மற்றுமொரு சுதந்திர போராட்டத்தை நோக்கி முஸ்லிம்கள்! டிஎன்டிஜே பிரகடனம்!!


டிசம்பர் 21ஆம் தேதியன்று உலகம் அழியப்போகின்றது என்று கிளப்பப்பட்ட பீதியை மக்கள் மத்தியில் போக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தென்சென்னை மாவட்டம், ஜாம்பஜார் கிளையினர் விநியோகித்த விழிப்புணர்வு துண்டுப்பிரசுரத்தை காரணம் காட்டி கடந்த டிசம்பர் 22ஆம் தேதி நள்ளிரவு 2.30மணிக்கு ஜாம்பஜார் கிளைத்தலைவர் யாகூப் அவர்களை காவிச்சிந்தனையோடு செயல்பட்ட காவல்துறை அவரது வீடு புகுந்து நள்ளிரவில் அடாவடியாக கைது செய்தது.
அப்பாவிகளை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து, முஸ்லிம் பெண்களை இழிவாகப்பேசி, அவர்களிடத்திலிருந்த இரண்டு செல்பேசிகளை பிடுங்கிச் சென்ற காவல்துறையின் காட்டுமிராண்டித் தர்பாரைக் கண்டித்து அன்றைய தினமே மாலை 4மணிக்கு டி-1 காவல் நிலைய முற்றுகையை டிஎன்டிஜேயின் தென்சென்னை மாவட்டம் அறிவித்தது.
முற்றுகையிட வருபவர்களை இரத்தக்களறியாக்கி அனுப்ப வேண்டும்; அதன் மூலம் முஸ்லிம்களை கருவறுக்க வேண்டும் என முன்கூட்டியே திட்டம் தீட்டிய காவித்துறையினர், போராட்டம் துவங்குவதற்கு முன்பே நமது சகோதரர்கள் மத்தியில் பலப்பிரயோகம் செய்து தடியடி நடத்தி மிருக வெறியாட்டம் ஆடினர்.
இந்த மிருகவெறியாட்டம் ஆடிய திருவல்லிக்கேணி ஏ.சி.செந்தில் குமரன், திருவல்லிக்கேணி சரக டி.சி.கிரி, அயனாவரம் ஏ.சி.கிருஷ்ணசாமி ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்த அநியாயத்தைக் கண்டித்து முஸ்லிம்களின் அடுத்த கட்ட போராட்டம் என்ன என்பதை அறிவிப்பு செய்வதற்காகவும் கடந்த 29.12.12 – சனிக்கிழமை அன்று மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.
கண்டனப் பொதுக்கூட்டத்தைத் தடுக்க காவல்துறையினர் பிரயத்தனம்:
முஸ்லிம்களின் இந்தப் போராட்ட அறிவிப்பை கேள்விப்பட்ட காவல்துறையினர் ஆரம்பம் முதலே கதி கலங்கினர். எப்படியாவது இந்த கண்டனப் பொதுக்கூட்டத்தை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று கடும் முயற்சி எடுத்தனர்.
அதற்காக பல சாக்குப்போக்குகளைச் சொல்லி நமக்கு அனுமதி மறுக்க முயற்சித்து பொருந்தாத பலகாரணங்களைச் சொல்லினர்.
காவல்துறையினர் சொன்ன பொருந்தாத காரணங்கள்:
வருடப்பிறப்பு வருகிறது; பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் சென்னை வரவுள்ளார்கள்; பிரணாப் முகர்ஜி வருகிறார்; ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இப்படி பல நிகழ்ச்சிகள் சென்னையில் இருப்பதால், நீங்கள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு நாங்கள் பாதுகாப்பு அளிக்க இயலாது; எனவே இப்போதைக்கு இந்த பொதுக்கூட்டம் நடத்த வேண்டாம் என்று பொருந்தாத காரணத்தைக் கூறினர்.
டிஎன்டிஜே கூட்டத்திற்கு எத்தனை ஆயிரம் போலீசார் இதற்கு முன்பு பாதுகாப்புக்கு வந்தார்கள்?:
டிஎன்டிஜே நடத்தக்கூடிய கூட்டங்களுக்கு எந்த போலீஸார் பாதுகாப்பு அளித்துக் கொண்டு இருக்கிறார்கள்? நாம் நடத்தக்கூடிய மாநாடாக இருந்தால்கூட 15 போலீசார்தான் மாநாட்டுத் திடலுக்கு பாதுகாப்புக்கு வருவார்கள்; டிஎன்டிஜேவினர் கட்டுப்பாடும், கட்டுக்கோப்பும் மிக்கவர்கள்; அவர்களது தொண்டரணியினரே ராணுவத்தை மிஞ்சக்கூடிய அளவுக்கு அந்த மக்களை ஒழுங்குபடுத்தி சீர்செய்துவிடுவார்கள். அப்படியிருக்க நாம் ஏன் பாதுகாப்புக்கு அதிக போலீசாரை குவிக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்து வைத்துள்ளதுதான் அதற்குக் காரணம்.
நாம் நடத்தும் எந்தக் கூட்டமாக இருந்தாலும் போலீசார், “தான் உண்டு, தனது வேலை உண்டு” என்று நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பார்கள். சொன்ன நேரத்திற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பே நாம் நிகழ்ச்சியை நிறைவு செய்வோம். பிறகு போலீசார் இருந்த இடம் தெரியாமல் நகர்ந்து விடுவார்கள். இதுதான் இதுவரை தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகளுக்கு இவர்கள் பாதுகாப்பு அளித்து வந்த நடைமுறை.
ஜூலை 4 தீவுத்திடலில் 15லட்சம் முஸ்லிம்கள்; 15 போலீசார்:
ஜூலை 4 அன்று தீவுத்திடலில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கூடினார்களே! அதில் எத்தனை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார்கள் என்பதை காவல்துறை கணக்கிட்டுச் சொல்லுமா? 15 போலீசைக்கூட அங்கிருந்தவர்கள் பார்க்கவில்லை. இப்படி இருக்கையில் டிஎன்டிஜேயின் இந்த பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க இயலாத காரணத்தால் நீங்கள் பொதுக்கூட்டம் நடத்த நாங்கள் அனுமதி வழங்க இயலாது என்று காவல்துறை சொன்னதைக்கேட்டு நமக்கு சிரிப்புதான் வந்தது.
எங்களுக்கு பாதுகாப்புத் தேவையில்லை:
மறுமைக்காக வாழும் இந்தக் கூட்டம் படைத்த ரட்சகனிடத்தில் பாதுகாவல் தேடக்கூடிய கூட்டம். காவல்துறை தரும் பாதுகாப்பிலா நாம் கூட்டம் நடத்தப் போகின்றோம் என்று முடிவெடுத்த நமது மாநில நிர்வாகம் “போலீசார் எங்களுக்கு பாதுகாப்பளிக்கத் தேவையில்லை” என்று எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்து, அல்லாஹ்வின் அருளால் இந்தப் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடித்தது.
கொட்டும் மழையிலும் குவிந்த கொள்கைக்கூட்டம்:
பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவித்த 29.12.12 அன்று சனிக்கிழமை காலை முதலே சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
மழை இடைவிடாமல் பெய்கின்றதே! இன்று கண்டனப் பொதுக்கூட்டம் நடக்குமா? என்று கேள்வியெழுப்பியவர்களுக்கு, “கொட்டும் மழை பெய்தாலும், அல்லாஹ்வின் உதவியுடன் கொட்டும் மழையிலும் கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கும்” என்று தகவல் சொல்லப்பட்டது.
மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்த நிலையிலும் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே இருக்கைகளை நிறைத்தனர். கொட்டும் மழையையும், அடிக்கும் பனியையும் பொருட்படுத்தாது நமது சகோதரிகள் தங்களது கைக்குழந்தைகளை தூக்கி வந்திருந்தது கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
அறிவிப்புச் செய்யப்பட்டபடி இரவு 7மணிக்கு கண்டனப் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. முதலாவதாக, “மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்” என்ற தலைப்பில் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சையது இப்ராஹிம் உரையாற்றினார். அவர் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போதே சிறு தூரலாக இருந்த மழை அதிகரித்தது. பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் அமர்ந்திருந்த நிலையிலும், சிறு சலசலப்புகூட இல்லாமல் இருந்த இடத்திலிருந்து அசையாமல் கொட்டும் மழையிலும் அமர்ந்திருந்ததை பார்த்தபோது, “இந்த சமுதாயம் இம்மைக்காக வாழும் சமுதாயமல்ல; மறுமையில் கிடைக்கும் அந்த சுவனத்திற்காக எந்த தியாகத்தையும் செய்யத் துணிந்த சமுதாயம்” என்ற செய்தி அந்த நிகழ்வின் வாயிலாக வெளிப்பட்டது.
7.30மணிவரை மூன்று முறை அதிகமாக மழை பெய்த நிலையிலும் ஒருவர் கூட இருந்த இருக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை.
அல்லாஹ்வின் அருளால் நின்ற மழை:
அதன்பிறகு தனிப் பெருங்கருணையாளன வல்ல ரஹ்மான் மழையை இறக்காமல் தடுத்து நிறுத்தினான். காலையிலிருந்து பெய்து வந்த கனமழை வல்ல இறைவனின் வற்றாப் பெருங்கருணையினால் இரவு 10மணிக்கு பொதுக்கூட்டம் நிறைவடையும்வரை ஒரு துளிகூட இல்லாமல் நின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
அடுத்ததாக 7.45மணிக்கு மாநிலச் செயலாளர் யூசுஃப் அவர்கள் டிஎன்டிஜேவின் அரும்பணிகளை பட்டியலிட்டார்.
சிறைநிரப்பும் போராட்டம் அறிவிப்பு:
இறுதியாக மாநிலத்தலைவர் பி.ஜே அவர்கள், “காவல்துறையின் அராஜகம்” என்ற தலைப்பில் கண்டன உரையாற்றினார். அவர் தனது கண்டன உரையில் காவல்துறையினர் முஸ்லிம்களுக்கு எதிராக துவங்கியுள்ள யுத்தத்திற்கு தக்க பதிலடி கொடுக்காவிட்டால் மறுபடியும் நாம் 20ஆண்டுகளுக்கு பின்னால் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என்றும், அதற்கு தக்க பதிலடியாக வரக்கூடிய ஜனவரி 3ஆம் தேதி வியாழக்கிழமை அன்று எந்த திருவல்லிக்கேணியில் வைத்து முஸ்லிம்கள் மீது காட்டுமிராண்டித்தாக்குதல் நடத்தி தடியடி நடத்தினார்களோ அதே இடத்தில் ஒரு லட்சம் முஸ்லிம்கள் திரண்டு மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த உள்ளோம். (பின்னர் இது 10 ஆம் தேதிதக்கு தள்ளி வைக்கப்பட்டது)
காவல்துறையின் கருப்பாடுகளாக உள்ள திருவல்லிக்கேணி ஏ.சி.செந்தில் குமரன், திருவல்லிக்கேணி சரக டி.சி.கிரி, அயனாவரம் ஏ.சி.கிருஷ்ணசாமி ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அடுத்த கட்ட போராட்டமாக முதல்வர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்படும் என்று எச்சரித்து முடித்தார்.
நன்றி - tntj.net 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger