தூய மார்க்கத்தை தழுவிய கேட் ஸ்டீபன்ஸ்-2

இருளிலிருந்து வெளிச்சத்திர்க்கு....2


மருத்துவமனையில் நுழைதல்:
வாழ்க்கையில் முன்னேற்றமும் பொருளாதார வெற்றியும் பிரபலமும் நான் அடைந்து ஏறத்தாழ ஓராண்டு கழிந்திருக்கும் அப்போது என்னைக் காசநோய் பீடித்தது.சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டேன்.

நான் அங்கிருந்த போது எனது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கலானேன். நான்
என்ன வெறும் ஜடம் தானா? நான் என்ன செய்தால் இந்த ஜடத்தைச் சிறப்பாக
அமைக்கலாம்? என்றெல்லாம் பல வினாக்கள் என்னுள் எழுந்தன. உண்மையில் எனது நிலையைப் பற்றி நான் சிந்திக்க ஆரம்பித்த அந்தக் கட்டம் எனக்கு
இறையருளாகவே அமைந்தது. அது எனது கண்களை நான் திறப்பதற்கும் சீரான
பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கும் இறைவன் வழங்கிய ஒரு சந்தர்ப்பம் என்றே
நான் நினைக்கின்றேன்.

நான் ஏன் இந்தப் படுக்கையில் கிடக்க வேண்டும்? என்பது போன்ற பல கேள்விகள்
உருவாயின. இவற்றிற்கான விடைகளை நான் தேட ஆரம்பித்தேன். நான் ஏற்றுக்
கொண்டிருந்த கோட்பாடுகள் கிழக்காசிய நாடுகளில் அப்போது கோலோச்சிக்
கொண்டிருந்தது. எனவே அந்தக் கொள்கைகளைப் பற்றி சிந்திக்கலானேன்.
முதலில் மரணத்தைப் பற்றிய சிந்தனை ஏற்பட்டது. அப்போது தான் ஆன்மாக்கள்
ஒரு வாழ்க்கையிலிருந்து இன்னொரு வாழ்க்கைக்கு மாறுகின்றது. இந்த உலக
வாழ்க்கையோடு அவற்றின் சகாப்தம் முடிவடைவதில்லை என்பதை அறிந்தேன். அன்றே நான் சீரான பாதையை நோக்கிப் பயணிக்கத் துவங்கி விட்டதை அறிந்தேன்.
இவ்வாறாக ஆன்மீக சிந்தனை பற்றிய அக்கறை என்னைத் தொற்றிக்கொள்ள
படிப்படியாக இதய அமைதி எனக்குள் அதிகரித்தது. அதன் விளைவாக நான் வெறும்
வெற்றுடம்பு அல்ல என்ற முடிவுக்கு வந்தேன்.

ஒரு நாள் நான் நடந்து சென்று கொண்டிருந்த போது மழை பெய்தது. உடனே நான்
மழையில் நனையாமல் இருப்பதற்காக சற்று ஓடினேன். அப்போது ஒரு தத்துவம் எனது நினைவிற்கு வந்தது. அது யாதெனில், 'உடம்பு என்பது ஒரு கழுதையைப் போன்றது, அதைப் பழக்கப்படுத்தினால் தான் அதை அதன் எஜமானன் தனது
விருப்பத்திற்கிணங்க பயன்படுத்த இயலும். இல்லையெனில் கழுதை தனது
விருப்பத்திற்கிணங்க எஜமானனைப் பயன்படுத்திக் கொள்ளும்.'
அப்படியாயின் சுயமான விருப்பும் வெறுப்புமுள்ள மனிதனாகிய நான் வெறும்
ஜடமல்லவே. கிழக்கத்திய கோட்பாடுகளை ஆராயும் போதும் இந்த முடிவே எனக்குத் தென்பட்டது. ஆயினும் கிறிஸ்தவம் எனக்கு முழுமையாகவே பிடிக்காமல்
போயிற்று.

நான் குணமடைந்ததும் மீண்டும் இசைத்துறைக்குத் திரும்பினேன். அது எனது
புதிய சிந்தனைகளை மழுங்கடிப்பதைப் போல் தோன்றியது. அது பற்றி நான் பாடிய
பாடல் வரிகள் என் நினைவுக்கு வருகின்றன:

சுவனத்தையும் நரகத்தையும் படைத்த (இறை)வனை அறிய வேண்டுமே! இந்த உண்மையை நான் படுக்கையில் கிடந்து அறிய இயலுமா, இல்லை, ஒண்டுக் குடிசையில் ஒதுங்கித்தான் புரிய இயலுமா? மற்றவர்களோ ஆடம்பரமான உணவகங்களின் அறைகளில் உழன்று கிடக்கின்றனர். (கவிதையின் கருத்து)

இந்த சந்தர்ப்பத்தில் தான் நான் சரியான பாதையில் இருப்பதாக உணர்ந்தேன்.
அந்த நேரத்தில் இன்னொரு பாடலையும் நான் பாடினேன். அது கடவுளை அறிவதற்கான வழியைப் பற்றியது.

இந்நிலையில் இசைவுலகில் எனது பிரபலம் அதிகரித்தது. அப்போது நான் மிகவும்
சிரமத்திற்குள்ளாயிருந்தேன். காரணம், எனது பாடல்கள் ஒரு பக்கம்
பிரபலமாகிக் கொண்டிருக்கும் வேளையில் நானோ உண்மையைத் தேடும் வேட்கையில் மூழ்கியிருந்தேன். அந்த வேளையில் புத்த மதம் சிறந்ததும் உயர்ந்ததுமாக இருக்கும் என்று நம்பியிருந்தேன். ஆனாலும் அதை ஏற்றுக் கொள்ளவோ இசையுலகத்தைக் கைவிடவோ வழிபாடுகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளவோ எனக்குத் தோன்றவில்லை. நானோ உலக வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்தேன். பிறகு எனது சத்திய வேட்கை, கிரகங்கள் மற்றும் எண்கணித ஆய்வுகளின் வாயிலாக தொடர்ந்தது. அவைகளிலும் எனக்குச் சரியான நம்பிக்கை வரவில்லை. அப்போது இஸ்லாத்தைப் பற்றியும் நான் வெகுவாக அறிந்திருக்கவில்லை.

ஒரு நாள் நான் ஆச்சர்ய மிக்க வகையில் இஸ்லாத்தைப் பற்றி அறிய முடிந்தது.
அதாவது எனது சகோதரர் பைத்துல் முகத்தஸ் சென்று விட்டுத் திரும்பினார்.
அப்போது அவருடைய நடையுடை பாவனைகள் சற்றே வித்தியாசமாக இருந்தன.
          
                  தொடரும் இன்ஷா அல்லாஹ் . . . .

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger