தொழுகையில் நெற்றி படும் இடத்தில் பார்வை இருந்தால் தான் தொழுகை கூடுமா? அத்தஹியாத்தின் தொடக்கத்தில் பார்வை விரலின் மீது இருக்க வேண்டுமா? அல்லது நெற்றி படும் இடத்தில் இருக்க வேண்டுமா?


தொழுகையில் நெற்றி படும் இடத்தில் பார்வை இருந்தால் தான் தொழுகை கூடுமா? அத்தஹியாத்தின் தொடக்கத்தில் பார்வை விரலின் மீது இருக்க வேண்டுமா? அல்லது நெற்றி படும் இடத்தில் இருக்க வேண்டுமா?

எஸ். அப்துர்ரஷீது, கொளச்சல்


தொழுகையில் நெற்றி படும் இடத்தில் தான் பார்வை இருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் அதே சமயம், தொழுகையின் போது, நெற்றி படும் இடத்தை விட்டு வேறு இடங்களில் பார்வை செலுத்தியதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

"
நபி (ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் (எதையேனும்) ஓதுவார்களா?'' என்று கப்பாப் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர், ஆம் என்றார். "நீங்கள் எப்படி அதை அறிந்து கொண்டீர்கள்?'' என்று கேட்டோம். "நபி (ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்'' என்று கப்பாப் (ரலி) பதிலளித்தார்.

அறிவிப்பவர்: அபூமஃமர், 

நூல்: புகாரி 746, 760, 761

தொழுகையில் நெற்றி படும் இடத்தைத் தான் பார்க்க வேண்டும் என்று நபிகள் நாயகம் கட்டளையிட்டிருந்தால் நபிகள் நாயகத்தின் தாடை அசைவதை நபித்தோழர்கள் பார்த்திருக்க முடியாது

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது, (அதற்காக) தொழுதார்கள். "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நின்ற இடத்தில் எதையோ பிடிக்க முயன்று விட்டுப் பின்வாங்கினீர்களே?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். "எனக்குச் சுவர்க்கம் எடுத்துக் காட்டப் பட்டது. அதிலிருந்து ஒரு குலையைப் பிடித்தேன். அதை நான் எடுத்திருந்தால் உலகம் உள்ளளவும் அதை நீங்கள் புசித்திருப்பீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), 

நூல்: புகாரி 748

நபி (ஸல்) அவர்கள் தமக்கு முன்பகுதியில் தென்பட்ட குலையைப் பிடிக்க முயன்றுள்ளார்கள். இந்த சமயத்தில் நபி (ஸல்) அவர்களின் பார்வை நெற்றி படும் இடத்தில் நிச்சயம் இருந்திருக்காது. நபி (ஸல்) அவர்களின் இந்தச் செயலை நபித்தோழர்கள் பார்த்துள்ளனர். எனவே அவர்களும் நெற்றி படும் இடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகின்றது.

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் தொழுகையில் நெற்றி படும் இடம் அல்லாத மற்ற இடங்களிலும் பார்வை செலுத்துவற்குத் தடையில்லை என்பதை அறியலாம். ஆனால் பார்வையை வானத்தை நோக்கி உயர்த்துவதற்குத் தடை உள்ளது.

தொழும் போது தங்கள் பார்வைகளை வானத்தில் உயர்த்துகின்றவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அவர்களின் பார்வை பறிக்கப் பட்டு விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),

நூல்: புகாரி 750

நபி (ஸல்) அவர்கள், அத்தஹிய்யாத்தில் ஆட்காட்டி விரலை அசைக்கும் போது, அதை நோக்கி பார்வையைச் செலுத்துவார்கள் என்று ஹதீஸ் உள்ளது.

தொழுகையில் இருக்கும் போது ஒருவர் கல்லை அசைத்துக் கொண்டிருப்பதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கண்டார்கள். தொழுகை முடிந்ததும் அவரிடம், "தொழுகையில் இருக்கும் போது நீ கல்லை அசைக்காதே! இது ஷைத்தானின் வேலை! மாறாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வது போன்று நீ செய்'' என்று கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படிச் செய்வார்கள்?'' என்று அவர் கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி), தமது வலது கையை வலது தொடையில் வைத்து கிப்லா திசையில் பெருவிரலுக்கு அடுத்த விரலை வைத்து இஷாரா செய்து அதை நோக்கி தமது பார்வையை செலுத்தினார்கள். பிறகு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யக் கண்டேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ பின் அப்துர் ரஹ்மான், 

நூல்: நஸயீ 1148

நன்றி - ONLINEPJ.COM 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger