முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்

அன்பு சகோதர சகோதரிகளுக்கு, 

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக...ஆமீன்.

இந்த கடிதத்தை படிக்க சில நிமிடங்கள் செலவிடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கைக்கான 
தேடல் புதிய திசையை நோக்கி பயணப்படலாம். திறந்த மனதோடு சிந்திக்கக்கூடிய, 
பாரபட்சம் காட்டாத உண்மையை அறிய விரும்பும் சகோதரர்/சகோதரி நீங்கள் என்று 
நாங்கள் நம்புகின்றோம். மேலும் தொடர்வதற்கு முன்னால், இந்த கடிதத்தின் 
நோக்கம் என்னவென்று சொல்ல விரும்புகின்றோம். இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறி 
குறித்த சுருக்கமான அறிமுகமே இந்த கடிதம்.

இஸ்லாம் என்றால் என்ன? 

இஸ்லாம் என்றால் இறைவனுக்கு முற்றிலுமாக அடிபணிவது/அர்ப்பணிப்பது என்று
அர்த்தம். எவர் ஒருவர் அப்படி செய்கின்றாரோ அவர் முஸ்லிம் என 
அழைக்கப்படுகின்றார். உலகின் முதல் மனிதரான ஆதம் (அலை) தொடங்கி, மூசா (Moses)
 (அலை), ஈசா (Jesus) (அலை), முஹம்மது (ஸல்) என்று இறைவனால் அனுப்பப்பட்ட 
அனைத்து தூதர்களுக்கும் கொடுக்கப்பட்டதும், அவர்களால் மக்களுக்கு 
எடுத்துரைக்கப்பட்டதும் இஸ்லாம் தான். 

இஸ்லாம் கூறும் செய்தி: 

இஸ்லாம் கூறும் செய்தி மிக எளிமையானது. இறைவன் ஒருவனே, அவனுக்கு
 இணை யாருமில்லை, அவனை மட்டுமே வழிபடுங்கள் என்பது தான் அது. 

நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் தேவையற்றவன். அவன் பெறவுமில்லை, பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவருமில்லை --- (அல்குர் ஆன்: 112:1-4)

இந்த பிரபஞ்சத்தை, அதனுள் உள்ள நம்மை என்று அனைத்தையும் படைத்த
 இறைவனை மட்டுமே வழிபடுமாறும், அவனால் படைக்கப்பட்ட சக உயிரினங்களையோ 
அல்லது உயிரற்றவையையோ வழிபடுவதை விட்டொழிக்குமாறும்
 அறிவுறுத்துகின்றது இஸ்லாம்.

குர் ஆன்: 

இறைவனால் அனுப்பப்பட்ட ஒவ்வொரு தூதரும் அற்புதங்களோடு அனுப்பப்பட்டார்கள். 
இறுதித் தூதரான முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட 
அற்புதம் குரான். 

குரான் இருபத்தி மூன்று ஆண்டு கால இடைவெளியில் சிறுகச் சிறுக இறைவனால்
 இறுதித் தூதருக்கு அருளப்பட்டது. 

எப்படிப்பட்ட வேதம் குர்ஆன்?

இன்னும், நம் அடியாருக்கு அருளியுள்ளதில் நீங்கள் சந்தேகம் உள்ளவர்களாக இருப்பீர்களானால், உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால், அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்துக்கொண்டு இது போன்ற ஒரு அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் --- (குர்ஆன் - 2:23).

இது மனித குலத்திற்கு இறைவனால் விடப்பட்ட சவால். அன்றிலிருந்து இன்று வரை 
இந்த சவாலுக்கு நெருக்கத்தில் கூட யாராலும் வரமுடியவில்லை. அதன் விளைவாக, இது
 மனித எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட வேதமென்று கோடானு கோடி மக்கள் தொடர்ந்து
நம்பி வருகின்றார்கள். 

இந்த வேதம் அன்று இருந்த சிந்தனையாளர்களுக்கும் சரி, இன்று இருக்க 
கூடிய சிந்தனையாளர்களுக்கும் சரி தொடர்ந்து ஆச்சர்யத்தை தந்து வருகின்றது. 

மருத்துவ துறையில் மதிப்புமிக்க இடத்தை பெற்றுள்ள டாக்டர் கீத்மூர் (Dr.Keith Moore), 
தன்னுடைய "The Developing Human" புத்தகத்தில் குரானின் அறிவியல் உண்மைகள் 
குறித்து ஒரு பகுதியை ஒதுக்கி இருக்கின்றார். 
பிரான்சின் மதிப்புமிக்க மருத்துவரான டாக்டர் மவ்ரீஸ் புகேய்ல் (Dr.Maurice Bucaille) 
அவர்கள் தன்னுடைய "The Bible, the Qur'an and Science" புத்தகத்தில்,

    "ஒரு பிழையை கூட குர்ஆனில் நான் காணவில்லை. இந்த புத்தகம் ஒரு மனிதனால் எழுதப்பட்டிருந்தால், எப்படி நவீன அறிவியல் கண்டுபிடித்திருக்க கூடிய உண்மைகளை அன்றே சொல்லி இருக்க முடியும்?"

அறிஞர்கள் மட்டுமல்லாது, பெரும்பாலான மற்ற முஸ்லிம்கள் கூட, குர்ஆனில் 
குறிப்பிடத்தக்க ஞானம் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்களது குரான் 
அறிவை கண்டு நீங்கள் ஆச்சர்யப்பட்டிருக்கலாம். இதற்கெல்லாம் காரணம், குரான் 
உங்களது நேரத்தை அதிகமாக எடுத்து கொள்ளாது என்பதே ஆகும். சில நாட்களிலேயே
 கூட உங்களால் முழு குரானையும் படித்து விட முடியும்.

மேலும், குரான் என்னும் இறைவேதம், உலக மக்கள் அனைவருக்குமானது. நாயகம்
 (ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவருக்காகவும் அனுப்பப்பட்டவர்கள்.  
(நபியே) உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ஓர் அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை -(குர்ஆன் 21:107)


நம் அனைவருக்கும் சொந்தமான, படிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளாத குரானை ஏன் 
ஒரே ஒரு முறை படித்து பார்க்க நீங்கள் முன்வரக்கூடாது?   

தன்னை படிப்பவர்களை உரையாடலுக்கு உட்படுத்தி அவர்களுடன் ஒரு அறிவார்ந்த 
விவாதத்தை ஏற்படுத்தும் குரான் என்னும் அற்புதத்தின் தமிழ் அர்த்தங்களை படிக்க 
விரும்பும் சகோதர/சகோதரிகள் என்னுடைய மெயில் முகவரிக்கு (pudugaigani@gmail.com) 
ஒரு மெயில் அனுப்புங்கள். இறைவன் நாடினால், அனுப்பி வைக்கின்றேன். 

சகோதரத்துவம்: 

ஆதாம், ஏவாள் (இருவர் மீதும் இறைவனின் சாந்தி நிலவுவதாக) ஆகிய இருவரிலிருந்தே 
நாம் அனைவரும் வந்ததால் இவ்வுலகில் உள்ள அனைவருமே சகோதர/சகோதரிகள் 
என்று கூறுகின்றது இஸ்லாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தி கூறிய விசயங்களில் சகோதரத்துவமும் 
ஒன்று. தன்னுடைய இறுதி பேருரையில் பின்வருமாறு தெரிவிக்கின்றார்கள் இறுதி தூதர்
 (ஸல்) அவர்கள், 

    "எல்லா மனிதர்களும் ஆதாம், ஏவாள்லிருந்தே வந்தனர். ஒரு அரபி, அரபி அல்லாதவரை காட்டிலும் உயர்ந்தவரல்ல. அதுபோலவே ஒரு அரபி அல்லாதவர், அரபியரை விட உயர்ந்தவரல்ல. மேலும், வெள்ளையர் கருப்பரை விடவோ அல்லது கறுப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரல்ல"

இஸ்லாமை பொறுத்தவரை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று யாருமில்லை. எவர் 
ஒருவர் இறைநம்பிக்கை கொண்டு நல்ல செயல்களை செய்கின்றாரோ அவரே 
இறைவனிடத்தில் உயர்ந்தவர். பிறப்பாலோ அல்லது செய்யும் தொழிலாலோ
 ஒருவர் உயர்ந்தவராகவோ அல்லது தாழ்ந்தவராகவோ ஆக முடியாது.

    "மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்" -குர் ஆன் 49:13)

புரட்சி: 

நாம் பல புரட்சிகளை பற்றி கேள்விபட்டிருக்கலாம். ஆனால், அவையெல்லாம் விட 
இஸ்லாம் செய்த புரட்சி மகத்தானது. மற்ற புரட்சிகளில் மக்களின் புறம் சார்ந்த 
சூழ்நிலைகள் மாறியிருக்கலாம். ஆனால் இஸ்லாமிய புரட்சியில் மக்களின் அகம், புறம்
 என இரண்டுமே மாற்றம் கண்டன. அவர்கள் உண்ணும் உணவிலிருந்து,
 உடுத்தும் உடையிலிருந்து, மற்றவரை அணுகும் முறையிலிருந்து, 
சகோதரத்துவத்தின் அருமையை உணர்ந்து கொண்டதிலிருந்து என்று மாபெரும் 
எழுச்சியை இருபத்தி மூன்றே ஆண்டுகளில் செய்து காட்டினார்கள் இறைத்தூதர் (ஸல்) 
அவர்கள்.

நல்ல விஷயங்களை நோக்கி பயணிக்க ஆசைப்படும் தங்களுக்குள்ளும்
 (இறைவன் நாடினால்) அந்த புரட்சி ஏற்படலாம். அதற்கு தாங்கள் செய்ய 
வேண்டியதெல்லாம் ஒரே ஒரு முறை குரானை திறந்த மனதோடு முழுமையாக 
படிக்க முன்வருவது தான். ஆம், குரானுடன் நீங்கள் புரியப்போகும் விவாதம் 
உங்கள் வாழ்க்கையை மாற்றலாம், உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டலாம்.

உங்களுடைய நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி. விரைவில் உண்மையை கண்டறிய 
இறைவன் உங்களுக்கு உதவுவானாக...ஆமீன். 

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் எல்லாம்
 வல்ல இறைவன் தந்தருள்வானாக...ஆமீன்..

நன்றி - எதிர்குரல் 
ஆஷிக் அஹ்மத் அ 

 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger