இஸ்லாம் பலதார மணத்தை அனுமதிப்பதற்கான காரணங்கள் என்ன?

பலதார மணத்தை அனுமதிப்பதற்கான காரணங்கள்

பலதார மணத்தை எந்தச் சட்டத்தினாலும் தடுக்க முடியவில்லை. அப்படியே தடுத்தாலும் சின்ன வீட்டையும், விபச்சாரத்தையும் தடுக்க முடியவில்லை என்பதால் மட்டும் இஸ்லாம் பலதார மணத்தை அனுமதிக்கவில்லை. மாறாக பலதார மணத்தை இஸ்லாம் அனுமதித்திருப்பதற்கு இன்னும் பல காரணங்களும், நியாயங்களும் உள்ளன


1. பெண்களின் பிறப்பு விகிதம் குறைவு:-


இல்லற வாழ்வு மூலம் பெறப்படும் உடல் சுகம் மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஆண், பெண் இரு பாலருக்குமே இது இன்றியமையாத தேவையாகும்.
மற்ற சுகங்களைக் கூடத் தியாகம் செய்து விடுபவன் இந்த உடல் சுகத்தை எளிதில் தியாகம் செய்வதில்லை.

இந்த சுகத்தைத் தரும் ஒரு பெண்ணுக்காக ஒரு ஆண் எதுவும் செய்யத் தயாராகி விடுகிறான். உற்றார் உறவினரையும், பெற்றோரையும் கூட உதறி எறிந்து விடத் துணிந்து விடுகிறான். இந்த சுகத்தைத் தருகின்ற ஆணுக்காக ஒரு பெண் எந்த தியாகத்தையும் செய்கிறாள்.

சிலர் இந்த சுகத்தை அடைவதற்காக எத்தகைய இழி செயலையும் செய்யத் துணிந்து விடுவதையும் நாம் காண்கிறோம். இதை அடைவதற்கு யாராவது குறுக்கே நின்றால் அவரைக் கொலை செய்தாவது அடைய முயற்சிக்கின்றனர்.

உணர்வுகள் பொங்கி எழும் பருவத்தில் இந்த உடல் சுகம் கிடைக்கவில்லையானால் அத்தகையோர் மன நோய்க்கு ஆளாகி விடுவதை இரு பாலரிடமும் நாம் காண முடிகின்றது. மன நோய் நிபுணர்களும் இதை உறுதி செய்கின்றனர். மனித வாழ்வில் மிகவும் அவசியமான இந்தச் சுகம் எந்த மனிதனுக்கும் மறுக்கப்படக் கூடாது என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இந்தச் சுகம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமானால் உலகில் ஆண்களும், பெண்களும் சம அளவில் பிறக்க வேண்டும். அப்போது தான் இரு பாலரும் இந்தச் சுகத்தைப் பெற இயலும்.

ஆனால் இந்த நிலை உலகில் இருக்கின்றதா? என்றால் பல நூற்றாண்டுகளாகவே இல்லை என்று தான் கூற வேண்டும். ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் பிறக்கின்றார்கள். விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நாடுகள் வேண்டுமானால் சில கால கட்டங்களில் இதிலிருந்து விலக்குப் பெறலாம். ஆனால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் பெண்களின் பிறப்பு விகிதமே அதிகம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

உலகில் ஆண்களின் எண்ணிக்கைக்கும், பெண்களின் எண்ணிக்கைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லையே! சிறிய அளவில் தானே பெண்கள் அதிகமாகவுள்ளனர் என்று நினைக்கலாம்.

ஆனால் திருமணத்துக்குரிய தகுதி பெற்றவர்கள் என்ற அடிப்படையையும் நாம் சேர்த்துக் கணக்கிட வேண்டும்.

ஆண்கள் 25 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்யும் நிலையை அடைகிறார்கள். பெண்களோ பதினைந்து வயதிலேயே திருமணம் செய்விக்கப்படுகிறார்கள். (சட்டப்படி 18 வயது என்பதெல்லாம் ஏட்டில் உள்ளதே தவிர நாட்டில் இல்லை).

அதாவது திருமணம் செய்யும் தகுதி பெற்றவர்கள் என்று எடுத்துக் கொண்டால் பெண்களை விட ஆண்கள் பத்து வருடங்கள் பின் தங்கியுள்ளனர்.

ஒரு ஊரில் ஒரு நாளில் 25 ஆண் குழந்தைகள், 25 பெண் குழந்தைகள் பிறக்கின்றன' என வைத்துக் கொள்வோம். பதினைந்து வருடங்கள் நிறைவடையும் போது 25 பெண்களும் திருமணத்துக்குத் தயாராக நிற்பார்கள். 25 ஆண் குழந்தைகளில் ஒருவனும் திருமணத்துக்குத் தயாராகியிருக்க மாட்டான்.

உடற்கூறு ரீதியாக சீக்கிரமே பெண்கள் முதிர்ச்சியடைவதால் திருமணம் செய்யும் வயதுடைய ஆண்கள், திருமணம் செய்யும் வயதுடைய பெண்கள் என்று எடுத்துக் கொண்டால் ஆண்களை விடப் பெண்கள் மிக அதிகமாகவே உள்ளனர் என்பதை அறியலாம்.

பெண்கள் அதிகமாகவும், ஆண்கள் குறைவாகவும் உள்ள சூழ்நிலையில் கனிசமான பெண்களுக்கு இந்தச் சுகம் கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது.

நொண்டி, முடம், கூன், குருடு போன்ற உடல் ஊனமுற்ற ஆண்களுக்கும், மது, சூது, விபச்சாரம் போன்ற தீமைகளில் ஈடுபட்டு உள்ளம் ஊனமுற்ற ஆண்களுக்கும் சர்வ சாதாரணமாக மனைவியர் கிடைத்து விடுகின்றனர். அழகும், நல்லொழுக்கமும் உள்ள மங்கையர் பலர் இந்தச் சுகத்தை அடைய முடியாத நிலையில் உள்ளனர். இது பெண்களின் விகிதாச்சாரம் எந்தளவுக்கு அதிகமாகியுள்ளது என்பதற்கு நிதர்சனமான சான்று ஆகும்.

இந்த ஏற்றத் தாழ்வை சமன் செய்ய என்ன செய்வது?


• ஆண்களும், பெண்களும் சம அளவில் பிறக்க வேண்டும். நடைமுறையில் அவ்வாறு இல்லை.
• சம வயதில் இருவரும் திருமணத்துக்கு உடல் ரீதியாக தயாராக வேண்டும். இது சாத்தியமில்லை.
• அல்லது அன்றைய அறியாமைக் கால மக்கள் செய்தது போல் உயிருடன் பெண்களைப் புதைத்து பெண்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். மனசாட்சி உள்ள எவரும் இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
இதற்கு ஏதேனும் பரிகாரம் கண்டே ஆக வேண்டும். பரிகாரம் காணத் தவறினால் பல தீய விளைவுகளைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மண வாழ்வை அடைய முடியாத பெண்கள் மன நோய்க்கு ஆளாவது,

அல்லது தவறான வழிகளிலேனும் அந்தச் சுகத்தை அடைந்திடத் துணிவது,

வசதியுள்ளவர்கள் தங்கள் பெண்களுக்காக மாப்பிள்ளைகளை அதிக விலை கொடுத்து வாங்குவது

போன்ற பல தீய விளைவுகள் ஏற்படும்.

இந்த நிலைகளை உலகம் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது.

ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் மன நோய்க்கு ஆளாவதையும், இயல்பிலேயே வெட்க உணர்வு அதிகம் பெற்றிருக்கின்ற பெண்கள் தெருவில் நின்று கொண்டு வெட்கத்தைத் துறந்து ஆண்களை அழைப்பதையும் நாம் காண்கிறோம்.

எனவே சில ஆண்களாவது பலதார மணம் புரிவதில் தான் மணவாழ்வு கிடைக்காமல் பெருமளவு தேங்கி நிற்கும் பெண்களுக்கு மறுவாழ்வு இருக்கிறது.


2. ஆண்களின் இறப்பு விகிதம் அதிகம்


போர்க் களங்களும் போராட்டங்களும்:-
பிறப்பு விகிதத்தைப் பொறுத்த வரை பெண்களே மிகைத்து நிற்கிறார்கள் என்றால் இறப்பு விகிதத்திலும் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. இயற்கையின் சீற்றம், நோய், முதுமை போன்ற காணரங்களால் ஏற்படும் மரணத்தைப் பொறுத்த வரை சமமாகவே இறக்கின்றனர்.

ஆயினும் வேறு சில வழிகளில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் இறப்பெய்துகின்றனர்.

மனித சமுதாயம் தோன்றியதிலிருந்து இன்று வரை பல போர்களை உலகம் சந்தித்துள்ளது. மனிதனின் போர்க்குணம் உலகம் அழியும் வரை மாறுவதாகத் தெரியவில்லை.

இன்னும் சொல்வதென்றால் கடந்த காலத்தை விடப் போர் செய்து மனித சமுதாயத்தை அழித்தொழிப்பதில் மனிதன் மிகவும் முன்னேறியே இருக்கிறான். வாள், வேல் போன்ற ஆயுதங்களால் மட்டுமே போர் செய்து குறைந்த எண்ணிக்கையில் எதிரிகளை அழிக்கத் தெரிந்திருந்த மனிதன் இன்று ஒரு நொடிப் பொழுதில் பல்லாயிரம் எதிரிகளை அழிக்க வல்ல அணு ஆயுதங்களைத் தயார் செய்து விட்டான். கண்டம் விட்டுக் கண்டம் சென்று தாக்கக் கூடிய நவீன ரக ஏவுகணைகளைக் கண்டு பிடித்து விட்டான்.

இது போன்ற போர்க்களங்களில் அழிக்கப்படுவது ஆண் வர்க்கம் மட்டுமே. அவர்கள் மட்டுமே போரில் நேரடியாக ஈடுபடுகின்றனர். இந்த அழிவு பெண்களுக்குப் பொதுவாக ஏற்படுவதில்லை. 1914 ஆகஸ்ட் 14ல் துவங்கி, 1917 மார்ச் 3ல் முடிவுற்ற முதல் உலகப் போரை எடுத்துக் கொள்வோம். சுமார் 33 மாதங்கள் நடந்த இந்தப் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 லட்சம்.

ரஷ்யா 17,00,000
பிரான்ஸ் 13,57,800
பிரிட்டன் 9,08,400
இத்தாலி 6,50,000
அமெரிக்கா 126,000
ருமேனியா 3,35,700
செர்பியா45,000
பெல்ஜியம்13,700
கிரிஸ் 5000
போர்ச்சுகல் 7000
ஜெர்மனி 17,73,700
ஆஸ்திரேலியா 1,20,0000
உஸ்மானியப் பேரரசு 3,25,000
பல்கேரியா 87,500
மொத்தம் 85லட்சத்து 34 ஆயிரம்.

இரண்டாம் உலகப் போரை எடுத்துக் கொள்வோம்

ஆஸ்திரேலியா 23,250
பெல்ஜியம் 7750
பிரேசில் 1000
கனடா 37500
சீனா 1324500
செக் 6750
டென்மார்க் 4250
பிரான்ஸ் 205750
கிரீஸ் 16250
இந்தியா 24250
நெதர்லாந்து 13750
நியூசிலாந்து 12250
நார்வே 4750
போலந்து 320000
தென் ஆப்ரிக்கா 8750
பிரிட்டன் 264500
அமெரிக்கா 405500
ரஷ்யா 13600000
யூகோஸ்லோவியா 305000
ஆஸ்திரேலியா 380000
பின்லாந்து 79000
ஜெர்மனி 3300000
ஹங்கேரி 147500
இத்தாலி 262500
ஜப்பான் 1140500
ருமேனியா 300000
மொத்தம் 2 கோடியே 21 லட்சம்.

ஆதாரம்: மைக்ரோ சாஃப்ட் என்சைக்ளோபீடியா


இது போல் உலகில் நடந்த போர்களில் பல கோடிப்பேர் மாண்டிருக்கிறார்கள். நெப்போலியன் நடத்திய போர்களில் மட்டும் 20 லட்சம் மக்கள் மாண்டிருக்கிறார்கள்.

வியட்நாமில் அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவும் நிகழ்த்திய படுகொலைகளும், அரபு, இஸ்ரேல், ஈரான், ஈராக் யுத்தப் படுகொலைகளும், இலங்கை, பாலஸ்தீன் மக்களின் உரிமைப் போராட்டங்களும், சமீபத்தில் ஆப்கான் மீது அமெரிக்கா குண்டுகளை வீசி ஒரு லட்சம் அப்பாவிகளைக் கொன்றதும், இராக் மீது அமெரிக்கா நடத்திய அநியாயத் தாக்குதலும் பெரும்பாலும் ஆண் வர்க்கத்தையே அழித்தொழித்துள்ளன.

பஞ்சாப், காஷ்மீர், கூர்க்காலாந்து, போராட்டங்களாகட்டும்; ஹிந்து - முஸ்லிம், வகுப்புக் கலவரங்களாகட்டும்; வன்னிய, - ஹரிஜன், தேவர் ஆகியோரிடையே ஏற்படும் சாதிக் கலவரங்களாகட்டும்; வர்க்கப் போராட்டங்களாகட்டும் இதில் எல்லாம் முழுமையாக ஆண்கள் தாம் ஈடுபடுகிறார்கள். அதுவும் இள வயது ஆண்கள்! ஆண்டொன்றுக்கு கோடிக்கணக்கில் மாண்டு விடும் இளைஞர்களின் இளம் விதவை மனைவிகளின் நிலை என்ன?

கன்னியர்களுக்கே மணவாழ்வு கிடைக்காத போது ஏற்கனவே இந்த சுகத்தை அனுபவித்த இந்த விதவைகள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு ஏதேனும் வழி செய்ய வேண்டாமா?
விதவைகளாகவே ஏக்கத்தில் தங்கள் வாழ்வைக் கழிக்க வேண்டுமா?

அல்லது தவறான வழிகளில் அந்த சுகத்தை அடைய வேண்டுமா?

அல்லது உடன் கட்டை ஏற வேண்டுமா?

நியாய உணர்வு படைத்த எவரும் இம்மூன்றில் எதனையும் ஆதரிக்க மாட்டார்.

ஆண்களை விட குறைந்த எண்ணிக்கையில் பெண்கள் பிறப்பதாலும், ஆண்களை விட பத்து வருடங்களுக்கு முன் பெண்கள் திருமணத்திற்கு தயாராவதாலும், பெண்களை விட ஆண்கள் அதிக எண்ணிக்கையில் மரணிப்பதாலும் அனைத்து பெண்களுக்கும் வாழ்க்கைத் துணை கிடைப்பது அறவே சாத்தியமற்றதாகும்.

தவறான வழியில் சென்று விடுவோம் என்று அஞ்சுவோர் மட்டுமாவது மற்றொரு திருமணம் செய்தால் தான் இந்த எற்றத் தாழ்வைச் சரி செய்து அனைத்துப் பெண்களுக்கும் வாழ்க்கைத் துணை கிடைப்பது சாத்தியமாகும்.


3. தற்கொலைகள்:


போர்க்களங்கள், போராட்டங்களில் மட்டுமின்றி தற்கொலை செய்யும் பெண்களை விட தற்கொலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் ஆண்களின் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கிறது.

வருடம் 1982 ஆண்கள் 3314 பெண்கள் 2076
வருடம் 1983 ஆண்கள் 3366 பெண்கள் 2096
வருடம் 1984 ஆண்கள் 4450 பெண்கள் 3021

இது தமிழ்நாட்டில் 82, 83, 84 ஆகிய மூன்று ஆண்டுகளில் தற்கொலை செய்தவர்களின் அதிகாரப்பூர்வமான பட்டியல். (ஆதாரம்: 12.6.88 தினமணி கதிர்)

பிறப்பில் குறைவாக இருப்பதோடு, இறப்புகளிலும் ஆண்கள் அதிகமாகி விடுகிறார்கள் என்பதிலிருந்து ஆண்களின் பற்றாக்குறையை நன்கு உணரலாம்.

ஏற்கனவே குறைவாகப் பிறக்கின்ற ஆண் வர்க்கம், அதிகமாக அழிவுக்கு ஆளாகும் போது, பலதார மணத்தைத் தவிர வேறு என்ன பரிகாரம் தான் காண முடியும்?


4. வரதட்சணை:


திருமணத்தின் மூலம் மட்டுமே உடல் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற பண்பாடுள்ள இந்தியா போன்ற நாடுகளில் வரதட்சணைக் கொடுமை தாண்டவமாடுவதற்கும் இது காரணமாக உள்ளது.

ஆண் மகனைப் பெற்றவர்கள் மாப்பிள்ளையின் ரேட்டை' அதிகமாக்கிக் கொண்டே செல்வதும் கிலோ கணக்கில் நகைகள் கேட்பதும் லாரிக் கணக்கில் சீர் வரிசை என்ற பெயரில் கொள்ளையடிப்பதும் அதிகமாகி வருகின்றன. பெண்கள் மலிவாகக் கிடைக்கிறார்கள் என்பதற்காக ஆண் வர்க்கத்தின் கொடுமை எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.

வசதி படைத்தவர்கள் இந்தப் போட்டியில் ஜெயித்து விடுகிறார்கள். வசதியற்ற ஏழைப் பெண்கள் நாதியற்று நிற்கிறார்கள்.
• மானமுள்ள பெண்கள் என்றால் ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டே மன நோய்க்கு ஆளாகி விடுகிறார்கள்;
• அல்லது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
• மானம் கெட்டவர்கள் என்றால் வீதிக்கு வந்து விடுகிறார்கள்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை வலியுறுத்துவோர் மன வாழ்வுக்கு வசதியின்றி ஏங்கி நிற்கும் இத்தகைய பெண்களுக்கு என்ன பரிகாரம் வைத்திருக்கிறார்கள்?

பரிகாரம் காணத் தவறுவதால் ஏற்படக் கூடிய இந்தத் தீய விளைவுகளை எப்படித் தடுக்கப் போகின்றார்கள்? அந்த அபலைப் பெண்களுக்கு மாற்று வழி காட்டாமல் வெற்றுச் சட்டங்களால் இந்தத் தீய விளைவுகளைத் தடுத்து விட முடியும் என்று எண்ணுகிறார்களா?

சட்டங்கள் இயற்றப்பட்ட பின்னரும் வரதட்சணை ஒழிந்ததா? ஒழுக்கக் கேடுகள் மடிந்தனவா? இல்லையே! அப்படியானால் இதற்கு என்ன பரிகாரம்?

இத்தனையையும் கருத்தில் கொண்டு தான், நிபந்தனையுடன் இஸ்லாம் ஆண்களுக்கு நான்குக்கு உட்பட்டுப் பெண்களை மணந்து கொள்ள அனுமதி வழங்குகின்றது.

இந்த நிபந்தனைக்கு உட்பட்டு, விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என அஞ்சுவோரும், சின்ன வீடு வைத்துக் கொள்வோரும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொண்டால் இதைச் சமன் செய்ய முடியும். அதனால் மட்டுமே இந்தத் தீய விளைவுகளைத் தடுத்து நிறுத்த முடியும். இவ்வாறு செய்வதால் மட்டுமே பெண்கள் மலிவாகக் கிடைக்கிறார்கள் என்ற நிலை மாறும்; அதன் மூலம் வரதட்சணைக் கொடுமையும் ஒழியும்.

இதை ஒப்புக் கொள்ள மறுப்பவர்கள் நாம் குறிப்பிட்ட தீமைகளைத் தடுத்திட தக்க வழிகளையாவது கூற வேண்டும்.


5. உயிருடன் சமாதி:

பெண் குழந்தைகள் பிறந்தவுடன் உயிருடன் கொன்று விடக் கூடிய கொடுமை பல பகுதிகளில் பரவி வருகின்றது. பஞ்சாப் மாநிலத்திலும், தமிழகத்தின் சேலம், மதுரை, தர்மபுரி, தேனி மாவட்டங்களிலும் இந்தக் கொடுமை பெருமளவு தலைவிரித்தாடுகின்றது.

கருவில் இருப்பது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பதைக் கண்டறியும் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு கருவிலேயே பெண் குழந்தைகள் சமாதி கட்டப்படும் நிலை உருவாகி வருகின்றது.

பெற்ற குழந்தைக்காக தமது சுகங்களைத் தியாகம் செய்யும் தாய்மார்கள் ஈவிரக்கமின்றித் தங்கள் பெண் குழந்தைகளைத் தாங்களே கொல்லத் துணிவதற்குக் காரணம் என்ன?
'
இப்பெண் குழந்தைகளை வளர்ப்பது சிரமம்; ஆண் குழந்தை என்றால் கோவணத்துடன் வெளியில் விட்டு விடலாம்; பெண் குழந்தை என்றால் அப்படி எல்லாம் விட்டு விட முடியாது. அப்பெண் குழந்தை பருவ வயதை அடைந்து விட்டால் அவளுக்குத் திருமணம் செய்தாக வேண்டும். ஆனால் மாப்பிள்ளைகள் கிடைப்பதில்லை. இதற்காகவே கொல்கிறோம்' என்று பஞ்சாப் மாநிலம் மற்றும் சேலம், மதுரை மாவட்டங்களில் பெண்கள் கூறியதாக பி.பி.சி படம் பிடித்துக் காட்டுகிறது.

இந்தக் கொடுமையை ஒழிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவோர், இதற்கான காரணத்தைக் கண்டு கொள்ள மறுக்கின்றனர்.

வெறும் சட்டங்களால் இதை ஒழிக்க முடியுமா? இவற்றைக் குற்றமென அறிவிக்கும் சட்டங்கள் முன்பிருந்தே இருக்கத் தான் செய்கின்றன. இந்தச் சட்டங்கள் இருக்கும் நிலையில் தான் இந்தக் கொடுமைகள் தொடர்கின்றன.

காரணங்கள் களையப்படாத நிலையில் போடப்படும் எல்லாச் சட்டங்களுக்கும் இந்தக் கதி தான் ஏற்படும்.

இதற்குரிய காரணம் என்ன என்பது பெண் குழந்தைகளைக் கொல்லும் தாய்மார்களின் பேட்டியிலேயே தெளிவாகக் கூறப் பட்டு விட்டது. மாப்பிள்ளை கிடைக்காததே' அந்தக் காரணம்.

இந்தக் காரணத்தைக் களைய இரண்டே வழிகள் தாம் உள்ளன. மாப்பிள்ளைகளின் உற்பத்தி அதிகரிக்க வேண்டும். இது சாத்தியமில்லை. இருக்கின்ற மாப்பிள்ளைகளைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அதாவது மிகச் சிலராவது பல திருமணங்களைச் செய்ய வேண்டும். இஸ்லாம் அதைத் தான் கூறுகிறது.

இதை ஏற்க மறுப்பவர்கள் பேசாமல் பெண் சிசுக் கொலையை ஏற்றுக் கொள்ள வேண்டியது தான். பெண் சிசுக் கொலைக்கு எதிராக இவர்கள் நடத்தும் போராட்டமே பலதார மணத்தின் அவசியத்தை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

பெண்கள் வாழ்வதே கேள்விக் குறியாகிவிட்ட நிலையில் இவர்கள் சமத்துவம் பேசிக் கொண்டிருப்பது பிரச்சனையின் ஆழத்தை இவர்கள் உணரவில்லை என்பதை விளக்கிக் கொண்டிருக்கிறது.

பலதார மணம் அனுமதிக்கப்பட்டால் சில ஆண்டுகளிலேயே பெண் சிசுக் கொலை முழுமையாக நிறுத்தப்பட்டு விடும் என்பதை ஏனோ உணர மறுக்கிறார்கள்.

சமூக நலனை விட தங்கள் சுய நலனையே பெரிதாகக் கருதுவதால் தான் முற்போக்குப் பெண்டிர் பலதார மணத்தை எதிர்க்கின்றனர்.

சமூகத்தின் மீது பரிவும் கவலையும் கொண்டு சிசுக் கொலை ஒழிக்கப்பட வேண்டும் என்ற உண்மையான அக்கறையுடன் அணுகினால் பலதார மணம் தவிர வேறு பரிகாரமே இதற்கு இல்லை என்பதை ஐயமற உணர்வார்கள்.

பெண்களின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் வரையிலும், ஆண்களை விட பத்து வருடங்களுக்கு முன்பாகவே பெண்கள் மணவாழ்க்கைக்குத் தயாராவது இருக்கும் வரையிலும் இஸ்லாம் காட்டும் இந்தப் பரிகாரம் கட்டாயம் ஏற்கப்பட்டே ஆக வேண்டும். இதை மறுப்போர் இதற்கு நிகரான அல்லது இதை விடச் சிறந்த மாற்றுப் பரிகாரத்தை முன் வைக்க வேண்டும்


6. பிரம்மச்சாரியம்:


மனைவி மக்களைக் காப்பாற்ற வேண்டுமே அதற்குரிய வசதிகள் தம்மிடம் இல்லையே என்று மன வாழ்வை மறுப்பவர்கள் அல்லது மண வாழ்வைத் தள்ளிப் போடுவோர், இந்தப் பற்றாக்குறையை இன்னமும் அதிகப்படுத்துகின்றனர். இந்த நிலையில் என்ன தான் செய்வது? மண வாழ்வுக்கு வழி இல்லாத கன்னியர்களையும், மண வாழ்வை அனுபவித்து இழந்த இளம் விதவைகளையும் கண்டுகொள்ளாமலேயே விட்டு விடுவதா? ஒழுக்கக் கேடுகளும் உடன் கட்டைகளும் தான் இதற்குப் பரிகாரமா? எண்ணிப் பாருங்கள்.


7. தாம்பத்ய ஈடுபாடு:


இல்லற சுகம் அனுபவிப்பதற்காகவே மனிதர்கள் திருமணம் செய்கிறார்கள். இல்லற சுகம் தேவைப்படும் போது அது கிடைக்கவில்லை என்றால் திருமண வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல் போய் விடும்.

ஆண்களின் உடற்கூறையும் பெண்களின் உடற்கூறையும் எடுத்துக் கொண்டால் ஆண்களை விட பெண்கள் சீக்கிரமே தாம்பத்திய உறவுக்குத் தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள்.

தமது உணவு கடந்த கால உடற்பயிற்சி ஆகியவற்றின் காரணமாக மரணிக்கும் காலம் வரை கூட ஆண்கள் இல்லறத்தில் ஈடுபட இயலும். அதை விரும்பவும் இயலும். அறுபது அல்லது எழுபது வயது வரை, ஏன் அதற்கு மேலும் கூடக் குழந்தையை உருவாக்கும் சக்தி பெற்றவனாக ஆண் இருக்கிறான். அவனிடம் குழந்தையை உருவாக்கும் உயிரணுக்கள் முடிந்து போய் விடுவதில்லை.

பெண்களின் நிலை அவ்வாறில்லை. எவ்வளவு திடகாத்திமான பெண்களும் 50 வயதுடன் ஓய்ந்து விடுகிறார்கள். மாதந்தோறும் ஏற்பட்டு வந்த மாதவிடாயும் அந்தப் பருவத்தில் நின்று விடுகின்றது. உடலுறவிலும் நாட்டமின்றிப் போய் விடுகின்றது.

திடகாத்திரமாக இருக்கும் ஒருவன் தன் மனைவி உடலுறவில் நாட்டமின்றிப் போய்விடும் காலகட்டத்தில் அவனுக்கு அதில் நாட்டமிருந்தால் என்ன செய்வான்? அவனுக்கு ஏதேனும் பரிகாரம் காண வேண்டுமா? கூடாதா?

50 வயதைத் தாண்டியவர்களின் பார்வை தான் அன்னியப் பெண்களை அதிகம் நோக்குவதை நாம் பார்க்கின்றோம். சிறுமிகள், மற்றும் வேலைக்காரிகளைக் கற்பழிப்போரும் இத்தகையோர் தாம். அவர்களை மட்டும் சொல்லிக் குற்றமில்லை. காரணம், அவர்களுக்கு ஆசை இருக்கிறது; உடலில் வலு இருக்கிறது; ஆனால் அவர்களின் மனைவியர் அதற்கு ஏற்றவர்களாக இல்லை.மனைவிக்கு அந்த உணர்வு மங்கி விட்டது என்பதற்காக இவனும் தன் உணர்வைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியுமா?

ஒவ்வொன்றையும் அணுகுவதற்கு ஒரு நியாயமான முறை உண்டு. இந்த விஷயத்தில் உணர்வுகளுக்கு ஆளானவர்களையே நாம் கவனிக்க வேண்டும்.

பெண்களின் உடற்கூற்றை அறியாதவர்கள், இருவருக்குமுள்ள வித்தியாசத்தை உணராதவர்கள் தான், பலதார மணத்தைப் பாவமெனக் கருதுவர்.

வித்தியாசங்களை உணர்ந்து கொண்ட எவரும் இதை மறுக்கவே இயலாது. உண்மையாகவே தேவைப்படுவோருக்கு அதை அனுமதிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

மாதம் தோறும் அவர்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய்க் காலத்தில் இந்த உறவை அவர்களால் விரும்ப முடியாது. அப்படியே சில பெண்களின் உள்ளம் அதை விரும்பினாலும் அந்த நேரத்தில் அவர்களின் உடல் அதற்கு ஏற்றதாக இராது. உடலும், உள்ளமும் ஏற்றதாக இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அது போன்ற ஒரு அருவருப்பான சூழ்நிலையில் ஒரு ஆண் கிளர்ச்சியடையவும் முடியாது. அதுவும் ஏற்பட்டு விடும் என்று வைத்துக் கொண்டாலும் மருத்துவ ரீதியாகக் கூடப் பல விளைவுகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவனது மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டு அந்த உபாதையினால் அவளுடன் அவனால் உறவு கொள்ள இயலவில்லை என்றால் அவனது நிலை என்ன? சில பெண்கள் 15 நாட்கள் வரை கூட மாதவிடாய்த் தொல்லைக்கு ஆளாகி விடுவதுண்டு. இது போன்ற காலக் கட்டத்தில் மாதா மாதம் இப்படி ஒரு நிலையை அவன் எதிர் கொள்ளும் போது அவன் என்ன செய்வான்? இத்தகையோர் குறைந்த எண்ணிக்கையினர் தானே என்று அலட்சியப் படுத்துவதா?

இவர்களைப் போன்றவர்கள் தாம் அதிக அளவில் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். அழகும், இளமையும் கொண்ட மனைவியர் வீட்டிலிருந்தும் விபச்சாரத்தைச் சிலர் நாடிச் செல்லக் காரணம் இது தான். இயற்கையாக அவர்களுக்கு அமைந்திருக்கும் உணர்வுகளுக்குப் போதிய வடிகால் இல்லை. விபச்சாரத்தில் ஈடுபட்டுத் தங்கள் மனதையும், உடலையும் கெடுத்துக் கொள்வதை விட முறையாக இன்னுமொரு மனைவியை மணந்து அந்த இன்பத்தை அடைவதில் என்ன தவறு இருக்க முடியும்?

பலதார மணத்தை இவர்களைப் போன்றவர்களுக்கு அனுமதிப்பது இவர்களை மட்டும் செம்மைப்படுத்தவில்லை; இவர்களை நம்பியே தங்களின் தொழிலை நடத்துகின்ற ஒழுக்கம் கெட்ட பெண்களும் செம்மைப் படுத்தப்படுகிறார்கள். மாதவிடாய் மட்டுமின்றிக் கர்ப்ப காலம், பிரசவ காலம், மற்றும் பாலூட்டும் காலங்களில் இந்த உறவை நாடாத பெண்களும் உள்ளனர். இத்தகையவர்களை மனைவியாக அடைந்தவன் பல மாதங்கள் இந்த உறவுக்காக ஏங்கும் நிலைமையை அடைகிறான். எத்தனை மாதங்கள் ஆனாலும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வோர் இருக்கத் தான் செய்கிறார்கள். எனினும் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாதவர்களும் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

இவ்வளவு நியாயமான காரணங்களினால் தான் பலதார மணத்தை ஆண்களுக்கு மட்டும் இஸ்லாம் அனுமதித்திருக்கின்றது. இஸ்லாம் அகில உலகுக்கும் பொதுவான வாழ்க்கைத் திட்டமாகவும், எல்லாத் தரப்பு மக்களுக்கும் சரியான தீர்வைக் காட்டும் பரந்த கண்ணோட்டமுடைய மார்க்கமாகவும் இருப்பதால் எல்லாக் காலத்திற்கும், எல்லாப் பகுதிகளுக்கும் ஏற்ற வகையில் சட்டங்களை வழங்கியுள்ளது.

பலதார மணம் ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டதற்கு ஏராளமான காரணங்களை நாம் கூறியுள்ளோம். இக்காரணங்களில் ஒன்றிரண்டு காரணங்கள் சிலருக்கு ஏற்புடையதல்ல என்று தோன்றலாம். அவர்களும் ஏற்கக் கூடிய காரணங்கள் அதன் பிறகும் எஞ்சியிருப்பதை அவர்கள் மறுக்க முடியாது.

மண வாழ்வைப் பெற்றுள்ள பெண்கள் இதில் திருப்தியடைய மாட்டார்கள்; இதற்கு ஒப்ப மாட்டார்கள்; தங்கள் வாழ்வைப் பங்கு வைக்க உடன்பட மாட்டார்கள்.

ஆனால், இந்தப் பரிகாரம் நாளை அவர்களுக்கே தேவைப்படும் போது இதன் அவசியத்தை உணர்வார்கள். வாழ்ந்து கொண்டிருந்த பெண் திடீரென விதவையாகி விட்டு வாழ்க்கையின் வசந்தங்களுக்காக ஏங்கும் பொழுது இதன் அவசியத்தை உணர்வாள்.

விதவையாயினும், கன்னியாயினும் மண வாழ்வு கிடைத்து விடும் என்ற உத்திரவாதம் பெற வேண்டுமானால், வசதியுள்ளவர்கள், நேர்மையாக நடக்கும் எண்ணமுள்ளவர்கள், உடல் வலிமையுள்ளவர்கள், தேவையுடையவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து இந்தப் பற்றாக்குறையை ஈடு செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை.

பெண்கள் கிடைக்கவில்லை' என்ற அளவுக்கு மாறினால் மட்டுமே, வரதட்சணை, விபச்சாரம், மற்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் ஒழிய முடியும்.

பலதார மணத்தைத் தடை செய்தாலும் மனைவியைத் தவிர பிற பெண்களை நாடுவோர் கணிசமான எண்ணிக்கையில் இருக்கத் தான் செய்கின்றனர். எந்தச் சட்டங்களாலும் இவர்களைத் தடை செய்ய முடியவில்லை. இத்தகையோர் சட்டப்படி இன்னொருத்தியை மணந்து கொள்வது விபச்சாரத்தில் ஈடுபடுவதை விட எவ்விதத்திலும் தாழ்ந்தது அல்ல என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அழகிகள் கைது' என்ற செய்திகள் இடம்பெறாத நாளே இல்லை என்ற அளவுக்கு பெண்கள் ஆண்களை வலை வீசித் தேடிக் கெடுக்கின்றனர். ஆனால் அழகன்கள் கைது' என்ற ஒரு செய்தியையும் நாம் காண்பதில்லை.

பெண்கள் கடை வீதிகளிலும், பேருந்து நிலையங்களிலும், ஹோட்டல்களிலும், பொழுது போக்கும் இடங்களிலும் மானமிழந்து ஆண்களுக்கு அழைப்பு விடுகிறார்களே! அவர்களுக்கு ஒரு வாழ்வு கிடைத்திருந்தால் இந்த இழிவைத் தாமே தேடிக் கொள்வார்களா? என்பதையும் சிந்திக்க வேண்டும்.
பொறுப்பைச் சுமக்க வேண்டும்.
திருமணம் விபச்சாரம் போன்றது அல்ல. 'ஒருத்தியை மணந்து கொண்டால் காலமெல்லாம் அவளுக்குரிய உணவு, உடை மற்றும் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்; அவள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்காகவும் சம்பாதிக்க வேண்டும்' என்பதை உணரும் போது ஒரு சதவிகிதம் பேர் கூட அதற்கு முன் வர மாட்டார்கள்.
• பலதார மணம் தடை செய்யப்பட்டு விபச்சாரம் தடுக்கப்படாத போது பிற பெண்களை நாடுவோர் மிக அதிக அளவில் இருப்பார்கள்.
• விபச்சாரத்தைத் தடுத்து பலதார மணத்தை அனுமதித்தால் அதை விட மிக மிகக் குறைந்த அளவு ஆண்கள் தாம் பிற பெண்களை நாடுவார்கள்.
காரணம் சில ரூபாய்களை வீசி எறிந்து விட்டால் போதும்! வேறு எந்தப் பொறுப்பும் கிடையாது எனும் போது பிற பெண்களை சர்வ சாதாரணமாக நாடுவார்கள்.

செய்யும் செயலுக்காக காலமெல்லாம் பொறுப்பு ஏற்க வேண்டும் எனும் போது பலமுறை யோசித்துத் தான் செய்வார்கள்.

எனவே பிற பெண்களை நாடுவோரின் எண்ணிக்கை பலதார மணத்தினால் பல மடங்கு குறையும். திருமணம் என்ற முறையில் இல்லாமல் எந்தப் பெண்ணுடனும் எந்த ஆணும் உறவு கொள்ளக் கூடாது என்று சட்டம் இயற்றிப் பார்க்கட்டும்! அப்போது புரிந்து கொள்வார்கள்.
இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஒருவனுக்கு இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்படுபவள் தன் பரிபூரண சம்மதத்துடன் தான் முன் வருகிறாள். சம்மதமின்றி அவளை யாரும் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட நிர்பந்திக்க முடியாது. அவ்வாறு நிர்பந்தம் செய்யும் திருமணங்களை இஸ்லாம் செல்லாததெனவும் அறிவிக்கிறது.

இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட முன்வருகிறாளே அவள் தான் இது பற்றிக் கவலைப்பட வேண்டும்.

www.onlinepj.com
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger