Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

ஆண்களை, தவ்ஹீத் கொள்கை உள்ளவரா ? என்று கேட்டு திருமணம் செய்ய முடியுமா?


பெண் பார்க்கும் போது மார்க்கத்தின் அடிப்படையில் குர்ஆன் ஓதத் தெரியுமா ? தொழத் தெரியுமா ? என்று கேள்விகள் கேட்டு அதன் அடிப்படையில் என்னைத் திருமணம் செய்தார்கள். ஆனால் இது போன்று ஆண்களை, தவ்ஹீத் கொள்கை உள்ளவரா ? தொழுகை உள்ளவரா? என்று கேட்டுத் திருமணம் செய்ய முடியுமா?

இஸ்லாத்தில் ஆண், பெண் இருவரும் தவ்ஹீத் கொள்கை உள்ளவராக, திருக்குர்ஆன் ஓதத் தெரிந்தவராக, தொழும் பழக்கம் உள்ளவராக இருக்க வேண்டும். பெண்ணிடம் எப்படி இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டதோ அதே அடிப்படையில் பெண் வீட்டு சார்பாக மணமகனையும் விசாரித்தே தேர்வு செய்ய வேண்டும்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனதுவிருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:221) 

இந்த வசனம் தவ்ஹீத் கொள்கை உள்ளவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என்பதைக் காட்டுகிறது. இதுபோன்று நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்கும் போது, நல்ல மனிதரைத் தேர்வு செய்ய அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள்.

... நான் இத்தாவை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர் என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்து விடுபவர்). முஆவியோ, அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உஸாமா பின் ஸைதை மணந்து கொள் என்று கூறினார்கள். நான் உஸாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீ உஸாமாவை மணந்து கொள் என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன். அறிவிப்பவர்: ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (2953)
0 comments

முத்தலாக் விட்டால் வேறு திருமணம் செய்யலாமா?

எனக்குத் திருமணம் ஆகி இரண்டு வருடங்களில் எனக்கும் என் கணவருக்கும் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சனையில் பிரிந்தோம். பெரியவர்களின் பிரச்சனையால் என் கணவர் திடீரென்று முத்தலாக் கொடுத்துவிட்டதாகச் சொல்லி விட்டார். என் கணவர் தலாக் விட்டு ஏழு மாதங்கள் ஆகின்றது. என் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். ஆனால் முத்தலாக் விட்டுவிட்டால் ஒரு தலாக்காவே கருதப்படும் என்றும் அவரே உம் கணவர் என்றும் வேறு ஒருவரை திருமணம் செய்ய முடியாது என்று கூறுகின்றனர். இது சரியா?  - சர்மிளா, மதுரை

நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்திலும், உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் (முதல்) இரண்டு ஆண்டுகளிலும் முத்தலாக் ஒரு தலாக்காகவே (நடைமுறையில்) இருந்தது. அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (2932)


அல்லாஹ்வின் தூதர் காலத்தில் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருத்தப்பட்டுள்ளதால். நபிவழியின்படி முத்தலாக் ஒரு தலாக்காவே எடுத்துக் கொள்ளப்படும். என்றாலும் உங்கள் கணவர் தலாக் கூறி ஏழு மாதங்கள் ஆகி விட்டதால் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை நீங்கி விடுகிறது. இதைத் தெரிந்து கொள்ள சுருக்கமாக தலாக்கின் சட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒருவர் தன் மனைவியை தலாக் கூறினால் அவர்களின் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை. மாறாக முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிப்பதற்குள் சேர்ந்து கொள்ளலாம்.

இந்தக் காலக் கெடுவுக்குள் மனைவியுடன் கணவன் சேரவில்லையானால் அவர்களுக்கிடையே திருமண உறவு நீங்கி விடும். ஆயினும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் அவர்கள் புதிதாகத் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.

மூன்று மாதவிடாய் காலத்திற்குள் உங்கள் கணவர் உங்களிடம் சேர்ந்து கொள்ளாததால் அவர் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையை இழந்து விடுகிறார். நீங்கள் இருவரும் விரும்பினால் புதிதாக அவரையே திருமணம் செய்து கொள்ளலாம். இல்லையெனில் புதிதாக இன்னொருவரைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
0 comments

இஸ்லாமியத் திருமணம் - PJ - தொடர் 7

3. தந்தையின் மனைவியை மணக்கக் கூடாது

உங்கள் தந்தையர் மணமுடித்த பெண்களை மணக்காதீர்கள்! ஏற்கனவே நடந்து முடிந்ததைத் தவிர. இது வெட்கக்கேடானதும், வெறுப்புக்குரியதும், கெட்ட வழியுமாகும். (திருக்குர்ஆன் 4:22)


மணக்கக் கூடாத உறவுகள்

ஆண்கள் கீழ்க்காணும் உறவினர்களை மணக்க அனுமதியில்லை.

   1. தாய்
   2. மகள்
   3. சகோதரி
   4. தாயின் சகோதரி
   5. தந்தையின் சகோதரி
   6. சகோதரனின் புதல்விகள்
   7. சகோதரியின் புதல்விகள்
   8. பாலூட்டிய அன்னையர்
   9. பாலூட்டிய அன்னையின் புதல்விகள்
  10. மனைவியின் தாய்
  11. மனைவியின் புதல்வி
  12. மகனின் மனைவி
  13. இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மனைவியராக்குதல்

பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்
   1. தந்தை
   2. மகன்
   3. சகோதரன்
   4. தாயின் சகோதரன்
   5. தந்தையின் சகோதரன்
   6. சகோதரனின் மகன்
   7. சகோதரியின் மகன்
   8. பாலூட்டிய அன்னையின் கணவன்
   9. பாலூட்டிய அன்னையின் மகன்
  10. கணவனின் தந்தை
  11. கணவனின் புதல்வன்
  12. புதல்வியின் கணவன்
  13. சகோதரியின் கணவனை சகோதரியுடன் கணவன் வாழும் போது மணப்பது

ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன. திருக்குர்ஆன் 4:23 வசனத்திலிருந்து இதை அறியலாம். உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரி கள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும்,  (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.(திருக்குர்ஆன் 4:23)


இரத்த சம்பந்தத்தால் யாரைத் திருமணம் செய்யக் கூடாது என்று மேலே நாம் குறிப்பிட்டோம். அன்னியப் பெண்ணிடம் பால் குடித்ததால் மேற்கண்ட உறவு முறை ஏற்படுமானால் அவர்களையும் மணக்கக் கூடாது.

அதாவது ஒரு பெண்ணிடம் ஒருவன் பாலருந்தி விட்டால் அவள் தாயாகி விடுகிறாள். இதன் காரணமாக அவளது சகோதரி சின்னம்மா அல்லது பெரியம்மா ஆகி விடுவார்கள். எனவே அவரையும் மணக்கக் கூடாது. 

அவளது சகோதரன் அல்லது சகோதரியின் மகளையும் மணக்கக் கூடாது. பாலூட்டிய அன்னையை பெற்ற தாய் இடத்தில் வைத்துப் பார்த்தால் அவளது உறவினர்கள் நமக்கு மேற்கண்ட உறவு முறையுடையவர்களாக ஆனால் அவர்களை மணக்கக் கூடாது.

இரத்த சம்பந்தத்தால் தடுக்கப்பட்ட உறவுமுறைகள், பால் அருந்திய உறவு முறையிலும் தடுக்கப்பட்டதாகும் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2451, 4719


இது தவிர ஒரு பெண்ணை மணந்து அவளுடன் வாழும் போது அவளது தாயின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது. அது போல் மனைவியின் தந்தையின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது. (புகாரி 4719)


மனைவி மரணித்து விட்டாலோ விவாகரத்து ஆகிவிட்டாலோ மனைவியின் தாயுடைய சகோதரியை, மனைவியின் தந்தையுடைய சகோதரியை மணக்கத் தடையில்லை.

பால்குடிப் பருவமும் அளவும்

எந்த வயதில் பால் குடித்தாலும் ஒரு பெண் தாயாகி விடுவாள் என்று பாலரும் எண்ணுகின்றனர். இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைப் பருவத்தில் பால் கொடுத்தால் தான் தாய் பிள்ளைஎன்ற உறவு ஏற்படும். பாலூட்டும் பருவம் இரண்டு ஆண்டுகள் தான் என்று திருக்குர்ஆன் 2:233 கூறுகிறது.


மேலும் பசியை அடக்கும் அளவுக்கும், நான்கு தடவைகளுக்கு அதிகமாகவும் பாலூட்டினால் தான் தாய் லி பிள்ளை என்ற உறவு ஏற்படும்.

பசியைப் போக்குவதே பாலூட்டலாகும் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2453, 4712


ஒரு தடவை இரண்டு தடவைகள் பால் அருந்துவதால் திருமணத் தடை ஏதும் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: முஸ்லிம் 2628


ஆயிஷா(ரலி) அவர்களின் மற்றொரு அறிவிப்பில் ஐந்து தடவை பாலருந்தினால் தான் திருமணத் தடை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

- இன்ஷா அல்லாஹ் தொடரும்...
0 comments

இஸ்லாமியத் திருமணம் - PJ - தொடர் 6


தம்பதியரின் கடமைகள்

பெண்கள் வளைந்த எலும்பு போன்றவர்கள். அதனை நிமிர்த்த முயன்றால் அதனை உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளை விட்டு விட்டால் அவளிடம் இன்பம் பெறுவாய் என்று நபிகள் நாயகம் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 3331, 5184, 5186


இறை நம்பிக்கையுள்ள ஒரு ஆண் இறை நம்பிக்கையுள்ள தன் மனைவியை வெறுத்து விட வேண்டாம். அவளது ஒரு குணத்தை அவன் வெறுத்தால் அவன் விரும்பக் கூடிய வேறொரு குணத்தை அவளிடம் அவன் காணலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 2672


நல்ல குணம் கொண்டவர்களே இறை நம்பிக்கையில் முழுமை பெற்றவர்களாவர். உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்லபடி நடந்து கொள்பவர்களே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: அஹ்மத் 7095, திர்மிதீ 1082


பெண்களை நல்ல முறையில் நடத்துங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக உள்ளவர்கள். அதைத் தவிர அவர்களிடம் உங்களுக்கு வேறு எந்த உரிமையும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ரு பின் அஹ்வஸ் (ரலி), நூல்: திர்மிதீ 1083

ஒரு பெண், கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்து விட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூல்: திர்மிதீ 1081


ஒரு முறை நான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், எங்களின் மனைவிமார்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் யாவை? எனக் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ எதை உண்கிறாயோ, அதையே அவளுக்கும் உண்ணக் கொடுப்பாயாக! நீ எதை அணிகிறாயோ அது போன்றதையோ அவளுக்கும் அணிவிக்கக் கொடுப்பாயாக! மேலும், அவளின் முகத்தில் அடிக்காதே! அவளை இழிவுபடுத்தாதே! வீட்டிலில்லாமல் வெளியிடங்களில் வைத்து அவளைக் கண்டிக்காதே! என்று  கூறினார்கள்.அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி), நூல்: அபூதாவூத் 1830
 

மணமுடிக்கத் தகாதவர்கள்

1. இணை கற்பிப்போரை மணக்கக் கூடாது.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண் கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக் கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறை வன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். (திருக்குர்ஆன் 2:221)


நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்த வன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். 


அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 60:10)


2. இத்தா முடியும் வரை திருமணம் கூடாது.


கணவனை இழந்த பெண்கள் தமக்குரிய இத்தா காலம் முடியும் வரை திருமணமோ திருமண ஒப்பந்தமோ செய்யக் கூடாது.

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசிய மாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:235)

இன்ஷா அல்லாஹ் தொடரும்...
0 comments

இஸ்லாமியத் திருமணம் - PJ - தொடர் 5


திருமண துஆ

நமது நாட்டில் வழக்கமாக திருமணத்தின் போது ஒரு துஆ ஓதி வருகின்றனர். அல்லாஹும்ம அல்லிப் பைனஹுமா..... என்று ஓதப்படும் அந்த துஆ நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலோ ஸஹாபாக்கள் காலத்திலோ, தாபியீன்கள் காலத்திலோ, நான்கு இமாம்களின் காலத்திலோ நடைமுறையில் இருந்ததில்லை. தமிழகத்தைச் சேர்ந்த சிலரது கண்டுபிடிப்பாகும் இது.

ஆதம்லிஹவ்வா போல் வாழ்க! அய்யூப்லிரஹிமா போல் வாழ்க! என்ற கருத்தில் பல நபிமார்களின் இல்லறம் போல் வாழுமாறு பிரார்த்திக்கும் விதமாக இந்த துஆ அமைந்துள்ளது.

அந்த நபிமார்களும் அவர்களின் மனைவியரும் எப்படி இல்லறம் நடத்தினார்கள் என்ற விபரமோ, அவர்களின் மனைவியர் அவர்களுக்கு எந்த அளவு கட்டுப்பட்டு நடந்தனர் என்ற விபரமோ நமக்குத் தெரியாது. அவர்களின் இல்லறம் எப்படி இருந்தது என்பது தெரியாமல் அது போன்ற வாழ்க்கையைக்கேட்பது அர்த்தமற்றதாகும். உனக்கு அறிவில்லாத விஷயங்களை நீ பின்பற்ற வேண்டாம் என்று அல்குர்ஆன் கூறுகிறது. (அல்குர்ஆன் 7:38)
 

எனவே இது போன்ற துஆக்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கூட்டாக வேறு துஆக்களை ஓதுவதற்கும் ஆதாரம் இல்லை.

மணமக்களுக்கு நபிகள் நயாகம் (ஸல்) அவர்கள் பல துஆக்களைச் செய்துள்ளனர்.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) தமக்குத் திருமணம் நடந்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது பாரகல்லாஹு லக (அல்லாஹ் உனக்கு பரகத் லி புலனுக்கு எட்டாத பேரருள் - செய்வானாக) எனக் கூறினார்கள். (புகாரி 5155, 6386.)

இதை ஆதாரமாகக் கொண்டு பாரகல்லாஹு லக என்று கூறி வாழ்த்தலாம்.


பாரகல்லாஹு லகும், வபாரக அலைகும் என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத் தந்ததாகவும் ஹதீஸ் உள்ளது. (அஹ்மத் 15181)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர் என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ 1011, அபூதாவூத் 1819, அஹ்மத் 8599


அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக என்பது இதன் பொருள். ஒவ்வொருவரும் இந்த துஆவை வாழ்த்தைக் கூற வேண்டும்.


தவிர்க்கப்பட வேண்டியவை

திருமணத்தின் போது பல்வேறு சடங்குகள் முஸ்லிம் சமுதாயத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. இஸ்லாத்திற்கும் அந்த சடங்குகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. எனவே அது போன்ற சடங்குகளைத் தவிர்க்க வேண்டும்.

  • தாலி கட்டுதல் , கருகமணி கட்டுதல்
  • ஆரத்தி எடுத்தல்
  • குலவையிடுதல்
  • திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையைக் கட்டியணைத்து வாழ்த்துதல்
  • ஆண்களும் பெண்களுமாக மணமக்களைக் கேலி செய்தல்
  • வாழை மரம் நடுதல்
  • மாப்பிள்ளை ஊர்வலம்
  • ஆடல், பாடல், கச்சேரிகள் நடத்துதல்
  • பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின் பல சந்தர்ப்பங்களில் சீர் வரிசை என்ற பெயரில் கேட்டு வாங்குவது.
  • முதல் குழந்தைக்கு நகை செய்து போடுமாறு பெண் வீட்டாரைக் கட்டாயப்படுத்துதல்.
  • தலைப்பிரசவச் செலவை பெண் வீட்டார் தலையில் சுமத்துவது.
  • பல்வேறு காரணங்களை காட்டி பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண் வீட்டாரிடம் விருந்துகளைக் கேட்பது.

பிற மதத்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட இந்தக் கொடுமைகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர் என்பது நபிமொழி. நூல்: அபூதாவூத் 3512


அன்பளிப்பு மொய்

திருமணத்தின் போதும், மற்ற சமயங்களிலும் உற்றாரிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் அன்பளிப்புப் பெறுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.

ஒருவருக்கு அவரது சகோதரர்களிடமிருந்து நல்ல பொருள் ஏதேனும் அவர் கேட்காமலும், எதிர்பார்க்காமலும் கிடைக்குமேயானால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளவும். ஏனெனில் அது அல்லாஹ் அவருக்கு வழங்கிய பாக்கியமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: காலித் பின் அதீ (ரலி) நூல்: புகாரி 1380, 6630
 
அன்பளிப்புகளை மறுக்கலாகாது என்பதை இந்த ஹதீஸ் கூறுகிறது.

மொய் என்றும் ஸலாமீ என்றும் கூறப்படும் போலித்தன மான அன்பளிப்புகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு பொருளைக் கொடுத்து விட்டு தங்களுக்கு அது திரும்பக் கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே மொய் என்பது அமைந்துள்ளது.

கொடுத்து விட்டு திரும்பிப் பெற எண்ணும் போது அது அன்பளிப்பாகாது.

அன்பளிப்புச் செய்து விட்டு அதைத் திரும்ப எதிர்பார்ப்பவன் வாந்தி எடுத்துவிட்டு அதையே திரும்ப சாப்பிடுபவனைப் போன்றவன் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1490, 2589, 2621, 2623, 3003, 6975


இந்த வெறுக்கத் தக்க போலி அன்பளிப்புகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்..
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger