Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label குடும்பவியல். Show all posts
Showing posts with label குடும்பவியல். Show all posts

மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே


''இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே!  உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : திர்மிதி எண்: 1082

ஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம்.  ஆனால் வீட்டுக்கு நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள்.

இன்று நாம் தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்றவற்றைச் செய்து முழுமையான முஃமின்களாக ஆகி விடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம்.  இந்த வணக்கங்களில் நாம் சரியாக இருந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் அக்னிப் பிழம்பாக ஆதிக்க எஜமானாக வாழ்ந்து கொண்டிருந்தால் நாம் முழுமையான முஃமினாக ஆகி விட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

இன்று நம்மிடம் இது போன்ற வாழ்க்கை இன்னும் மலரவில்லை.  நாம் இந்த நாட்டில் வாழும் பிற மத சமுதாய கலாச்சாரப் பிடியிலிருந்து விடுபடவில்லை.  கணவன் சாப்பிட்ட பிறகு தான் மனைவி சாப்பிட வேண்டும்!  கணவன் உறங்கும் போது மனைவி எழுப்பக் கூடாது!  ஆனால் மனைவியைக் கணவன் எப்போது வேண்டுமானாலும் எழுப்பி வேலை வாங்கிக் கொள்ளலாம் என்ற மாற்று மதக் கலாச்சாரம் நம்மிடம் வேரூன்றிக் கிடக்கின்றது.  ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றார்கள்.

உணவு, உடை

அல்லாஹ்வின் தூதரே!  எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று நான் கேட்ட போது, ''நீ சாப்பிடும் போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும்.  நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும்.  முகத்தில் அடிக்கக் கூடாது.  அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது.  வீட்டிற்குள்ளேயே தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக் காட்டக் கூடாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி) நூல் : அபூதாவூத் 1830

நாம் சாப்பிடும் போது நம்முடன் நமது மனைவியை சாப்பிடச் செய்ய வேண்டும் என்று இங்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள்.  கணவன் சாப்பிட்ட எச்சிலைத் தான் மனைவி சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை எச்சில் தொட்டியில் தூக்கி எறிகின்றார்கள்.  நமக்கு ஆடை எடுத்தால் மனைவிக்கும் சேர்த்து ஆடை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகின்றார்கள்.  அத்துடன் மட்டும் நபி (ஸல்) அவர்கள் நிற்கவில்லை.  உனது மனைவிக்கு நீ ஊட்டி விடு, அதற்குக் கூலியும் கிடைக்கும் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.

''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப் படுவீர்.  உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) நூல் : புகாரி 56

சுய மரியாதையைப் போற்றுதல்

மனைவியை அடிக்க வேண்டிய சில கட்டங்கள் வாழ்க்கையில் வரும்.  இது போன்ற கட்டங்களில் கன்னத்தில், முகத்தில் அறைந்து விடக் கூடாது என்ற நல்ல பண்பை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள்.  அதனால் மனைவியை அடிப்பதற்கு இந்த ஹதீஸ் ஏகபோக உரிமை அளித்துள்ளது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

''நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல் அடிக்க வேண்டாம்.  பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) நூல் : புகாரி 4942, 5204

மனைவியை அடித்து விட்டு அவள் பக்கத்தில் போய் படுப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா? என்று இந்த ஹதீஸ் கேட்கின்றது.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மனைவிமார்களை அடித்ததில்லை என்பதை இங்கு நாம் உணர வேண்டும்.

அடுத்ததாக 'பொது இடங்களில் வைத்து மனைவி மீது வெறுப்பை நெருப்பாக அள்ளித் தட்டி விடாதே' என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள்.  இன்று நம்மில் பலர் மனைவியருக்கு சுயமரியாதை என்ற ஒன்று கிடையாது என்று முடிவு செய்து விட்டார்கள்.  அதனால் தான் பலர் முன்னிலையில், பொது இடங்களில் திட்டித் தீர்த்து விடுகின்றார்கள்.  நிச்சயமாக இது ஒரு நல்ல பண்பல்ல!  இத்தீய பண்பை ஒரு முஸ்லிம் அறுத்து எறிந்து விட வேண்டும்.

மனைவி உறங்கும் போது அவளது உறக்கத்திற்கு இம்மியளவு கூட மதிப்பு கொடுப்பது கிடையாது.  பகலில் மாடாய் உழைத்து விட்டு, இரவில் அயர்ந்து உறங்கும் போது கொஞ்சம் உறங்கட்டுமே என்று உறங்க விடுவது கிடையாது.  வேலைக்காரியை எழுப்புவது போல் அலட்சியக் குரலில் முதலில் எழுப்பிப் பார்ப்பது, அதில் அவள் விழிக்கவில்லை என்றால் கழுதையைப் போன்று காட்டுக் கத்தல் கத்துவது, அதற்கும் சரிப்படவில்லை என்றால் காலால் எட்டி உதைப்பது போன்ற செயல்களால் மனைவியை மிருகத்தை விடக் கேவலமாக நடத்தும் காட்டுமிராண்டித்தனம் நம்மிடம் சர்வ சாதாரணமாகத் தொடர்கின்றது.  இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பாருங்கள்!

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த தமது மனைவி ஆயிஷா (ரலி) அருகில் வந்து படுக்கின்றார்கள்.  ஆயிஷா (ரலி) உறங்குகின்றார்கள் என்றெண்ணி அவர்களிடம் சொல்லாமல் (ஜன்னத்துல்) பகீஃலிக்கு செல்கின்றார்கள்.  உறங்குவது போல் காட்டிக் கொண்ட ஆயிஷா (ரலி) எழுந்து, நபி (ஸல்) அவர்களை பகீஃ வரை பின்தொடர்ந்து சென்று பார்த்து விட்டு, அவர்களுக்கு முன்னரே ஓட்டமெடுத்து வீட்டுக்கு வந்து சேர்கின்றார்கள்.  மூச்சிறைப்பின் காரணமாக ஆயிஷா (ரலி) அவர்களின் உடல் ஏறி இறங்குவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் விசாரிக்கின்றார்கள்.  அதற்கு ஆயிஷா (ரலி), ஒன்றுமில்லை என்று கூறியதும், நீயாக சொல்லப் போகின்றாயா? அல்லது அல்லாஹ் எனக்கு உண்மையை அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.  உடனே ஆயிஷா (ரலி) நடந்த நிகழ்வைக் கூறுகின்றார்கள்.  ''பகீஃலிக்கு சென்று பாவமன்னிப்பு தேடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதாக ஜிப்ரயீல் வந்து என்னிடம் கூறினார்கள்.  அதற்காக நான் புறப்பட்டேன்.  அப்போது நீ உறங்குகின்றாய் என்றெண்ணினேன்.  உன்னை எழுப்புவதற்கு சங்கடப்பட்டேன்.  அதன் மூலம் நீ வெறுப்படைவதை அஞ்சினேன்'' என்று தாம் சொல்லாமல் சென்றதற்கான காரணத்தை நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியாரிடம் தெரிவிக்கின்றார்கள்.  (ஹதீஸின் சுருக்கம்) நூல் : முஸ்லிம் 1619

இங்கு நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியருகே வந்து படுக்கும் போதும் எழுப்பவில்லை.  அதன் பிறகு வெளியே செல்லும் போதும் எழுப்பவில்லை.  காரணம் மனைவியின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்பது தான்.  ஆனால் நம் நாட்டிலோ 'பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி' என்று பதிகம் பாடிக் கொண்டிருக்கின்றார்கள்.  தனது ஆணாதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த நடைமுறை அன்றைய தினம் மட்டும் கடைப்பிடித்த அபூர்வ நடவடிக்கை அல்ல!  அது அவர்களின் அன்றாட வாடிக்கையாக இருந்தது என்பதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள்.  உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள்.  ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டு ருகூவுச் செய்வார்கள்.  பின்னர் ஸஜ்தச் செய்வார்கள்.  இரண்டாம் ரக்அத்திலும் இது போலவே செய்வார்கள்.  தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள்.  நான் உறங்கி விட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),    நூல் : புகாரி 1119

மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த மாநபி

ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள்.  நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, ''நீ பார்க்க ஆசைப்படுகின்றாயா?'' என்று கேட்டார்கள்.  நான் ஆம் என்றேன்.  அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.  (பிறகு அவர்களை நோக்கி) ''அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்'' என்று கூறினார்கள்.  நான் பார்த்துச் சலித்த போது, ''உனக்குப் போதுமா?'' என்று கேட்டார்கள்.  நான் ஆம் என்றேன்.  ''அப்படியானால் செல்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),  நூல் : புகாரி (950)

இங்கு மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த ஒரு மாபெரும் தலைவரை நாம் காண்கின்றோம்.  மனைவியெனில் படுக்கையில் பாலுணர்வைப் பகிர்வதற்குரிய ஒரு சதைப் பிண்டம்!  பகல் வேளையில் நம் வீட்டில் அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட இயந்திரம்!  இவளிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கின்றது?  இவளிடம் பேசுகின்ற நேரத்தில் நான்கு தஸ்பீஹ்களைச் சொன்னால் நன்மைகள் கிடைக்கும் என்று நாம் எண்ணுகின்றோம்.  நன்மையல்லாத காரியத்தையா நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

மனைவியின் உணவு, உடை, அவர்களுக்குரிய சுயமரியாதை போன்ற விஷயங்களையும் அவர்களது ரசனை உணர்வுகளையும் மதிப்போமாக!  மாநபி வழியில் நடை போடுவோமாக!

நன்றி - tntj துபாய் 
0 comments

இஸ்லாம் கூறும் குடும்பவியல் (வீடியோ)


இஸ்லாம் கூறும் குடும்பவியல் (வீடியோ)

இஸ்லாம் கூறும் குடும்பவியல் பற்றி அறிந்து கொள்வது மிக அவசியம். குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளை களைய இஸ்லாம் ஒவ்வோரு குடும்ப அங்கத்தினருக்கும் சொல்லும் அறிவுரைகள். இவற்றை அறிய கீழ்காணும் உரைகளை காணுங்கள்.

இது கோவையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற 'குடும்பவியல் மாநாட்டின்' சொற்பொழிவுகள்.

அன்பு மனைவி
  

அருமை கணவன்
  

ஆதரிக்கும் பிள்ளைகள்  
அருள்மிகு திருமணம் 

குர்ஆன் ஒளியே குடும்ப வழி
0 comments

பெண்கள் என்றால் மட்டமானவர்களா?

பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர்களா? கணவன் சொல்வதைத் தான் மனைவி கேட்க வேண்டுமா? கணவனுக்குப் பிடிக்காதவங்க வீட்டுக்கு வரக் கூடாதா?. குடும்பத்தில் ஆண்களுக்கு தான் முடிவு எடுக்க வேண்டுமா? ஆண்களை கேட்டு தான் செயல் பட வேண்டுமா பெண்கள்?மார்க்கம் என்ன சொல்லுது? என் தந்தையும் சொல்லுகிறார் இறைவன் படைக்கும் போதே ஆண்களை பெண்களை விட உயர்வாகவும் மேன்மையாகவும் படைத்திருக்க்கிறான். இது உண்மையா?  

பதில் 
பெண்களை விட ஆண்களுக்கு ஒரு உயர்வு உண்டு என இறைவன் கூறுகிறான்.
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்;ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் 2 : 228
எல்லா வகையிலும் ஆண்கள் உயர்ந்தவர்கள்:  பெண்கள் தாழ்ந்தவர்கள் என்பது இதன் கருத்தல்ல.காரண காரியங்களின் அடிப்படையில் ஒருவரை விட மற்றவர் சிறப்புக்குரியவர்களாக இருக்கிறார்கள் என்பது தான் இஸ்லாத்தின் கருத்தாகும்.
சில வகையில் பெண்களை விட ஆண்கள் சிறப்பிற்குரியவர்களாகவும், மற்ற சில வகையில் ஆண்களை விட பெண்கள் சிறப்புக்குரியவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.
எந்த ஒரு நிர்வாகமாக இருந்தாலும் அதற்கு ஒரு தலைவன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அது நிர்வாகமாக இருக்கும். சிறிய நிறுவனம் என்றாலும் பெரிய நிறுவனம் என்றாலும் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு ஒருவரிடம் இருந்தாக வேண்டும். யார் வேண்டுமானாலும் முடிவு எடுக்கலாம் என்று இருந்தால் அவர்கள் தனித்தனியாக இருக்கிறார்கள் என்று ஆகுமே தவிர நிர்வாகமாக ஆகாது. எவ்வளவு தான் நெருக்கமானவர்களாக இருந்தாலும் அவர்களிடையே எல்லா விஷயத்திலும் ஒத்த கருத்து வராது. எந்த முடிவு எடுப்பது என்பதில் கருத்து வேறுபாடு வரும் போது யாராவது ஒருவருக்கு மற்றவர் கட்டுப்பட்டால் மட்டுமே குடும்ப நிர்வாகம் குலைந்து போகாமல் இருக்கும். முரண்பாடு வருகிறது என்பதற்காக குடும்பம் சிதைந்து விடக் கூடாது என்பதற்காகத் கணவனுக்கு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.
இதற்கான காரணங்களும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆண்கள் தான் குடும்பத்துக்காக பொருள் திரட்டக் கடமைப்பட்டுள்ளார். உழைத்து சம்பாதித்து மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் செலவிடுகிறார்கள் என்பது முதல் காரணமாகும். பொருளாதாரத்தை திரட்டுபவன் என்ற அடிப்படையில் தான் அவனுக்கு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடமையைச் செய்யாத ஒரு கணவன் தனக்கு மனைவி கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று இஸ்லாத்தின் பெயரால் உரிமை கொண்டாட முடியாது.
அடுத்ததாக உடலமைப்பில் ஆண்கள் தான் பெண்களை விட வலிமையுள்ளவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் முடிவு எடுக்கும் போது மற்றவர் அதற்குக் கட்டுப்பட மறுத்தால் அப்போதும் குடும்ப அமைப்பு சீர்குலைந்து விடும். யாருக்கு வலிமை அதிகம் உள்ளதோ அவரிடம் அந்த அதிகாரம் இருந்தால் மற்றவர் கட்டுப்பட எளிதாக இருக்கும் என்பது மற்றொரு காரணமாக இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.  
இவ்விரு காரணங்களையும் குறை சொல்ல முடியாது. இருவருக்கும் ஆசைகள் இருந்தாலும் ஆண் முடிவு செய்தால் இல்லறமே நடக்கும். ஆணுக்கு ஆசை இல்லாமல் பெண்ணுக்கு மட்டும் ஆசை இருந்தால் பெண்ணால் ஒன்றும் செய்ய முடியாது.
இவ்விரு காரணங்களால் தான் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்யும் உரிமையைப் பெறுகிறார்கள் என்று பின்வரும் வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்
சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4 : 34
இப்படி குடும்பத் தலைவனாக கணவன் நியமிக்கப்பட்டதால் பெண்ணுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்றோ அவளுக்கு எந்த உரிமையும் இல்லை என்றோ பெண்களை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் அடக்கியாளலாம் என்றோ இதற்கு பொருள் கொள்ளக் கூடாது.
இதையும் இஸ்லாம் தெளிவுபடுத்த தவறவில்லை.
உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : அஹ்மத் 7095
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.
அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல் :முஸ்லிம் 2911
நல்ல மனைவியை ஒருவன் அடைந்திருப்பது அல்லாஹ் செய்த அருள் என்று நினைக்கும் ஒருவன் பெண்ணை அடிமையாக நடத்த மாட்டான்.
மனைவிக்கு நல்லவனாக இருப்பவன் தான் மனிதரில் நல்லவன் என்ற அறிவுறையை நம்புபவன் மனைவியின் மார்க்கத்துக்கு உட்பட்ட ஆசைகளுக்கு தடை போட மாட்டான்.
மனைவியின் உறவினரோடு இவனுக்கு ஏதும் மனவருத்தம் இருப்பதால் மனைவியையும் அவளது இரத்த பந்தங்களையும் பிரிக்க மாட்டான். ஒரு கணவன் இப்படியெல்லாமா நடப்பது என்று ஒரு பெண் கேள்வி கேட்டால் அந்தப் பெண்ணுக்கு அவன் நல்லவனாக நடக்கவில்லை என்று ஆகிவிடும்.
அடித்து சித்திரவதை செய்ய மாட்டான். அப்படி செய்தால் அவன் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியவனாக ஆவான்.
கணவனுக்கு கட்டுப்படுவதற்கும் எல்லை உண்டு.
இவ்வுலகிலும், மறு உலகிலும் நன்மை பயக்கும் காரியங்களில் ஒரு பெண் தனது கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும்.
கணவன் தீமையான செயலைச் செய்யும் படி கட்டளையிட்டால் அதில் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை, அவ்வாறான காரியங்களில் கணவனுக்குக் கட்டுப்படுதல் அறவே கூடாது.
அன்சாரிகளில் ஒரு பெண் தம்முடைய மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரது மகளின் தலைமுடி உதிர்ந்துவிட்டது. அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்து தெரிவித்துவிட்டு, "என் மகளின்  கணவர், எனது மகளின் தலையில் ஒட்டுமுடி வைக்கச் சொல்கிறார்  என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "வேண்டாம்! (ஒட்டுமுடி வைக்காதே!) ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா ரலி,
நூல் : புகாரி 5205
பொதுவாக எந்த மனிதனுக்கு கட்டுப்படுவதாக இருந்தாலும் தீமைகளில் கட்டுப்படக்கூடாது என்பது பொதுவான விதியாகும். இது கணவன் மனவி விஷயத்துக்கும் பொருந்தும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை அனுப்பி அவர்களுக்கு ஒருவரைத் தளபதியாக்கினார்கள். அவர் (ஒரு கட்டத்தில் படைவீரர்கள் மீது கோபம் கொண்டு) நெருப்பை மூட்டி, "இதில் நுழையுங்கள்'' என்று சொன்னார். அவர்கள் அதில் நுழைய முனைந்தார்கள். (படையிலிருந்த) மற்றவர்கள், "நாம் நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே (இஸ்லாத்திற்கு) வந்தோம்''என்று கூறினர். ஆகவே,  இதை அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். "அவர்கள் அதில் புகுந்திருந்தால் மறுமைநாள் வரை அதிலேயே இருந்திருப்பார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.  "அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் கீழ்ப்படிதல் கிடையாது;கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்'' என்றும் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி),
நூல் :புகாரி 7257
கணவன் வெறுப்பவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாதா என்று கேட்டுள்ளீர்கள்.
உங்களுக்கு மஹ்ரமான உறவு இல்லாத அந்நியர்கள் சம்மந்தமாக கணவர் அவ்வாறு கட்டளையிட்டால் அதற்குக் கட்டுப்படத் தான் வேண்டும்.
உங்களுக்கு மஹ்ரமான உறவினர்கள் விஷயமாக அவர் இது போல் கட்டளையிடக் கூடாது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
என்னுடன் ஒரு ஆண் இருந்த போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் என்னிடம் வந்தார்கள். ஆயிஷாவே இவர் யார் என்று கேட்டார்கள். இவர் எனது பால் குடிச் சகோதரர் என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவே உங்கள் சகோதர்ர்கள் யார் என்பதில் கவனமுடன் இருங்கள். பசியால் பால் குடித்தாலே பால்குடிச் சகோதர்ர் என்ற உறவு ஏற்படும் எனக் கூறினார்கள்
நூல் : புகாரி 2647
பால்குடிச் சகோதரர் என்பது நெருக்கமான உறவாகும். அது போன்ற உறவுடையவர்கள் தமது மனைவியின் வீட்டுக்கு வருவதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறுப்பு இல்லை. ஆனால் உண்மையில் பால்குடிச் சகோதாரர் தானா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கூறுகிறார்கள். ஒருவரது மனைவியின் உறவினர்கள் மனைவியை பார்க்க வருவதற்கும் உறவைப் பேணுவதற்கும் கணவன் குறுக்கே நிற்கக் கூடாது. அவ்வாறு இல்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் கணவனுக்குப் பிடிக்காதவர்கள் என்றால் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருப்பது மனைவியின் பொறுப்பாகும். பிரச்சனை இல்லாத இல்லறத்துக்கு இது அவசியமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மக்களே) பெண்கள் விஷயத்தில் நல்லவிதமாக நடந்து கொள்வது பற்றி (என்னுடைய )அறிவுறைகளைக் கவனத்தில் கொள்ளுங்கள். நிச்சயமாக (பெண்களாகிய) அவர்கள் உங்களுடைய பொறுப்பில் இருக்கின்றார்கள். இதைத்தவிர அவர்களிடமிருந்து நீங்கள் எதையும் சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. அவர்கள் தெளிவான மானக்கேடான காரியங்களைச் செய்தாலே தவிர. அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டால் அவர்களைப் படுக்கையறைகளில் காயம் ஏற்படாதவாறு அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழிகளைத் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் மனைவிமார்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உள்ளன. அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உங்கள் மனைவிமார்கள் உங்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளாவன:  மற்றவர்களுக்கு உங்கள் படுக்கைகளில் கொடுக்காமல் இருப்பதும் நீங்கள் வெறுப்பவர்களை உங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாவனஅவர்களுக்கு அழகிய முறையில் ஆடையளிப்பதும் உணவளிப்பதும் ஆகும். 
நூல் திர்மிதி (1083)
முடிவு எடுக்கும் அதிகாரம் கணவனுக்கு உண்டு என்றாலும் குடும்ப நலனுக்காக கணவன் தன் மனைவியிடத்தில் கலந்தாலோசித்து கொள்ள வேண்டும்.
சரியான ஆலோசனைகளைச் சொல்லும் போது கணவன் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நபியவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் தமது மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் ஆலோசனை கேட்டு அவர்கள் முடிவு அடிப்படையில் செயல்பட்டுள்ளார்கள்.
பார்க்க : புகாரி 2734
மேலும் விபரம் அறிய இவைகளை பார்வையிடவும்
http://onlinepj.com/kutumbaviyal/illaram_thokuppu/
நன்றி - onlinepj 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger