நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்கள் என்று அன்றைய எதிரிகள் விமர்சனம் செய்த போது அதை அல்லாஹ் மறுக்கிறான். இவ்வாறு கூறுவோர் அநியாயக்கார்கள் என்று அல்லாஹ் கூறுவதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்கள் குர்ஆனுடன் நேரடியாக மோதுவதால் அந்த ஹதீஸ்கள் கட்டுக்கதைகள் என்று தான் நாம் கருத வேண்டும் என்று நாம் குறிப்பிட்டிருந்தோம்.
இதை மறுக்கப் புகுந்த இஸ்மாயீல் ஸலபி சூனியம் செய்யப்பட்டவர் என்று எதிரிகள் விமர்சனம் செய்ததாக குர்ஆன் கூறினாலும் சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல்லுக்கு சூனியம் செய்பவர் என்று பொருள் கொள்ள வேண்டும் எனக் கூறி குர்ஆனுடன் விளையாடுகிறார். இது குறித்து அவர் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் தவறானவை என்பதை சென்ற தொடரில் நாம் விளக்கியுள்ளோம்.
சூனியம் செய்யப்பட்டவர் என்பதற்கு சூனியக்கார் என்று அர்த்தம் செய்ய வேண்டும் என்பதை பின் வருமாறு எழுதி நியாயப்படுத்துகிறார்.
அல்குர்ஆனின் இலக்கிய நடை
இவ்வாறு கூறும் போது ஏன் அல்குர்ஆன் இந்த மொழி நடையைக் கடைப்பிடிக்க வேண்டும். வெறுமனே ஸாஹிர் என்றே கூறி விட்டுப் போகலாமே! என்ற ஐயம் பலருக்கு ஏற்படலாம். இது குறித்த சிறு விளக்கத்தைப் பெறுவது நல்லது.
அல்குர்ஆன் பொருளை மட்டுமன்றி அழகிய இலக்கிய நயம் கலந்த சொற்பயன்பாட்டிலும் கவனம் செலுத்துகின்றது. இந்த மஸ்ஹூர்-சூனியம் செய்யப்பட்டவர் என்ற பதம் பயன்படுத்தப்பட்ட ஆயத்துக்கு முந்தைய வசனங்கள் மஸ்ஹூரா என்ற சொல்லை ஒத்த ஓசை நயமுடையதாக அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.
நபி(ஸல்) அவர்களைக் குறித்து மஸ்ஹூரா என அவர்கள் கூறிய வசனத்திற்கு முந்தைய-பிந்திய வசனங்களின் முடிவை அவதானித்தால் இந்த உண்மையை அறியலாம். 17 ஆம் அத்தியாயத்தின் 33 ஆம் வசனம் மன்ஸூரா என்றும், 34 ஆம் வசனம் மஸ்ஊலா என்றும், 35 ஆம் வசனம் தஃவீலா என்றும், 36 ஆம் வசனம் மஸ்ஊலா என்றும், 37 ஆம் வசனம் தூலா என்றும், 38 ஆம் வசனம் மக்ரூஹா என்றும், 39 ஆம் வசனம் மத்ஹூரா என்றும், 40 ஆம் வசனம் அழீமா என்றும், 41 ஆம் வசனம் நுபூரா என்றும், 42 ஆம் வசனம் ஸபீலா என்றும், 43 ஆம் வசனம் கபீரா என்றும், 44 ஆம் வசனம் கபூரா என்றும், 45 ஆம் வசனம் மஸ்தூரா என்றும், 46 ஆம் வசனம் நுபூரா என்றும், 47 ஆம் வசனம் மஸ்ஹூரா, இவ்வாறு இலக்கிய நயத்துடனும் ஒத்த ஓசை நயத்துடனும் அமைந்திருப்பதை அவதானிக்கலாம். இவ்வாறே 25:8 வசனத்திற்கு முந்திய-பிந்திய வசனங்களும் மஸ்ஹூரா என்ற ஓசை நயத்துடன் ஒன்றித்திருப்பதை அறியலாம். எனவே, அறபு இலக்கண விதிகளில் இடமிருப்பதாலும், அல்குர்ஆன் பயன்படுத்தியிருப்பதாலும், இந்த இடத்தில் மஸ்ஹூரா என்ற பதம் பயன்படுத்தப்பட்டாலும் அது ஸாஹிரா என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சூனியக்கார மனிதனைத்தான் இவர்கள் பின்பற்றுகின்றனர் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர் என்பது அந்த வசனத்தின் விளக்கமாகும்.
இவரைப் போல் திருக்குர்ஆனை வேறு எவரும் இழிவு படுத்தி இருக்க முடியாது என்று கருதும் வகையில் இவரது இந்த வாதம் அமைந்துள்ளது.
இவரது வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்மாயீல் ஸலபி அழகிய முறையில் தோளில் துண்டு போடும் வழக்கமுடையவர் என்று வைத்துக் கொள்வோம்.தோளில் போட துண்டு கிடைக்காத போது வேட்டியை அவிழ்த்து அதைத் தோளில் போட்டுக் கொண்டார் என்று கூறினால் அது எந்த அளவுக்கு இஸ்மாயீல் ஸலபியைக் கேவலப்படுத்துமோ அந்த அளவுக்கு இவர் குர் ஆனைக் கேவலப்ப்டுத்துகிறார்.
திருக்குர்ஆன் மொழி நடைக்கு முக்கியத்துவம் கொடுப்பது உண்மை தான். அதை விட கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும். கருத்தைப் புறம் தள்ளிவிட்டு வார்த்தைகளை அழகுபடுத்துவது குர்ஆனின் தன்மை இல்லை.
தமிழ் அரசியல் வாதிகளும் மேடைப் பேச்சாளர்களும் வார்த்தை ஜாலம் காட்டுவார்கள். அதில் உருப்படியாக கருத்து எதுவும் இருக்காது. அது போல் தான் குர் ஆன் அமைந்துள்ளது என்று இவர் வாதிடுகிறார். சூனியம் செய்பவர் என்பது தான் இந்த இடத்தில் பொருத்தமான வார்த்தை; நடையழகுக்காக சூனியம் செய்யப்பட்டவர் என்று அல்லாஹ் கூறி விட்டான் என்று கூறியதன் மூலம் பொருத்தமற்ற சொற்களைப் போட்டு மொழி நடையை குர் ஆன் அழகுபடுத்தியுள்ளது என்ற இந்த வாதம் எவ்வளவு கடுமையானது என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். நபிகள் நாயகத்தை மன நோயாளியாக ஆக்கியே தீருவது என்பதற்காக அல்லாஹ்வின் வசனத்திலும் கை வரிசையக் காட்டி விட்டார்.
சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல்லுக்கு சூனியம் செய்யப்பட்டவர் என்று சரியான அர்த்தம் செய்தால் மொழி நடையும் கருத்துச் செறிவும் திருக்குர் ஆனில் இருப்பது உறுதியாகும். சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல்லுக்கு சூனியம் செய்பவர் என்று பொருள் கொண்டால் வார்த்தை அலங்காரம் தான் இருக்கும். மொழியில் தவறு ஏற்பட்டுவிடும். அதாவது பொருத்தமற்ற சொல்லைப் பயன்படுத்தி குர்ஆன் மொழி நடையைப் பேணியுள்ளது என்ற நிலை ஏற்படும். அதாவது வேட்டியைக் களைந்து விட்டு தோளில் துண்டு போடும் செயலுக்கு ஒப்ப இது அமையும் என்பதை நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
அனைத்து இறைத் தூதர்களும் சூனியக்காரர்கள் என எதிரிகளால் விமர்சிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறே, இவர்களுக்கு முன்பிருந்தோரிடம் எந்தத் தூதர் வந்த போதும், (இவர்) சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என அவர்கள் கூறாமல் இருந்ததில்லை. (51:52)
எனக் குர்ஆனும் கூறுகின்றது. இந்த அடிப்படையில் அர்த்தம் செய்யும் போது அந்த அர்த்தத்திற்கும், ஹதீஸிற்குமிடையில் எந்த முரண்பாடும் இல்லை என்பது தெளிவு. முன்னைய அர்த்தத்தின்படி சூனியம் செய்யப்பட்ட மனிதர் என்று அர்த்தம் செய்தாலும், காஃபிர்கள் கூறிய நோக்கத்திற்கும் இந்த ஹதீஸ் கூறும் அர்த்தத்திற்குமிடையில் பாரிய வேறுபாடு உள்ளது என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டோம்.
நம் இஷ்டத்துக்கு இல்லாத அர்த்தம் செய்தால் எதையும் முரண்பாடு இல்லை என்று ஆக்கிவிடலாம்.
இஸ்மாயீல் ஸலபி ஒருவரை அடிக்கும் போது இஸ்மாயீல் ஸலபி அடிக்கப்பட்டார் என்று நாம் கூறலாம். அவர் அடிக்கத்தான் செய்தார் அடிக்கப்படவில்லையே என்று யாராவது கேட்டால் அடித்தார் என்ற அர்த்தத்தில் தான் அடித்தார் என்று கூறினேன் எனச் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்.
இஸ்மாயீல் ஸலபிக்கு முளை இல்லை என்று ஒருவர் கூறுகிறார். ஏன் இப்படி கூறினாய் என்று இஸ்மாயீல் ஸலபி கேட்கும் போது மூளை இருக்கிறது என்பதைத் தான் மூளை இல்லை என்ற வார்த்தயால் குறிப்பிட்டேன் என்று கூறினால் இஸ்மாயீல் ஸலபி திருப்திப்பட்டுக் கொள்வார்.
திருடலாம்; விபச்சாரம் செய்யலாம் என்று கூட ஒருவர் பேசி விட்டு திருடக் கூடாது விபச்சாரம் செய்யக் கூடாது என்பது தான் இதன் அர்த்தம் என்று கூறலாம்.
நாம் சொல்லும் வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது பிரச்சனை இல்லை. நான் நினைப்பது தான் அதற்கு அர்த்தம் என்று கொள்கை வகுத்துக் கொண்டால் எதையும் பேசலாம். வேறு அர்த்தம் கற்பித்துக் கொள்ளலாம் என்று ஆகிவிடும். சொந்த வாழ்க்கையில் இதை ஜீரணிக்காத இவர் அல்லாஹ்வின் வார்த்தைகளை மட்டும் இப்படி கேலிப்பொருளாக ஆக்குகிறார்.
அதாவது சூனியம் செய்யப்பட்டவர் என்று காபிர்கள் விமர்சனம் செய்தார்கள் என்பதற்கு சூனியம் செய்பவர் என்று இல்லாத அர்த்தம் செய்தால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்ட ஹதீஸுக்கு முரண் படாமல் பொருந்திப் போய்விடுமாம். நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டது என்ற ஹதீஸுக்கு சூனியம் வைக்கப்படவில்லை என்று பொருள் கொண்டால் பொருந்திப் போகாதோ? இதெல்லாம் ஒரு ஆய்வா?
மஸ்ஹூர் என்பதற்கு என்ன அர்த்தமோ அந்த அர்த்தத்தைச் செய்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
முந்தைய நபிமார்களைப் பற்றி சூனியக்காரர்கள் என்று சொன்னதால் நபிகள் நாயகத்தைப் பற்றியும் அப்படித்தான் சொல்லி இருப்பார்கள் என்று ஆதாரமற்ற ஊகத்தை திணிக்கிறார். முந்தைய நபிமார்களை சூனியம் செய்பவர்கள் என்று எதிரிகள் கூறியதாக திருக்குர்ஆன் கூறும் போது ஸாஹிர் (சூனியம் செய்பவர்) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. எனவே அந்தச் சொல்லுக்கான அர்த்தத்தை அங்கே கொடுக்க வேண்டும். ஆனால் நபிகள் நாயகம் ஸல் அவர்களை ஸாஹிர் (சூனியக்காரர்) என்று கூறியதாகவும் குர்ஆன் கூறுகிறது. மஸ்ஹூர் (சூனியம் செய்யப்பட்டவர்) என்று கூறியதாகவும் குர்ஆன் கூறுகிறது. இரண்டு விதமாகவும் விமர்சனம் செய்தனர் என்று தான் அறிவுடைய ஒவ்வொருவரும் புரிந்து கொள்வார்கள். சூனியம் செய்யப்பட்டவர் என்று சொல்லி இருந்தாலும் அதை நான் கருத்தில் கொள்ளமாட்டேன். சூனியம் செய்பவர் என்று என் இஷ்டத்துக்கு அர்த்தம் செய்வேன் என்று கூறி குர் ஆனுடன் விளையாடுகிறார்.
சந்தேக நிவர்த்தி:
மஸ்ஹூர் என்ற பதம் ஸாஹிர் (சூனியக்காரர்) என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்படலாம் என்பதை அறபு மொழி வழக்கின் படியும் அல்குர்ஆன் ஒளியிலும் நாம் விளக்கியுள்ளோம். எனினும், அதற்கான காரணம் கூறும் போது ஓசை நயம், இலக்கிய நயம் குறித்துப் பேசியுள்ளோம். இதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் குர்ஆனின் அடிப்படையிலும், குர்ஆன் விளக்கவுரைகளின் அடிப்படையிலும் நாம் கூறியதை மறுப்பதற்கு வாய்ப்பு இல்லை எனக் கருதுகின்றோம். இருப்பினும் அல்குர்ஆன் ஓசை நயம் குறித்துக் கவனம் செலுத்துகின்றது என்பதை நிரூபிக்கச் சிறியதொரு உதாரணத்தைத் தர விரும்புகின்றோம்.
அல்குர்ஆனில் மூஸா-ஹாரூன் ஆகிய நபிமார்கள் பற்றிக் கூறும் போது முதலில் மூஸா நபியையும், அடுத்ததாக ஹாரூன் நபியையும் குறிப்பிடப்படும். (2:248, 7:122) 10:75, 21:48, 23:45, 26:48, 37:114, 37:120) இவ்வாறு அனைத்து இடங்களிலும் மூஸா-ஹாரூன் என இடம்பெற்றிருக்க,
சூனியக்காரர்கள் சுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு, ஹாரூன் மற்றும் மூஸாவின் இரட்சகனை நாம் நம்பிக்கை கொண்டு விட்டோம் எனக் கூறினர்.(20:70)
என மேற்படி வசனத்தில் மட்டும் ஹாரூன் வ மூஸா என மாறி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, 7:122, 26:48 ஆகிய வசனங்களும் இதே செய்தியைத் தான் பேசுகின்றது. எனினும், 20:70 இல் மட்டும் ஹாரூன் நபியின் பெயர் முற்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த வசனங்களுக்கு முந்திய வசனங்கள் அல்கா, தஸ்ஆ, மூஸா, அஃலா, அதா என இடம்பெறுவதால் இந்த ஓசை நயத்திற்கு ஹாரூன என்பதை இறுதியாக முடிப்பதை விட மூஸா என்பதைக் கொண்டு வருவதே பொருத்தமாகும். இதே போல இதற்குப் பிந்திய வசனங்கள் அப்கா, துன்யா, அப்கா, யஹ்யா, உலா எனத் தொடர்கின்றன. இந்த இடத்தில் வழமை போன்று ஹாரூன் நபியின் பெயரை இறுதியில் போட்டால் ஓசை நயம் அடிபடுகின்றது. எனவே, ஓசை நயத்தைக் கருத்தில் கொண்டு மூஸா என்ற பதம் இறுதியில் போடப்பட்டுள்ளது.
எனவே, நபி(ஸல்) அவர்களைச் சூனியம் செய்யப்பட்டவர் என்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அந்த இடத்தில் சூனியம் செய்பவர் என்ற அர்த்தமுடைய ஸாஹிர் என்ற பதம் பயன்படுத்தப்படாமல் மஸ்ஹூர் என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது!
ஸாஹிர் என்பதற்குப் பகரமாக மஸ்ஹூர் என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருப்பதை குர்ஆனின் மூலமே நாம் நிரூபித்திருப்பதால் இந்தக் காரணத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் கூட இந்த வாதத்தின் வலிமை குன்றாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
என்று பயங்கரமான ஆதாரத்தை எடுத்துக் காட்டுகிறார். இரண்டு நபர்களைப் பற்றி பேசும் போது யாரை முதலில் சொன்னாலும் அதில் எந்த கருத்துச் சிதைவும் ஏற்படாது. எனவே சில இடங்களில் மூஸா என்பதை முதலில் சொல்லியிருப்பதும், சில இடங்களில் ஹாரூன் என்பதை முதலில் சொல்லி இருப்பதும் இலக்கணத்தில் உள்ளது தான். எனவே குர்ஆன் பொருத்தமற்ற நடையைப் பயன்படுத்தி விட்டது என்று யாரும் கூற மாட்டார்கள். ஆனால் சூனியம் செய்பவர் என்று பயன்படுத்த வேண்டிய இடத்தில் சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல்லைப் பயன்படுத்துவது இது போன்றதல்ல. இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் இவரது இந்த வாதமும் அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டடாகக் கூறும் ஹதீஸ் திருக்குர்ஆனுடன் அப்பட்டமாக மோதுகிறது என்பதால் எப்படியாவது குர் ஆனுடைய அர்த்தத்தை மாற்றிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு மற்றொரு வாதத்தை வைக்கிறார்.
அதாவது சூனியம் செய்யப்பட்டவர் என்பதற்கு சூனியம் செய்பவர் என்பது தான் அர்த்தம் என்றால் அதில் உறுதியாக இருக்க வேண்டும். இன்னொரு அர்த்தமும் செய்யலாம் என்று பின்வருமாறு கூறுகிறார்.
உணவு உண்பவர்:
மஸ்ஹூர்-சூனியம் செய்யப்பட்டவர் என்ற வசனத்திற்கு அறபு மொழி அகராதியின்படி அல்குர்ஆன் விளக்கவுரையாளர்கள் பலரும் மஸ்ஹூர் என்றால், உணவு உண்பவர் என்ற விளக்கத்தினை அளித்துள்ளனர். தமிழ் மொழிக்கு இது புது விளக்கமாகத் தெரிந்தாலும், பல குர்ஆன் விளக்கவுரைகள் இது குறித்துப் பேசியுள்ளன.
நபி(ஸல்) அவர்களை அவர் மஸ்ஹூரான மனிதர் என்று கூறினர். பிரபலமான கருத்தின்படி சூனியத்தைக் குறிக்கும் மற்றொரு கருத்தின்படி ஸஹ்ர என்றால் நுரையீரலைக் குறிக்கும். அதாவது, நீங்கள் முஹம்மதைப் பின்பற்றினால் உண்டு-குடிக்கக்கூடிய (சாதாரண) மனிதனைத்தான் பின்பற்றுகின்றீர்கள் என அவர்கள் கூறியுள்ளனர். (லபீத் இப்னு ரபீஆ எனும்) கவிஞனின் கூற்றும் இம்ரஉல் கைஸ் என்ற கவிஞனின் கவிதையும் இந்த மொழி நடைக்குச் சான்றாகும். (சுருக்கம்)
நுரையீரல் உள்ள ஒரு மனிதனைத்தான் நீங்கள் பின்பற்றுகின்றீர்கள். அவர் உண்கிறார்; பருகுகிறார்; உணவின் பாலும், பாணத்தின் பாலும் தேவையற்ற ஒரு மலக்கை நீங்கள் பின்பற்றவில்லை என்பதே இந்த வசனத்தின் அர்த்தமாகும். (குர்தூபி)
இவ்வாறே மஸ்ஹூர் என்பதற்கு உணவு உண்பவர், சாதாரண மனிதர் என்ற கருத்து இருப்பதாகப் பல அறிஞர்களும் குறிப்பிட்டுள்ளனர். சில அறிஞர்கள் இந்தக் கருத்தை ஏற்க மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற கருத்தை அங்கீகரிக்கும் அறிஞர்கள் இவரும் எம்மைப் போலவே உணவு உண்ணக்கூடிய சாதாரண மனிதர் இவர் எப்படி இறைத் தூதராக இருக்க முடியும்? என்ற கருத்தில் நபித்துவத்தை மறுத்ததைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
26:153, 185 ஆகிய இரண்டு வசனங்களிலும் இந்தப் பதம் பயன்படுத்தப்பட்ட பின்னர், நீரும் எம்மைப் போன்ற மனிதர் தான் என்று காஃபிர்கள் கூறியுள்ளனர். இதிலிருந்து முஸஹ்ஹரீன் என்ற பதத்தை சூனியம் செய்யப்பட்டவர் என்ற அர்த்தத்தில் அவர்கள் பயன்படுத்தவில்லை. எம்மைப் போல உணவு உண்ணக்கூடிய சராசரி மனிதர் என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தியுள்ளனர் என்பது புலனாகின்றது.
இவ்வாறு நோக்கும் போது, நபி(ஸல்) அவர்கள் குறித்து மஸ்ஹூர் என்ற பதம் பயன்படுத்தப்பட்ட போதும் இவரும் எம்மைப் போன்ற மனிதர் தானே என்ற இதே தோரனையில் தான் பேசப்படுகின்றது.
இத்தூதருக்கு என்ன நடந்தது? உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடந்து திரிகின்றார். இவருடன் ஒரு வானவர் இறக்கப்பட்டு, அவர் இவருடன் எச்சரிக்கக் கூடியவராக இருக்க வேண்டாமா? என்றும் கூறுகின்றனர். (25:7)
என நபி(ஸல்) அவர்கள் உணவு உண்பவராக இருக்கிறார். அதுவும் கஷ்டப்பட்டு உண்பவராக எம்மைப் போலவே இருக்கின்றார். இப்படிப்பட்ட சராசரி மனிதர் எப்படி இறைத் தூதராக இருக்க முடியும்? என்ற அர்த்தத்தில் தான் உணவு உண்ணக்கூடிய ஒருவரைத் தான் நீங்கள் பின்பற்றுகின்றீர்கள் என அநியாயக்காரர்கள் கூறியதாகக் குர்ஆன் குறிப்பிடுகின்றது.
இந்த அடிப்படையில் நீங்கள் மஸ்ஹூரான ஒருவரைப் பின்பற்றுகிறீர்கள் என்ற வசனத்திற்குச் சூனியம் செய்யப்பட்டவர் அல்லது சூனியக்காரரை அல்லது உணவு உண்பவரை என்ற எந்த அர்த்தத்தை எடுத்தாலும் அந்த அர்த்தத்திற்கும் நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஆதாரபூர்வமான அறிவிப்புக்குமிடையில் எந்த முரண்பாடும் இல்லை என்பது தெளிவு.
மஸ்ஹூர் என்ற சொல்லுக்கு நுரையீரல் உள்ளவர் என்ற பொருள் அரிதாக உள்ளது என்பது உண்மை தான். ஆனால் இந்த வசனத்தில் அவ்வாறு பொருள் கொள்வது மடமையாகும். அறிஞர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் அடி சறுக்கும். இது போல் அடி சறுக்கியவர்கள் கூறியதைத் தேடிப் பார்த்து மேற்கண்ட வாதத்தை எடுத்து வைக்கிறார்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சாப்பிடுகிறார்கள்; பருகுகிறார்கள் என்றெல்லாம் காபிர்கள் விமர்சனம் செய்தனர். அந்த விமர்சனம் மறுக்கப்படக் கூடியது அல்ல. நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சாப்பிடாமல் இருக்கவில்லை. பருகாமல் இருக்கவில்லை. எனவே இது போல் காபிர்கள் விமர்சனம் செய்த போது அதை அல்லாஹ் மறுக்கவில்லை. இவர் மட்டும் அல்ல அனைத்து நபிமார்களும் இப்படித் தான் இருந்தனர் என்று அல்லாஹ் அவர்கள் விமர்சனத்துக்கு மேலும் ஆதாரத்தை எடுத்துக் கொடுக்கிறான்.
ஆனால் 17:47,48 வசனங்களில் அல்லாஹ் அவர்களின் விமர்சனத்தை ஏற்கவில்லை. அந்த வசனங்களைப் பாருங்கள்!
சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள் என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம். உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள் என்று கவனிப்பீராக! இதனால் அவர்கள் வழி கெட்டனர். அவர்கள் வழியை அடைய இயலாது.
திருக்குர் ஆன் 17:47,48
முஹம்மது சாப்பிடுகிறார் என்பது இதன் கருத்தாக இருந்தால் உமக்கு எவ்வாறு உதாரணம் கூறுகின்றனர் என்று பார்ப்பீராக என்று அல்லாஹ் ஏன் கூற வேண்டும். சாப்பிடக் குடியவர் என்பது சரியான உதாரணம் தானே? சாப்பிடக் கூடியவர் என்று தெளிவான வார்த்தைகளால் எதிரிகள் விமர்சனம் செய்த போது அதை அல்லாஹ் மறுக்கவில்லை. அது தவறான உதாரணம் என்று கூறவில்லை. ஆனால் மஸ்ஹூர் என்று கூறிய பொது அநியாயக்காரர்கள் தான் இப்படிக் கூறுவார்கள் என்கிறான். இது தவறான உதாரணம் என்கிறான். இவ்வாறு கூறுவது வழி கேடு என்கிறான். இந்த இடத்தில் சாப்பிடக் கூடியவர் என்ற அர்த்தம் அறவே பொருந்தாது என்பதை இவ்வசனமே தெளிவுபடுத்தி விடுகிறது.
நபிகள் நாயகத்தை மன நோயாளியாக ஆக்கவும், குர்ஆனை மறுக்கவும் எத்தகைய தந்திரங்களை எல்லாம் கையாள்கிறார் என்பது புரிகிறதா?
இதன் பிறகு தான் தன்னை முழுமையாக இனம் காட்டுகிறார். குர் ஆன் ஹதீஸில் இருந்து ஒரு விஷயம் தெளிவாக தெரிந்தாலும் அதை உடைக்க முடியாத அளவுக்கு வலுவாக இருந்தாலும் இதற்கு முன் இதை யாராவது சொல்லி இருக்கிறார்களா என்று பின்வருமாறு கேட்கிறார்.
இந்த வசனமும், ஹதீஸும் முரண்படுவதாகக் குர்ஆனுக்கு விளக்கம் எழுதிய எந்த அறிஞரும் கருதவில்லை. முற்கால அறிஞர்களில் (முஃதஸிலா போன்ற வழிகேடர்களைத் தவிர) எவரும் இந்த வசனம் அந்த ஹதீஸிற்கு முரண்பட்டதாகக் கருதவில்லை. அப்படி இருக்கும் போது இவருக்கு மட்டும் இந்த வசனங்களுக்கும், ஹதீஸிற்குமிடையில் முரண்பாடு இருப்பதாகத் தோன்றுகின்றது என்றால் அவர்கள் அனைவரும் குர்ஆனைத் தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்று கூறுவதா? அல்லது இவர் தான் புரிந்து கொள்வதில் ஏதோ தவறு விடுகின்றார் எனக் கருதுவதா? எது நடுநிலையான முடிவாக இருக்கும்? அவர்கள் அனைவருக்கும் தவறு வருவதற்கான வாய்ப்பை விட இவர் ஒருவருக்குத் தவறு வருவதற்கான வாய்ப்புத்தானே அதிகமாக உள்ளது?
இவர் இவரது விளக்கவுரையில் அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர என்று கூறியது நபிமார்களின் தூதுத்துவத்தையே முற்று-முழுதாக உளறல் என்று கூறுவதற்காகத் தான் என்று கூறியிருக்கும் போது, அப்படிக் கூறி விட்டு அந்த அர்த்தத்தில் கூறப்பட்ட குர்ஆன் வசனத்திற்கும், இந்த நபிமொழிக்கும் முரண்பாடு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா? எனவே, இந்த ஹதீஸை ஏற்பது குறைஷிக் காஃபிர்களின் கூற்றை உண்மைப்படுத்துவதாக இருக்கின்றது என்ற தவறான வாதத்தின் அடிப்படையில் இந்த ஹதீஸை மறுப்பது தவறானதாகும் என்பது தெள்ளத்-தெளிவாகத் தெரிகின்றது.
இவருக்கு தக்லீத் நோய், மத்ஹப் நோய் பீடித்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதுவரை ஒருவரும் சொல்லா விட்டாலும் சொல்வது சரியா தவறா என்பது தான் மார்க்கத்தில் கவனிக்க வேண்டும்.
மத்ஹப் வாதிகள் எடுத்து வைக்கும் அதே வாதத்தை எடுத்து வைக்கிறார்.
ஆனால் இந்த வாதத்தில் மத்ஹப் வாதிகள் உண்மையாளர்களாக உள்ளனர். இவர் இதிலும் உண்மையாளர் இல்லை.
இதுவரை உலகத்தில் ஒரு அறிஞரும், ஒரு பிரிவினரும் கூறாத ஒரு கருத்தை விடுபட்ட நபிவழி என்று அறிஞர் இப்னு பாஸ் அவர்கள் ஒரு பத்வா கொடுத்தனர். அதை தமிழிலும் நூலாக அச்சிட்டு இலட்சக்கணக்கில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் அனுப்பினார்கள். மதனிகள் மூலம் அதை வினியோகமும் செய்தனர். யாரும் சொல்லாத கருத்து என்று இதை இவரும் இவரது ஆட்களும் விமர்சனம் செய்தார்களா? இவர்கள் புதிதாக திருக்குர்ஆன் தமிழாக்கம் வெளியிட்டுள்ளனர். அறிவியல் கருத்துக்களைக் கூறும் வசனங்கள் பலவற்றுக்கு நாம் செய்த தமிழாக்கத்தை- இது வரை யாரும் சொல்லாத அர்த்த்தைக் கொடுத்துள்ளனர்.
எனவே இந்த வாதம் அப்படியே வழிகேடர்களின் வாதமாகும்.
யாரும் சொல்லவில்லை என்றால் கூட சொல்லும் கருத்து சரியா என்று தான் பார்க்க வேண்டும். அறிவுப்பூர்வமாக வாதிக்க முடியாத போது மக்களின் உணர்வுகளை உசுப்பி விட்டு நியாயப்படுத்தும் இந்தக் கேவலமான போக்கை இவர் கைவிட வேண்டும்.
இது குறித்து இஸ்மாயீல் ஸலபியின் மற்ற வாதங்கள் இன்ஷா அல்லாஹ் ..தொடரும்,,,
நன்றி - sltj
Post a Comment