமிருந்து அறவே எடுபட்டுப் போயிருந்தது. திருக்குர்ஆனிலும், நபி வழியிலும் அனுமதிக்கப்படாத போலிச் சடங்குகளைத்தான் இஸ்லாம் என்ற பெயரால் தமிழக முஸ்லிம்கள் செய்து வந்தனர்.
மத்ஹபு என்ற பெயரால் முரண் பட்டுக் கிடந்தனர். போலி ஷைகுமார்களின் கால்களில் விழுந்து வணங்கு வதை பெரும் பாக்கியமாகக் கருதி வந்தனர்.

இந்தக் காலகட்டத்தில்தான் மயிலாடுதுறை அருகில் அமைந்துள்ள சங்கரன்பந்தல் என்ற கிராமத்தி­ருந்து தவ்ஹீத் பொறி பற்றத் தொடங்கியது.

பைஜுல் உலூம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த அரபுக் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்த இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த பி. சேகு அலாவுதீன் எனும் பி.எஸ். அலாவுதீன் அவர்களும், அவரது இளைய சகோதரர் மவ்லவி பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களும் அந்த அரபுக் கல்லூரியில் படித்துக் கொடுப்பதோடு நின்று விடாமல் மக்களை நல்வழிப்படுத்த மாதந் தோறும் தெருமுனைக் கூட்டங்களை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலானார்கள்.

தீன் விளக்கக் குழு என்ற பெயரில் பொதுக் கூட்டங்கள் நடத்துவதுடன் துண்டுப் பிரசுரங்கள் வாயிலாகவும், அவ்வூரில் நிலவிய மூடநம்பிக்கைகளை எதிர்த்து வந்தனர்.

இந்த நிலையில் தஞ்சை நகரில் ஆற்றங்கரைப் பள்ளிவாசல் வளாகத்தில் தமிழக உலமாக்கள் சபை சார்பில் வலிமார்கள் மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் உரையாற்றிய எல்லா உலமாக்களுமே தர்கா வழிபாட்டை ஊக்குவித்தும் ஆதரித்தும் பேசினார்கள். ஏகத்துவ சிந்தனைவாதிகளின் இரத்தம் சூடேறும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபாதகச் செயலை நியாயப்படுத்தினார்கள்.

அதைக் கண்டு கொதித்துப்போன பீ. ஜைனுல் ஆபிதீன், அம்மாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகள் அனைத்தும் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் எதிரானவை என்பதைத் தக்க ஆதாரங்களுடன்''ஒரு நாடகம் அரங்கேறியது'' என்ற தலைப்பில் கடுமையாக விமர்சனம் செய்து ஒரு பிரசுரம் வெளியிட்டார்.

அப்பிரசுரத்தால் ஆத்திரம் அடைந்த உலமாக்கள் வேன்களில் வந்து இறங்கி சங்கரன் பந்த­ல் பணியாற்றும் பீ. ஜைனுல் ஆபிதீனை மதரஸாவில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி முறையிட்டனர். கல்லூரி நிர்வாகம் அதை ஏற்க மறுத்து விட்டாலும் உலமாக்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று சில கட்டுப்பாடுகளை விதித்தது.

மேலப்பாளையத்தைச் சேர்ந்த மவ்லவி ஷம்ஸுல்லுஹா, மவ்லவி முஹம்மது அலி ரஹ்மானி,  மவ்லவி யூசுப் மிஸ்பாஹி போன்றவர்களும் சங்கரன் பந்தல் சிராஜுத்தீன், அப்துல் பத்தாஹ் போன்ற நண்பர்களும் இப்பிரச்சாரத்துக் குப் பக்கபலமாக இருந்தனர்.

சங்கரன்பந்த­ல் தவ்ஹீத் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழகத்தில் வேறு சில பகுதிகளிலும் பிரச்சாரம் நடத்தப்பட்டு வந்தது. 

குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் மவ்லவி கமாலுத் தீன் மதனி, கடையநல்லூரில் மவ்லவி அப்துல் ஜலீல் மதனி, பேர்ணாம்பட்டில் பி. அன்வர்பாஷா, ரபீக் அஹ்மது தலை மையிலான குழுவினர், கோவையில் அப்துல் மஜீத் உமரி, திருச்சியில் அப்துல் மஜீத், அப்துல் சமத் தலைமையிலான குழுவினர், சென்னையில் உஸ்மான் கான் தலைமையிலான குழுவினர், பிரச்சாரம் செய்து வந்தனர். (இவர்களில் மவ்லவி அப்துல் ஜலீல் மதனி கொள்கையில் உறுதியாக நின்று மரணித்து விட்டார். மவ்லவி கமாலுத்தீன் மதனி, ரபீக் அஹ்மது அப்துல் மஜீத் உமரி அப்துல் மஜீத் அப்துல் சமத் உஸ்மான் கான் கொள்கையில் முரண்பட்டு நமக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர்.)

சங்கரன்பந்த­ல் பீ. ஜைனுல் ஆபிதீன் தெளிவாகப் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று கேள்விப்பட்டு மேற்கண்ட பகுதிகளில் உள்ளவர்கள் அவரைப் பேச்சாளராக அழைத்து பொதுக்கூட்டங்கள் நடத்தினார்கள். இதனால் அவர்களுக்கிடையே அறிமுகமும், ஒருங்கிணைப் பும் ஏற்பட்டது.

இதே காலகட்டத்தில் துபையில் இஸ்லாமிய விழிப்புணர்வு மையம் ஐ.ஏ.சி. என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. இவர்களும் தமிழ் கூறும் துபை வாழ் மக்களிடம் ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்து வந்தனர். 

மவ்லவி முஹம்மது இக்பால் மதனி, லெப்பைக்குடிகாடைச் சேர்ந்த ஜஹாங்கீர், கள்ளக்குறிச்சி சுலைமான், மேலப்பாளையம் ஃபளுலுல் இலாஹி உள்ளிட்டவர்கள் இஸ்லாமிய விழிப்புணர்வு மையத்தை நடத்தி வந்தனர். (இவர்களில் ஜஹாங்கீர் கொள்கையில் உறுதி யாக நின்று மரணித்து விட்டார். மற்ற வர்கள் கொள்கையில் முரண்பட்டு நமக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர்.)

தமிழகத்தில் சில பகுதிகளில் தவ்ஹீத் பிரச்சாரம் நடந்தாலும் பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் எழுத்தும், பேச்சும் பாமரர்களுக்கும் புரியும் வகையில் எளிய நடையில் தக்க ஆதாரங்களுடன் இருந்ததை ஒலி நாடாக்கள் மூலமும், துண்டுப் பிரசுரம் மூலமும் இஸ்லாமிய விழிப்புணர்வு மையத்தினர் கண்டறிந்தனர்.

சங்கரன்பந்தல் மதரஸாவில் தொடர்ந்து பணியாற்ற முடியாத அளவுக்கு கெடுபிடிகள் அதிகமானதால் அங்கிருந்து வெளியேறும் எண்ணத்தில் இருந்த பீ. ஜைனுல் ஆபிதீன் அவர் களை ஐ.ஏ.சி. இயக்கத்தினர் நேரிலும், தபால் மூலமும் தொடர்பு கொண்டனர்.

''உங்கள் எழுத்தாற்றலை பயன்படுத்தி ஏன் மாத இதழ் ஒன்றை நடத்தக் கூடாது'' என்று அவர்கள் பீ. ஜைனுல் ஆபிதீனிடம் கேட்டனர். தவ்ஹீத் அடிப்படையில் நடத்தப்படும் பத்திரிகைகளை இலாபகரமாக நடத்த முடியாது என்று பீ.ஜே., சொன்னபோது ''மாதா மாதம் எவ்வளவு நட்டம் ஏற்படுகிறதோ அதை நாங்கள் தந்து விடுகிறோம். நீங்கள் மதரஸாவை விட்டு வெளியேறி பத்தி ரிகை நடத்த முன் வாருங்கள்'' என்று கேட்டுக் கொண்டனர்.

''எழுதுகின்ற பணியை மட்டும்தான் என்னால் ஏற்க முடியும், பண விவகாரத்தை வேறு யாரிடமாவது ஒப்படைத் துக் கொள்ளுங்கள்'' என்று பீ.ஜே., திட்ட வட்டமாகக் கூறி விட்டார். அதன் பின்னர் திருச்சி அப்துல் சமத், அப்துல் மஜீத் தலைமையில் செயல்பட்டு வந்த திருச்சியில் வாட்ச் ரிப்பேர் கடை வைத்திருந்த அபூ அப்துல்லாஹ் என்பவரை நிர்வாகம் செய்ய ஐ.ஏ.சி. இயக்கத்தினர் நியமித்தனர்.

ஐ.ஏ.சி யின் சார்பில் அந்நஜாத் என்ற மாத இதழ் துவக்கப்பட்டது. அதன் எழுத்துப் பொறுப்பு முழுவதும் பீ.ஜே. யைச் சேர்ந்தது. இந்த இதழ் தமிழ்கத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. வளைகுடா நாடுகளில் வாழ்ந்தவர்கள் தங்கள் குடும்பத்திற்காக ஏராளமான சந்தாக்களை அனுப்பி பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவினார்கள்.

இதன் காரணமாகவே தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக் கொள்பவர்களை நஜாத் கூட்டம் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.

பத்திரிகையின் மாபெரும் வளர்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஐ.ஏ.சி.,க் கும் அபூ அப்துல்லாஹ்வுக்கும் மத்தியில் பண விஷயத்தில் விவகாரம் ஏற்பட்டது. ஐ.ஏ.சி பக்கம் நியாயம் இருந்ததால் ஐ.ஏ.சி பக்கம் பீ.ஜே. நின்றார். ஆனாலும் அபூ அப்துல்லாஹ் நஜாத் பத்திரிகையைத் தனது சொந்தப் பத்திரிகை என்று பதிவு செய்து கொண்டதால் அவர்களால் நியாயம் பெற முடிய வில்லை. அந்த அநியாயத்துக்குத் துணை போகக்கூடாது என்று பீ.ஜே. நஜாத் பத்திரிகையி­ருந்து வெளியேறினார். பல்லாயிரம் பத்திரிகைகள் விற்பனையை சில நூறு பிரதிகளில் கொண்டு வந்து அபூ அப்துல்லாஹ் அதைக் கோமா ஸ்டேஜில் நிறுத்தினார்.

அதே காலகட்டத்தில்தான் தமிழகத் தில் பரவலாக ஆங்காங்கே பிரச்சாரம் செய்தவர்கள் கூட்டாக ஒரு அமைப்பை உருவாக்கி ஏன் செயல்படக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.

அனைவரும் திருச்சியில் உள்ள தேவர் ஹா­ல் (இது இப்போது இல்லை) கூட்டப்பட்டு அஹ்லுல் குர் ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பீ. ஜைனுல் ஆபிதீன் தேர்வு செய்யப் பட்டார். பின்னர் இந்த இயக்கம் ஜம்மியத்து அஹ்­ல் குர்ஆன் வல்ஹதீஸ் (ஜாக்) என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது.

ஓராண்டுக்குப்பின் தனக்கு தலைமை பொறுப்பு வேண்டாம். பொறுப்பு இருந்தால் அதிகமான பிரச்சார நிகழ்ச்சிகளுக்குச் செல்ல முடியவில்லை என்று பீ.ஜே. திட்டவட்டமாக மறுத்து கமா லுத்தீன் மதனியை தலைவராக்குமாறு வ­யுறுத்தினார்.  மக்கள் இதைக் கடுமையாக எதிர்த்தாலும் பீ.ஜே. தனது நிலையை மாற்றிக்கொள்ள விரும்பாததால் வேண்டா வெறுப்பாக கமாலுத்தீன் மதனி தலைவராக்கப்பட்டார்.

அதன் பின்னர் கமாலுத்தீன் தலைமையில் பீ. ஜைனுல் ஆபிதீன், சம்சுல் லுஹா அலி ரஹ்மானி, உள்ளிட்ட பல அறிஞர்கள் தீவிரப் பிரச்சாரகர்களாகச் செயல்பட்டனர்.

மவ்லவி அப்துல்லாஹ் என்பவர் 'புரட்சி மின்னல்' என்ற பெயரில் பத்தி ரிகை நடத்தி வந்தார். ஏகத்துவப் பிரச் சாரத்தால் கவரப்பட்ட அவர் தனது பத்திரிகையை ஏகத்துவக் கொள்கையை பிரதிப­க்கும் இதழாக நடத்த முன் வந்தார். ஏற்கெனவே அந்நஜாத் பத்திரிகையை இழந்து புதிய பத்திரிகை ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்த ஐ.ஏ.சி., இயக்கத்தினர் மவ்லவி அப்துல்லாஹ்வின் விருப்பத்தை ஏற்றுப் புரட்சி மின்னலைத் தத்தெடுத்தனர். பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களுடைய மற்றும் உலமாக்களுடைய ஆக்கங்களைத் தாங்கி 'புரட்சி மின்னல்' விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

மேடைப் பிரச்சாரம் மூலமாகவும் 'புரட்சி மின்னல்' பத்திரிகை வழியாகவும் முடுக்கி விடப்பட்ட தீவிரப் பிரச்சாரம் காரணமாக மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டதுபோல் எதிர்ப்பும் அதிகமானது. பள்ளிவாச­ல் தொழத் தடை, ஊர் நீக்கம், அடக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன.

இன்ஷா அல்லாஹ்...   தொடரும்.....
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger