உங்கள் அந்தரங்கத்திற்கு அமெரிக்கா கொடுக்கும் விலை 2 கோடி டாலர்கள் - 1

ப்ரிசம் - தகவல் திருட்டு குறித்த தொடர் கட்டுரை
சமீபத்தில் வெளியான செய்தியை நீங்கள் அறிவீர்கள். இணையதளத்தில் மிக அதிகம் பேரை உள்ளடக்கியிருக்கிறதும். கிட்டத்தட்ட அனைத்து இணைய பயன்பாட்டாளர்களாலும் நம்பப்படுவதான – கூகிள், பேஸ்புக், டுவிட்டர், யாஹூ, ஸ்கைப் போன்ற தளங்களில் உள்ள தகவல்கள் – வேவுபார்க்கப்படுகின்றன. வேவுபார்க்கிறார்கள் என்றும் சொல்லலாம் அல்லது நாமே அக்கவுண்ட் திறந்து அவர்களுக்கு நம்மைப் பற்றிய தகவல்களை தினசரி கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் சொல்லலாம்.

நம்மிடம் பாஸ்வேர்ட் இருக்கிறது. அதனை யாருக்கும் சொல்லாமல் வைத்துக்கொள்ளவும், அடிக்கடி மாற்றவும் இணைய நிறுவனங்கள் அறிவுருத்துகின்றன. நம் வங்கிக் கணக்கு, வங்கி வரவுசெலவுகள் அந்த மெயில் மூலமாகத்தான் நடக்கின்றன. காதல் விவகாரத்தில் தொடங்கி, தீபாவளி வாழ்த்துகள், பொங்கல் வாழ்த்துகள் வரை பரிமாறிக் கொள்கிறோம். எனவே பாஸ்வேர்ட் பாதுகாப்பானதுதான் – என்று கருதுகிறோம்.

ஒரு பக்கம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்திக் கொண்டே – அந்த நிறுவனங்கள் – அன்னிய அரசாங்கங்களுக்கு நமது அந்தரங்கத்தை திறந்துவிடுவது அதிர்ச்சியாய் இருக்கிறது. நமது அந்தரங்க வியாபாரத்தில் புழங்கும் பணத்தின் மதிப்பு, ஆண்டுக்கு ரூ.120 கோடி (2 கோடி டாலர்கள்)

உலகின் மிகப்பெரிய அந்தரங்கத் திருட்டு இது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் - உலகின் எந்தவொருநாட்டின், எந்தக் குடிமகனைப் பற்றிய தகவல்களையும் பின் தொடர்ந்து, கண்காணிக்க முடியும்.




எட்வர்ட் ஸ்னோடன்

இந்த உண்மையை வெளிக்கொணர்ந்த எட்வார்ட் ஸ்னோடன்  என்ற முன்னால் சிஐஏ ஊழியர் ”என்னைப் பற்றி பேசுவதை விட, இந்த ஆவணங்கள் குறித்த விவாதம் முன்னுக்கு வரவேண்டும் என்றே நான் கருதுகிறேன். நாம் என்ன உலகத்தில் வாழ்கிறோம் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிடுகிறார். இந்தக் கட்டுரையின் நோக்கமும், அந்த விவாதத்தை வலுப்படுத்துவதுதான்.

உங்கள் அந்தரங்கம் – ஒரு நிறுவனத்தின் சொத்தாக மாறும்போது  அதன் மீதான வணிகம் தவிர்க்க முடியாததாகிறது. ’மாற்று’ தனது இதழியல் சேவையை தொடங்கியபோது, அது ஒத்த சிந்தனை கொண்ட எழுத்தாளர்களின் கூட்டமைப்பாகத்தான் இருந்தது. ஆனால், இணையம் வெறும் எழுத்துக்களால் ஆன ஊடகம் மட்டுமல்ல. இங்கே பல்லாயிரக்கணக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் உழைப்பும் சேர்ந்தே நமக்கு சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.

தகவல் தொடர்புப் பணியாளர்களின் கடும் உழைப்பால் உருவாகும் தொழில்நுட்பங்கள் – தனி நிறுவனங்களின் உடைமைகளாக மாறியுள்ளன. இந்த நிலையில், சிந்தனை மட்டுமல்ல, கட்டமைப்பிலும் ஒரு ‘மாற்றை’ முன்வைக்க வேண்டும் என்பதை வெகுசீக்கிரமே உணர்ந்துகொண்டோம்.

லத்தின் அமெரிக்க நாடுகளில் ‘பேஸ்புக்குக்கு’ மாற்றாக பரவலாக பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளம் உள்ளது. 3 மாணவர்களாக் தொடங்கப்பட்ட அந்த தளத்துக்கு‘டையாஸ்போரா’ என்று பெயரிடப்பட்டது. இந்தத் தளத்தில் சேமிக்கப்படும் தகவல்கள், அரசாங்கங்களின் வேவு வளையங்களுக்குள் வர முடியாததாகவும், கட்டற்ற மென்பொருள் வடிவமைப்பில் இருக்கும் என அவர்கள் அறிவித்தனர். ஆனால், அந்த தளத்தில் முக்கியஸ்தராக செயல்பட்ட ஜிடோமிர்ஸ்கைஸ் மர்மானமுறையில் மரணமடைந்தார்.

அப்போது சமூக வலைத்தள உறுப்பினர்கள் ஒவ்வொருத்தரையும் கண்காணிக்கும்‘ப்ரிசம்’ திட்டம் குறித்த செய்திகள் வெளியாகியிருக்கவில்லை. 


இப்போது, இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா இணைய பயன்பாட்டாளருக்கும் பேஸ்புக்கில் குறைந்தது 2 கணக்குகள் இருக்கின்றன. அனைத்து தகவல்களுக்கும், கூகிள்தான் வாயிலாக இருக்கிறது. கேட்டது எல்லாமே நொடியில் கொண்டுவந்து காலடியில் சமர்ப்பிக்கும் கூகிளை, ‘கூகிளாண்டவர்’ என செல்லப் பெயரிட்டும் அழைக்கிறார்கள். 

அதன் வெற்றிக்கு பின்னால் இருப்பவர்கள், உங்களைப் போன்றும், என்னைப் போன்றும் இருக்கும் பல கோடி பயன்பாட்டாளர்கள்தான். இலவசமாக அந்தச் சேவைகள் வழங்கப்படுவதன் உள்நோக்கமும் அதுதான். தனக்கு சோறுபோடும் பயன்பாட்டாளர்களின், தகவல்களை வியாபாரத்திற்கு மட்டுமல்ல - தங்கள் அரசியல் சதுரங்கத்திற்கும் பயன்படுத்த அவர்கள் சிந்திக்க மாட்டார்களா... என்ன?

சில மாதங்கள் முன்னர் வெளியான விக்கி லீக்ஸ் ஆவணங்கள் – அமெரிக்கா தனது தூதரங்களை இப்படி பயன்படுத்திக் கொண்டிருப்பதை வெட்ட வெளிச்சமாக்கியது. ஒவ்வொரு நாட்டின் தூதரகங்களும் அரசியல் வளர்ச்சிப் போக்குகளை கண்கானிக்கும் வேவுக்காரர்களாக எப்படி செயல்படுகிறார்கள் என்பதை அந்தஆவணங்கள் காட்டின. அந்த வேவு, அரசாங்கங்கள், அரசியல்வாதிகளோடு நின்றுவிடவில்லை – ஒவ்வொரு தனி மனிதனின் இணையதள தகவல்களையும் கண்கானிக்கும் ’ப்ரிசம்’ திட்டம், அமெரிக்க கண்காணிப்பு வளையத்தின் ஆபத்தான போக்கைக் காட்டுகிறது.


அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ) நடத்தும் ப்ரிசம் - ஏதோவொரு நாட்டில் இருந்தபடி உங்கள் மனைவி/கணவன் உடன் நடத்தும் ஸ்கைப் உரையாடலைக் கூட  எட்டிப்பார்க்கலாம்! எட்வர்ட் ஸ்னோடன் போல – ஓராயிரம் இளைஞர்கள், அதற்காக மாங்கு மாங்கென்று உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒருத்தரின் மனசாட்சி உருத்தியதால் நமக்கு சில உண்மைகள் தெரிய வருகின்றன.

சித்தன் ரா
நன்றி - மாற்று
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger